...பல்சுவை பக்கம்!

.

Thursday, December 30, 2010

நகைச்சுவை; இரசித்தவை 13

நகைச்சுவை; இரசித்தவை 13

கணவன்: "என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக்
காசா கிடக்குது?"

மனைவி: "நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம்
சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திருடன் 1: "ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டு
இருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்"

திருடன் 2: ''திருடன்-னு அலறியிருப்பாரே?''

திருடன் 1: " 'கால் வலிக்கு இதமா இருக்கு; ஒரு
அரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு'ன்னு 
சொல்லிட்டார்"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருவர் : "உங்க மனைவி எடுத்தெறிஞ்சி பேசுவாங்கன்னு
சொல்றீங்களே... அந்த சமயத்தில நீங்க என்ன பண்ணுவீங்க?"

மற்றவர்: "எரிகிற பாத்திரங்களை கேட்ச பிடித்து அவளை
வெறுப்பேத்துவேன்."
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பூக்கும் 2011 புத்தாண்டில் அனைவரும் மகிழ்ச்சியோடு,
வளமோடு, நலமோடு வாழ இறைவன் அருள் புரியட்டும்
என்று பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் இனிய 
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!  

(படத்தில்: பேபி அனௌஸ்கா அஜித்குமார்)

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Sunday, December 5, 2010

ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

விகடன் வலையோசையில் வந்த இந்தப் பதிவை 
இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன  சம்பந்தம்?

சாவி அவர்களின் 'சாவி' வார இதழை 'அஷோக் 
உமா பப்ளிகேஷன்' வெளியிட்டுவந்தது. இன்னும்
திசைகள் (ஆசிரியர் மாலன்), மோனா (மாத நாவல்),
பூவாளி (மாத டைஜஸ்ட்) மற்றும் 'சுஜாதா' எனும்
மகளிர் இதழ் ஆகியனவற்றையும் இந்த பப்ளிகேஷன் 
வெளியிட்டது. 

பின்னாட்களில் இந்தப் பத்திரிகைகள் நிறுத்தப்பட்டாலும்
'பார்வதி பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்தினர் 'சுஜாதா'
என்ற பெயரில் மாத நாவல் பத்திரிகையை ஆரம்பித்தனர்.
('பூந்தளிர்' சிறுவர் இதழை தமிழில் வெளியிட்டவர்களும் 
இவர்களே!)

இந்த சுஜாதா இதழில் கேள்வி பதில் பகுதியும் உண்டு.
சிறப்பான ஒரு கேள்விக்கு பரிசும் உண்டு. 



ஒரு முறை நான் எழுதிய  கேள்வியையும் அதன்
பதிலையும் பிரசுரித்து, சிறந்த கேள்வி என்று எனது
கேள்விக்கு பரிசும் அறிவித்து கேள்வியின்மேலேயே 
எனது பெயர், ஊரை முழு முகவரியுடன் பிரசுரித்திருந்தார்கள்
இந்த மாத நாவல் இதழ் வெளியாகி சுமார் நான்கு
அல்லது ஐந்து நாட்களுக்குப்பின் எனக்கு ஒரு
'இன்லான்ட் லெட்டர்' வந்தது. திருப்பத்தூரிலிருந்து
குணசேகரன் அனுப்பியிருந்தார் என்று ஃபிரம் அட்ரஸ்
பார்த்து தெரிந்துகொண்டேன். அப்படி ஒரு
ந(ண்)பரை எனக்குத் தெரியாதே என்ற யோசனையுடனே 
கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். 

"அன்புள்ள குஷ்பு அவர்களுக்கு" என்று ஆரம்பமாக
எழுதியிருந்ததும் அதிர்ச்சியாகி மீண்டும் 'டூ அட்ரஸ்' 
பார்த்தேன். சரியாக என் முகவரிதான் எழுதப்பட்டிருந்தது.
'சரிதான்' என்று மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

அன்புள்ள குஷ்பு  அவர்களுக்கு,
எனது பெயர் பி.குணசேகரன்.
நான் உங்களது ரசிகன். உங்களது எல்லாப் படத்தையும்
பார்த்து விடுவேன். எந்தப் புதுப்படம் நீங்கள் நடித்து
வந்தாலும் பார்த்துவிடுவேன். முதல் நாளே
பார்த்துவிடுவேன். திரும்பத் திரும்பப் பார்ப்பேன். 
நீங்கள் அழகாயிருக்கிறீர்கள்.  நன்றாக நடிக்கிறீர்கள்.
உங்கள் பாட்டு கேசட் வாங்கி அடிக்கடி பாட்டு 
கேட்பேன். 

நான் சிவகங்கை பக்கத்தில் திருப்பத்தூர் என்ற ஊரில்
இருக்கிறேன். எட்டாம் வகுப்பு படிக்கிறேன். என் தம்பி
ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கும் உங்க 
படம்லாம் பிடிக்கும். எங்க அப்பா ரைஸ் மில் 
வச்சிருக்காரு. அவருக்கும் உங்க படம்லாம்
பிடிக்கும். அதனால், உங்க  ஃபோட்டோ ஒன்னு
கண்டிப்பா எனக்கு அனுப்பி வைக்கவும்.
இப்படிக்கு,
பி.குணசேகரன்.

இன்ட்லாந்து லெட்டர் உள்ளே உள்ள செய்தி எல்லாம் 
குஷ்புவுக்கு. மேலே அட்ரஸ் மட்டும் எனது பெயரும்
எனது முகவரியும்.  சிறிது யோசனை செய்த நான்
மறுபடியும் சுஜாதா இதழைத் தேடி எடுத்துப் பார்த்தேன்.

அட, முதல் கேள்வி நடிகை  குஷ்பு பற்றி ஒரு வாசகர்
எழுப்பிய கேள்வியும் அதற்கான பதிலும் முடிந்து 
அதைத் தொடர்ந்து எனது முழு முகவரி மற்றும்
கேள்வியும் பிரசுரமாகியிருந்தது. ஆக, என்
முகவரியைத்தான் குஷ்பு முகவரி என்று நினைத்து,
அந்தப் பையன் லெட்டரை  எனக்கு அனுப்பிவிட்டான்
என்று புரிந்து கொண்டேன். எனவே, அவனுக்கு பதில் எழுதினேன்.

   " தம்பி, அது குஷ்பு முகவரியில்லை;
   என்னுடைய முகவரி.   அதனால், நீ
   வேறு கடிதம் எழுதி குஷ்புவின் முகவரிக்கு
   அனுப்பு. 'நடிகை குஷ்பு, சென்னை ' என்று போட்டு அனுப்பு.
   அல்லது நானே விசாரித்து குஷ்புவின் முகவரி அடுத்த
   கடிதத்தில் எழுதி அனுப்புகிறேன்.  குஷ்பு ஃபோட்டோ
   என்னிடம் இல்லை; வேண்டுமெனில் என்னுடைய 
   ஃபோட்டோவை உனக்கு அனுப்பி  வைக்கிறேன்."
-என்று பதில் எழுதி 'நன்றாகப் படிக்கணும்' என
அறிவுரைகள் எழுதி, (மாட்டினாண்டா  ஓர் அடிமை!)
போஸ்ட் செய்துவிட்டு அதை மறந்தும்விட்டேன்.  

அடுத்த ஐந்தாறு தினங்களில் அந்தப் பையனிடமிருந்து
பதில் கடிதம் வந்தது.
"அன்பிற்கும் பரியாதைக்குமுரிய  அண்ணாவிற்கு,
(நல்ல பாசக்காரப்  பையனாயிருக்கானே!) 
வணக்கம்.  உங்க கடிதம் கிடைத்தது.
நடிகை குஷ்பு என்று நினைத்து உங்க முகவரிக்கு
கடிதம் அனுப்பிவிட்டேன். மன்னிக்கவும்.
(நல்ல பண்புள்ளவனாயிருக்கானே!)
குஷ்புவோட அட்ரஸ் அனுப்புறதா எழுதியிருந்தீங்க.
அப்படி குஷ்பு அட்ரஸ் அனுப்பாட்டியும் பரவாயில்லை. 
உங்க ஃபோட்டோவை தயவு செய்து அனுப்பிடாதீங்க.
இப்படிக்கு,
பி.குணசேகரன்."
(அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ....!.)

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.




படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...