...பல்சுவை பக்கம்!

.

Thursday, May 28, 2026

அமெரிக்கா பயணக் கதை! #188

அமெரிக்கா  பயணக் கதை!


#1
28/01/2026, புதன்கிழமை, காலை 7 மணி. 

வீட்டிலிருந்து நாங்கள் ஒரு மூன்று பேர் குழுவாக புறப்பட்டோம்.
8 மணி.
சுவர்ணபூமி  விமான நிலையம் சென்றடைந்து, குடியுரிமை நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு விமான நிலையத்தின் உள் சென்றோம்.  

விமான நிலையம் சென்றதும் மேலும் ஒரு சகோதரர் எங்கள் குழுவில் இணைந்து கொண்டார்.

#2
பின்பு உடல் பரிசோதனை, குடியுரிமை செயல்பாடுகள் முடிந்து கேட் அருகே சென்று அங்கிருந்த கடையில் சில நொறுக்கு தீனிகள் வாங்கி சாப்பிட்டு, சிறு  காத்திருத்தலுக்குப் பின் விமானத்தில் உள்நுழைய அனுமதிக்கப்பட்டோம். இறைவனுக்கு நன்றி சொல்லி இருக்கையில் அமர்ந்தோம்.
முற்பகல் 11:45 மணி அளவில் விமானம் புறப்பட்டது. ஒரு 45 நிமிட நேரத்தில் உணவு வழங்கப்பட்டது.

மாலை சுமார் 4 மணி அளவில் தைவான் தலைநகர் தைப்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.



#3
விமான நிலையத்தில் புகுந்து மீண்டும் உடல் பரிசோதனை, உடமைகள் பரிசோதனை முடித்து ட்ரான்ஸ்சிட் காத்திருத்தல் பகுதிக்குச் சென்றோம். 
அங்கே முஸ்லிம் தொழுகை பகுதிக்குச் சென்று உடல் சுத்தம் செய்து தொழுகையை முடித்து, அருகிலேயே இருக்கின்ற ஒரு சிற்றுண்டி கடையில் அஸ்ஸாம் மில்க் ட்டீ வாங்கிக் குடித்தோம். பால் அதிகம் சேர்க்கப்பட்டிருந்ததால் ட்டீத் தூளும் ஜீனியும் கூடுதல் பாக்கெட் கேட்டால் 'தர முடியாது' என்று சொல்லிவிட்டார்கள். கஷ்டப்பட்டு பாதியைக் குடித்துவிட்டு மீதியை வைத்து விட்டோம். ஓர் அன்பர் மட்டும் பீஃப் சூப் வாங்கிச் சாப்பிட்டார். 

பேங்காக்கில் விமானம் ஏறும் முன்பாகவே எங்களுடன் இன்னொரு நண்பரும் சேர்ந்து கொண்டார். ஆகவே நால்வர் என்பது ஐவராக  மாறிவிட்டோம். 

சிறிது நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் வந்த ஒரு நண்பர் இந்த ட்ரான்சிட் இடத்தில் அமெரிக்காவுக்குச் செல்லும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்.  இப்பொழுது நாங்கள் அறுவர் கொண்ட குழு. 



#4
இரவு 8 மணி அளவில் விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கிப் புறப்பட்டது. (பேங்காக் நேரம் இரவு 7 மணி, 28/01/2026.) புறப்பட்ட 45 நிமிடங்களில் முஸ்லிம் மீல்ஸ் வழங்கப்பட்டது.
எடுத்துச் சென்றிருந்த ராஜேஷ்குமார் புதினங்கள் இரண்டைப் படித்து முடித்தேன். விழிப்பதும் உறங்குவதுமாக மாறி மாறி பயணம் சென்று கொண்டிருந்தது. மீண்டும் சாப்பாடு வழங்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் நேரப்படி மதியம் 02:30 மணி அளவில் தரையிறங்கியது விமானம்! (28/01/2026) அல்ஹம்துலில்லாஹ்! அப்போது பேங்காக் நேரம் அதிகாலை 05:30, தேதி 29/01/2026.




#5
குடியேற்ற நடவடிக்கைகளை முடித்துவிட்டு, பெட்டிகளை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தின் வெளியே வந்தோம். விமான நிலைய வாசலில் இருந்து ஷட்டில் பஸ் பிடித்து ஆலமோ வாடகை கார் நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். மேலும் ஐந்து நண்பர்கள் அங்கே வந்து சேர்ந்தார்கள். 

மூன்று வாடகை கார்கள் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மாலை 05:30 மணி அளவில் புறப்பட்டோம். லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டியில் ஓட்டுனர் இல்லாத தானியங்கி வாடகை கார்கள் (ஓடுவதைப்) பார்த்தோம். ஜிபிஎஸ் மூலம் வழி பார்த்துக் கொண்டு துசான் செல்லும் ஹைவே வழியே பயணிக்க ஆரம்பித்தோம். அவ்வப்போது பெட்ரோல் போட்டு கொண்டு காபி, ஸ்னாக்ஸ், ரெஸ்ட் ரூம் போன்ற தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு, இரவு 02:30  மணி அளவில் நாங்கள் தங்கும் இடம் வீடு வந்து சேர்ந்தோம். 

எங்களுடன் வந்த ஒருவர் மட்டும் வேறு ஓர் இடத்தில் தங்குவதற்காக சென்றுவிட்டார். மற்றவர்கள் இரவு தங்கி ஒரு தூக்கம் போட்டுவிட்டு (ரொம்ப நேரம் தூக்கமே வரலை!) காலையில் (11:00 மணி) புறப்பட்டு வால்மார்ட் சென்று அத்தியாவசிய மளிகை, காய்கறி, பிரட், முட்டை ஆகிய பொருள்கள் அனைத்தும் வாங்கி வந்தோம்.





#6
மீண்டும் மாலையில் சிறிது ஷாப்பிங் சென்றோம். 
ஜனவரி 29. இப்படியே நாள் கழிந்தது.

ஜனவரி 30. வெள்ளிக்கிழமை மதியம் துசான் இஸ்லாமிக் சென்டரில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினோம். 
அதன் பின் சில இடங்களில் அமைந்துள்ள ஜுவல்லரி ஷோவைப் பார்த்தோம். ஜனவரி 31-ஆம் தேதியும் இது போலவே ஜுவல்லரி ஷோ, ஷாப்பிங் என்று முடிந்தது.

பிப்ரவரி 1-ஆம் தேதி நாங்கள் பங்கு பெற உள்ள கண்காட்சிக்கு ஹாலுக்குச் சென்று முன்னேற்பாடுகள் செய்து கொண்டோம். பிப்ரவரி 02-லிருந்து பிப்ரவரி 07 வரை ஆறு நாட்கள் கண்காட்சி நடந்தது. 

தினமும் மாலை நேரங்களில் வால்மார்ட், காஸ்ட்கோ, டல்லார்ஸ், ராஸ்ஸ், பெஸ்ட் பை எலெக்ட்ரானிக் ஷாப், பிரிமியர் அவுட்லெட், ஜே.கே.மார்ட், மார்ஷல்ஸ், பாபிலோனா சூப்பர் மார்ட், மூர் மார்க்கெட் சூப்பர் மார்ட் போன்ற கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டோம்.




#7
அமெரிக்காவில் 'ரென்ட்டல் ஸ்டோரேஜ்'  என்கிற வசதி உண்டு. ஒரு நகரத்தின் பல ஏரியாக்களிலும் சிறு, சிறு அறைகள் போல் கட்டி அதை வாடகைக்கு  விட்டிருப்பார்கள். அந்த நாட்டிலேயே வசிப்பவர்கள் தங்களுக்கு அடிக்கடி தேவைப்படாத பொருட்களை கொண்டு வந்து அங்கே ஸ்டோரேஜில் வைத்துக் கொள்ளலாம். சுமார் 6 அடி அகலம், 8 அடி உயரம், 10 அடி நீளம் போன்ற சிறு அறைகள்! 

பிறந்தநாள், திருமண நாள் கொண்டாட்டங்கள் போன்ற விழாக்களில் பயன்படுத்தப்படும் சாமியானா அல்லது  அதிகப்படியான கட்டில்... இப்படி எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டும். நாங்களும் இறைவன் நாடினால் அடுத்த ஆண்டில் பயன்படுத்தத் தேவையான பொருட்களை அந்த ஸ்டோரேஜில் வைத்துக்கொண்டோம்.


#8
மறுநாள் பிப்ரவரி 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி. நாங்கள் 9 பேர்கள் அனைவருமாக இரு கார்களில் புறப்பட்டோம்! 

வாடகைக்கு இருந்த வீட்டின் கதவுப் பூட்டை நம்பர் லாக் மூலம் பூட்டிவிட்டு, நாங்கள் புறப்படுவதை உரிமையாளரின் ஏஜெண்ட்டுக்கு, மெயில் மூலம் தெரிவித்து விட்டோம்.

Bye bye Tucson!

#9
வாடகை வீட்டின் அமைப்பு எப்படி என்பதை இப்பொழுது பார்க்கலாம். 

சாலை நடைபாதையில் இருந்து முதலில் 15 அடி நீளத்திற்கு கார் நிறுத்துவதற்கு வசதியாக போர்ட்டிகோ அமைப்பு! வீட்டின் அகலம் சுமார் 30 அடிகள்! நீளம் சுமார் 45 அடிகள்!

வலது புறமாக அமைந்துள்ள நம்பர் லாக்கை பாஸ்வேர்ட் நம்பர் கொடுத்து திறந்து உள்ளே நுழைந்தால், இடப்புறமாக முக்கால் வட்ட அளவில் 3 சோபா செட்டுகள்! இடப்புற சுவரில் 65 அங்குல தொலைக்காட்சி! அதன் கீழே சிறு பெட்டி போன்ற அறையில் கனப்பு அடுப்பு! வலப்புறம் செருப்பு வைக்கும் ஸ்டாண்ட்! 

வரவேற்பறையைத் தாண்டி அடுத்து சென்றால் டைனிங் டேபிள். 8 பேர்கள் வரை அமர்ந்து சாப்பிடும் அளவில் நீள் செவ்வக டேபிள்.  வலது புறமாக கீழே ஃப்ரீசர் மற்றும் மேலே இரு கதவுகள் கொண்ட பெரிய ஃபிரிட்ஜ்!

அடுத்து சென்றால் நேர் எதிரில் உள்ள சுவரோடு ஐந்து அடுப்புகள் கொண்ட கேஸ் அடுப்பு செட்டிங்! மைக்ரோ ஓவன்! சமையல் பாத்திரங்கள் கொண்ட மாடுலர் கிச்சன்! சமையலறை தனி அறையாய் இருக்காது! அந்த பெரிய பொது ஹாலிலேயே அது ஒரு மூலையில் இருக்கும்! எனவே வரவேற்பறை, சாப்பாட்டு மேஜை, சமையலறை அனைத்தும் கொண்ட ஒரு கூடம் போன்ற இடம் அளவு 30 அடி அகலம், 30 அடி நீளம் என்று வைத்துக் கொள்ளலாம்!


#10
சமையலயறையைத் தாண்டி இடது புறமாக, நடுவில் சென்றால் கீழ்தளத்துக்கு செல்வதற்கு 8 படிகள்! மேல் தளத்துக்கு செல்வதற்கு 8 படிகள்! 

படியின் மூலமாக கீழ்த்தளத்துக்குச் சென்றால் 10 அடி நீளம், 30 அடி அகலத்திற்கு ஓர் அறை! வலது புறமாக  இரட்டை அடுக்கு கட்டில்! குளியலறை + கழிவறை மற்றும் வாஷிங் மெஷின்+ ட்ரையர் மெஷின் வைத்துள்ள சிறு அறை.

அறையின் நடுவில் சுவரை ஒட்டு கனப்பு அடுப்பு கொண்ட சிறு பெட்டி போன்ற அறை! அலமாரி மற்றும் 
அயனிங் பாக்ஸ் மற்றும் அயனிங் டேபிள்!

அடுத்து சமையல் அறையில் இருந்து 8 படிகள் மேலே சென்றால் அங்கே மூன்று அறைகள்! ஓர் அறையில் மட்டும் அட்டாச் பாத்ரூம்; மீதி இரண்டு அறைகளுக்கும் பொது பாத்ரூம்!

துசான் நகரம் குளிராக இருப்பதால் வீடு முழுமைக்கும் வெப்பமூட்டி அமைக்கப்பட்டிருந்தது! ரிமோட் மூலமாக அளவை மாற்றிக் கொள்ளலாம்!






#11
ஒரு காரில் மூவர் மட்டும் அங்கிருந்து புறப்பட்டு, லாஸ் வேகாஸ் நகருக்குச் சென்றார்கள்.

இன்னொரு காரில் நாங்கள் அறுவர் மட்டும் வேறு பாதையில் பயணித்து 'Grand Canyon' என்ற பிரமாண்டப் பள்ளத்தாக்கை காணச் சென்றோம்.

செல்லும் வழியில் காலையிலேயே நாங்கள் தயார் செய்து எடுத்துச் சென்ற சாப்பாட்டை (பிரியாணிதான்!) சுமார் இரண்டரை மணி அளவில் காரை நிறுத்தி சாப்பிட்டு விட்டு சுமார் 4 மணி அளவில் அந்த இடத்திற்கு சென்று சேர்ந்தோம். 
சிறு விமானத்தை வாடகைக்கு வழங்கும் சேவை செய்யும் ஒரு நிறுவனத்துக்குச் சென்று  வேடிக்கை பார்த்துவிட்டு, மாலை 05:30 மணி அளவில் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றோம்.

இயற்கையாக அமைந்துள்ள பிரம்மாண்ட பள்ளத்தாக்கு, இறைவனின் படைப்பை எண்ணி ஆச்சரியம் கொள்ள வைத்தது.

மாலை 06:05 மணி அளவில் அந்த பிரம்மாண்ட பள்ளத்தாக்கில் சூரியன் மறையும் காட்சியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம். புகைப்படங்கள் நிறைய எடுத்தோம்; எடுத்துக் கொண்டோம்!



#12
மாலை 06:30 மணி அளவில் மீண்டும் புறப்பட்டு இரவு 10:00 அளவில் லாஸ் வேகாஸ் நகருக்கு வந்து சேர்ந்தோம். அங்கு நாங்கள் ஏற்பாடு செய்திருந்த வாடகை வீட்டில் எங்கள் குழுவில் இருந்து முன்கூட்டியே வந்திருந்த மூவரும் அனைவருக்குமான உணவு தயாரித்து வைத்திருந்தார்கள். 

இரவு உணவு சாப்பிட்டு முடித்த பின் இரவு 10:30 மணியளவில் காரில் புறப்பட்டு நகரை சுற்றிப் பார்த்தோம்! 11:30 மணியளவில் வீடு திரும்பி உறங்கச் சென்றோம்.
மறுநாளின் காலையில் புறப்பட்டு பொருட்கள் வாங்குவதற்காக கடைகளுக்கு, மால்களுக்குச் சென்று வந்தோம். 

மாலை சிறிது ஓய்வெடுத்த பின் இரவு உணவை விரைவாக சாப்பிட்டுவிட்டு மீண்டும் காரில் புறப்பட்டு லாஸ்  வேகாஸின் முக்கியமான வணிக கட்டடங்களுக்கு சென்றோம். 

சுமார் ஒரு மணி நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பி இரவு படுக்கைக்குச் சென்றோம்.





#13
மறுநாள் - பிப்ரவரி 10. 
காலை 10 மணி அளவில் வாடகை வீட்டை பூட்டிவிட்டு ஏஜெண்டுக்கு  தகவல் தெரிவித்து விட்டு,  இரு கார்களில் புறப்பட்டோம்.
சுமார் 15 நிமிடங்கள் பயணம் செய்து லாஸ் வேகாஸ் நகரில் அமைந்துள்ள செல்ஃபி பாய்ண்ட் இடத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அங்கேதான் அமெரிக்காவின் பல நகரங்களுக்குச் செல்லும் விமானங்களுக்கான சிறிய விமான நிலையம் அமைந்துள்ளது.




ஒரு காரில் 4 பேர்கள், இன்னொரு காரில் 5 பேர்கள் என புறப்பட்டு சில இடங்களில் பெட்ரோல் பங்குகளில் நிறுத்திச் சென்றதில் முன் பின்னாக இரு கார்களும் மாலை 3 மணி அளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சென்று அடைந்தோம்.
அங்கு அமைந்துள்ள ஆப்பிரிக்க சகோதரரின் கடையில்  மதிய உணவு சாப்பிட்டுவிட்டு கார்களை ஓட்டிச் சென்று அலமோ வாடகைக்கார் நிலையத்தில் திருப்பிக் கொடுத்தோம்!

குழுவில் ஒரு மூவர் மட்டும் அங்கே இரவு ஹோட்டலில் தங்கி விட்டார்கள்.
அங்கிருந்து ஷட்டில் பஸ் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் சென்று, இமிகிரேஷன் நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு விமான நிலையத்தின் உள்ளே சென்று காத்திருந்தோம்!
பிறகு விமானத்தில் உள் நுழைய அனுமதிக்கப்பட்டோம்.
இறைவனுக்கு நன்றி கூறி இருக்கையில் அமர்ந்தோம். விமானம் பறக்க ஆரம்பித்தது மணி சுமார்இரவு 10:45 (10/02/2026)





#14
விமானம் பறக்க ஆரம்பித்து ஒரு 30 நிமிட நேரத்தில் நேரத்தில் இரவு  சிற்றுண்டி வழங்கப்பட்டது.
சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் செல்போன் பார்த்துவிட்டு, விமானத்திலிருந்து ட்டீவியில் சேனல்கள் பார்த்துவிட்டு உறங்க ஆரம்பித்தோம்.
இப்படியாக விமானம் காலை 5 மணி அளவில் தைப்பை விமான நிலையம் வந்தடைந்தது. (12/02/2026.)

மறு பயணத்திற்காக ட்ரான்சிட்டில் ஒரு 3 மணி நேரம் காத்திருந்து மீண்டும் 8:00 மணி அளவில் அங்கிருந்துப் புறப்பட்டு, காலை 11:00 மணிக்கு பேங்காக் விமான நிலையம் வந்தடைந்தோம். விமான நிலைய குடியுரிமையை நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு புறப்பட்டு, மதியம் 1:00 மணி அளவில் நல்லவிதமாக வீடு வந்து சேர்ந்தோம். அல்ஹம்துலில்லாஹ்!

#15
சில தகவல் துணுக்குகள்!

அமெரிக்கர்களின் பண்பு!

ஒருநாள் இரவு நேரம். காரின் ஒரு சக்கரத்தில் காற்று குறைவாக இருந்தால், காற்று பிடிக்க பெட்ரோல் பங்க் சென்று இருந்தோம். 
காற்று பிடிக்கும் கருவியில் மூன்று டாலர் பணத்தைப் போட்டால் காற்று பிடித்துக்கொள்ளலாம்! அதில் எப்படி பணம் போடுவது, எப்படி அதை இயக்குவது என்று நாங்கள் சற்று தயங்கிக் கொண்டிருந்தோம்!

அப்போது அருகில் நின்றிருந்த, அந்த நகரத்தின் நிர்வாக அமைப்பின் காரில் ஏற வந்த இரு ஊழியர்கள்  எங்களைப் பார்த்து சூழ்நிலையை புரிந்து கொண்டார்கள். அதில் ஒருவர் 'ஹலோ ஃபிரண்ட்ஸ்' என்று கூறிக் கொண்டே எங்கள் அருகில் வந்தார். தன்னிடமிருந்து கிரெடிட் கார்டை எடுத்து, கருவியில் வைத்து அதை தேய்த்து விட்டு மூன்று டாலர் கிரெடிட் ஆனதும் கார்டை எடுத்துக் கொண்டு விட்டார். 'இப்போது காற்றைப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று (ஆங்கிலத்தில்தான்) சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொண்டார். நாங்கள் எங்களிடமிருந்து பணத்தை எடுத்து அவரிடம் கொடுக்கும் போது அவர் வாங்க மறுத்து விட்டார். "இட்ஸ் ஓகே" என்று சொல்லி உடனே இருவரும் புறப்பட்டு சென்று விட்டார்கள்.

'வந்தார்கள். தேய்த்தார்கள். கிரெடிட் ஆனதும் சென்று விட்டார்கள்' என்று நாங்கள் ஆச்சரியத்தில் நின்றோம்.
எங்கள் காரை ஓட்டிய நண்பர் சொன்னார் :
"இங்கு உள்ளவர்களுன் பண்புதான் இது. உதவி செய்வார்கள்! நாம் அதை ஏற்றுக் கொண்டு தேங்க்ஸ் சொன்னதும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்று விடுவார்கள். அவர்களை மீண்டும், மீண்டும் பணத்தைப் பெற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தக் கூடாது.  இங்கு உள்ளவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுவார்கள்" என்று சொன்னார். 

அமெரிக்கர்களின் உதவும் மனப்பான்மையை நினைத்து நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.


(மே 2026, 'தமிழ்நெஞ்சம்' மின்மாத இதழில் வெளிவந்த எனது கட்டுரை!)


#16
Tucson நகரத்தின் பரப்பளவு சுமார் 241 சதுர மைல் (625 சதுர கி.மீ) ஆகும்.

விவரம்:
- நிலப்பரப்பு: 2020 கணக்கெடுப்பின்படி 240.99 சதுர மைல் (624.17 கி.மீ²)

Tucson, அரிசோனா மாநிலத்தில்  இரண்டாவது பெரிய நகரம்.


#17
அமெரிக்காவில் தூரங்களைக் குறிக்க கிலோ மீட்டர்கள் கணக்கைப் பயன்படுத்துவதில்லை! மைல் கணக்கை தான் பயன்படுத்துகிறார்கள்.

#18
துசான் நகரத்தில் எல்லா வீடுகளிலும் கார்கள் உள்ளன.
சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களைக் காண முடிவதில்லை!

ரயில், பேருந்து, டிராம் வண்டி வசதிகள் உள்ளன.

#19
இங்கு மிகப் பெரிய பரப்பளவு ஏரியாவில் மிகப் பெரிய கார் நிறுத்தும் வசதிகளுடன் பல நிறுவனங்களின் கடை அமைப்புகள் வரிசையாக, தொடர்ச்சியாக,  பக்கம் பக்கமாக 
'ட' வடிவிலோ,
'ப' வடிவிலோ  அமைந்துள்ளன.

#20
இங்கு 'காஸ்ட்கோ' என்கிற மொத்த விற்பனை நிலையத்தின் கிளைகள் நிறைய உள்ளன.  உறுப்பினர் அட்டை இருந்தால் தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்! நாம் ஒரு குழுவாக சென்றால் 8 அல்லது 10 பேர் வரை ஓர் உறுப்பினர் அட்டையைக் காட்டி உள்ளே செல்லலாம்.
இரவு 08:30-க்குள் பில் போட்டு முடித்து விட வேண்டும்.
08:30-க்குள் நாம் வரிசையில் போய் நின்றாலும் கூட அப்போது போடுகின்ற பில்லோடு கேஷ் கவுண்டர் மூடி பண்ணி விடுவார்கள்! பொருட்கள் வாங்காமலேயே வெளியேற வேண்டியதுதான்!


#21
அமெரிக்காவில் பங்க்-குகளில் பெட்ரோல் நிரப்புவதற்கு ஊழியர்கள் கிடையாது.
பணமாக கொடுப்பதாயிருந்தால் முன்கூட்டியே பணம் கொடுத்து விட்டால், அவர்கள் அந்த தொகையை செட் பண்ணிடுவார்கள். நாம் நமது காருக்கு பெட்ரோல் போடும் போது அந்த தொகை வந்ததும் ஆட்டோமேட்டிக்காக பெட்ரோல் வருவது நின்று விடும். கடன் அட்டையாக இருந்தால் பெட்ரோல் போட்டு முடித்ததும் காட்டும் தொகையை கடனட்டை மூலம் ஸ்கேன் செய்து செலுத்தி விட்டு புறப்பட வேண்டியதுதான்! 
பெட்ரோல் பங்க்-குகளில் காஃபி, சிற்றுண்டிக் கடைகள், மினி மார்ட் கடைகள் உள்ளன. கழிவறைகள் பொது இடங்களில் காணப்படாது! ஆனால் அந்த மினி மார்ட் உள்ளே சென்றால் கழிவறைகள் அங்கே இருக்கும். சில இடங்களில் மினி மார்ட் கடைக்குப் பக்கத்திலேயே கழிவறைகள் இருக்கும்; ஆனால் பூட்டப்பட்டிருக்கும்! மினி மார்ட் கடையில் உள்ளே சென்று கேஷிரிடம் சொன்னால் அவர் ஸ்விட்ச் ஆன் செய்வதன் மூலம் திறந்து விடுவார்; நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.


#22
இங்குள்ள சங்கிலித் தொடர் கடைகளில் எந்தக் கிளைக் கடையில் பொருள் வாங்கினாலும் அதை அந்த நிறுவனத்தின் வேறொரு கிளையிலே போய் மாற்றிக் கொள்ளலாம்! அல்லது திருப்பிக் கொடுத்துவிட்டு பணம் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.

அமெரிக்கப் பயணம் சென்று வந்ததை ஒரு நாட்குறிப்பு போல எழுதலாம் என்று எழுதினேன்.  சுவாரசியாக இருந்ததா என்பதைத் தெரியப்படுத்துங்கள்! நன்றி!!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன். 




. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...