...பல்சுவை பக்கம்!

.

Thursday, January 10, 2013

இருவர் ! #109

இருவர் !



உக்காஸ் -  அஃப்ராஜ் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். பெரியவர்களாகிய பின்னும் அவர்களின் நட்பு தொடர்ந்தது. இருவரும் நல்ல வசதிகளோடு வாழ்ந்து வந்தார்கள்.

இப்படி இருக்கும்போது ஒரு தடவை, உக்காஸ் அவரது  ஒரு நிலத்தை விற்கும்போது, அஃப்ராஜ் அதை நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டார்.

சில மாதங்கள் சென்ற பின், அந்த நிலத்தில் பயிரிடுவதற்காக நிலத்தை உழுதார், அஃப்ராஜ். அப்போது, ஏர் கலப்பையின் கீழே "டங்" என்றொரு சப்தம் கேட்டது. அஃப்ராஜ் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது, நிலத்தின் சில அடிகள் கீழே ஒரு வெங்கலப் பானை இருக்கக் கண்டார்.

ஆச்சரியத்தோடு பானையை எடுத்துப் பார்த்தார். கனமாக இருந்தது. 'உள்ளே என்ன இருக்கிறது' என்கிற ஆவல் கொண்டு திறந்து பார்த்தார். பானை  முழுவதும் தங்க நகைகள் இருந்தன.


 'ஆஹா இது நண்பர்  உக்காஸ் இடமிருந்து வாங்கிய நிலத்தில் இருந்து கிடைத்திருப்பதால் இந்தப் புதையல் உக்காஸுக்குரியதே; அதனால் இதை அவரிடமே ஒப்படைத்து விடுவோம்' என்று எண்ணி, அந்தப் பானையுடன் உக்காஸ் வீட்டிற்குச் சென்றார் அஃப்ராஜ்.

நம்  நாட்டில்  உள்ளதுபோல் நிலத்தில் கிடைக்கும் பு  தையல்    அரசாங்கத்திற்கு    சொந்தம் என்கிற சட்டம் எதுவும்   அவர்கள் வசித்த நாட்டில் கிடையாது.

உக்காஸை சந்தித்து விவரம் சொன்னார் அஃப்ராஜ். ஆனால் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார் உக்காஸ். "நான் நிலத்தை  விற்று விட்டேன். அதனால் அதிலிருந்து கிடைக்கும் அனைத்துமே உனக்கே சொந்தம். நான் பெற்றுக் கொள்ள மாட்டேன்" என்று, பிடிவாதமாக கூறி விட்டார். 


என்ன செய்வது என்று யோசித்த அஃப்ராஜ், உடனடியாக அந்த நாட்டின் நீதிபதியிடம் சென்று, விபரம் கூறி, இதை உக்காஸ் இடம் ஒப்படைத்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.

உக்காஸை அழைத்துவரச் சொல்லி ஊழியரை அனுப்பினார் நீதிபதி. 

"நிலம் மட்டும்தான் நான் வாங்கினேன். அதனுள்ளே இருந்த புதையலை உக்காஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்கிறார் அஃப்ராஜ்.

"நிலத்தை நான் அஃப்ராஜ் இடம் விற்று விட்டதால், அதில் இருக்கும் புதையலும் அவருக்கே சொந்தம்" என்கிறார் உக்காஸ்.


யோசனை செய்த நீதிபதி உக்காஸைப் பார்த்து கேட்டார்: "உங்களுக்கு பிள்ளைகள் யாரும் இருக்கிறார்களா?"

உக்காஸ் சொன்னார்: "எனக்கு திருமண வயதில் ஓர்  ஆண்மகன் இருக்கிறான்"

நீதிபதி அஃப்ராஜைப் பார்த்துக் கேட்டார்: "உங்களுக்குப் பிள்ளகள் உண்டா?"

அஃப்ராஜ் சொன்னார்: "எனக்கு திருமண வயதில் ஒரு பெண்மகள் இருக்கிறாள்"


நீதிபதி முடிவாய் அவர்களிடம் சொன்னார்: "அந்த ஆண்மகனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் செய்வித்து, அவர்களின் மணவாழ்விற்கு இந்தப் புதையலை மணக்கொடையாக கொடுத்து விடுங்கள். இதில் உங்கள் இருவருக்கும் நல்ல தீர்வு இருக்கிறது. சரியென்றால் மணமக்களாகப் போகும் இருவரின் சம்மதத்தையும் கேட்டு திருமணம் செய்துவிடுங்கள்"

இந்த யோசனை இருவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அண்மகனுக்கும் பெண்ணுக்கும் திருமணம் பெரியோர்களின்  வாழ்த்துக்களோடு நடந்தேறியது. மணமக்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்தார்கள்.  

நாமும் வாழ்த்துவோமே! 

குறிப்பு: ஒரு சொற்பொழிவில் நான் கேட்டது இந்தக் கதை. பிடித்ததால் பகிர்ந்தேன்.
. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Wednesday, December 26, 2012

போதும்... ஆனா... போதாது! #108


இளங்கோவன் சார் எங்களின் வகுப்பாசிரியர். 9-ஆம்,
10-ஆம் வகுப்புகள் படிக்கும்போது, புத்தகத்தைப்
பார்க்காமலேயே உலக விஷயங்கள் கலந்து சுவையாக
பாடம் நடத்துவார்.

அப்போது ஒரு நாள் இன்பச் சுற்றுலா சென்றிருந்தோம்.
தஞ்சாவூர் பெரிய கோவில் சென்றுவிட்டு, சிவகங்கை
பூங்கா சென்றோம்.

மதிய நேரம். வெயிலில் நடந்து, அலைந்து, களைத்துப்
போய், பசி வயிற்றை உள்ளேயும் வெளியேயும்
கிள்ளியது.

உடனே இனிய நிழல் தரும் மரத்தின்கீழ் அமர்ந்து,
கை கழுவிவிட்டு,  லஞ்ச் பாக்ஸைத் திறந்து,
கொண்டு சென்றிருந்த உணவை சாப்பிட ஆரம்பித்தோம்.

 எனக்கு பசி மிகுதியாய் இருந்தபடியாலும் சிறிய
பாக்ஸில் குறைவான உணவே இருந்தபடியாலும்
நான் முதலில் சாப்பிட்டு விட்டேன்.

ஆசிரியராய் பணியாற்றிய எங்கள் அண்ணன், இளங்கோவன்
சாருக்கு நண்பர். சாருக்கு என்மீது, தனிப் பிரியம் உண்டு.

நான் சாப்பிட்டுவிட்டதைப் பார்த்த இளங்கோவன் சார்,
என்னிடம், தன்னுடைய மூன்றடுக்கு லஞ்ச் கேரியர்
பாக்ஸில் இருந்த உணவை நீட்டி, "சாப்பாடு வேணுமா
நிஜாம்?" என்று கேட்டார்.

உடனே நான், "பத்தலை சார்" என்றேன்.

"பத்தலைன்னா இந்த சாப்பாடு வேணுங்க்கிறதை
எடுத்துக்கோ" என்றார் சார்.

மீண்டும் உடனே "பத்தலை சார்" என்றேன் நான்.

"அப்படின்னா சாப்பாடு எடுத்துக்கோயேன்" என்றார் சார்.

'சாப்பாடு வேணாம்' என்பதைத்தான் நான் "பத்தலை'
என்று உளறியிருக்கிறேன். சுதாரித்துக் கொண்டேன்.

"இல்லை சார், வயித்திலே இடம் பத்தலை; அதனால்
சாப்பாடு வேணாம்னேன்" என்றேன்.

"ஓ  அப்படியா! உளறினாலும் சமாளிச்சிட்டியே, பரவாயில்லை"
என்று சொல்லி சார் சிரிக்கவும் பையன்கள் எல்லோரும்
சிரிக்கவும் அந்த இடமே கலகலப்பானது.

-அ .முஹம்மது நிஜாமுத்தீன்.  
  
. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Sunday, December 23, 2012

குண்டப்பா - மண்டப்பா 8 #107

குண்டப்பா - மண்டப்பா 8 #107

மண்டப்பாவைப் பார்க்க, அவரது வீட்டிற்குச் சென்றார்
குண்டப்பா. அப்போது மண்டப்பா குளித்துக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்ததும் குண்டப்பாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

குண்டப்பா கேட்டார்: "மண்டப்பா, என்ன செய்துட்டிருக்கே?"

மண்டப்பா சொன்னார்: குண்டப்பா, நான் குளிச்சிட்டிருக்கேன்!"

குண்டப்பா கேட்டார்: "ஏன் மண்டப்பா சட்டையைப் போட்டுக்கிட்டு குளிக்கிறே?"

மண்டப்பா சொன்னார்: "ஒரே குளிரா இருக்கில்லையா? சட்டை
போட்டுக்கிட்டு குளிச்சால், குளிராதுன்னு சட்டையைப் போட்டுக்கிட்டு குளிக்கிறேன்"

குண்டப்பா பாவம் மண்டை காய்ந்து போனார்.



. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Thursday, November 8, 2012

செல்போன் சிந்தனை!!! #106

செல்போன் சிந்தனை!!!

இரவு சுமார் 9 மணி இருக்கும். சிதம்பரத்திலிருந்து
மயிலாடுதுறைக்கு பஸ்ஸில் புறப்பட்டேன். பஸ்
புறப்பட்டு 5 நிமிடங்கள்கூட ஆகவில்லை.
செங்கழுநீர் பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து
(எஸ்.ப்பீ. கோயில் தெரு) சீர்காழி ரோடில் பஸ்
திரும்பியது.

எனதருகில் அமர்ந்திருந்தவரின் (சுமார் 40 வயதிருக்கலாம்)
செல்போன் இனிய ரிங்டோன் தந்தது. எடுத்து டிஸ்பிளேயில்
அழைப்பவர் பெயர் பார்த்தவர் இடது கையால் செல்லை
காதில் வைத்து, வலது கையை வாயின்மேல் வைத்து
பொத்திக் கொண்டு பயபக்தியுடன் பேச ஆரம்பித்தார்.

"இதோ வந்திட்டிருக்கேன்மா... இன்னும் 15 நிமிஷத்திலே
வந்திருவேன்மா... ஆமாம்மா... இல்லம்மா...
வைத்தீஸ்வரன்கோவில் வந்திட்டேன்மா... 15 நிமிஷத்திலே
வந்திடுவேன்மா... நீ சாப்பிட்டுட்டு தூங்குமா... நான்
வந்திடுறேன், வச்சிறவா?" என்று பேசிவிட்டு செல்லில்
அழைப்பை துண்டித்துவிட்டு என்னைப் பார்த்தார்.

அந்தப் பார்வையில் 'வெற்றிகரமாக மனைவியிடம்
பேசிவிட்ட பெருமிதமா? அல்லது சிதம்பரத்தையே பஸ்
விட்டு முழுமையாக விலகாத நிலையில்,
வைத்தீஸ்வரன்கோவில் வந்துவிட்டதாய் சொன்னோமே
அதை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தினால் தோன்றிய
கலவரமா? அல்லது இரண்டும் கலந்த கலவையா?'
எது என்றே   புரிந்து கொள்ள இயலாத உணர்வைக் கண்டேன்.

ஏன் இப்படி உண்மையை மறைத்து கோக்குமாக்காக
உளறவேண்டும் என்கிற கேள்வி நீண்ட நேரம் என்னைக்
குடைந்து கொண்டிருந்தது.

-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.   

. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, August 31, 2012

எங்க ஊரு தேவதை! (4-ஆம் ஆண்டு துவக்கம்)


எங்க ஊரு தேவதை! (4-ஆம் ஆண்டு துவக்கம்)

இது நிஜாம் பக்கம் 4-ஆம் ஆண்டின் துவக்கத்தில் முதல் பதிவு
என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

"எங்க ஊரு தேவதை - கதை!"

எங்க ஊருல ஒரு தேவதை இருந்துச்சு. (பேரு தேவையில்லை.)
அது கொஞ்சம் வித்தையாசமான தேவதை. அது எங்க
ஊருடைய எல்லையில ஒரு தென்னை மரத்தில
இருந்துச்சு. (ஆமாங்க... தென்னை மரம்தான்...)

அது அந்த வழியாகப் போகிறவங்க, வருகிறவங்ககிட்ட
ஏதாவது வம்பு பண்ணும். ஆனாலும் நல்ல தேவதை.
ஒரு நாள் அந்த வழியாக ஒரு வர்ணம் தீட்டுகிறவர்
போனார்.

அப்ப அந்த தேவதை அவரைக் கூப்பிட்டது. "எங்கே
போறீங்க?"ன்னு கேட்டுச்சு.

"கண்ணம்மா வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கப்
போறேன்"னாரு அந்த பெயிண்டரு.

"இந்தப் பையில 100 தங்கக் காசு இருக்கு. நீ வெச்சிக்க"
அப்படின்னு சொல்லி ஒரு பைய பெயிண்டருக்கிட்ட
கொடுத்திச்சி அந்த தேவதை.

ஜாலியா வாங்கிகிட்டாரு அந்த பெயிண்டரு.
அப்ப அந்த தேவதை, அந்த பெயிண்டருக்கிட்ட
"அந்தப் பையிலருந்து எனக்கும் பங்கு
கொடு"ன்னுச்சு.

அந்தப் பெயிண்டருக்கு கொடுக்க மனசே வரலை.
இருந்தாலும் கேட்டுடுச்சேன்னு 3 தங்கக் காசை மட்டும்
எடுத்து தரையில் வீசிட்டுப் போனாரு அவரு.

ஊருக்குள்ளே போனதும் கண்ணம்மா வீட்டுல
பெயிண்ட் அடிக்க ஆரம்பிக்குமுன்னே அந்தப்
பையை வீட்டு உச்சியில கண் பார்வை படுறாப்பல
மாட்டி வச்சிட்டு வேலை செஞ்சாரு பெயிண்டரு.

பெயிண்டரு அந்தப் பையைப் பார்த்துக்கிட்டே வேலை
செய்யுறாரேன்னு டவுட்டு வந்திடுச்சி அந்த
வீட்டுக்காரம்மா கண்ணம்மாவுக்கு.
பெயிண்டருக்கிட்ட கேட்டேபுட்டாங்க.

"அதுல புளியம் விதை வாங்கி வச்சிருக்கேன்"னு
பொய் சொல்லிட்டாரு, பெயிண்டரு.

அப்புறம் அவரு சிறு நீர் கழிக்கப் போகும்போது
கண்ணம்மா அந்தப் பையைத் திறந்து பார்த்தாங்க.
உள்ளே அம்புட்டும் தங்கக் காசு!

உடனே அந்தப் பையிலருந்த தங்கக் காசையெல்லாம்
எடுத்து வச்சிக்கிட்டு, அதுல, புளியம் விதையைக்
கொட்டி வெச்சிட்டாங்க.

வேலையை முடிச்சிட்டு, பையை எடுத்துப் பார்க்கிறாரு
பெயிண்டரு. உள்ளே புளியம் விதைதான் இருக்கு.
வீட்டுக்காரம்மாகிட்ட கேட்டா "நீ புளியம் விதைன்னுதானே
சொன்னே?" அப்படின்னு சண்டைக்கு வருது அந்தம்மா.

பாவம், பெயிண்டரு திரும்ப அந்த தேவதை இருக்கிற
மரத்தடிக்கு வந்திட்டாரு. தேவதையைக் கூப்பிட்டு
புகார் கொடுத்தாரு, வீட்டுக்கார கண்ணம்மா பேருல.

அதுக்கு அந்த தேவதை, "அந்த தங்கக்காசுலாம்
கண்ணம்மாக்குத்தான் நான் வெச்சிருந்தேன்.
நீ வரவும் உன்மூலமா அவங்ககிட்ட
சேர்ப்பிச்சிட்டேன். நீ கவலைப் படாதே"ன்னுச்சாம்.

"அப்படின்னா எனக்கு எதாவது தங்கக்காசு
அன்பளிப்பு கொடு"ன்னு அழுதுகிட்டே கேட்டாரு
பெயிண்டரு.

"அதோ, நீ காலையில தூக்கி வீசிட்டுப் போனியே
அதே 3 தங்கக் காசு அங்கேயேதான் கிடக்கு.
அதை எடுத்துட்டுப் போ"ன்னு சொல்லிட்டு
தன் தென்னை மர வீட்டுக்குபோயிடுச்சி அந்த
தேவதை.

"அடடா, முதல்லியே 20, 30 காசையாவது
தேவைதைகிட்ட போடாம போய்ட்டேனே!"
அப்படின்னு வருத்தப் பட்டுக்கிட்டே தேவதை
காட்டிய 3 தங்கக் காசை மட்டும்
எடுத்துக்கிட்டு தன் வீட்டுக்குப் போய்
சேர்ந்தாரு அந்த பெயிண்டரு.


பின் குறிப்பு 1: இந்தக் கதையின் நீதி என்ன?

பின் குறிப்பு 2: வேணும்ங்கிறவங்க "எங்க ஊரு தேவதை"ங்கிற
தலைப்பை 'ஓர் ஊரில் ஒரு தேவதை' அப்படின்னு
மாத்திப் படிச்சிக்கலாம். 'எங்க ஊருல' என்பதை
'ஓர் ஊருல' எனவும் மாத்திக்கவும்.

பின் குறிப்பு 3: 'எங்க ஊரு தேவதை'ங்கிற தலைப்புல
குடந்தையூர் ஆர்.வி.சரவணன் தன்னுடைய
படைப்பை வழங்குமாறு அழைக்கிறேன்.


.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Tuesday, August 14, 2012

மார்க்கச் சுடரொளி ஜாமிஆ (வாழ்த்துப்பா) #104

மார்க்கச் சுடரொளி ஜாமி! (வாழ்த்துப்பா)

எங்களூரின் 100 ஆண்டுகள் கண்டு வீறுநடை போடும்
ஜாமி மிஸ்பாஹுல் ஹுதா அரபி கல்லூரி,
கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய
தேதிகளில் தனது நூற்றாண்டு விழாவை சிறப்பாகக்
கொண்டாடியது.

ப்போது வெளியிடப்பட்ட ஜாமி நூற்றாண்டுப்
பெருவிழா வரலாற்று மலரில் வெளிவந்த எனது
வாழ்த்துப்பாவை இங்கே வழங்குகிறேன்.




பல்கலைக் கழகம் ஜாமி
பார்புகழ் நிறுவனம் ஜாமி
நூறாண்டு சேவை செய்துமே
தொடரும் சாதனை ஜாமி!

நூறாண்டு முன்னே நிறுவனர்
அல்லாமா அப்துல்கரீம் துவக்கினரே
அடுத்தடுத்து அறிஞர் பெருமக்கள்
தலைமை ஏற்று நடத்தினரே!

ஹாபிழ், ஆலிம், கணினியும்
முழுதும் கற்ற மாணாக்கர்
அறிஞர் என்றே உயர்ந்தார்கள்
அகிலம் முழுதும் சிறந்தார்கள்!

எழுத்து, பேச்சு, போதனை
எதிலும் சிறந்து விளங்குகிறார்
மார்க்க சேவை புரிகின்றார்
மாநிலம் போற்ற உயர்கின்றார்!

நூறாண்டு காலத்து வரலாறு
எழுதிட பக்கம் போதாது
மார்க்கச் சுடரொளி ஜாமி
மனத்தால் மகிழ்ந்து வாழ்த்துவோம்!

-.முஹம்மது நிஜாமுத்தீன்.










.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Tuesday, June 19, 2012

விகடனில் நிஜாம் பக்கம்! #103

விகடனில் நிஜாம் பக்கம்!

எனது முதல் கவிதை "ரத்னபாலா" பாலர் வண்ண மாத
மலரில்
வெளிவந்தது. அப்போதிலிருந்தே
நான் பல
பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். இருப்பினும்
'
நிஜாம் பக்கம்' வலைப்பூவை நான் ஆரம்பித்தது
கடந்த
2009-ஆம் ஆண்டில்தான்.

அப்போதிலிருந்து தொடர்ச்சியாய் இல்லாமல், விட்டுவிட்டு எழுதி 100 பதிவுகளைக் கடந்து விட்டேன். சக பதிவர்கள் படித்து, பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப் படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வாரம் வெளியான 'ஆனந்த விகடன்' இதழுடன் சோழ மண்டலத்திற்கான 'என் விகடன்' இதழில் (2o.06.2012) 'வலையோசை' பகுதியில் எனது "நிஜாம் பக்கம்" பற்றிய அறிமுகம் வெளியாகி உள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது.



நண்பர்கள் வலைப்பூவிலும் டிவிட்டரிலும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, தொலைபேசியும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். அவர்களுக்கும் இனிய நன்றிகள்.

அழகாய் வெளியிட்டு அறிமுகம் செய்த ஆனந்த விகடன் குழுவினருக்கும் எனது அன்பான நன்றிகள்!  

-.முஹம்மது நிஜாமுத்தீன்.

குஷ்பு பற்றிய ஒரிஜினல் பதிவைப் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

காந்திஜி பற்றிய ஒரிஜினல் பதிவைப் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

http://www.vikatan.com/anandavikatan/En-Vikatan---Trichy-Edition/20452-trichy-nizampakkam-blog.html
. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, June 8, 2012

தினத்தந்திக்கு ஒரு கடிதம்! #102

தினத்தந்திக்கு ஒரு கடிதம்!

வழமை போலவே இந்த ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி.
பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில்
முதல் இடம், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கும்
தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்றவர்களுக்கும்
தினத்தந்தி சார்பாக பரிசுகள் கொடுத்துள்ளீர்கள்.
பாராட்டக்கூடிய செய்தி.

இதன்படி முதலிடம்:
தஞ்சாவூர் ஸ்ரீநாத். (497 மதிப்பெண்கள்)

இரண்டாமிடம் பெற்றுள்ளவர்கள் 6 மாணவர்கள்
(496 மதிப்பெண்கள்):
1.நாகர்கோவில் எஸ்.ஜென்கின்ஸ் காட்பிரே,
2.பாளையங்கோட்டை இ.எம்.நந்தினி,
3.திருநெல்வேலி கே.என்.மகாலட்சுமி,
4.திண்டல் சுவாதி சென்னியப்பன்,
5.கரூர் டி.கவின்,
6.புழுதிவாக்கம் என்.அகிலா.

இதில் விநோதமான ஒரு விதிமுறை கடைப்பிடிக்கப்
படுகிறது. முதல் பரிசு (ரூ. 10,000) பெற்றவர்
மாணவனாக இருப்பின் இரண்டாம் பரிசு
(
ரூ. 5,000) மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றது.

அதனால், மாணவன்கள் ஜென்கின்ஸ் காட்பிரே
மற்றும் கவின் இருவர் தவிர்த்து, மாணவிகளான
மற்ற நால்வருக்கு மட்டும் பரிசு வழங்கப்படும்
என்று அறிவித்துள்ளீர்கள்.

ஒரே அளவு மதிப்பெண்களும் ஒரே ரேங்க்கும்
பெற்றவர்களில் 4 பேர்களுக்கு பரிசு உண்டு;
2 பேர்களுக்கு பரிசு கிடையாது என்பது
என்ன மாதிரியான சட்ட திட்ட விதிமுறை
என்பதுதான் எனக்குப் புரியவில்லை!
இதில் மாண'வி' என்பதனால் பரிசு என்றும்
மாண'வன்' என்பதனால் பரிசு கிடையாது
என்பதும் என்ன அளவுகோல்? இதன்
காரணமாக அந்த இரு மாணவர்களும்
'மன சலிப்பி'ற்கு உள்ளாவார்கள் என்பது
நிச்சயம்.

ஓர் உதாரணத்திற்கு இவ்வாறு எடுத்துக் கொள்வோம்.
முதல் ரேங்க் 497 ஒரு மாணவன் எடுக்கின்றான்.
இரண்டாம் ரேங்க் 496 வேறொரு மாணவன்
எடுக்கின்றான். மூன்றாம் ரேங்க் 495 ஒரு
மாணவி எடுக்கின்றாள். இப்போது முதல்
ரேங்க் எடுத்த மாணவனுக்கும் மூன்றாம்
ரேங்க் எடுத்த மாணவிக்கும் பரிசு கொடுத்துவிட்டு
இரண்டாம் ரேங்க் எடுத்தவனுக்கு பரிசில்லை
என்பது வேடிக்கையாக உள்ளது. இது
'ஒரு போட்டியில் கலந்து இரண்டாமிடம் பெற்ற
ஒருவருக்கு பரிசு கிடையாது; முதல் இடம்,
மூன்றாம் இடம் பெற்றவர்களுக்குத்தான் பரிசு'
என்பதைப் போல் உள்ளது.

எனவே, இதில் இரண்டாம் இடம் பெற்ற இரு
மாணவன்களுக்கும் பரிசுத் தொகை அளித்திட
ஆவன செய்து, விதிமுறைத் திருத்தம்
கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...