...பல்சுவை பக்கம்!

.

Sunday, August 11, 2024

'பரிவை படைப்புகள்' நூல் விமர்சனம் #181


'பரிவை படைப்புகள்' நூல் விமர்சனம் #181





பரிவை சே. குமார் அவர்கள் எழுதிய 22  சிறுகதைகளின் தொகுப்பு தான் 'பரிவை படைப்புகள்'.

கலக்கல் ட்ரீம்ஸ் வெளியிட்டுள்ள இந்நூலி(ன் அட்டையி)ல் பரிவை சே. குமார் அவர்களின் மந்தகாசச் சிரிப்புடன் முழு அட்டைப்படம்.

இந்தக் கதைகள் அனைத்துமே முழுக்க, முழுக்க கிராமத்து நிகழ்வுகள்தான்! 

'இதில் இருக்கும் கதைகள் எல்லாமே என்னைச் சுற்றி நடந்தவைகளில் இருந்து எடுத்து தொடுத்தவை தான்! நான் எழுதும் பெரும்பாலான கதைகள் கிராமத்து மனிதர்களின் வாழ்வின் வலிகளை மட்டும்தான் பேசி இருக்கும்!' என்று  என்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் சே.குமார்.

ஓர் ஊரில் குறி சொல்பவர்கள் இருவர் இருப்பார்கள். அதில் ஒருவருக்குத்தான் புகழ் வெளிச்சம், மக்கள் வருகை, பணப்புழக்கம் ஆகியன அதிகமாக இருக்கும். அவர் சொல்லும் குறிகளை, பலா பலன்களை  அனைவரும் நம்புவார்கள். அவர் சொல்லும் பரிகாரங்களை அதிக தட்சணையுடன் செய்து முடிப்பார்கள். ஆனால் மற்றவர் வெகு எளிமையாக இருப்பார். அவரை 'குடிகாரன்' என்று அனைவரும் திட்டுவார்கள். ஆனால் அவர் குறி சொல்வது உடனடியாக நடக்கும். ஜாதக தோஷம், வாழ்வியல் சுகவீனங்கள் இருப்பவர்கள் யாரிடம் போய் குறி கேட்பார்கள்?
இது போன்ற நிகழ்வுகளை 'சாமியாடி' 
(எனும்) கதையில் காணலாம்.

கிராமத்து மக்கள் தாங்கள், தங்கள் வீடுகளில் வளர்க்கும் கோழி, ஆடு, மாடு போன்ற பிராணிகளை தங்களது மக்கள் செல்வமாகவே பார்ப்பார்கள். பாசம் காட்டி வளர்ப்பார்கள்! தான் வளர்க்கும் ஆடு நோயுற்றிருக்கும் போது, நோய்க்கான மருந்துகள் கொடுத்தும் நோய் தீராவிட்டால், தன் கண்முன்னே அந்த ஆட்டின் அவலத்தைப் பார்த்து கண் கலங்கி மனம் வருந்தும் ஒரு விவசாயி (சின்னசாமி) என்ன செய்வார்? இந்த கேள்விக்கான பதில் தான் 'சின்னசாமியின் செவப்பி' என்கிற கதை!

பிறக்கும் முன்பிலிருந்தும் பிறந்ததில் இருந்தும் தங்களது குழந்தைகளை வளர்த்துப் பேணிப் பாதுகாத்து, அவர்களைப் படிக்க வைத்து, வேலை அமைத்துக் கொடுத்து, மண வாழ்க்கை கொடுத்து, குடும்ப வாழ்க்கையில் அவர்களை ஈடுபடுத்தி ஒரு குடும்பஸ்தனாக மாற்ற கஷ்டப்பட்டு உழைப்பது அப்பாவும் அம்மாவும். ஆனால் அந்தப் பிள்ளைகள், தங்களது பெற்றோர்களின் இறுதிக் காலத்தில் அவர்களை மதிக்காமல், அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்காமல் உதாசீனப்படுத்துவதோடு அவர்களை பிரித்து வைத்து, சின்ன மகன் வீட்டுக்கும் பெரிய மகன் வீட்டுக்கும் அவர்களைப் பந்தாடுவது  கொடுமை!
இதை கண்முன்னே சித்திரமாக காட்டுவது 'இணை' என்கிற கதை!

மனிதனாய் இருப்பவன் அவனுள் மது என்னும் சரக்கு இறங்கியதும் மிருகமாக மாறிவிடுகிறான்!
மது எனும் விஷம் குடித்தவன் தன்னிலை மறந்தவனாய் தடுமாறி, உற்ற மனைவியை, பெற்ற பிள்ளைகளைப் போட்டு அடித்து, உதைத்து, சித்திரவதை செய்வதை பல காலமாய் கண்டும் கேட்டும் வருகிறோம். 
இதனால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை உண்டு.
'கடவுளின் கணக்கு' கதையில் இதைப் படிக்கலாம்.

அழகாய் இருக்கும் பெண் அழகாய் இருக்கும் ஆணைத்தான் திருமணம் செய்ய வேண்டும்; அதுபோல ஓர் அழகில்லாத பெண் அழகில்லாத ஆணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் நியதியும் இல்லை. காலத்திற்கு தகுந்தாற்போல், சந்தர்ப்பத்திற்கேற்றாற்போல் மண வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். அழகு நிலையில்லாதது; அன்பே நிலைத்திருக்கக் கூடியது. இதை தனது 'பட்டாம்பூச்சி' என்கிற கதையின் மூலம் உணர வைத்திருக்கிறார் ஆசிரியர்.

இங்கே நான் மேலே குறிப்பிட்டுள்ளவை ஒரு சில எடுத்துக்காட்டுகள்தான்.  ஆனால் 22 கதைகள் மொத்தமும்  கிராமமும் அதைச் சார்ந்த வாழ்வியலும் மட்டும்தான்.

இந்தக் கதைத் தொகுப்பை வாசித்தால், ஒரு வெள்ளந்தியான எளிய மக்கள் வாழுகின்ற ஒரு கிராமத்துக்குச் சென்று வந்த திருப்தி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

தொடர்புக்கு:
கலக்கல் ட்ரீம்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
தொலைபேசி: 9840 96 7484,
இமெயில்: kalakkaldreams@gmail.com

விமர்சித்தவர்:
நீடூர் அ.முஹம்மது நிஜாமுத்தீன், பேங்காக்.


பக்கங்கள் 233.
விலை ரூபாய் 250.


நன்றி: 'தமிழ்நெஞ்சம்' மின்னிதழ், ஆகஸ்ட் 2024.






. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...