...பல்சுவை பக்கம்!

.

Monday, August 31, 2009

தோசை (கதை)யைப் பிடிக்கும்தானே?-



உங்களுக்கு தோசை பிடிக்கும்தானே! அப்படியானால் இந்தக் கதை உங்களுக்குத்தான். (தோசை பிடிக்காதவர்களும் படிக்கலாம்.)

எனது நண்பருக்கு வெளியூருக்கு வேலை மாற்றலாகிவிட்டது.

முத‌ல் நாள்.வேலை முடிந்து திரும்பும்போது ரெஸ்டாரெண்டுக்குச் செ‌ன்று, தோசையும் காபியும் ஆர்டர் செய்தார். சர்வர் கொண்டுவந்து வைத்ததும், "தோசைக்கு சட்னியும் சாம்பாரும் வேண்டாம்; ஜீனி கொண்டுவாருங்கள்" என்றார் நண்பர். "தோசைக்கு ஜீனி கிடையாது, சட்னி, சாம்பார்தான்" என்றார் சர்வர். எனக்கு ஜீனிதான் வேண்டும் எ‌ன்று சண்டைபோட்டு வாங்கிசாப்பிட்டுவிட்டு வந்தார் நண்பர்.

இரண்டாம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் "இன்றுமுதல் தோசைக்கு ஜீனி கிடையாது" என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் சாம்பார், சட்னியும் வந்தது. நண்பர் உடனே மறுபடியும் தோசை கொண்டுவரச்சொன்னார். வந்தது. நண்பர் ஜீனி கொண்டுவரச்சொன்னார். சர்வர் மெனு போர்டைக் காட்ட, நண்பரோ, "இன்று, முத‌ல் தோசைக்கு ஜீனி கிடையாதுதான்; நா‌ன் இரண்டாவது தோசைக்குதான்ஜீனி கேட்டேன்" எ‌ன்று சொல்லி ஜீனி வாங்கி இரு தோசைகளையும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டார்.

மூன்றாம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் "இனிமேல் தோசைக்கு ஜீனி கிடையாது" என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் சாம்பார், சட்னியும் வந்தது. நண்பர் உடனே மறுபடியும் தோசை கொண்டுவரச் சொன்னார். வந்தது. ஏற்கெனவே தட்டிலிருந்த தோசையின்மேல் இந்த தோசையையும் வைத்துவிட்டு நண்பர் ஜீனி கொண்டுவரச்சொன்னார். சர்வர் மெனு போர்டை காட்ட, நண்பரோ, "இனி, மேல் தோசைக்கு ஜீனி கிடையாதுதான். நா‌ன் கீழ் உ‌ள்ள தோசைக்குத்தான் கேட்டேன்" என்று பிடிவாதமாய் கேட்டுவாங்கி இரண்டு தோசைகளையும் ஜீனியுடன் சாப்பிட்டு புறப்பட்டார்.

நான்காம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் "இனி தோசைக்கு ஜீனி கிடையாது" என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் சாம்பார், சட்னியும் வந்தது. நண்பர் உடனே இட்லி கொண்டுவரச் சொன்னார். வந்தது. நண்பர் ஜீனி கொண்டுவரச்சொன்னார். சர்வர் மெனு போர்டை காட்ட, நண்பரோ, "நா‌ன் தோசைக்கு ஜீனி கேட்கவில்லை; இட்லிக்குத்தான் கேட்டேன்" என்று கேட்டுவாங்கி இட்லியையும் கூடவே தோசையையும் ஜீனியுடன் சாப்பிட்டு புறப்பட்டார்.

ஐந்தாம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் "இனி தோசை, இட்லி, பூரி எதற்கும் ஜீனி கிடையாது" என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் ஜீனிபோடாமல் காபி கொண்டுவரச்சொன்னார். சர்வர் காபி கொண்டு வந்தார்.. நண்பர் காபியைக் குடித்துப்பார்த்துவிட்டு ஜீனி கொண்டுவரச் சொன்னார். வந்தது. நண்பர் இப்போது தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் வந்தது. தோசையை ஜீனியுடன் சாப்பிட்டுவிட்டு, காபியை ஜீனியில்லாமலே குடித்துவிட்டு நண்பர் புறப்பட்டார்.

இத்தனை நாளாக நடைபெற்ற அனைத்து சம்பவங்களையும் பார்த்துக் கொண்டிருந்த முதலாளி நண்பரிடம் "சார், இனி எப்போதும் உங்களுக்கு தோசைக்கு ஜீனி உண்டு" எ‌ன்று அனும‌தி அளித்தார். சர்வரிடம் முதலாளி "இனி உனக்கு சர்வர் வேலை கிடையாது. நிறுவனத்தின் நடைமுறைகளை நன்கு கடைபிடிக்கிறாய். இனி நீ சூப்பர்வைசர்." எ‌ன்று சொல்லி மிகவும் பாராட்டினார்.

அன்பர்களே, இதிலிருந்து என்ன தெரிகிறது?

பின் இணைப்பு:
இந்தக் கதையிலிருந்து அறியப்படும் நீதி:
1. விடாமுயற்சிக்கு வெற்றி நிச்சயம். (நண்பர்)
2. கடின உழைப்புக்கு உயர்வு நிச்சயம். (சர்வர்)

-இந்த தோசையை சுட்டவர்:அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

12 comments:

SUMAZLA/சுமஜ்லா said...

//அன்பர்களே, இதிலிருந்து என்ன தெரிகிறது?//

இந்த தோசையை நீங்கள் சுட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது!

நல்ல நகைச்சுவை! ரசித்தோம் (நானும் என்னவரும்)!

கமெண்ட்ஸில் இருக்கும் word verification, dashboard - settings - comments போய் எடுத்து விடுங்கள். இது தொல்லை பண்ணும்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இந்த தோசையை நீங்கள் சுட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது!//
-ஹா... ஹா... ஹா...

நகைச்சுவையை உங்களுடன் மச்சானும் இரசித்தாரா?!
மிக்க மகிழ்ச்சி!

நீங்கள் குறிப்பிட்டதுபோல் word verification
எடுத்துவிட்டேன். இந்தக் குறிப்புக்காக நன்றி!

SUMAZLA/சுமஜ்லா said...

அவ்வப்போது நிறைய டெக்னிக்கல் குறிப்பு தருகிறேன்!

முதலில், தமிழிஷில் இடுகையை இணையுங்கள்.

மூன்று இடுகை ஆனால் தான் தமிழ்மணத்தில் இணைக்க முடியும்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வரவேற்கிறேன், வருக!
குறிப்புக்கள் அள்ளித் தருக!
அறிந்து கொள்ள ஆர்வமுடன்
உள்ளேன்.

பின்னோக்கி said...

ரசித்தேன்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ரசித்தேன்//

நன்றி பின்னோக்கி அவர்களே!

பிரேம்குமார் அசோகன் said...

வார்த்தைகளை சரியாக பயன்படுத்தியுள்ளீர்கள்.
வாக்கியக் கோர்வையில் கொஞ்சம் தடுமாறியிருந்தாலும், கோந்து தோசையாகியிருக்கும்.

அழகான முறுகல் தோசையை சுட்டிருக்கிறீர்கள்.. ஆனால் ஆறிய பின்னர்தான் சாப்பிடுகிறேன் (நீண்ட நாள் கழித்து பின்னூட்டமிடுவதைச் சொன்னேன்) :))

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அழகான முறுகல் தோசையை சுட்டிருக்கிறீர்கள்.. ஆனால் ஆறிய பின்னர்தான் சாப்பிடுகிறேன்//

முறுகல் தோசையை இரசித்து
சாப்பிட்டதற்கு ...
'பில்' ஏதும் போட மாட்டேன்;
'டிப்ஸ்'-ஸும் கேட்க மாட்டேன்.

அதே நேரம் தங்களின் நகைச்சுவையான
பின்னூட்டம், இரசிக்க வைத்தது.

ஜெய்லானி said...

தோசை படத்தில் தோசை+சாம்பார்+சட்னி இருக்கிறது ஆனால் ஜீனி இல்லையே.ஒருவேளை ஜீனி வருவதற்கு முன் எடுத்த படமோ ??...
நல்ல நகைச்சுவை இரசிக்க வைத்தது. !!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//jailani said...
தோசை படத்தில் தோசை+சாம்பார்+சட்னி இருக்கிறது ஆனால் ஜீனி இல்லையே.ஒருவேளை ஜீனி வருவதற்கு முன் எடுத்த படமோ ??...
நல்ல நகைச்சுவை இரசிக்க வைத்தது. !!!//

இரசித்து, கருத்திட்டதற்கு நன்றி ஜெய்லானி!
கேள்வி கேட்டு, நல்லவேளையாக, பதிலும்
தாங்களே தந்துவிட்டீர்கள். அப்பாடா, நிம்மதி!

துரை செல்வராஜூ said...

அன்புடையீர்..
இன்று வலைச்சரத்தில் தங்களது தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_30.html
நல்வாழ்த்துக்கள்.

துரை செல்வராஜூ said...

அன்பின் நிஜாமுத்தீன்..
தங்களது - தோசை - இன்றைய வலைச்சரத்தில் - சூடாக பரிமாறப்பட்டுள்ளது.
http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_30.html
பக்குவமாக சுட்டதற்கு நன்றி!..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...