...பல்சுவை பக்கம்!
.
Tuesday, November 3, 2009
சில சிந்தனைகள் (பகுதி - 3)
சில சிந்தனைகள் (பகுதி - 3)
வெற்றிக்கான எளிய வழிகள்!
1. ஒன்றும் இல்லாதவனைக் கூட கோடீஸ்வரன் ஆக்குவது பொருள்தான். எனவே
பணத்தைச் சம்பாதியுங்கள். கஷ்டப்பட்டு முதலில் ஒரு ரூபாய் சம்பாதித்து விட்டால்,
இரண்டாவது ஒரு ரூபாய் தானே வந்து சேரும். பகைவரை வெல்லக் கூடியது,
பொருள்தான். பொருள் இருந்தால், அறம் செய்யலாம்; இன்பம் அனுபவிக்கலாம்.
ஆகவே, எந்தப்பாடு பட்டாவது பொருள் தேட முயற்சி செய்யுங்கள். பொருள்தான்
உங்களைச் செழிக்க வைக்கும் கேணி! பொருள்தான் உங்கள் வாழ்க்கைக்குத் தோணி!
பொருள்தான் உங்களை உச்சிக்கு உயர்த்தும் ஏணி! பொருளைப் போற்றுங்கள்!
போற்றுகிறவரிடம்தான் பொருள் சேரும்.
2. பொருளைச் சேர்க்கத் திட்டமிடுங்கள். திட்டமிட்டு செயலாற்றுவதே வெற்றியின்
அடிப்படை. முடிந்த இடத்தில் எல்லாம் முயற்சி செய்யுங்கள். பல வகைகளிலும்
சிந்தித்துப் பாருங்கள். ஆராய்ந்து தெளிந்து, பின் ஒரு முயற்சியில் இறங்குங்கள்.
'இது சரியான நேரம் அல்ல' என்றால், ஆறப் போடுங்கள். சூடாக செய்வது நல்லது
என்றால், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்.
3. செயல்திறன் என்பது, மன ஊக்கம்தான். மனதில் உறுதியிருந்தால், வெற்றி நிச்சயம்.
துணிவுடனும் விழிப்புடனும் இருந்தால், எந்த இடையூறையும் வென்றுவிட முடியும். ஆனால்,
வீண் தம்பட்டம் அடிப்பது, கேலிக்கு இடமாகிவிடும். இடுக்கண் வந்தாலும், இழிந்த
செயல்களை செய்யக் கூடாது. வஞ்சத்தில் பொருளீட்ட முயற்சிப்பது, பச்சை மண்
பானையில் தண்ணீர் நிரப்புவதைப் போன்றது. பானையும் உடைந்து போகும்;
தண்ணீரும் ஓடிவிடும். எனவே, செய்வதைத் தூய்மையாகச் செய்யுங்கள்.
4. விசயம் தெரிந்தவர்களுடன் கலந்து ஆலோசித்துச் செய்வது, இரட்டை இலாபம்
தரும். ஒரு யானையை வைத்து அடுத்த யானையைப் பிடிப்பார்கள். அதுபோல,
ஒரு வேலையச் செய்யும்போதே, முடிந்தால் அடுத்த வேலையையும் சேர்த்துச்
செய்யுங்கள். செலவு, வரவு, நமக்கு மிச்சப்படுவது என்று கணக்குப் பார்த்து,
எதையும் செய்யுங்கள். வாரி குவித்து விடலாம் என்று ஆசைப்பட்டு, கையில்
இருப்பதையும் இழந்து விடாதீர்கள்.
5. கடுமையாக் முயற்சி செய்தால், விதியைக்கூட வென்றுவிட முடியும். முயற்சிக்கு
முட்டுக்கட்டையாக இருப்பது சோம்பல். சோம்பல் குடியை கெடுத்து விடும். சோம்பேறி
கெட்டு அழிவான். அவனுக்கு முன் அவனது தொழில் கெடும். சோம்பல், மறதி,
தூக்கம், கால தாமதம் இந்த நான்கும் நமது வெற்றியைக் கெடுக்கக் கூடியவை.
6. நமது எண்ணங்கள் எவ்வளவு சிறப்பாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு நமது
செயல்களும் சிறப்பாக இருக்கும். எனவே, கோடீசுவரன் ஆகிவிட்டது போலக் கனவு
காணுங்கள்.மாளிகையில் வாழ்வது போல, படகுக் காரில் பவனி செல்வது போல
ஒவ்வொரு இரவும் கனவு காணுங்கள்! அந்தக் கனவு கைகூடக் கடுமையாக
முயற்சி செய்யுங்கள். ஊக்கத்துடன் முயற்சி செய்தால், நிச்சயம் கை கூடும்.
7. காலம் அறிந்து செய்தால், எந்த முயற்சியும் வெற்றி பெறும். குளக்கரையில் நின்று
கொண்டிருக்கும் கொக்கு, மீன் வந்ததும், 'லபக்' என்று கொத்திக் கொள்ளும். அது போல,
காலத்தை எதிர்பார்த்து இருங்கள். காலம் வரும்போது, தவறவிடாமல், வேலையை
முடியுங்கள். காலம் வரும் வரை காத்திருப்பதைத் தோல்வி என்று நினைக்காதீர்கள்.
ஆட்டுச் சண்டை நடக்கும்போது, கிடா பின் வாங்கித் தாக்கும். புலி பதுங்கித் தாக்கும்.
8. நமது திறமை, முதலீடு போன்ற வலிமைகளை உணர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு மரத்தின் கிளைகளில் ஏறி, உச்சிக்குப் போய்விட்டோம். அதற்கு மேல் ஏறினால்
கிளை முறிந்து, நாம் கீழே விழுவோம்! அகலக் கால் வைக்கக் கூடாது! சிறுகக் கட்டிப்
பெருக வாழ்க!
9. தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறச் சொல்வன்மை மிக முக்கியம். சாமர்த்தியமாகப்
பேசத் தெரிய வேண்டும். அளவோடு பேச வேண்டும். சொல்லின் திறன் தெரிந்து நாம்
பயன்படுத்த வேண்டும். கேட்பவர் விரும்பும்படி பேச வேண்டும். அவருக்குப் பிடிக்காததைப்
பேசக் கூடாது. அவர் சொல்லுவதையும் நாம் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.வாய்ச்
சொல்லால் கெட்டவர்களும் உண்டு. எனவே, அவசரப்பட்டு வாயைத் திறக்கக் கூடாது.
10. பேச்சில் நாநயம் போல, நாணயமும் முக்கியம். இனிக்க இனிக்கப் பேசி,
ஏமாற்றக் கூடாது. உண்மையாகப் பேசவேண்டும். 'நாம் சொன்னது பொய்' என்று
தெரிந்தால் நாளை யாரும் நம்மை நம்ப மாட்டார்கள். எத்தனை நல்லவனாக, வல்லவனாக
இருந்தாலும் பொய்யன் என்று பெயர் வாங்கி விட்டால், எந்தப் பெருமையும் கிடைக்காது.
நன்றி: 'வெற்றிப்படிகள்' - முனைவர் அ.அய்யூப்
அன்பன்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நல்ல சிந்தனைகள். பகிர்வுக்கு நன்றி
நல்ல கருத்துகள்..வெற்றிக்கு கண்டிப்பாக வழிவகுக்கும் படிக்கள்...சூப்பர்ப்...
அருமையான பதிவு
super nizaam
பாராட்டி, கருத்துக்கள் தந்த
S.A. நவாஸ்தீன்...
கீதா ஆச்சல்...
ஸ்ரீ.கிருஷ்ணா...
எனது நன்றிகள்!
BAI, PORULAI POTRUNGAL ENRU KOORIILLIREERGALE,
POTRUVATHU ENRAAL EPPADI ENRU SOLLUNGAL PLS
Post a Comment