...பல்சுவை பக்கம்!

.

Thursday, June 11, 2020

உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர் - 3 #144


உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர்! - 3

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்!
வெள்ளை நிறத்தில் தொப்பி, சட்டை, கைலி, மூக்கு கண்ணாடி, கைப்பை மற்றும் ட்ரான்சிஸ்டர் சகிதம் அவர் வந்து என்னிடம்  பேசினார்!

என்னைப்
பற்றி  முன்பே அறிந்து கொண்டிருந்தவர், அவராகவே வந்து  பேசினார்!
நம்ம அலைவரிசையில் பேசி வசீகரித்தார்!

அவரது தம்பியின் திருமணத்திற்கு, என்னையும் ஜாபிர் என்கிற தம்பியையும் கணியூருக்கு அவர் செலவிலேயே அவருடனேயே அழைத்துச் சென்று, திருமணம் முடிந்தபின் எங்களை ஊருக்கு அனுப்பி வைத்தார்.

கல்லூரி படிப்பு முடித்தபின் சிதம்பரத்தில் அவரது நிறுவனத்திலேயே தற்காலிகப் பணி! பிறகு வெளியேறி பின் மீண்டும் பணி!

புத்தகப் பிரியர்! அனைத்து துறை சார்ந்த நூல்களையும் (காமிக்ஸ் உட்பட) விரும்பி படிப்பார்!

மார்க்க அறிஞர்! நல்ல பேச்சாளர்! சிறந்த எழுத்தாளர்! சில நூல்களும் எழுதியுள்ளார்!

அவரிடமிருந்து பல நன்னெறி,  பொது அறிவு என பல தகவல்கள் பெற வாய்ப்பாய் அமைந்தது அவருடன் எனது பயண (பணி) காலம்.

உடன்பிறவா சகோதரனாய் திகழும்
'சிதம்பரம்- கணியூர் இஸ்மாயில் நாஜி' அவர்கள்,
வாழிய பல்லாண்டு!
.
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Tuesday, June 9, 2020

உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர் - 2 #143




உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர் - 2.

மயிலாடுதுறை (மா)வட்டம் குத்தாலத்தில் முதல் சந்திப்பு!
மேலும் மயிலாடுதுறையில் சில சந்திப்புகள்.

பிறகு, மங்கைநல்லூருக்கு அவர் வந்ததன்பின் அவ்வப்போது அவர் வீட்டிற்கு சென்று எழுத்து, பத்திரிகை தொடர்பாக  உரையாடல்.
அவர் 
மயிலாடுதுறை வந்தபின்னே அடிக்கடி அவர் வீட்டிற்கு செல்வதாகவும் பல மணி நேர உரையாடல்களாகவும் வளர்ந்தது! [மேடம் பணி (பள்ளி)க்கு சென்றுவிடுவதால் இடையூறுகளே கிடையா!]

பொழுது போதாமல்
நேரம், காலம் போவது தெரியாமல் பல புதிய, பழைய செய்திகளை சுவாரஸ்யமாகச் சொல்வார்;
நானும் ஆர்வமுடன், ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்!

பின்னும்,
தஞ்சை ~ நாகை ~ திருவாரூர் மாவட்ட எழுத்தாளர் கூட்டமைப்புத் தலைவராக அவர் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார்.

மாதாந்திரக் கூட்டம் கும்பகோணத்தில் தாஜ்மஹால் ஹோட்டலில் மாதத்தின் முதல் ஞாயிறன்று நடக்கும்.

நானும் வாய்ப்பு கிடைக்கையிலெல்லாம் கலந்து கொள்வதுண்டு!

அன்றிலிருந்து இன்றுவரை என்னிடம் மாறா நட்புடன் என்னை அன்புடன் அரவணைக்கும்,  எமது  பொழுதுபோக்குநர் திலகம்
'சின்னஞ்சிறு கோபு' சார்,
வாழிய பல்லாண்டு!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, June 7, 2020

உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர் -1 #142


.

*உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர்!*

என்னுடன் உடன் பிறப்பு,
சகோதரன் யாரும் இல்லை.
ஆனால், இவரை நான் சந்தித்தது இறைவனின் நாட்டத்தின்படி!

ஊராட்சி மன்ற மூத்த உறுப்பினராக சுமார் 20 ஆண்டுகள்.
அரசியல் இயக்க கிளைத் தலைவராக சுமார் 3 ஆண்டுகள். ஊர் நாட்டாண்மை உறுப்பினராக சுமார் 10 ஆண்டுகள்.

சமூகப் பிரச்னைகளினால் பிரிய இருந்த பல குடும்பங்களை சேர்த்து வைத்தவர். ஊரின் நலம்விரும்பி. துக்க காலங்களில் முதல் ஆளாய் உதவிக்கு நிற்பார்.
கருத்துகளை சீர்தூக்கி சொல்வார்.

எனது பல குழப்பமான நேரங்களில் உடனிருந்து ஆறுதல் மொழிகள் தந்து, எனது மூத்த அண்ணனாக, கைகாட்டியாய் வழி காட்டுபவர்.

என்னைக் கவர்ந்த உயர்ந்தவர்
எம்.எஸ்.எம். என்று அழைக்கப்படும் அன்பு
எம்.எஸ்.எம். ஷபீர் அவர்கள்,
வாழிய பல்லாண்டு!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Friday, May 29, 2020

சின்னப் பயலே! சின்னப் பயலே!! #141



சின்னப் பயலே! சின்னப் பயலே!! - கவிதை


தம்பிப் பயலே சின்னப் பயலே
நல்லா கேட்டுக்கோ!

அம்மா அப்பா சொல்லுற
பேச்சு கேட்டு நடந்துக்கோ!

அறிவு வளர வாழ்வு
உயர நல்லா படிச்சிக்கோ!

பெரியோர் அறிஞர் சான்றோர் அறிவுரை மதிச்சி நடந்துக்கோ!

அதிகாலை எழுந்து பாடங்கள் படித்து மனசுல பதிச்சிக்கோ!

அம்மாவுக்கு வீட்டு வேலைகள் உதவிகள் செய்து பழகிக்கோ!

இயலாதோர்க்கு உதவிகள் செய்து பண்பை வளத்துக்கோ!

பெரியோர் நமக்கு வழிகாட்டி ஆகவே அவர்வழி நடந்துக்கோ!

எளியோர் சுற்றம் நட்பு நாடு என்றும் விரும்பிக்கோ!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, February 8, 2020

அன்பே! தேவதையே! #140

'தமிழக எழுத்தாளர்கள்'
என்கிற வாட்ஸ்ஆப் குழுமத்தில் 12/01/2020-ல் நடந்த போட்டிக்கு நான் எழுதிய கடிதம்!

கடிதம் எழுதும் போட்டி!

கடிதம் எழுதுவதை எல்லோரும் நிறையவே மிஸ் செய்துவிட்டோம். அதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு போட்டி.

யாருக்கு எழுதவேண்டும்?

நாம் அதிகம் யாருக்கு எழுத ஆசைபடுவோம்?

அதே!

அதேதான்!!

உங்கள் மனம் கவர்ந்த காதலிக்கு எழுதுங்கள்!!"

கடிதம் ஒருபக்கக் கதை அளவு இருக்கலாம்.

கடிதத்தில் 'அட்சதை', 'ஜன்னல் நிலா', 'இளவட்டக்கல்', 'கரும்பு' ,
'ச்சீ போடா...' ஆகிய வார்த்தைகள் எங்காவது கண்டிப்பாக இடம்பெறவேண்டும்.

இந்த விதிமுறைகளுக்குட்பட்டு நான் எழுதிய (கற்பனைக்) கடிதம் இதோ!

***+++***+++***

அன்பே! தேவதையே!

நாம் கூடி கொஞ்சி குலாவும்போது
'கரும்பு' போல் இனித்தாய்!

நான் குறும்புகள் செய்யும்போது,
'ச்சீ போடா' என செல்லக் கோபம் கொப்பளிக்கச் சொல்வாய்!

அப்படி சொல்லும் உன் வாயைப் பிடிக்க நான் முனையும்போது,
எழுந்து ஓடுவாய்!

அப்படி ஒருநாள் ஓடும்போது, கல்லில் காலை இடித்துக் கொண்டாய்!

கோபம் கொண்ட நான், அந்த 'இளவட்டக்கல்'-லை ஓரமாய் தூக்கி எறிந்தபோது மலைப்பாய் பார்த்தாய்!

ஆனால் இறுதியில்,
உறவினர் 'அட்சதை' தூவிட
யாருக்கோ மனைவியானாய்!

இங்கே நான் 'ஜன்னல் நிலா'-வைப் பார்த்துக் கொண்டும்
'எங்கிருந்தாலும் வாழ்க!' எனப் பாடிக் கொண்டும் சோகத்தில் வாடிக் கொண்டும் இருக்கிறேன்
உண்மையான காதலோடு(ம்)!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, December 1, 2019

தொல்லைப்பேசி -சிறுகதை #139


'தமிழக எழுத்தாளர் குழுமம்' நடத்திய 'படத்திற்கேற்ற கதை போட்டி'-க்காக எழுதப்பட்ட கதை இது!

தொல்லைபேசி!
- ஒரு பக்கக் கதை!
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

  பவானி கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தாள்.

  "அந்தக் காலத்தில வெளியூரில் இருப்பவர்களுக்கு செய்தியை சொல்ல, தபால்தான் இருந்தது. அதற்குப் பின்னால, மொபைல் ஃபோன் அந்த இடத்தை பிடித்தது. இப்ப அந்த ஃபோன், நம்ம வாழ்க்கையிலே, நம்மளுடைய அதிகபட்ச நேரத்தையே
பிடிச்சிக்கிட்டது துரதிர்ஷ்டவசமானது.
 
  "நீண்ட நேரம் ஃபோனிலேயே நாம இருக்கிறதாலே நம்முடைய உழைக்கும் திறன் குறைஞ்சிட்டே வருது. இரவு நேரத்திலும் ஃபோன் பயன்பாட்டினால், தூக்கத்தை தூண்டுற சுரப்பிகள் உற்பத்தி குறையுது.

   "அதனால, பல உடல் நலக் கேடுகள், ஃபோனுக்கு அடிமையாகிற பரிதாபம்லாம் ஏற்படுது.

   "உங்க வீடுகள்ல, சிறு குழந்தைகளுக்கு அழுதால், ஃபோன் கொடுக்காமல், கிளுகிளுப்பை கொடுத்து பழக்கப்படுத்துங்க! ஃபோனை, தூரமா வச்சிட்டு, அவங்களோட தாயம், பல்லாங்கழி, ஆடுபுலி ஆட்டம், பரமபதம்னு நீங்களும் சேர்ந்து விளையாடுங்க! சிறுவர்களுக்கு, கபடி, கிட்டிப் புல், கிரிக்கெட், ஆபியம், கோலி குண்டு, கேரம், சதுரங்கம்னு விளையாட ஊக்கப்படுத்துங்க! ஃபோனில் விளையாடாதீங்க! அரட்டை அடிக்காதீங்க! தேவையானதை பேசுங்க!

   "வாட்ஸ்ஆப்ல இருந்தா, அதையே திரும்ப திரும்ப பார்க்காம, 1 மணி நேரத்துக்கு இல்லனா அரை மணி நேரத்துக்கு ஒரு முறை போய் பார்த்தீங்கனா, எல்லா மெசேஜ்-ஐயும் படிச்சிடலாம்; உடனே அழிச்சிடலாம்!
டேட்டா இலவசமா கிடைக்குதுனு, அதுக்கு பதிலா நம்ம நேரத்தை அதுல செலவழிச்சிடாமல், உபயோகமா பயன்படுத்திக்குங்க! நன்றி!!" என்று பேச்சை முடித்தாள் பவானி.

   மறுநாள், சனிக்கிழமை பவானி அவளுடைய சிறிய பெட்டிக் கடையைத் திறந்து வியாபாரம் செய்யும்போது வந்தான் சிறுவன் தாமரைச்செல்வன்.

   "அக்கா, எங்க அம்மா சென்னாங்க, ஃபோனில் விளையாடாமல், தெருவில விளையாட சொன்னீங்களாம்! அதனால, இந்த நம்பருக்கு நெட் பேக் போட வேண்னாம்; டாக் டைம் மட்டும் டாப்-அப் பண்ணிவிடுங்க!"
என்றான் அவன்.

   அதைக் கேட்ட பவானிக்கு, 'வருமானம்' குறைந்தது; அவளின் 'பெருமனம்' நிறைந்தது!
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, November 23, 2019

'அம்மா சொன்ன கதை', தேன்சிட்டு இதழில்! #138

இம்மாத (நவம்பர் 2019) தீபாவளி சிறப்பிதழ், 'தேன்சிட்டு' இதழில் நான் எழுதிய, "அம்மா சொன்ன கதை" பிரசுரம் ஆகியுள்ளது!

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, November 17, 2019

படக் கவிதைப் போட்டி #137

வெற்றிமகள் - படக் கவிதைப் போட்டி


தமிழக எழுத்தாளர்கள் குழுமம் நடத்திய, படத்திற்கேற்ற கவிதை போட்டியில் எனது கவிதையும் வெற்றி பெற்றது!

படக்கவிதைப் போட்டி! 

*வெற்றிமகள்!*

துள்ளலோடு செல்லும் பாப்பா! துவண்டுவிடாதே!

துன்பம்துயர் வரும்போது மிரண்டுவிடாதே!

எதிர்படும் விஷயமெல்லாம் தீய சக்தி! எதிர்க்கட்டும் அவற்றை உன் எதிர்சக்தி!

சுமைகள் வந்தால் சுட்டுத் தள்ளு! அலட்சியம் செய்தால் விட்டுத் தள்ளு!

நன்மைகள் வரட்டும் நாட்டம் கொள்ளு! நானிலத்தில் நீயே வென்று நில்லு!
   -அ.முஹம்மது நிஜாமுத்தீன், நீடூர் 609203.



. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...