...பல்சுவை பக்கம்!

.

Sunday, March 28, 2010

நகைச்சுவை; இரசித்தவை 9


நகைச்சுவை; இரசித்தவை - 9

பணிப்பெண்: "மன்னா, அந்தப்புரம் உள்ளே
வராதீர்கள். மகாராணியார் உங்கள்மேல்
ரொம்ப கோபமாக உள்ளார்கள்"

மன்னன்: "ஏன், ஏன், ஏன், எதனால்?"

பணிப்பெண்: "தெரியவில்லை, மன்னா!
ஆனால், மகாராணியார் சமையலறையில்
ஆப்பிளை அரிவாள்மனையில் அரிந்துகொண்டே,
'உன்னைத்தான் நானரிவேன்,
என் மன்னவனை யாரரிவார்?' என்று
பாடிக்கொண்டிருக்கிறார்கள், மன்னா!"
=============================================

மனைவி: "என்னங்க, துவரம் பருப்பு இல்லை.
மல்லி இல்லை. தேங்காய் எண்ணெய் இல்லை.
ஜீனி இல்லை. ஆஃபிஸிலிருந்து வரும்போது
வாங்கிட்டு வாங்க..."

கணவன்: "ஏன்டி, ஆஃபிஸ் போகும்போது,
'இல்லை, இல்லை'ன்னு சொல்லி எரிச்சலைக்
கிளப்புற?"

மனைவி: துவரம் பருப்பு டப்பா காலியா இருக்கு.
மல்லி டப்பா காலியா இருக்கு.
தெங்காய் எண்ணெய் பாட்டில் காலிய இருக்கு.
ஜீனி டப்பா காலியா இருக்கு. இப்ப ஓகேயா?"
=============================================

ஆசிரியர்: நேற்று ஏன்டா ஸ்கூலுக்கு வரலை?
இனிமேல் முதல் நாளே லீவு சொல்லிடணும்"

மாணவன்: "சரி சார். நாளைக்கு எனக்கு
வயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்!"
--------------------------------------------------------------

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Monday, March 22, 2010

#58 தண்ணீரும் தங்கம்போலத்தான்!

தண்ணீரும் தங்கம்போலத்தான்!உலகப் பரப்பளவில் 71 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டிருக்க,
மீதமுள்ள 29 சதவீத நிலப்பரப்பில்தான் நமது மனித இனமும்
விலங்கினங்களும் வாழ்ந்துவருகிறோம்.

இந்நிலையில், நாடுகளுக்கிடையில், மாநிலங்களுக்கிடையில், பக்கத்துப் பக்கத்து ஊர்களுக்கிடையில், ஏன் ஒவ்வொரு குழாயடியிலும்
தண்ணீருக்காக நடக்கின்ற சண்டைகள் நாம் அறிந்தவைதான்.

"காசை தண்ணீராய் செலவு செய்கிறான்" என்று சொன்ன
நிலைமாறி, உலக நாடுகளை அச்சுறுத்திக்
கொண்டிருக்கின்ற பொருளாதாரத் வீழ்ச்சியைப்போலவே,
தண்ணீர் பஞ்சமும் நம்மை பயமுறுத்தி கொண்டிருக்கின்றது.
தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.
இப்படியேபோனால், காசு இருக்கும்; தண்ணீர் இருக்குமா?

இன்று மார்ச் 22 'உலக தண்ணீர் தினம்'
கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதையொட்டி, நமக்காகவும் பின்வரும்
நமது சந்ததியினருக்காகவும் தண்ணீரை
சிக்கனமாக பயன்படுத்தவும் சேமிக்கவும்
நமது பங்களிப்பைத் தந்து தண்ணீரைப்
பாதுகாத்து அனைவரும் பயன்பெறுவோம்.

(படம் உதவி:தினமலர்)

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Monday, March 8, 2010

#57 நித்தியானந்தாவும் பிரேமானந்தாவும்!

நித்தியானந்தாவும் பிரேமானந்தாவும்!

ஒரு சாமியார் இருந்தாரு. அவரு பேரு நித்தியானந்தா
(அப்படின்னு வச்சிக்கலாம்). அவருக்கு ஐந்து சீடர்கள்
இருந்தாங்க. அந்த சாமியாரு எப்பவும் ஒரே ஊர்லயே
இருக்க மாட்டாரு. 3 நாள்களுக்கொரு முறை வேற,
வேற ஊருக்கு தன்னோட சீடர்களோட கால்நடையாவே
முகாம் மாறியபடியே இருப்பாரு. இதனால அவருக்கு
பற்பல் அனுபவங்கள் ஏற்பட்டிருக்கு.அதையெல்லாம்
சந்திச்சபடியே போய்க்கிட்டே இருப்பாரு.

ஒருநாள் இதுபோல ஒரு ஊர்லயிருந்து வேற ஊருக்குப்
போனாங்க எல்லாரும். அங்கே உள்ள கடைவீதியில்
அவங்களுக்கு ஓர் ஆச்சரியமான விஷயம் இருந்தது.
எந்தப் பொருள் வாங்கினாலும் ஒரு ரூபாய்(!)தான்.
அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாய்தான். (அரிசி படி ஒரு
ரூபாய்னு மாத்திடலாமா?) கத்தரிக்காய் ஒரு
கிலோ ஒரு ரூபாய்தான். சர்க்கரையும் அப்படித்தான்.
தங்கமும் ஒரு ரூபாய்தான். ஆட்டுக்கறியும் அதே
ஒரு ரூபாய்தான்.

அந்த சீடன்கள்ல ஒருத்தன் பேரு பிரேமானந்தா
(அப்படின்னு வச்சிக்கலாம்). அவன் ரொம்ப சாப்பாட்டு
மன்னன். அவன் வாயில எச்சில் ஊறுச்சு.

"குருவே, நாம வேற ஊருக்குப் போக
வேண்டாம். அரிசியும் ஒரு ரூபாய்; ஆட்டுக்
கறியும் ஒரு ரூபாய். சாப்பாட்டுக்கு கவலையே
இல்ல. அதனால, இந்த ஊருலயே தங்கிடலாம்,
குருவே" அப்படின்னான், பிரேமானந்தா.

"வேணாம்டா பிரேமானந்தா! நீயும் முட்டாளு;
இந்த நாட்டை ஆளும் மன்னனும் முட்டாளு.
இதனால், பின்னால வம்பு, விபரீதம்லாம்
வரும்டா. வாடா வேற ஊருக்குப்
போயிடலாம்டா" என்று அவனை பிடிச்சி
இழுத்தாரு நித்தியானந்தா.

ஆனால், பிரேமானந்தா கேட்கவேயில்லை.
அந்த ஊருலயே தங்கிட்டான். குருவும் மற்ற
சீடர்களும் வேற ஊருக்குப் போயிட்டாங்க.

பிரேமானந்தா அந்த ஊர்லயே தங்கி அவனும்
ஐந்து சீடர்களச் சேர்த்துக்கிட்டான்(ர்). மக்கள்
கொடுக்கிற காணிக்கையிலும் சாப்பாட்டிலும்
அவன் காலம் ஓடுச்சு. ஆட்டுக்கறியும் அரிசியும்
சேர்த்து பிரியாணியாகவே சாப்பிட்டு, சாப்பிட்டு
உலக்கை மாதிரி இருந்தவன் நல்ல உரலு
மாதிரி ஆகிப்பிட்டான்.

ஒருநாளு அந்த நாட்டு ராஜா தன்னோட
மாளிகையில நடந்துக்கிட்டு இருக்கும்போது
சாலையில போன ஒரு வில் வண்டியில
சூரிய ஒளி பட்டு, பிரதிபலிச்சதில அவனோட
கண்ணுல ஒளிபட்டு, கால் இடறி மாடியிலயே
தரையில் விழுந்து, காலை உடைச்சிக்கிட்டான்.

"யாரங்கே, அந்த வண்டிக்காரனை இழுத்து
வாருங்கள்" என்று கட்டளையிட்டான் மன்னன்.
சேவகர்கள் போய் இழுத்து வந்தார்கள்.

அந்த வண்டிக்காரனைப் பார்த்து, "உன்
வண்டியிலிருந்து ஒளி என்மேல் பட்டது.
எனவே உன் மீது குற்றம். உனக்கு
தூக்குத் தண்டணை" என்றான் மன்னன்.

"இல்லை மன்னா, அந்த வண்டியை
ஒரு தச்சர்தான் எனக்கு செய்து கொடுத்தார்.
எனவே என் மீது தவறில்லை" என்றான்
வண்டிக்காரன்.

"அந்த தச்சரைப் போய் இழுத்து வாருங்கள்"
என்றான் மன்னன். அவன் வந்ததும், "நீ
செய்து கொடுத்த வண்டியால்தான் எனக்கு
விபத்து ஏற்பட்டது. எனவே உனக்கு
தூக்குத் தண்டனை" என்றான் மன்னன்.

"இல்லை மன்னா, அந்த தகரத்தை நான்
இரும்புக்கடை வியாபாரியிடமிருந்துதான்
வாங்கினேன். என் மீது தவறில்லை"
என்றான் அந்த தச்சன்.

"அந்த தகர வியாபாரியை இழுத்து வாருங்கள்"
என்றான் மன்னன். அவன் வந்ததும் "உனக்கு
தூக்குத் தண்டனை" என்றான் மன்னன்.

"இல்லை மன்னா. அந்த தகரத்தை நான்
தகரப் பட்டறையிலிருந்துதான் வாங்கினேன்.
என்மீது தவறில்லை" என்றான் தகர வியாபாரி.
உடனே தகர பட்டறைக்காரனை இழுத்து வந்து
அவனை தூக்கில் போட்டார்கள்.

அவனோ மிக ஒல்லியாயிருந்தான்.
அதனால் தூக்கின் முடிச்சு அவனது
கழுத்தை சுருக்கிட முடியல.

மன்னன் உடனே ஆணையிட்டான்.
"இந்த ஊருலயே யாருக்கு கழுத்து
பெருசாயிருக்கோ அவனை இழுத்து
வந்து, அவனை தூக்கில் போடுங்கள்"
என்றான் மன்னன். இப்ப மாட்டிகிட்டான்
நம்ம பிரேமானந்தா. ஏன்னா, அவனுக்குத்தான்
அந்த ஊருலயே பெரிய கழுத்து இருந்தது.
அந்த அளவுக்கு தின்னு, தின்னு உப்பி
போயி கிடந்தான்.

அரண்டு போயிட்டான் பிரேமானந்தா.
மன்னனிடம் எவ்வளவோ சொல்லி,
கெஞ்சிப் பார்த்துட்டான். அந்த முட்டாள்
மன்னன், "நாளை மதியம் 12 மணிக்கு
உனக்கு தூக்குத் தண்டனை" என்று
தீர்ப்பு சொல்லிட்டான்.

கடைசியா, மன்னனிடம், "நான் எனது
குருவைப் பார்த்துவர அனுமதி வேண்டும்"
என்று கேட்டான் பிரேமானந்தா. மன்னனும்
3 காவலர்களோட அனுப்பி வைச்சான்.

நித்தியானந்தாவைத் தேடிப் போய்
பேசினான் பிரேமானந்தா. விவரம் கேட்டுக்கிட்ட
நித்தியானந்தா, "நான் வந்து உன்னைக்
காப்பாத்த்றேன், போ"ன்னு அனுப்பி வச்சாரு.

மறுநாளு நண்பகல் 12 மணிக்கு
நடு ரோட்டுல, தூக்குல போட,
பிரேமானந்தாவை மேடையில
ஏத்திட்டாங்க. மன்னன் ஓகே சொல்ல
கையத் தூக்கினான். நித்தியானந்தா,
"ஒரு நிமிஷம்"னு சொல்லிக்கிட்டே ஓடி
வந்தவரு அந்த தூக்கு மேடையிலருந்து
பிரேமானந்தாவைத் தள்ளிவிட்டுட்டு,
தூக்குக் கயிறுல தன்னோட தலையை
நுழைச்சிக்கிட்டாரு.

உடனே, பிரேமானந்தா அவரை தள்ளிவிட,
உடனே மன்னனுக்கு கோபம் வந்து,
"என்ன செய்யறீங்க இரண்டு பேர்களும்?"
அப்படின்னு கேட்டான்.

"மன்னா இன்று நண்பகல் 12 மணிக்கு
செத்துப் போறவங்க, நேராக சொர்க்கத்துக்குப்
போகலாம்னு வேதத்தில படிச்சேன்.
அதனால நான் தான் தூக்குல சாகப்
போறேன்"னு ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டாங்க.

"தள்ளுங்கடா, நான் தான் சொர்க்கத்துக்குப்
போவேன்" அப்படின்னு சொல்லிக்கிட்டே
தூக்குல தொங்கிட்டான், அந்த முட்டாள்
மன்னன்.

நித்தியானந்தாவும் பிரேமானந்தாவும் தப்பிச்சோம்,
பிழைச்சோம்னு ஓட்டம் எடுத்தாங்க.

(குறிப்பு: இந்தக் கதையில் வரும் பெயர்கள்,
இடங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே!
யாரையும் எந்த இடத்தையும் எந்த சம்பவத்தையும்
இது குறிப்பிடவில்லை. இது முழுக்க, முழுக்க
நான் கேள்விப்பட்ட கற்பனையே!)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, March 5, 2010

#56 'எத்தனை நாள் பிரிந்து' பாடல்
'எத்தனை நாள் பிரிந்து' பாடல்
============================

இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் (சுருக்கமாக சிலோன் ரேடியோ). தமிழ்ச் சேவை 1, தமிழ்ச் சேவை 2, வர்த்தகச் சேவை என்பதெல்லாம் 1980-களில் மிகப் பிரபலம். அப்போது அடிக்கடி தமிழ்ச் சேவையில் ஒலித்த பாடல் இ‌து. கணீரென்ற குரலில் எம்.குணசீலநாதன் பாடிய இந்தப் பாடலை நீங்கள் கேட்டு இருக்கீங்களா?


எத்தனை நாள் பிரிந்து இங்கிருப்பேன் என்னுயிரே?
நித்தமுன் நினைவால் நீரலைதான் விழிகளிலே!
சத்தமின்றி என்னுயிரில் சங்கமித்த வான்மயிலே
சித்தமென்னும் சிறகெடுத்து சேர்ந்திடாய் என்னருகே!
(எத்தனை நாள் பிரிந்து...)

ஆனந்த வெள்ளம் அள்ளி நீ தந்தாய்
நானந்த வெள்ளத்தில் நாளெல்லாம் மூழ்கி
மோனத்தில் இருக்கும் முனிவனைப் போலே
ஞானத்தில் இருப்பேன் நீந்தி நீ வாராய்
(எத்தனை நாள் பிரிந்து...)

வண்ண மணிப்புறா துணையின்றி வாழாது
எண்ண இனித்திடும் நீயின்றி நானா?
இன்னமும் நானும் ஏங்குதல்தானா?
இனியொருபோதும் இருந்திடேன் வாராய்
(எத்தனை நாள் பிரிந்து...)


நீங்கள் இந்தப் பாடலைக் கேட்டு இருக்கிறீர்களா?
பாடல் எழுதியவர் பெயர் தெரியுமா?
தங்கள் பதில்கள் எதிர்பார்க்கிறேன்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...