...பல்சுவை பக்கம்!

.

Wednesday, June 5, 2024

'எடுக்கவோ? கோர்க்கவோ?' நூல் விமர்சனம். #190

  'எடுக்கவோ? கோர்க்கவோ?' நூல் விமர்சனம். Book review #190







குடந்தை பரிபூரணன் அவர்களின் 'எடுக்கவோ கோர்க்கவோ...' சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 15 கதைகள் உள்ளன.

சமூகத்தில் நாம் தினசரி கடந்து செல்லும் சம்பவங்களை இவர் அழகாக கதையாக கோர்த்துள்ளார்.

இதில் முதல் கதையாக  பொதிகை சாரல் இதழில் பரிசு பெற்ற கதையான 'தாளுண்ட நீர்'.

அடிபட்ட கோழிக்கு வைத்தியம்  பார்த்து வளர்த்து வரும் தம்பதிக்கு நாட்டுக்கோழி முட்டைகளை வழங்குவதோடு தம்பதிகளின் மகனின் உயிரை காப்பதற்கு உதவியும் செய்கிறது அந்தக் கோழி.

உடல் நலம் தேறி பையன் திரும்பி வரும்போது அந்த கோழியை அங்கே காணவில்லை.

செய்த உதவிக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றதாக நாம் அறிய முடிகிறது; இறைவன் நடத்தும் திருவிளையாடல்.

"ஐயோ, ஐயோ! வேண்டாம் வேண்டாம்... கொல்ல வேண்டாம், விட்டுடுங்க ஐயா ...!"
இது 'காமதேனு' எனும் சிறுகதையின் ஆரம்ப வரி.

வரதராசு என்கிற விவசாயி, மாடு விற்று பணம் எடுத்து வருகையில் இரவு நேரமாகிவிட்டதால் ஒரு வீட்டின் திண்ணையில் படுக்கிறார்.
அவரது இடுப்பில் பணக்கட்டு இருப்பதை அந்த வீட்டின் உரிமையாளரான மந்திரவாதி பார்த்துவிட்டு வரதராசுவைக் கொல்லும் நோக்கத்துடன் அறிவாளால் வெட்ட வருகிறான். 
பிறகு நடந்தது என்ன என்பதை மர்மக் கதையின் சுவாரசியத்துடன் எழுதியுள்ளார் கதாசிரியர்.

மாதா கோயில் சப்பரம் செபத்தியார் தெருவிற்குச் செல்லக்கூடாது என்று நாட்டாண்மை மற்றும் அவரது சாதிக் குழுவினர் சொல்வதை ஏற்காமல் அத்தெருவுக்கு சப்பரம் செல்வதற்கு மரியதாசும் சாமியாரும் எப்படி வழி காண்கிறார்கள் என்கிற 'சாதி ஏற்றத்தாழ்வு' பற்றிய கதையாக வருவது 'அருகுபோல் வேரோடி' சிறுகதை.

' 'வயிறு நம் உயிரு' என்று தெரியாமலா கும்பகோணம் டாக்டர் நூல் எழுதியிருக்கிறார்' என்று ஒரு கதையில் ஒரு வரி வருகிறது. ஏன் அப்படி எழுதியுள்ளார் என்பதை அறிய உண்மையான கதை மாந்தர்களை வைத்து உண்மைக் கதையாக எழுதியுள்ள 'மருந்து' கதையை படியுங்கள்.

கோழிக்கறி, முட்டை இவற்றை விற்கும் கறிக்கடைக்காரன் ஒரு விளம்பரக் கவிதை எழுதி கேட்கிறான் கவிஞரின் மனைவியிடம். "பத்திரிகைகளுக்கு எழுதுவேனேத் தவிர கோழிக்கடை விளம்பரத்திற்கு பாட்டோ, கவிதையோ எழுத மாட்டேன்" என அடம் பிடிக்கிறார் கவிஞர். இறுதியில் கவிதை எழுதினாரா என்பதை நகைச்சுவை ததும்பு எழுதியுள்ளார் திரு.பரிபூரணன் அவர்கள்,  'கோழிக்கறி, முட்டை மற்றும் ஒரு கவிதை' சிறுகதையை. 'கணையாழி' இதழில் வெளிவந்த சிறுகதை இது.

முன் காலத்தையும் தற்காலத்தையும் ஒப்பிட்டு பார்த்து, ஏன் புதிது புதிதாக பிரச்சனைகள் தோன்றுகின்றன என ஆராய்ந்து நறுக்கென்று முடிவு எடுப்பதை சுருக்கென்று எழுதியுள்ள கதை 'முள்ளில் ரோஜா'!

தோட்டத்தில் கத்திரிக்காய் பயிரிடும் ஒரு விவசாயி... 
அந்தக் கொல்லையை சேதம் பண்ணவும் விவசாயியின் காலை வாரி விடவும் எதிர்த்தரப்பில் இருவர்...
வியாபாரிக்கோ இரவு புறப்பட்டு மறுநாள் காலை திருச்சியில் இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை.
முன்பும் இதே போல் இரவில் யாரையாவது கொல்லைக்கு  காவலாக வைத்து விட்டு சென்றாலும் கூட, பயிர்கள் சேதமடைந்து விடுகின்றன; தவிர்க்க முடியவில்லை.
இக்கட்டாலும் சூழ்நிலையில் அந்த விவசாயி என்ன செய்தார்? விடை 'காவல்' சிறுகதையில்.

இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள 15 கதைகளும்  ஒவ்வொன்றும் வேறு, வேறு பாணியில் எழுதப்பட்டுள்ளன. இங்கு நான் இடம் பற்றாக்குறையினால் அனைத்துக் கதைகளையும் விமர்சனம் செய்யவில்லை. 

இந்தக் கதைகளைப் படித்தால் ரசிக்கலாம்! அவசியம் படியுங்கள்; ரசியுங்கள்.

நூல் தேவைக்கு:
கதாசிரியரின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
63845 38289.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

['தமிழ் நெஞ்சம்' ஜூன் 2024 மின் மாத இதழில் வெளியானது.]








. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...