...பல்சுவை பக்கம்!

.

Tuesday, August 31, 2010

இ.ஆ. இ.ஆ. = இனிதே ஆரம்பம், இரண்டாம் ஆண்டு!

இ.ஆ. இ.ஆ. = இனிதே ஆரம்பம், இரண்டாம் ஆண்டு!


   அன்பிகினிய அன்பர்கள் அனைவரையும்
மகிழ்வோடு வரவேற்கிறேன்.

   இன்று, இனிய நாள்! அதாவது நமது
'நிஜாம் பக்கம்' இன்று இரண்டாம் ஆண்டில்
உங்கள் உள்ளார்ந்த ஆதரவோடு அடியெடுத்து
வைக்கின்றது.

   சற்றே பின்னோக்கிப் பார்க்கிறேன். இதே
ஆகஸ்ட் 31-ஆம் நாள் சென்ற ஆண்டில்
'தமிழ்குடும்பம் திரு. தமிழ்நேசன் அவர்களின்
நல்வாழ்த்துக்களோடும் எழுத்தாளர் திருமதி.சுமஜ்லா
அவர்களின் உதவியோடும் ஆரம்பமாகியது
நமது வலைப்பூ.

52 வாரங்கள்;
67 இடுகைகள்;
50+ தொடரும் அன்பர்கள்;
பல விருதுகள்;
பற்பல பின்னூட்டங்கள்;
அதிகமான வாக்குகள்
-என்று இந்த ஓர் ஆண்டு மகிழ்வோடு
நிறைவடைந்துள்ளது.
  
   வேலைப் பளு காரணமாக அதிக எண்ணிக்கையில்
பதிவுகள் அளிக்க இயலவில்லை.இருப்பினும்
செப்டம்பர் 2009-ல் அதிகபட்சமாக 25 இடுகைகள்
பதிந்துள்ளேன்.
  
   இந்த ஓராண்டில் என்னிடம் வலைப்பூ ஆரம்பிப்பது
பற்றி சில அன்பர்கள் விவரம் கேட்டார்கள்.
அதில் சிலர் புதிதாய் வலைப்பூவும்
ஆரம்பித்துள்ளார்கள்.

    சமீபத்தில் நண்பர் இளம் தூயவன் பின்னூட்டத்தில்,
"என்ன நகைச்சுவைக்கு மாறிட்டீங்க?" என்று
கேட்டார். அதன் பிறகுதான் நானே கவனித்தேன்,
எனது லேபில்களை. அதில்,
பல்சுவை + கதம்பம் =7
செய்திக்குறிப்புக்கள் =6
கவிதைகள் =6
பாடல்கள் =7
சிந்தனைகள் =9
நகைச்சுவை =33
-என்று பட்டியல் இருக்கக் கண்டேன்.
ஆக, எனது இடுகைகளில் கிட்டத்தட்ட
பாதியளவில் நகைச்சுவை இடம்பெற்றிருக்கிறது
என்பதை காணமுடிந்தது.

   இனிவரும் காலங்களில் அடிக்கடி இடுகைகள்
எழுதிட நினைத்துள்ளேன், இறைவன் நாடினால்.

   இந்த மகிழ்வான தருணத்தில், எனது இடுகைளைப்
படித்து, பின்னூட்டமிட்டவர்கள், கருத்துரை
வழங்கியவர்கள், வாக்குகள் அளித்தவர்கள்,
விருதுகள் வழங்கியவர்கள், பின் தொடர்பவர்கள்,
மெயில்மூலமும் தொலைபேசிமூலமும் தொடர்புகொண்டு
கலந்துரையாடியவர்கள், இடுகைகளிற்கான
இணைப்பாகயிருந்து உதவிய அனைத்து
திரட்டிகள், கூகுள் நிறுவனம், தங்களது
வலைப்பூகளில் எனது வலைப்பூவிற்கு
இணைப்புக் கொடுத்துள்ளவர்கள், எனது
வலைப்பூ படித்து கருத்துரைகள் கூறிடும்
எனது அருமை நண்பர் முஹம்மது ஃபயாஸ்
மற்றும், மற்றும், மற்றும், மற்றும்
இரசித்து மகிழ்ந்த அன்பான உள்ளங்கள்
அனைவருக்கும் எனது மனமார்ந்த
நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

   அடுத்து வரும் இடுகைகளில்
நான் பார்த்த(வை), படித்த(வை), கேட்ட(வை)
சில குறிப்புக்களை பதிவிடலாம் என்று
விருப்பம் கொண்டுள்ளேன்.



   இதுவரை தொடர்ந்து வந்ததைப் போன்றே
இனியும் தொடர்ந்துவர இருக்கும் அனைத்து
நல்லிதயங்களுக்கும் எனது மனங்கனிந்த
நன்றிகள்!



அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்! நன்றி!!

Sunday, August 1, 2010

வானொலி குறுக்கெழுத்துப் போட்டி! (நகைச்சுவை)

வானொலி குறுக்கெழுத்துப் போட்டி! (நகைச்சுவை)

அன்புத் தம்பி இப்படிக்கு நிஜாம் தன்னுடைய 'தூர்தர்ஷன்
விளம்பரங்கள்' என்ற இடுகையில் வானொலி பற்றிய எனது
அனுபவங்களை எழுதுமாறு ஆலோ(யோ)சனை
கூறியிருந்தார். வாங்க, என்னுடைய அனுபவங்களுக்கு...

அந்த தூர்தர்ஷன் (டி.டி.) காலத்தில் எங்கள் வீட்டில்
தொலைக்காட்சியே கிடையாது. எங்கள் தாத்தா,
பெரியத்தா, பெரியம்மா போன்றோர்களின் கண்டிப்புதான்
காரணம். (இப்பவும் அந்த மாதிரியே இருந்திருக்கலாம்னு
தோணுதே!)

ஆனால், நான் வானொலி தொடர்ந்து கேட்பேன். சென்னை
வானொலி விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்டாலும் நாடகங்கள்
விரும்பிக் கேட்பேன். திங்கள் முதல் வியாழன்
வரை தினமும் இரவு 9 - 15 மணி முதல் 9 - 30 மணி வரை
'வண்ணச்சுடர்' என்ற நிகழ்ச்சியில் நான்கு பகுதிகள் தொடர் நாடகம் ஒலிபரப்பாகும்.

மறு வாரம் திங்கள் முதல் வியாழன் வரை
இரவு 9 -15 முதல் 9 -30 வரை எட்டு பகுதிகள்
மேடை நாடகங்கள் ஒலிபரப்பாகும்.
ஆர். எஸ். மனோகர், ஹெரான் ராமசாமி, டெல்லி கணேஷ்,
ஒய். ஜி. மகேந்திரன் போன்றவர்களின் மேடை நாடங்கள்
ஞாபகம் இருக்கின்றன. மற்ற மூன்று தினங்களில்
கால் மணி நேர சிறு நாடகங்கள் ஒலிபரப்பாகும்.

ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 12 -௦௦ மணிக்கு ஹார்லிக்ஸ்
வழங்கிய'சுசித்ராவின் குடும்பம்' மற்றும் 'கருமமே
கண்ணாயினார்' ஆகிய நாடகங்கள் ஒலிபரப்பாயின.

அப்போது விவித் பாரதியில் வரும் ஒரு விளம்பரம்:
"ஹேய் லல்லி, ஆளே கலர் மாறிட்டியே, எப்படி?"
"ஓ அதுவா, FAIR அண்ட் லவ்லிதான் காரணம். நீயும் தடவு!"
"அப்படியா? பேர் என்ன லல்லி?"
" ம்ஹும், FAIR அண்ட் லவ்லி!"
இந்த விளம்பரத்தையும் நாடகம்போலவே இரசிப்பேன்.

இலங்கை வானொலியில் ஒலிபரப்பானவற்றில் நாடகம்
ரொம்பப்பிடிக்கும். தமிழ்ச் சேவை ஒன்றில் தினமும்
இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளில்
வாரம் ஒரு முறை மட்டும் அரை மணி நேர நாடகம்
நடைபெறும்.

மற்றம் தமிழ்ச் சேவை இரண்டில் ஞாயிற்றுக் கிழமைகளில்
மதியம் 2 மணிக்கு 'இந்தியன் ஓவர்சீஸ் வங்கி' வழங்கிய
கதை, கவிதை, சிறுகதை போன்றவற்றின் தொகுப்பான
பல்சுவை நிகழ்ச்சியை பி. ஹெச். அப்துல் ஹமீது
வழங்குவதைக் கேட்பது உண்டு.

அதே தமிழ்ச்சேவை இரண்டில் ஞாயிறு மாலை 4 - 30
மணிக்கு 'மக்கள் வங்கி' வழங்கிய தொடர் நாடகத்தில்
நிறைய பாடல்களும் வரும்.

இலங்கை வானொலியில் கேட்ட அருமையான
பாடலை நீங்கள் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.


நாடகங்கள் நான் கேட்பது போலவே போட்டிகளில்
பங்கு பெற்று சரியான விடை எழுதி பரிசுகளும்
வாங்குவதுண்டு. தமிழ்ச்சேவை ஒலிபரப்பைத்
தொடர்ந்து 'சர்வதேச ஒலிபரப்பு' சேவை ஆரம்பமானது.
அதில் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை
9-15க்கு 'வீரா ஹெர்பல் சிகைக்காய் வழங்கும்
வானொலி குறுக்கெழுத்துப் போட்டி' என்று ஒரு நிகழ்ச்சி.
இதை அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது அவர்கள்
தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சியை சென்னையிலுள்ள
நிறுவனம் வழங்கியதால் அதில் கேட்கப்பட்ட
கேள்விகளுக்கான விடைகளை சென்னை முகவரிக்கு
உள்நாட்டுக் கடிதத்திலேயே அனுப்ப வேண்டும்.

அவ்வாறே ஒரு தடவை நானும் பதில்களை
அனுப்பிவிட்டு அடுத்த வாரம் பரிசு பெற்றவர்களில்
எனது பெயரும் வருகிறதா என்று ஆவலோடு
காத்திருந்தேன்.

அடுத்த ஞாயிறும் வந்தது. 9 - 15 க்கு நிகழ்ச்சியும்
ஆரம்பமானது. நிகழ்ச்சி முடிவில் "சென்ற வாரம்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடை
எழுதியவர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட
10 நேயர்கள்" என்று சொன்ன அறிவிப்பாளர், அதில்
என் பெயரையும் பரிசு பெற்ற நேயராக அறிவித்தார்.


[குமுதம் குறுக்கெழுத்துப் போட்டியில் பரிசு!]

"இவர்களுக்கான பரிசுப் பொட்டலம் நேரடியாக
அவர்களின் இல்லங்களுக்கு விரைவில் அனுப்பி
வைக்கப்படும்" என்றும் அறிவித்தார்.

'அப்படியெனில் நமக்கும் பரிசு வந்துவிடும்' என்ற
எண்ணத்தோடு காத்திருக்க ஆரம்பித்தேன்.
இவ்வாறு நான்கைந்து தினங்கள் சென்ற
நிலையில், அப்படிக்கா மயிலாடுதுறைக்கு
போய்விட்டு இப்படிக்கா வீட்டிற்கு வந்தேன்.


எங்கள் அம்மா ஒரு பார்சலை என்னிடம் நீட்டி,
"கூரியர்லருந்து வந்து கொடுத்திட்டுப் போனாங்க"
என்றார்கள்.

ஆர்வமோடு பிரித்துப் பார்த்தேன். சுமார்
ஐந்து அங்குல உயரத்தில், சுமார் நான்கு
அங்குல விட்டத்துடன் கூடிய அழகான
இரு பிளாஸ்டிக் டப்பாக்கள். அதன்மேலே
ஒரு டப்பாவில் 'வீரா ஹெர்பல் சிகைகாய்த்
தூள் ஃபார் ஆர்டினரி ஹேர்' என்றும்
மற்றொரு டப்பாவில் 'வீரா ஹெர்பல்
சிகைக்காய்த் தூள் ஃபார் ட்ரை ஹேர்'
என்றும் பல வண்ண பிளாஸ்டிக் தாள்
ஒட்டியிருந்தது.

இப்பவும் ஆசையோடு ஒரு டப்பாவைப் பரித்துப்
பார்த்தேன். உள்ளே அழகிய பிளாஸ்டிக் கிண்ணமும்
பிளாஸ்டிக் கரண்டியும் இருக்க, அதை எடுத்துவிட்டுப்
பார்த்தேன். உள்ளே சிகைக்காய்த் தூள் இருந்தது.
மற்றொரு டப்பாவிலும் அதேதான். ஆனால்,
சிகைக்காய்த் தூள் கலர் மட்டும் சற்று மாறி
இருந்தது.


பிளாஸ்டிக் தாளில் படித்துப் பார்த்தேன்.
300 கிராம் சிகைக்காய்த்தூள் + கிண்ணம்
மற்றும் ஸ்பூன் ஃப்ரீ என்று இருந்தது.
இரண்டு டப்பாவிலும் விலை 8 ரூபாய் என்று
போட்டிருந்தது.

"இதுதான் பரிசுப் பாக்கெட்டா? சரி பரவாயில்லை,
ஃப்ரீயாத்தானே வந்தது?" என்றேன்.

அதற்கு, "அது எப்படி ஃப்ரீயாகும்? கூரியர் ஆள்
சர்விஸ் சார்ஜ் என்று 12 ரூபாயும் காஃப்பிக்கு
டிப்ஸ் என்று 3 ரூபாயும் வாங்கிட்டுப் போனானே!"
என்றார்கள் எங்கள் அம்மா. (இந்த சம்பவம்
நடந்த காலத்தில், அதாவது சுமார் 15 ஆண்டுகளுக்கு
முன் நகர எல்லையைத் தாண்டி இருக்கும் ஊர்களுக்கு
கூடுதலாக பஸ் சார்ஜ் வசூலிப்பார்கள். சில
நேரங்களில் அனுப்புவரிடமிருந்தும் அல்லது சில
நேரங்களில் பெறுநரிடமிருந்தும் இதை வசூல்
செய்து கொள்வார்கள்.)

அதோடு விட்டார்களா? 'இதுதான் சுண்டைக்காய்
கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணம்'
என்பார்கள். நீயும் உன் பரிசும். 16 ரூபாய்
பொருளுக்கு 15 ரூபாய் தண்டம். அதுக்கு
நம்ம கடைத் தெருவிலயே அந்தக் காசுக்கு
நாமே வாங்கிக்கலாமே, அது எதுக்கு பரிசுன்னு
ஒரு பேரு? இதெல்லாம் நீ பண்ற கூத்து" என்று
சப்தம் போட்டுக் கொண்டே (அதாவது திட்டிக்
கொண்டே) சமையலறைக்குப் போய் விட்டார்கள்.

நானோ நொந்து போனேன். நல்ல வேளை- அந்த
பார்சலை அனுப்புவதற்கு கூரியர் கம்பெனிக்கு
அந்த வீரா சிகைக்காய் நிறுவனம் பணம் செலுத்தி
இருக்குமே, அந்த சேதியும் எங்கள் அம்மாவிற்குத்
தெரிந்திருந்தால், திட்டு இல்லை; எனக்கு
மண்டையில் குட்டுதான்! நல்ல வேளை தப்பிச்சேம்ப்பா!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.




வாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்! நன்றி!!

Saturday, July 24, 2010

நகைச்சுவை; இரசித்தவை - 11

நகைச்சுவை; இரசித்தவை - 11




பள்ளி மாணவர்கள் இருவர்...

ராமு: ஏன்டா ராஜு சோகமா இருக்கே?

ராஜு: இன்னைக்கு என்னோட இராசிபலன்ல
"உங்கள் மனைவி சுகவீனம் அடைவார்"னு
போட்டிருக்குடா. அதான் எங்கே இருக்காளோ,
எப்படி இருக்காளோனு வருத்தமா இருக்கேன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நோயாளி: டாக்டர், தினம் காலையில் எழுந்ததும்
அரை மணி நேரம் மயக்கமாவே இருக்கு. என்ன
செய்யலாம் டாக்டர்?

டாக்டர்: அப்படின்னா அரை மணிநேரம் தாமதமா
எழுந்திரிக்கலாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நோயாளி: டாக்டர், நான் தினமும் 12 மணி நேரம்
தூங்கறேன். அலுப்புதானே டாக்டர்?

டாக்டர்: அது அலுப்பு இல்லை; உன்னோட
கொழுப்பு!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்! நன்றி!!

Monday, July 5, 2010

நகைச்சுவை; இரசித்தவை - 10

நகைச்சுவை; இரசித்தவை - 10



விமலா: "ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு

வரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில்

உட்கர்ந்திருக்கிறாங்கள்ல அவங்கள்ல

உன் கணவர் யாருன்னு காட்டேன்"

கலா: "அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு

வெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "தலையில் சுருள் முடியோட..."

விமலா: "ஆமாம்"
 
கலா: "கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: " ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..."

விமலா: "ஆமாம்"

கலா: "நல்லா நடிகர் அஜீத் கலர்ல..."

விமலா: "ஆமாம்"

கலா: "அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான்

என் கணவர்!!!"
*********************************************************************
திருமண விருந்தில்...


பந்தி பரிமறுபவர்: "ஏம்ப்பா, நீ போன பந்தியிலயும்

சாப்பிட்டியே! இந்த பந்தியில் மறுபடியும் சாப்பிடறியே?"

சாப்பிடுபவர்: "ஆமாங்க, உங்களுக்கு ஞாபக சக்தி

அதிகம். எனக்கு ஜீரண சக்தி அதிகம்"

**************************************************************

முதலாம் நபர்: "என்ன சார், நேற்று இரவு உங்க

வீட்டிலருந்து அடிதடி சத்தமெல்லாம் கேட்டுச்சே,

எதுவும் சண்டையா சார்?"

இரண்டாம் நபர்: "ஆமாம் சார், எனக்கும் என் மனைவிக்கும்

சண்டை. அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க,

அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க,

அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க...."

**************************************************************

அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
ஒரே ஒரு வாக்கு! ஓஹோன்னு வாழ்த்து!!

Saturday, May 29, 2010

சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்!

சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்!







சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள் [World No Tobacco

Day], ஓவ்வோர் ஆண்டும் மே 31ஆம் நாள் உலகம்

முழுவதும் கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.



புகையிலையை உள்ளடக்கமாகக் கொண்ட சிகரெட்,

சுருட்டு மற்றும் வெற்றிலைப் பாக்குப் புகையிலை

போன்றவற்றை நுகர்வதால், அதைப் பயன்படுத்துவோர்

மற்றும் சுற்றிலும் உள்ளோர் தாக்குதலுக்குள்ளாகி

அடைகின்ற பாதிப்புக்களை அறிந்தும் நாம் அவற்றில்

நம்மை இழந்து, மீள முடியாமல் தவித்து வருகிறோம்..



நாமும் நமது சக உறவினர்களும் சுற்றத்தார்களும்

சுகமான நலவாழ்வு வாழ, புகையிலையை தவிர்த்து,

புத்துணர்ச்சிப் பெறுவோம்!!!



அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
 
 
[படம் நன்றி: தினமலர்]


ஒரே ஒரு வாக்கு! ஓஹோன்னு வாழ்த்து!!

Sunday, May 16, 2010

தினமும் தொழிலாளியைப் போற்றுவோம்!!!

தினமும் தொழிலாளியைப் போற்றுவோம்!!!







கட்டடம் கட்டும் கொத்தனார்
தோட்டம் பயிரிடும் தோட்டக்காரர்

துணிகள் நெய்யும் நெசவாளர்
வீட்டில் உதவும் வேலையாளர்

சமையல் செய்யும் சமையல்காரர்
சலவை செய்யும் சலவைக்காரர்

வாகனம் ஓட்டும் ஓட்டுனர்
சீட்டு கொடுக்கும் நடத்துனர்

தலைமுடி திருத்தும் நிபுணர்
துப்புறவு செய்யும் பணியாளர்

சேவை செய்யும் செவிலியர்
காவல் செய்யும் காவலாளி

கவிதை எழுதும் கவிஞன்
கதைகள் சொல்லும் கதைஞன்

துணிகள் தைக்கும் தையல்காரர்
அஞ்சல் தரும் அஞ்சல்காரர்

பத்திரிகை போடும் சிறுபையன்
பால்தனை ஊற்றும் பால்காரர்

தானியம் தருவான் விவசாயி
பொருட்கள் விற்கும் வியாபாரி

மூட்டை தூக்கும் சுமைகூலி
ஆடுகள் மேய்க்கும் இடையர்

கணக்குப் போடும் கணக்காளர்
கணிணியில் கலக்கும் பொறியாளர்

சட்டம் காக்கும் காவலர்
மருத்துவம் பார்க்கும் மருத்துவர்

நீதியை நா(ட்)டும் வழக்கறிஞர்
மக்களை ஆளுகின்ற அதிகாரி

இவர்கள் அனைவரும் உழைப்பாளி
இப்படியும் அழைக்கலாம் 'தொழிலாளி'

திகட்டாத வளங்கள்பெற வாழ்த்துவோம்!
தினமும் தொழிலாளியைப் போற்றுவோம்!!

உலகத் தொழிலாளர் அனைவருக்கும்
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!!!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

29-04-2009 அன்று தமிழ்குடும்பத்தில் இது வெளியானது.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, April 13, 2010

ரயில் வரும் நேரமாச்சு!


ரயில் வரும் நேரமாச்சு!


பயணம் செய்வதற்கு எனக்கு மிகவும் படித்த வாகனம்
எதுவென்றால், அது ரயில்தான். இதை புகைவண்டி,
தொடர்வண்டி என்று தமிழில் குறிப்பிடுகிறார்கள்.

நான் 1990-களின் ஆரம்பத்தில் சிதம்பரத்தில் உள்ள
தி புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் சுமார் ஆறு மாத
காலம் பணியாற்றினேன். அது கூரியர் சர்வீஸ்களின்
ஆரம்பக் காலம்.

அப்போதெல்லாம் வெளிநாட்டிலிருந்தும்,
வெளிமாநிலத்திலிருந்தும், தமிழ்நாட்டின்
எந்த ஊரிலிருந்தும் வரும் கடிதம் மற்றும்
டாக்குமெண்ட்கள் போன்றவை சென்னைக்குச்
சென்று, பிறகுதான் மற்ற ஊர்களுக்கு செல்லும்.


அதாவது, மயிலாடுதுறையிலிருந்து ஒரு சகோதரர்
இரவு சுமார் 8 மணியளவில் ரயிலில் புறப்பட்டு
திருச்சிக்குச் நள்ளிரவு 12 மணியளவில் சென்றடைவார்.

சிலமணி நேரம் காத்திருந்ததும் அதிகாலையில்
சென்னையிலிருந்து வரும் ரயிலில் வந்தவரிடமிருந்து
கூரியர்களைப் பெற்றுக் கொண்டு, அதிகாலை 6 மணி
அளவில் புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸில் புறப்பட்டு
சுமார் 10 மணி அல்லது 10.15 மணிக்கு மயிலாடுதுறை
ஜங்ஷனில் இறங்கும்போது சிதம்பரத்திற்கு வந்துள்ள
கடித பார்சலை என்னிடம் கொடுத்து, அவரிடம் உள்ள
நோட்டில் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அவர்
மயிலாடுதுறை கூரியர் அலுவலகத்திற்குச் சென்று
விடுவார்.


இடையிலிருக்கும் தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற
மற்ற ஊர்களுக்குரிய பார்சல்களை, அந்தந்த ஊர்
ஊழியர்களே திருச்சிக்குச் சென்று வாங்கி வந்து
விடுவார்கள்.

இப்படியாக மயிலாடுதுறை ஜங்ஷனில் கூரியர்
பார்சலைப் பெற்றுக் கொண்ட நான் அதே சோழன்
எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை சுமார் 11.15 அளவில்
சிதம்பரம் சென்று, அலுவலகத்தில் பதிவு (?) போட்டு,
உரியவர்களுக்கு அந்த கூரியர்களைக் கொண்டு
சேர்ப்பேன்.

மீண்டும் அலுவலகத்திலிருந்து பார்சலுடன்
புறப்பட்டு, சுமார் 7 மணிக்கு சிதம்பரத்திலிருந்து
நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் புறப்பட்டு 8 மணிக்கு
மயிலாடுதுறை ஜங்ஷனில் இறங்கும்போது,
அங்கிருந்து புறப்படும் மயிலாடுதுறை அலுவலக
சகோதரரிடம் என்னிடமிருக்கும் பார்சலைக் கொடுத்து
என்னிடமிருக்கும் நோட்டில் கையெழுத்துப்
பெற்றுக் கொள்வேன். அந்தப் பார்சல் இவ்வாறாக,
திருச்சி வழியாக சென்னை சென்றடையும்.


சரக்கு வேன் போன்ற வாகன வசதிகள் அதிகம்
பயன்படுத்தப்பட ஆரம்பிக்காத காலக் கட்டம் அது.
அப்போதெல்லாம், பெரிய பார்சல்கள் கூரியரில்
எப்போதாவதுதான் அனுப்பப்பட்ட காலம்.

இதன் காரணமாக ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து
மற்ற ஆறு தினங்கள் தினசரி நான் காலையில்
ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும்
ரயில் பயணங்களில்தான் இருப்பேன்.

அந்த நேரங்களில் வார இதழ்கள் வாசிப்பது,
வாசகர் கடிதம் எழுதுவது, பேனா நண்பர்களுக்குக்
கடிதம் எழுதுவது, ரயிலின் ஜன்னல் ஊடே பசுமையான
வயல், மரம், செடிகள் கண்டு களிப்புறுவது,
சக பயணிகளோடு உரையாடுவது, பயணிகளின்
சிறு குழந்தைகளோடு உரையாடி மகிழ்வது,
ரயில் வியாபாரிகளிடம் மாங்காய்,
வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி வாங்கிச்
சாப்பிடுவது, சூடான சுண்டல் என்று கூவி
விற்பதை வாங்கும்போது கையைச் சுடுவதாய்
ஆஆ என்று சொல்லி வாங்கி ஜில்லென்று
வாயில் போட்டு சாப்பிடுவது,
அந்த வியாபாரிகள் ஒரு பெட்டியிலிருந்து
மற்றொரு பெட்டிக்கு கையில் கூடையோடு
தாவி செல்லும் ஆபத்தான செயலை
அனாயாசமாகச் செய்வதை ஆச்சரியமாகப்
பார்ப்பது, இருபுற கம்பங்களில்
எண்களை பார்த்துக் கொண்டே வருவது,
முதல் நாள் ஒரு பெரிய ஆல மரத்தைக்
குறிப்பு வைத்துக் கொண்டு மறுநாள் அந்த இடம்
வரும்போது சரியாகக் கண்டு கொள்வது,
புத்தகத்தில் ஜோக் படித்துவிட்டு எதிராளிகள்
பயந்து விடக்கூடாதென்று படார் என்று சிரிக்காமல்
மொக்கையாய் சிரிப்பது என்றெல்லாம்
அந்த ரயில் பயணங்கள் தந்த மகிழ்வினை
என்றென்றும் மறக்க முடியாது.

மற்றும் அந்தப் பணியில்தான் கூரியரின் உரிமையாளர்
அன்பு அண்ணன் மௌலவி கணியூர் இஸ்மாயில் நாஜி
நீடூரி அவர்களிடமிருந்து பல அறிவுச் செறிவான பொது
அறிவு விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என்பதனை
இங்கு குறிப்பிட விழைகிறேன்.

சமீப காலமாக (அதாவது கடந்த நான்காண்டுகளுக்கு
மேலாக) மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய
ஊர்களுக்கிடையே மீட்டர் கேஜ் இருப்புப் பாதையை
அகற்றிவிட்டு, அகல ரயில் பாதை அமைக்கும் பணி
நடைபெற்று வந்தது. சுமார் ஆறு மாத காலத்தில்
அமைக்கப்பட்டுள்ள இருப்புப் பாதையில் பலமுறைகள்
சோதனை ஓட்டங்கள் பல கட்டங்களில் செய்யப்பட்டன.

இருப்பினும் டிக்கெட் கவுண்ட்டர்கள், பிளாட்ஃபார்ம்,
பயணியர் தங்குமிடம், நீர் வசதி, கழிவறைகள் போன்ற
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தபின்னும்,
"ஓடும்... ஓடும்..." என்று பலமுறை சொல்லியும்
சொல்லப்பட்ட மாதங்கள்தான் ஓடினவேயன்றி
ரயில் போக்குவரத்து ஆரம்பித்தபாடில்லை.
சிறு வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தினர், தினசரி
வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் மற்றும்
நோயாளிகளுக்கு ஏற்றது ரயில் பயணமே!

தற்போது 100 ரூபாயில் சென்றிடக்கூடிய
மயிலாடுதுறை - சென்னை பயணத்திற்கு
ஆம்னி சொகுசு ஏசி வராத பேருந்துகளில்
400 ரூபாய் கொடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
அரசு பேருந்தில் செல்லலாமே... அரசு
பேருந்துகளின் தரம் சொல்லவோ, எழுதவோ,
கேட்கவோ, படிக்கவோ தேவையில்லை.

கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆய்வுப்பணி மேற்கொண்ட
தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிஷன்
அவர்கள் "வருகிற ஏப்ரல் 15 அன்று ரயில் சேவை
தொடங்கப்படும்" என்று பத்திரிகை, தொலைக்காட்சிகளிடம்
தெரிவித்துள்ளார். நம்பலாமா?

சோதனை ஓட்டம் சேவையாக எப்போ மாறும்?
வேதனை வாட்டம் மக்களிடம் எப்போ தீரும்?

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.





வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, April 9, 2010

அது ஒரு கதைக்காலம்!

அது ஒரு கதைக்காலம்!



'கதை கேளு' என்ற தொடர் பதிவிற்கு அழைப்பு

விடுத்துள்ளார் நண்பர் ஸ்டார்ஜன். இதோ கதையுடன்

வந்துவிட்டேன்.



எனது சிறுவயதில் எங்கள் பாட்டியிடம் (அம்மாவின்

அம்மா) நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். அதே

சமயம் சிதம்பரத்தில் இருந்த எங்கள் பெரியம்மா

அவர்களும் எனக்கு நிறைய கதைகள் சொல்வார்கள்.

இதனால், அடிக்கடி எங்கள் அம்மாவுடன் சிதம்பரம்

போய்வருவதுண்டு. அடிக்கடி பெரியம்மாவும் எங்கள்

வீட்டிற்கு வருவார்கள். அந்த நேரங்களில் சுமார்

25 அல்லது 30 கதைகள்வரை பெரியம்மா

சொல்வார்கள். அவையெல்லாம் 'அம்புலிமாமா'வில்

படித்ததாகச் சொல்வார்கள். இப்போது அவர்கள்

சொன்ன கதை:


ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.



ம்ஹூம், இந்தக் கதை வேணாம்; வேற கதை

சொல்லுங்கள்.


சரி வேற கதை. வேற ஒரு ஊர்ல வேற ஒரு

ராஜா இருந்தானாம்.


ம், சொல்லுங்க, சொல்லுங்க.


இது வேணாம். ஒரு ஊர்ல பெரியண்ணன் அப்படிங்கிற

அண்ணனும் சின்னத்தம்பி அப்படிங்கிற தம்பியும்

இருந்தாங்க.


ஒரு நாள் இரண்டு பேரும் வியாபார சம்பந்தமாக

வெளியூருக்குப் புறப்பட்டுப் போனாங்க. போக்குவரத்து

வசதி இல்லாததால நடந்துதான் போனாங்க. அப்போ

உச்சிவெயில் மதியம் நேரம் வந்துடுச்சி. பசியா

இருந்ததால் சாப்பிடலாம்னு உட்கார்ந்து அவங்கவங்க

மனைவி கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப்

பிரிச்சாங்க.

 
பெரியண்ணன் பொட்டலத்தில மூன்று தோசைகளும்

சின்னத்தம்பி பொட்டலத்தில இரண்டு தோசைகளும்

இருந்திச்சி.


(ஆஹா மறுபடியும் தோசை கதையா!!!?

முதல் தோசைக் கதை இங்கே படிக்கலாம்.

அடுத்து தோசை நகைச்சுவை இங்கு படிக்கலாம்.)



சாப்பிடலாம்னு தோசையில் கையை வைக்கும்போது

ஒரு பிச்சைக்காரர் மாதிரியான வயசானவர் வந்து,

"ஐயாக்களே! ரொம்ப பசியா இருக்கு. சாப்பிட

ஏதாவது கொடுங்கள் ஐயா!" என்று கெஞ்சிக்

கேட்டார்.


பெரியண்ணனும் சின்னத்தம்பியும் என்ன செய்வது

என்று யோசித்தார்கள். பிறகு இருவருடைய

தோசைகள் ஐந்தையும் ஒன்னாச் சேர்த்து அந்த

ஐந்து தோசைகளையும் ஒவ்வொரு தோசையையும்

நான்கு, நான்கு துண்டுகளாகப் பிய்த்தார்கள். இப்போ

மொத்தம் இருபது துண்டுகள் இருந்தன.


அதில், 6 துண்டுகளை அந்தப் பெரியவருக்குக்

கொடுத்துவிட்டு மீதம் இருந்ததில் 7 துண்டுகளை

பெரியண்ணனும் 7 துண்டுகளை சின்னத்தம்பியும்

சாப்பிட்டார்கள்.


மூவரும் சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பெரியவர்

எழுந்து நன்றி சொல்லிவிட்டுப் புறப்படும்முன்

பெரியண்ணனிடம் 6 பொற்காசுகளை (24 கேரட்)

கொடுத்து, "ஐயா, நீங்கள் இருவரும் பிரித்து

எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு

சென்றுவிட்டார்.



இப்போ பெரியண்ணன் 4 பொற்காசுகளை தான்

எடுத்துக் கொண்டு, 2 பொற்காசுகளை தம்பியிடம்

கொடுத்தான்.



தம்பியோ, "அந்தப் பெரியவர் ரெண்டு பேரும்

பிரிச்சிக்குங்க என்றுதான் சொன்னார். அதனால

சமமா நீ 3 பொற்காசுகள் எடுத்துக் கொண்டு

எனக்கும் 3 பொற்காசுகள் கொடுத்தால்தான்

வாங்குவேன்" என்று சண்டை போட்டான்.



பெரியண்ணன் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்

அடுத்த ஊருக்குப் போனதும் ஆலமரத்தடி (+சொம்பு)

நாட்டாமையிடம் முறையிட்டார்கள்.



நாட்டாமை நல்லா விசாரிச்சிட்டு தீர்ப்புச் சொன்னார்.

(நாட்டாமை, தீர்ப்பை மாத்தமுடியாது.)



நாட்டாமை தம்பிக்காரனைக் கூப்பிட்டார்.


"தம்பி, நீ கொண்டு வந்தது 2 தோசைகள். அதை

8 துண்டுகள் போட்டு, 7 துண்டுகள் நீ சாப்பிட்டாய்.

அந்தப் பெரியவருக்கு நீ ஒரு துண்டுதான் கொடுத்தாய்.

அதனால உனக்கு ஒரு பொற்காசுதான்" என்றார்.



நாட்டாமை அண்ணனைக் கூப்பிட்டார்.


"ஏனப்பா, நீ கொண்டு வந்தது 3 தோசைகள். அதை

12 துண்டுகள் போட்டு, 7 துண்டுகள் நீ சாப்பிட்டாய்.

அந்தப் பெரியவருக்கு நீ 5 துண்டுகள் கொடுத்தாய்.

அதனால் உனக்கு 5 பொற்காசுகள்" என்றார்.



தீர்ப்பைக் கே(கெ)ட்டு தம்பி 'உள்ளதும் போச்சே' என்று

நொந்து நூடுல்ஸ் ஆகிப் போனான். (தோசைக் கதையில்

நூடுல்ஸும் வந்திடுச்சே!)


சரி, இப்ப கதையின் நீதியைச் சொல்லிடலாமா?

அ, கதையைப்  படிச்சீங்கள்ல? நீங்களே சொல்லிடுங்க.



தொடர் பதிவில், இணைந்துகொள்ள இவர்களை

அழைக்கிறேன்.



1.ஸ்ரீகிருஷ்ணா

2.இப்படிக்கு நிஜாம்

3.கவிஞர் மலிக்கா.



அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...