புத்தாண்டு வாழ்த்து! தமிழ்நாடு இ-பேப்பர்! #182
புத்தாண்டு வாழ்த்துகள்!
இன்றைய [04/01/2025] தமிழ்நாடு இ-பேப்பர் மின்னிதழில் எனது படைப்பு!
*புன்னகைப் புத்தாண்டு!*
உறுதியுடன் உழைத்திடுவோம்; உன்னதமாய் வாழ்ந்திடுவோம்!
நேர்மை அறம் கொண்டு
நிதமாய் வாழ்ந்திடுவோம்!
உண்மையாய் நடந்திடவே
உறுதிமொழி எடுத்திடுவோம்!
அன்பாய் அனைவரையும்
அரவணைத்துச் சென்றிடுவோம்!
இல்லாதோர், ஏழைகளுக்கு
தர்மங்கள்பல செய்வோம்!
அண்டை வீட்டாருடன் அனுசரித்துச் சென்றிடுவோம்!
உறவுகளை என்றுமே
உயர்வாய் மதித்திடுவோம்!
ஒற்றுமையெனும் கயிறை
உறுதியாய் பிடித்திடுவோம்!
பெரியோர்களை மதித்துப்
பேணுதலாய் நடந்திடுவோம்!
சிறியோரின் மனங்களிலே
சிறப்புகளைப் புகுத்திடுவோம்!
உழைப்பவரின் வியர்வைக்குள் ஊதியத்தைக் கொடுத்திடுவோம்!
அனாதைகள், ஏழைகளை
அன்பாய் ஆதரிப்போம்!
வீண்பேச்சு, விவாதங்கள்,
வெட்டிப் பேச்சுகள் தவிர்ப்போம்!
அதிகாலை எழுந்திடுவோம்
ஆண்டவனைத் துதித்திடுவோம்!
நடைப்பயிற்சி மேற்கொண்டு
நலமுடன் வாழ்ந்திடுவோம்!
போதைப் படுகுழியின்
பாதையை மறந்திடுவோம்!
பொய், பேச்சு, ஏமாற்றல்
அறவே தவிர்த்திடுவோம்!
அநீதிகளை எதிர்த்து
நீதமாய் வாழ்ந்திடுவோம்!
தீமைகள் துறந்து
நன்மைகள் நாடுவோம்!
பூத்திருக்கும் புத்தாண்டை
புன்னகையால் அலங்கரிப்போம்!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
நீடூர் 609203.