...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label நகைச்சுவைக் கதை. Show all posts
Showing posts with label நகைச்சுவைக் கதை. Show all posts

Wednesday, December 26, 2012

போதும்... ஆனா... போதாது! #108


இளங்கோவன் சார் எங்களின் வகுப்பாசிரியர். 9-ஆம்,
10-ஆம் வகுப்புகள் படிக்கும்போது, புத்தகத்தைப்
பார்க்காமலேயே உலக விஷயங்கள் கலந்து சுவையாக
பாடம் நடத்துவார்.

அப்போது ஒரு நாள் இன்பச் சுற்றுலா சென்றிருந்தோம்.
தஞ்சாவூர் பெரிய கோவில் சென்றுவிட்டு, சிவகங்கை
பூங்கா சென்றோம்.

மதிய நேரம். வெயிலில் நடந்து, அலைந்து, களைத்துப்
போய், பசி வயிற்றை உள்ளேயும் வெளியேயும்
கிள்ளியது.

உடனே இனிய நிழல் தரும் மரத்தின்கீழ் அமர்ந்து,
கை கழுவிவிட்டு,  லஞ்ச் பாக்ஸைத் திறந்து,
கொண்டு சென்றிருந்த உணவை சாப்பிட ஆரம்பித்தோம்.

 எனக்கு பசி மிகுதியாய் இருந்தபடியாலும் சிறிய
பாக்ஸில் குறைவான உணவே இருந்தபடியாலும்
நான் முதலில் சாப்பிட்டு விட்டேன்.

ஆசிரியராய் பணியாற்றிய எங்கள் அண்ணன், இளங்கோவன்
சாருக்கு நண்பர். சாருக்கு என்மீது, தனிப் பிரியம் உண்டு.

நான் சாப்பிட்டுவிட்டதைப் பார்த்த இளங்கோவன் சார்,
என்னிடம், தன்னுடைய மூன்றடுக்கு லஞ்ச் கேரியர்
பாக்ஸில் இருந்த உணவை நீட்டி, "சாப்பாடு வேணுமா
நிஜாம்?" என்று கேட்டார்.

உடனே நான், "பத்தலை சார்" என்றேன்.

"பத்தலைன்னா இந்த சாப்பாடு வேணுங்க்கிறதை
எடுத்துக்கோ" என்றார் சார்.

மீண்டும் உடனே "பத்தலை சார்" என்றேன் நான்.

"அப்படின்னா சாப்பாடு எடுத்துக்கோயேன்" என்றார் சார்.

'சாப்பாடு வேணாம்' என்பதைத்தான் நான் "பத்தலை'
என்று உளறியிருக்கிறேன். சுதாரித்துக் கொண்டேன்.

"இல்லை சார், வயித்திலே இடம் பத்தலை; அதனால்
சாப்பாடு வேணாம்னேன்" என்றேன்.

"ஓ  அப்படியா! உளறினாலும் சமாளிச்சிட்டியே, பரவாயில்லை"
என்று சொல்லி சார் சிரிக்கவும் பையன்கள் எல்லோரும்
சிரிக்கவும் அந்த இடமே கலகலப்பானது.

-அ .முஹம்மது நிஜாமுத்தீன்.  
  
. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Thursday, November 5, 2009

காமெடி குடும்பம் (நகைச்சுவை)



காமெடி குடும்பம் (நகைச்சுவை)


ஓர் அம்மாவும் ஒரு மகனும் இருந்தார்கள். அந்த அம்மா தன் மகனுக்கு நல்ல குணவதியாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.

ஒரு சில மாதங்களுக்குப் பிறகு... ஒருநாள்.

அந்த மருமகள் சமையல் செய்து வைத்துவிட்டு சில பொருட்கள் வாங்கி வரலாம் என்று கடைவீதி வரைக்கும் சென்றிருந்தாள். அப்போது அந்த அம்மாள் சமையலறைக்குச் சென்று, சிறு தட்டில் சிறிது சோறும் அதற்கேற்ற குழம்பும் அதன்மேல் ஊற்றி எடுத்துக் கொண்டு,
சோறு எடுத்தது தெரியாமலிருக்க, அதை சமமாகப் பரப்பி வைத்துவிட்டு, 'மருமகள் வருவதற்குள் சாப்பிட்டு விடுவோம்' என்று நினைத்துக் கொண்டு ஓர் அலமாரியின் பின்புறமாக மறைவாகச் சென்று சாப்பிட ஆரம்பித்தார்.

சற்று நேரத்தில் கடைத் தெருவிலிருந்து திரும்பி வந்த மருமகள் பொருட்களை வைத்துவிட்டு தன் மாமியார் எங்கே என்று தேடினாள். மாமியாரைக் காணாததால், 'எங்காவது பக்கத்து வீட்டுக்கு வம்பு பேசப் போயிருப்பார்கள்' என்று முடிவு செய்து, அவளும் ஒரு தட்டில் சோறும் குழம்பும் எடுத்துக் கொண்டு, 'மாமியார் வருவதற்குள் அவருக்குக் தெரியாமல் சாப்பிட்டு விடுவோம்' என்ற எண்ணத்தோடு, மாமியார்
மறைந்திருந்த அதே அலமாரியின் பின்புறமாக மறைவைத்தேடிச் சென்றாள்.

சென்றவள் ஏற்கெனவே அங்கே மாமியார் இருப்பதைப் பார்த்து பேயறைந்ததைப்போல் விழிக்க ஆரம்பித்து, பேச்சு வராமல் தடுமாறினாள்.

மருமகளைப் பார்த்த மாமியாரும் பேந்த, பேந்த விழித்தாலும் சற்று சுதாரித்துக் கொண்டு, மருமகளிடம், "என்னடியம்மா எடுத்து வந்தாய்?"
என்று கேட்டார்கள்.

மருமகளும் தெளிவு பெற்றவளாய், "உங்களுக்கு மறுசோறு எடுத்து வந்தேன் அத்தை!" என்று பதில் சொன்னாள்.

அதற்கு, "என்னைப்போல மாமியாரும் உன்னைப்போல மருமகளும் இருந்தால் இந்த வீடு நல்லா உருப்பட்டுடும்" என்றாராம்.

காமெடியான குடும்பம்தானே சார்?

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Thursday, October 29, 2009

முல்லா ஏன் அழுதார்?




முல்லா ஏன் அழுதார்?


முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.


அவரது நண்பர் கேட்டார்: "முல்லா, ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: " பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு எனது அத்தை இறந்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன் 50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு  எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்"
கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.


-சிரி(ப்புக் கலை)ஞர் மதன்பாபு சிரித்துக்கொண்டே ஆதித்யா ட்டீ.வி.யில் சொல்லிய கதை. (நன்றி)


:- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.





வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Sunday, October 25, 2009

சர்தார்ஜியா? சப்பாத்திஜியா?




சர்தார்ஜியா? சப்பாத்திஜியா?

நமது தமிழ்நாட்டுக்காரர் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்
ஏற வந்தார். கொண்டுவந்த பெட்டியின் கணம் தாங்காமல்
அவைகளை ரயிலில் ஏற்ற சிரமப்பட்டார். அப்போது
அங்கு நின்றுகொண்டிருந்த சர்தார்ஜி, அவைகளை ஒரு
கையால் அனாயாசமாகத் தூக்கி ரயில் கம்பார்ட்மெண்ட்
உள்ளே எடுத்து வைத்தார்.

நன்றி சொன்னார் தமிழர்.

அதற்கு, "சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலைசெய்யும்" என்று சொல்லி, கைகளை
தோளுக்குமேல் தூக்கிக்காட்டி பெருமைப்பட்டுக்
கொண்டார் சர்தார்ஜி. (சர்தார்ஜிக்கு தமிழ் தெரியும்
போலிருக்கிறது.)

உள்ளே சென்று பெட்டிகளை மேலே லக்கேஜ் கேபினில்
வைக்க சிரமத்துடன் முற்பட்டார் தமிழர்.

அப்போதும் சர்தார்ஜியே அவற்றை லக்கேஜ் கேபினில்
வைத்துவிட்டு, கைகளை தோளுக்குமேலாகத் தூக்கி,
"சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலைசெய்யும்" என்று சொன்னார்.

ஜன்னல் ஷட்டர், கன்ணாடியை மேலேதூக்க
சிரமப்பட்டபோதும் சர்தார்ஜியே தூக்கிவிட்டு,
"சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலை செய்யும்" என்று சொன்னார்.

தமிழர் எரிச்சலாகிவிட்டாலும் அமைதியாய்
இருந்துவிட்டார். ரயில் புறப்பட்டுவிட்டது.
இருவரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் சென்றபின்னர் தமிழர் எழுந்து ரயிலில்
உள்ள அபாயச் சங்கிலியை கையால்
பிடித்துக்கொண்டு, கஷ்டப்படுவதுபோல்
முகத்தை வைத்துக்கொண்டு, இழுப்பதுபோல்
பாவனை செய்தார்.

உடனே சர்தார்ஜி அவசரமாக எழுந்து சங்கிலியை
பலமாக இழுத்தார்; ரயில் நின்றுவிட்டது. ரயில்வே
அதிகாரிகள் வந்துவிட்டார்கள். தமிழர் தமக்கு
எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.

தேவையின்றி சங்கிலியை இழுத்து ரயிலை
நிறுத்தியதற்காக சர்தார்ஜியிடம் அபராதத்
தொகையை வசூலித்துக்கொண்டு சென்றார்கள்
அதிகாரிகள். அனைத்தையும் அமைதியாகப்
பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தமிழர் சொன்னார்:

"அரிசிச் சோறு சாப்பிடு. மூளை பலமாகும்; அறிவு நல்லா
வேலைசெய்யும்."

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, October 20, 2009

பேரைச் சொல்லவா?




பேரைச் சொல்லவா?



அந்தப் பள்ளிக்கு ஓர் ஆசிரியர்
புதிதாய் மாறுதலாகி வந்தார்.
முதல் நாள் மாணவர்களிடம்
பெயர்களை விசாரித்தார்.

முதலில் ஒரு மாணவனிடம்,
"உன் பெயர் என்ன?" என்று
கேட்டார்.

அதற்கு அந்த மாணவன்,
"மாரி" என்றான்.

"உன் அப்பா பெயர் என்ன?" என்று
ஆசிரியர் கேட்டார்.

"மாரியப்பன்" என்றான் மாணவன்.
ஆசிரியருக்கு ஆச்சரியம்.

அடுத்த மாணவனிடம், "உன் பெயர்
என்ன?" என்று கேட்டார்.

"ராஜா" என்றான் மாணவன்.

"உன் அப்பா பெயர் என்ன?" என்று
கேட்டார் ஆசிரியர்.
"ராஜாஃபாதர்" என்றான் மாணவன்.
ஆசிரியருக்கு மிகுந்த அதிர்ச்சியாகி
விட்டது.

மூன்றாவதாக மாணவனிடம் "உன்
அப்பா பெயர் என்ன?" என்று மாற்றிக்
கேட்டார். "அப்பா பெயர் ஜான்"
என்றான் மாணவன்.

"உன் பெயர் என்ன?" என்று கேட்டார்
ஆசிரியர். "ஜான்சன்" என்றான் மாணவன்.

அந்த ஆசிரியர் பிறகு மாணவர்களிடம்
பெயர் கேட்பதையே விட்டு விட்டார்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Monday, October 12, 2009

ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் (நகைச்சுவை)



ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர்
================================
ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர் ஹிட்லர்.
'யூதர்கள்தான் தம் நாட்டைச் சுரண்டியவர்கள்; அவர்களால்தான்
ஜெர்மானியர்கள் வறுமையில் வாடுகின்றனர்' என்ற எண்ணம்
கொண்டிருந்தார் அவர். ஆயிரக்கணக்கான யூத இன
மக்களை விஷவாயு அறைகளில் அடைத்து மிகக்
கோரமாகக் கொன்றவர்.

அவருக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஒரு
சமயம் பெரிய ஜோதிட வல்லுனர் ஒருவரை
அழைத்து வரச் சொன்னார் ஹிட்லர்.
அவரிடம், "என் ஆயுட்காலம் எப்போது முடிகிறது? நான்
எப்போது சாவேன்?" எனக் கேட்டார். ஹிட்லரின்
ஜாதகத்தை மிகத் தீவிரமாக ஆராய்ந்த ஜோதிடர்,
"யூதர்களின் பண்டிகையன்று நீங்கள் இறப்பீர்கள்.."
என்று சொன்னார்.

ஜோதிடரின் பதிலைக் கேட்ட ஹிட்லர்,
"யூதர்களுக்குத்தான் வருடம் முழுதும் பல
பண்டிகைகள் வருகின்றனவே... எந்தப்
பண்டிகையின்போது நான் இறப்பேன் என்பதைச்
சரியாகச் சொல்லுங்கள்" என்றார்.

"நீங்கள் என்றைக்கு இறக்கிறீர்களோ, அந்த நாள்
யூதர்களின் பண்டிகை நாளாக நிச்சயம்
கொண்டாடப்படும்..." என்றார் ஜோதிடர்.

அதன் பிறகு, அந்த ஜோதிடரின் கதி என்னவாயிற்றோ???

நன்றி: திரு.அந்துமணி - வாரமலர்.
மூலம் ஆங்கில நூல்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Saturday, September 26, 2009

இப்படியும் ஒரு காமெடி மனைவி!!!




இப்படியும் ஒரு காமெடி மனைவி!!!

ஒரு மாலை நேரம். ஆஃபீஸிலிருந்து கணவன் தனது
மனைவிக்கு ஃபோன் செய்து, "நீ செய்கிற மெதுவடை
சாப்பிட டேஸ்ட்டாக இருக்கும். இன்னும் ஒரு மணி
நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுகிறேன். மெதுவடைகள்
செய்துவை" என்றான். மனைவி "சரி" என்றாள்.

அதுபோலவே ஆஃபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்த கணவன், மனைவியிடம் "மெதுவடை எல்லாத்தையும் எடுத்து வா" என்றான். மனைவி ஒரு தட்டில் ஒரு மெதுவடையும் சட்னியும் கொண்டுவந்து கணவனிடம் கொடுத்தாள்.

வாங்கிப் பார்த்து அதிர்ச்சியான கணவன், "என்னடி, ஒரு வடைதான் இருக்கு.மற்றதெல்லாம் எங்கே?" என்று கேட்டான்.

அதற்கு மனைவி , "முதலில் ரெண்டு வடை சுட்டேன்.
நல்லாயிருக்கான்ன சாப்பிட்டுப் பார்த்தேன்.
அப்புறம் ரெண்டு வடை சுட்டேன். நல்லாயிருக்கான்னு
சாப்பிட்டுப் பார்த்தேன். அப்புறம் ரெண்டு வடை சுட்டேன்.
அதையும் சாப்பிட்டு விட்டேன். இப்படி எல்லா
வடையையும் சாப்பிட்டுவிட்டு இந்த ஒரு வடையை
மட்டும் உங்களுக்காக ஆசையோட எடுத்து வச்சிருக்கேன்" என்றாள்.

அந்தக் கணவன், "அடப்பாவி! எப்படி எல்லா வடையையும் சாப்பிட்டே!!!"
என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

அதற்கு "சிம்பிள்! முதல்ல ஒரு வடையை எடுத்தேன்.
ரெண்டா பிய்த்தேன்.முதலில் ஒரு துண்டை வாயில
போட்டு மென்னு சாப்பிட்டேன். அப்புறம் ரெண்டாவது
துண்டை எடுத்தேன். வாயில போட்டு மென்னு
சாப்பிட்டேன்.. அவ்வளவுதான்" என்று அந்த தட்டில்
மீதமிருந்த ஒரு வடையையும் சாப்பிட்டுக்
காட்டினாளாம் மனைவி.

இப்படிப்பட்ட மனைவிகள் ஒரு சிலர் (!?) இருக்கிறார்கள்.
கணவன்களே, ஜாக்கிரதை.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Wednesday, September 23, 2009

பயணங்கள் முடிவதில்லை...





பயணங்கள் முடிவதில்லை!



பஸ்ஸில் காலேஜுக்குச் செல்லும்போது
மாணவர்கள் (சிலர்) செய்யும் லூட்டிகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

சில மாணவர்கள் டிக்கெட்டே எடுக்க
மாட்டார்கள். அது அவர்களுக்கு
பெருமை. டிக்கெட் பரிசோதகர் வந்தாலும்
எப்படி அவர்களிடமிருந்தும் தப்பிக்கிறார்கள்
என்பது மிகவும் புரியாத புதிர்.

நான் செல்லும் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காத
மாணவர்களை, கண்டக்டருக்குத் தெரியும்.
கேட்டால் 'முன்னாடி எடுக்கிறாங்க' என்றோ
'பின்னாடி எடுக்கிறாங்க' என்றோ சொல்வார்கள்;
ஆனால் யாரும் எடுப்பதில்லை.

அதனால், கண்டக்டர் டிக்கெட் எடுக்காத
மாணவனிடமே போய், "பாருங்க தம்பி
இதுங்க பண்ற அநியாயத்தை. அப்பா,
அம்மா நல்லபடியா வளத்தா இப்படிச்
செய்யுங்களா இதுங்க? டிக்கெட்டே எடுக்க
மாட்டேங்குதுங்க இந்த சனியன்கள்.
இதுங்களுக்கு நல்ல சாவே வராது.
சோத்ததான் திங்குதுங்களா இல்லாட்டி
வேற எந்த எழவத்தான் திங்குதுங்களோ,
நாசமா போவப் போவுதுங்க. நம்ம
வேலைக்கில்ல ஒல வச்சிரும் இதுங்க"
என்பார்.

அதற்கு அந்த மாணவனும் "இந்த
சனியனுங்க திருந்த மாட்டானுங்க.
என்னை மாதிரிலாம் யாருங்க ஒழுங்கா
டிக்கெட் எடுக்கிறான்கள்?" என்று
நல்லவனாக வேஷம் போடுவான்.

ஒரு தடவை பஸ்ஸின் பின் படிக்கட்டில் சுமார்
10 அல்லது 15 பேர்கள் தொங்கிக் கொண்டு
வருகிறார்கள். கண்டக்டர் டிக்கெட் வாங்கச்
சொல்லி கத்தியும் பிரயோசனம் இல்லை.

கடைசியில், "படியில எத்தினி டிக்கெட்டுப்பா?"
என்று கேட்டார். "ஒரு ஆளுக்கு ஒன்னுதான்
சார்" என்றான் ஒரு மாணவன். மாணவர்கள்
சிரித்தார்கள்.ஆனால் டிக்கெட் மட்டும்
வாங்கியபாடில்லை. கண்டக்டர்தான் பாவம்
வேற ஆளுக்கு டிக்கெட் போட போய்
விட்டார்.

ஒருநாள்.

பஸ் புறப்பட்டு, மயிலாடுதுறை பஸ்
ஸ்டாண்டை விட்டு வெளியே வந்து
விட்டது. அப்போது மூன்று மாணவர்கள்
ஓடி வந்து ப்ஸ்ஸின் பின் படிக்கட்டு வழியாக
ஏறி மேலே வந்து, உள்ளே வராமல் அங்கேயே
நின்று கொண்டார்கள்.

கண்டக்டர் அருகிலேயே டிக்கெட் போட்டுக்
கொண்டிருந்தாலும் அந்த மூவரும் டிக்கெட்
வாங்கவில்லை.

டிக்கெட் போட்டுக் கொண்டே டிரைவரின்
அருகேவரை சென்று விட்டார் கண்டக்டர்.
அப்போது பொதுவாக எல்லோரையும் பார்த்து,
"சீட்டு வேணுமா, வேற யாருக்காவது சீட்டு
வேணுமா?" என்று கேட்டார்.

அந்த மூன்று மாணவர்களில் ஒருவன்,
"சார், இங்கே வாங்க!" என்று கூப்பிட்டான்.
கண்டக்டர் அருகே சென்றார். "எத்தனை
சீட்டு வேணும்ப்பா?" என்றபடியே பயணச்சீட்டைக்
கிழிக்கப்போனார்.

அதற்கு, "எங்கே சீட்டு? கால் வலிக்கிது,
உட்காரணும். எங்கே சீட்?" (seat) என்று
கேட்டான் அந்த மாணவன்.
கண்டக்டர் வெறுத்துப் போய் தலையில்
அடித்துக் கொண்டார். ஆனால் மாணவர்களுக்கோ
சிரிப்புதான்.

பஸ் வரும்; பஸ் ஸ்டாப் வரும்.
பயணிகள் வருவர்; இறங்குவர்.
ஆனால், அந்த கண்டக்டர்கள், டிரைவர்கள்
மற்றும் பஸ்ஸின் பயணங்கள் முடிவதேயில்லை.
ஆகவே, ஓட்டுனர், நடத்துனரை மதிப்போம்.

குறிப்பு: ஒரு சில மாணவர்களைப் பற்றி
மட்டும்தான் இந்தக் கட்டுரையில்
குறிப்பிட்டுள்ளேன்; அனைவரையும் அல்ல.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Thursday, September 17, 2009

"வாரும், வாரும், உள்ளே வாரும்!"

"வாரும், வாரும், உள்ளே வாரும்!"
=================================
நற்குணன் ஐயா அவர்கள் எங்களது
தமிழாசிரியர்.

வாரத்தில் ஒருநாள் செவ்வாய்க் கிழமை
மட்டும் முதல் பாடவேளை, தமிழ்
வகுப்பு.

ஒரு செவ்வாய்க் கிழமையில் காலை
10 மணிக்கு பள்ளியின் பாட ஆரம்ப
மணியோசை ஒலித்து விட்டது.
ஆசிரியரும் வந்து விட்டார்.
வருகைப் பதிவேடு எடுத்து விட்டார்.
பாடத்தையும் நடத்த ஆரம்பித்து
விட்டார்.

சுமார் 10 நிமிடங்கள் சென்றிருக்கும்.
ஒரு மாணவன் வகுப்பறை வாயிலருகே
வந்து நின்று, "உள்ளே வரலாமா?"
என்று கேட்டான்.

பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு
அவனைப் பார்த்தார், தமிழாசிரியர்.

அப்போது வாசல் கதவின் ஓரமாக
குப்பைகள் குமித்து வைக்கப் பட்டிருப்பதைப்
பார்த்தார் அவர். பிறகு அந்த மாணவனைப்
பார்த்தார்.

மறுபடியும் குப்பையை, மறுபடியும்
மாணவனை மாறி, மாறிப் பார்த்து
விட்டு, அந்தக் குப்பையை நோக்கி
கை காட்டிவிட்டு, பின் அந்த மாணவனை
நோக்கி கையைக் காட்டிவிட்டு, இறுதியாக
வகுப்பறையின் உள்ளேயும் கையைக்
காட்டிக் கொண்டே, "வாரும், வாரும்,
அப்படியே வாரும்" என்றார்.

மாணவர்கள் அனைவருமே சிரித்து விட்டோம்.

ஆனால், அந்த மாணவனோ,'ஆசிரியர்
நம்மை உள்ளே வரச் சொல்கிறாரா,
அல்லது குப்பையை வாரச் சொல்கிறாரா'
என்று குழம்பி அங்கேயே நின்று கொண்டே
இருந்தான்.

மாணவர்கள் அனைவரும் சிரித்து ஓய்ந்தபின்
ஒருவழியாய் அவனை 'உள்ளே வாப்பா'
என்று உள் வருவதற்கு அனுமதி அளித்தார்.

இந்த நகைச்சுவை சம்பவம் இன்னும்
மனதில் அடிக்கடி நிழலாடிக் கொண்டே
இருக்கின்றது.

(தமிழாசிரியர் பற்றிய குறிப்பு என்பதால்
முடிந்தவரை தமிழிலேயே எழுதியுள்ளேன்.)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Monday, September 14, 2009

குடை வள்ளல் யார்?




சேகர்: "ராஜு, நீ என்னிடம் இரவல்
வாங்கிப் போனாயே, அந்தக் குடையை
திருப்பிக் கொடுப்பா."

ராஜு: "அந்தக் குடையை நம்ம தாஸுவிடம்
இரவல் கொடுத்தேன். ஏன், உடனே வேண்டுமா?"

சேகர்: "ஆமாம்ப்பா. என்னிடம் இரவல் கொடுத்த
மோகன் உடனே திருப்பிக் கேட்கிறார்!!!"

-இதில் யார் குடை வள்ளல்?

[பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஜோக்!]

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Saturday, September 12, 2009

கொக்குக்கு எத்தனை கால்கள்?

ஒரு வீட்டில் வீட்டு உரிமையாளரும் அவருக்குத்
துணையாக ஒரு சமையல் காரரும் இருந்தனர்.

ஒரு நாள் வீட்டுக்காரர் பஜாரிலிருந்து
வரும்போது கொக்கு ஒன்றை
வாங்கிவந்து, சமையல்காரரிடம் கொடுத்து,
"கொக்கு குழம்பு சமைத்து வை; குளித்துவிட்டு
வருகிறேன்" என்று சொல்லிவிட்டு குளிக்கப் போனார்.
சமையல்காரர் குழம்பு சமைத்து வைத்துவிட்டு,
குழம்பையும் சிறு அளவு கறியையும் டேஸ்ட்
பார்க்கலாம் என்று டெஸ்ட் பண்ணியவர் கொக்கு
கறி ருசியாய் இருக்கவே, கால் துண்டு ஒன்றை
முழுவதும் சாப்பிட்டுவிட்டார்.

குளித்து வந்ததும் சாப்பிட அமர்ந்தார் வீட்டுக்காரர்.
சோறு பரிமாறப்பட்டதும் சாப்பிட ஆரம்பித்தார் அவர்.
முதலில் சமையல்காரர் முதலாளிக்குப் பிடித்த
கொக்கின் கால் ஒரு துண்டை எடுத்துவைத்தார்.

"இன்னொரு கால் துண்டையும் வையப்பா" என்றார் முதலாளி.

"கொக்கிற்கு ஒரு கால்தானுங்க முதலாளி" என்றார் சமையல்காரர்.

"என்னது? கொக்கிற்கு இரு கால்கள் இருக்குமே?" என்றார் முதலாளி.

"இல்லீங்க ஒரு கால்தானுங்க" என்றார் சமையல்காரர்.

முதலாளி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும்
சமையல்காரர் ஒப்புக்கொள்ளவில்லை.

முதலாளி சாப்பிட்டு முடித்ததும் சமையல்காரரை
வயல்வெளிக்கு கொக்கு காட்ட அழைத்துச் சென்றார்.
வயலில் ஒரு கொக்கு ஒரு காலை மடக்கிக் கொண்டு
ஒற்றைக் காலுடன் நின்றுகொண்டிருப்பதை பார்த்த
சமையல்காரர், "பாருங்க முதலாளி, கொக்குக்கு ஒற்றைக்
கால்தான்" என்று முதலாளியிடம் காட்டினார்.

உடனே முதலாளி தன்னுடைய இரு கைகளையும்
தட்டினார். சப்தம் கேட்டதும் கொக்கு
தனது இரு காலகளையும் மடக்கி கொண்டு பறக்க
ஆரம்பித்தது. "பார், கொக்கிற்கு இரு கால்கள்"
என்று சமையல்காரரிடம் காட்டினார் முதலாளி.

"நீங்க இப்ப கை தட்டியதற்கு பதிலாக, சாப்பிட
ஆரம்பிக்கும்போதே கை தட்டியிருந்தால்
கொக்கிற்கு இரு கால்கள் வந்திருக்குமே"
என்றாராம் சமையல்காரர்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

தங்களின் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Friday, September 11, 2009

கீழேயா? மேலேயா?

தெருவில் சைக்கிளில் ஒரு வியாபாரி
பெரிய வெங்காயம் விற்றுக் கொண்டு
போய்க்கொண்டிருந்தபோது எங்கள்
பக்கத்து வீட்டருகில் மணலில்
சைக்கிள் சக்கரம் சிக்கி கீழே விழுந்து
விட்டார். பெரிய வெங்காயம் எல்லாம்
மணலில் கொட்டி விட்டது.

இதைப் பார்த்த நானும் பாபுவும்
அவற்றைப் பொறுக்கி எடுத்து
மணலைத் தட்டி விட்டு மீண்டும்
சாக்குப் பையில் போட அவருக்கு
உதவிக் கொண்டிருந்தோம்.

அப்போது தெருவாசலுக்கு வந்த
பக்கத்து வீட்டுப் பாட்டி, பாபுவிடம்,
"ஏண்டா பாபு வெங்காயமெல்லாம்
கீழே கொட்டிடுச்சா?" என்று கரிசனமாகக்
கேட்டார்கள்.

"கொட்டினது கீழே இல்ல பாட்டி;
தரை மேலே" என்று பாட்டியிடம்
பதில் சொன்னான், பாபு.

"இந்த எடக்கு மடக்குக்கு ஒன்னும்
கொறச்சல் இல்ல. நீயும் உன்
வாயும்" என்று பாபுவைத் திட்டி
விட்டு திரும்பவும் வீட்டுக்குள்ளே
போய்விட்டார்கள் அந்தப் பாட்டி.

கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்
அதே புன்சிரிப்புடன் அந்த வியாபாரிக்கு
உதவிக் கொண்டிருக்கிறான் பாபு!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

நல்லா ஒழுகுமா?

மயிலாடுதுறை காந்திஜி சாலையில்
(இரண்டாம் இலக்கச் சாலை என்றும்
மற்றொரு பெயர் உண்டு.) வடநாட்டு
சேட்டுகள் நிறைய கடை வைத்துள்ளார்கள்.

அந்தக் கடைகளில் கடை முதலாளி
சேட்டுகள் தனது ஊரிலிருந்து சிறு வயது
பையன்களை வரவழைத்து சேல்ஸ்மேனாக
வைத்துக் கொண்டிருப்பார்கள். அந்தப்
பையன்கள் தமிழை புதுமாதிரியாகப்
பேசி, வியாபாரம் செய்வார்கள்.

"இந்தப் பிஸ்கட் நல்லாயிருக்குமா"
என்று கேட்டால் "நல்லாயிருக்கும்"
என்பார்கள்.

"இந்த வாஷிங் பவுடர் நல்லா வெளுக்குமா"
என்று கேட்டால் "நல்லா வெளுக்கும்"
என்பார்கள்.

அதில் ஒரு பொது வணிகக் கடையில்
(ஜெனரல் ஷாப்) நான் அடிக்கடி பொருள்கள்
வாங்குவதுண்டு.

அப்படி ஒரு நாள் நான் பொருள் வாங்கிக்
கொண்டிருக்கும்போது, பக்கத்தில் மற்றொரு
வயதான பெரியம்மா 5 லிட்டர் கொள்ளளவு
கொண்ட வாட்டர் கேன்(அல்லது ஆயில் கேன்)
ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பிளாஸ்டிக்காலான அந்தக் கேனை கையில்
வைத்து, அடிப்புறம் பார்த்துக் கொண்டே,
"இந்தக் கேன் ஒழுகுமா?" என்று அந்தக்
கடைப் பையனைக் கேட்டார்கள்.

உடனே அந்தப் பையனும் "நல்லா ஒழுகும்"
என்றான்.

அந்தப் பெரியம்மா சேட்டிடம், "என்னா சேட்டு,
'ஒழுகுமா'ன்னுக் கேட்டா 'நல்லா
ஒழுகும்'ங்குறான்?" என்று கேட்டார்கள்.

சேட்டும் அந்தப் பையனை ஹிந்தியில்
திட்டிவிட்டு, "இல்ல பெரியம்மா,
நல்லா ஒழுகும்னு அவன் சொல்லல.
'நல்லா ஒழைக்கும்'ங்குறான்" என்று
திருத்தம் சொன்னார் பெரியம்மாவிடம்.

"சேட்டு நல்லா சமாளிக்கிற சேட்டு!
பொழச்சிக்குவே!!"என்று பெரியம்மா
சேட்டைப் பாராட்டி விட்டு சிரித்தவாறு
பணத்தைக் கொடுத்து கேனை வாங்கிச்
சென்றார்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Wednesday, September 9, 2009

பஸ்ஸை ஓட்டிப் பார்க்கலாமா?

சோழன் போக்குவரத்துக் கழகத்தின் டிரைவர்
சீனு எனக்கு நண்பர். நான் எங்களூரில்
எப்போதாவது பஜாரில் நண்பர்களோடு
நின்று பேசிக் கொண்டிருந்தால், என்னை
பார்த்து கையாட்டிவிட்டுச் செல்வார்.

அதுபோல் ஒரு நாள் காலையில் சீனு
பஸ்ஸை ஓட்டிக் கொண்டே என்னைக்
கடைத்தெருவில் பார்த்து கையாட்டிவிட்டுச்
சென்றார்.

பஸ்ஸுக்கள் மதியம் சுமார் 12-லிருந்து
1 மணிக்குள் பணிமனை சென்று டூட்டி
மாற்றி வருவார்கள்.

ஆனால், அன்று மாலையே நான் மயிலாடுதுறை
செல்ல வேண்டியிருந்ததால், கடைத்தெருவில்
பஸ்ஸுக்காகக் காத்திருந்தால், வந்த பஸ்ஸை
காலையில் ஓட்டிய ஓட்டுனர் சீனுவே ஓட்டிக்
கொண்டிருந்தார்.

பஸ்ஸில் ஏறியதும் நான் அவர் அருகில் சென்று,
"என்ன சீனு, காலையிலும் ஓட்டினீங்க; இப்பவும்
ஓட்டிக்கிட்டு இருக்கீங்களே,ஏன்?" என்று கேட்டேன்.

அதற்கு, "அதுவா நிஜாம்? ஓட்டிப் பார்த்துக்கிட்டு
இருக்கேன்" என்றார் சீனு.

நான் பதறிப் போய், "என்ன ஓட்டிப் பார்த்துக்கிட்டு
இருக்கீங்களா? லைசென்ஸ் எப்ப எடுப்பீங்க? நாங்க
50, 60 பேர் உங்களை நம்பி, உங்கப் பின்னால
இருக்கோம்,நீங்கதான் பொறுப்பு" என்றேன்.

"அட நீ வேற பீதியக் கிளப்பாதப்பா. நான் சொன்னது
'ஓட்டி' இல்ல! அதாவது 'ஓ.ட்டீ'. ஓவர் டைம்
டூட்டி பார்க்கிறேன்னு சொன்னேன்" என்று நண்பர்
சீனு சொன்னதும் பஸ்ஸில் அருகிலிருந்த
சக பயணிகளிடையே கல... கல... கல...

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Sunday, September 6, 2009

பேய்க்கு பயப்படலாமா?

'இல்லறம் சிறக்க பெரிதும் பங்காற்றுவது கணவனா?
மனைவியா?' என்ற தலைப்பில் பட்டிமனறம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது. இரு அணியினரும் நகைச்சுவையுடனும்
கருத்துக்களுடனும் தங்கள் வாதங்களை முழங்கிக்
கொண்டிருந்தனர்.அப்பொழுது நேரம் சுமார் 9.30 மணி இருக்கலாம்.

ஒரு பேச்சாளர் பேசிக் கொண்டிருந்தார்.. "ஒரு நண்பரிடத்தில்
'நீங்க பேயைப் பார்த்திருக்கீங்களா?' என்று கேட்டேன்.
'அதுகூடத்தானே 15 வருஷமாய் குடும்பம் நடத்திக்கிட்டிருக்கேன்'
என்று வேதனையோடு நொந்துபோய் பதில் சொன்னார் நண்பர்.
அவருடைய அனுபவம் அப்படி.

ஓர் ஆள் மனைவியைப் பார்க்க மாமியாருடைய ஊருக்குப் போறாரு.
போற வழி அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுபோன்ற பாதை. இரவு நேரம்
ஆகிடுது. இருட்டுப் பாதையில் பயந்துகொண்டே, பாட்டு பாடிக்கொண்டு
போறாரு. அப்போ வேற ஒரு நபர் குறுக்குப் பாதையிலருந்து வந்து
இவர் கூடவே சேர்ந்து நடக்கிறாரு.

நம்ம ஆளு 'துணைக்கு ஆளு வந்துடுச்சி' என்று தெம்போட,
வந்த நபர்கிட்டே பேச்சு கொடுத்துக்கொண்டே, 'இந்த பாதையில
பேய் நடமாட்டம் இருக்குன்றாங்களே, நிஜமா?'னு கேட்குறாரு.
அதுக்கு அந்த நபர், 'எனக்குத் தெரியாது; நான் செத்துப்போய்
மூணு வருஷம் ஆகிடுச்சி. வேற யாராவது உயிரோட
இருக்கிறவங்களாப் பார்த்துக் கேளுங்க'னு சொன்னாரு பாருங்க,
நம்ம ஆளு எடுத்த ஓட்டம், மாமியார் வீட்டுலபோய்த்தான்
நின்னாரு"

இப்படி பேச்சாளர் பேசிக்கொண்டு இருக்கும்போதே,
நடு(வில் குறுக்கிடுப)வர் இடைமறித்து, "அட நீங்களும் இந்த
இரவு நேரத்தில பொண்டாட்டி, பேய்னு கதைசொல்லி
எல்லோரையும் பயமுறுத்தறீஙகளே, நியாயமா?
நான் மற்றவங்களைச் சொன்னேன். எனக்கு இந்த பிசாசு,
பேய் எதுவும் பயம் கிடையாது......" என்று நிறுத்தி,
நிதானமாய், இழுத்துச் சொன்னவர் தொடர்ச்சியாய்,
"அதாவது பகலில்" என்று சொன்னதும் சிரிப்பொலியும்
கரவொலியும் அடங்க சில நிமிடங்களாயின.

கண்டு இரசித்தவர்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Thursday, September 3, 2009

சர்க்கஸா? சினிமாவா? ஸ்கூலா?



சர்க்கஸா? சினிமாவா? ஸ்கூலா?

ஒரே வகுப்பில் படிக்கும் மூன்று மாணவர்கள் நண்பர்களாய் இருந்தார்கள்.
எப்போதும் எங்கே போனாலும் வந்தாலும் ஒன்றாகவே போவார்கள்,
ஒன்றாகவே வருவார்கள்.

ஒரு நாள். மூவரும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, முதல்
நண்பன், "நம்ம ராஜன் தோட்டம் மைதானத்துல மெஜினி சர்க்கஸ்
வந்துருக்கு. அதுக்குப் போவோமாடா?" என்று கேட்டான்.

அதற்கு இரண்டாம் நண்பன், "நம்ம வானதி தியேட்டர்ல கூர்யா
நடிச்ச படம் வந்திருக்கு. அதுக்குப் போவோம்டா" என்று சொன்னான்.

முன்றாவது நண்பன், "மெஜினி சர்க்கஸும் வேணாம், கூர்யா
படமும் வேண்டாம். நம்ம ஸ்கூலிலேயே அடுத்த மாதம் எக்ஸாம்
வருதுடா. அதனால கிளாஸுக்கே போலாம்டா" என்றான்.

அப்பொழுது முதல் நண்பன், "ஒரு ஐடியா. ஒரு ரூபா காயின்
எடுத்து பூவா, தலையா போட்டுப் பார்ப்போம். பூ விழுந்தால்,
மெஜினி சர்க்கஸ் போவோம்; தலை விழுந்தால், கூர்யா
படத்துக்குப் போவோம்" என்று யோசனை கொடுத்தான்.

கிளாஸுக்குப் போகவேண்டுமென்று சொன்ன அந்த மூன்றாவது
நண்பன், "என்னங்கடா, காயின்ல ரெண்டு சைடுதானடா
இருக்கு? நான் கிளாஸுக்குப் போகணுமின்னு சொல்றேனே,
அதுக்கு எப்படிடா சாய்ஸ் பார்க்குறது?" என்று கேட்டான்,
பரிதாபமாக.

உடனே, "சுண்டி போடுற காயின் நட்டுக் குத்தலா
நின்னுச்சுன்னால், நிச்சயமா ஸ்கூலுக்குப் போகலாம்டா"
என்றான் இரண்டாவது நண்பன், கூலாக.

ஆகவே,
நல்லவர் எனில் பழகு;
இல்லை எனில் விலகு.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்

Wednesday, September 2, 2009

என்ன வரம் வேண்டும்?



'சிரிண்டா'! வீட்டிலிருந்தாலும் ஆஃபிஸிலிருந்தாலும் பெட்டிக்கடைக்குப் போனாலும் ரெஸ்டாரெண்டுக்குப் போனாலும் எங்கேயும் எப்போதும் சிரிண்டாவைத்தான் வாங்கிக் குடிப்பார் அந்த ந(ண்)பர்.

ஒரு நாள்.

ரெஸ்டாரெண்டில் அமர்ந்து சிரிண்டாவை துளி, துளியாக உறிஞ்சிக்
கொண்டே, "பாட்டிலில் சிரின்டா குறையக் குறைய தீர்ந்துபோகாமல்
மறுபடியும் மறுபடியும் வந்துகொண்டே இருந்தால், நன்றாக
இருக்குமே" என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார் அந்த நபர்.

அடுத்த நொடி.
படக் என்று சத்தம்.
பளிச் என்று வெளிச்சம்.
கடவுளே அந்த நபரின்முன்னே தோன்றிவிட்டார்.

"ஓ மனிதா... நீ நினைத்ததுபோலவே உனக்கு பாட்டிலில் சிரிண்டா வந்து
கொண்டேயிருக்க அருள் புரிந்தோம். உனக்கு மூன்று வரங்கள் தருகிறேன்.  இன்னும் இரண்டு வரங்கள் என்ன வேண்டும்? கேள்" என்றார் கடவுள்.

"கடவுளே, சற்று பொறு" என்று கூறிவிட்டு, சிரிண்டாவை முழுவதும்
காலி செய்துவிட்டு பாட்டிலை மேஜையில் வைத்தார் அந்த நபர்.
திரும்பவும் பாட்டிலில் சிரிண்டா முழுமையாக நிரம்பிவிட்டது.

"ஓ சூப்பர் தலைவா, சூப்பர், சூப்பர்" என்று கடவுளைப் பாராட்டிவிட்டு,
'இன்னும் இரண்டு வரங்கள் இருக்கின்றன' என்று மனதில் யோசித்த
அந்த நபர் உடனே வாயைத் திறந்து கேட்டார், "இதுபோலவே இன்னும்
இரண்டு சிரிண்டா பாட்டில் வேண்டும்" என்று.

கடவுள் அப்ப ஷாக்க்க்க்கானவர்தான், இன்னமும் அங்கேயேதான்
அசந்துபோயி நிக்கிறாராம்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Monday, August 31, 2009

தோசை (கதை)யைப் பிடிக்கும்தானே?-



உங்களுக்கு தோசை பிடிக்கும்தானே! அப்படியானால் இந்தக் கதை உங்களுக்குத்தான். (தோசை பிடிக்காதவர்களும் படிக்கலாம்.)

எனது நண்பருக்கு வெளியூருக்கு வேலை மாற்றலாகிவிட்டது.

முத‌ல் நாள்.வேலை முடிந்து திரும்பும்போது ரெஸ்டாரெண்டுக்குச் செ‌ன்று, தோசையும் காபியும் ஆர்டர் செய்தார். சர்வர் கொண்டுவந்து வைத்ததும், "தோசைக்கு சட்னியும் சாம்பாரும் வேண்டாம்; ஜீனி கொண்டுவாருங்கள்" என்றார் நண்பர். "தோசைக்கு ஜீனி கிடையாது, சட்னி, சாம்பார்தான்" என்றார் சர்வர். எனக்கு ஜீனிதான் வேண்டும் எ‌ன்று சண்டைபோட்டு வாங்கிசாப்பிட்டுவிட்டு வந்தார் நண்பர்.

இரண்டாம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் "இன்றுமுதல் தோசைக்கு ஜீனி கிடையாது" என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் சாம்பார், சட்னியும் வந்தது. நண்பர் உடனே மறுபடியும் தோசை கொண்டுவரச்சொன்னார். வந்தது. நண்பர் ஜீனி கொண்டுவரச்சொன்னார். சர்வர் மெனு போர்டைக் காட்ட, நண்பரோ, "இன்று, முத‌ல் தோசைக்கு ஜீனி கிடையாதுதான்; நா‌ன் இரண்டாவது தோசைக்குதான்ஜீனி கேட்டேன்" எ‌ன்று சொல்லி ஜீனி வாங்கி இரு தோசைகளையும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டார்.

மூன்றாம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் "இனிமேல் தோசைக்கு ஜீனி கிடையாது" என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் சாம்பார், சட்னியும் வந்தது. நண்பர் உடனே மறுபடியும் தோசை கொண்டுவரச் சொன்னார். வந்தது. ஏற்கெனவே தட்டிலிருந்த தோசையின்மேல் இந்த தோசையையும் வைத்துவிட்டு நண்பர் ஜீனி கொண்டுவரச்சொன்னார். சர்வர் மெனு போர்டை காட்ட, நண்பரோ, "இனி, மேல் தோசைக்கு ஜீனி கிடையாதுதான். நா‌ன் கீழ் உ‌ள்ள தோசைக்குத்தான் கேட்டேன்" என்று பிடிவாதமாய் கேட்டுவாங்கி இரண்டு தோசைகளையும் ஜீனியுடன் சாப்பிட்டு புறப்பட்டார்.

நான்காம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் "இனி தோசைக்கு ஜீனி கிடையாது" என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் சாம்பார், சட்னியும் வந்தது. நண்பர் உடனே இட்லி கொண்டுவரச் சொன்னார். வந்தது. நண்பர் ஜீனி கொண்டுவரச்சொன்னார். சர்வர் மெனு போர்டை காட்ட, நண்பரோ, "நா‌ன் தோசைக்கு ஜீனி கேட்கவில்லை; இட்லிக்குத்தான் கேட்டேன்" என்று கேட்டுவாங்கி இட்லியையும் கூடவே தோசையையும் ஜீனியுடன் சாப்பிட்டு புறப்பட்டார்.

ஐந்தாம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் "இனி தோசை, இட்லி, பூரி எதற்கும் ஜீனி கிடையாது" என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் ஜீனிபோடாமல் காபி கொண்டுவரச்சொன்னார். சர்வர் காபி கொண்டு வந்தார்.. நண்பர் காபியைக் குடித்துப்பார்த்துவிட்டு ஜீனி கொண்டுவரச் சொன்னார். வந்தது. நண்பர் இப்போது தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் வந்தது. தோசையை ஜீனியுடன் சாப்பிட்டுவிட்டு, காபியை ஜீனியில்லாமலே குடித்துவிட்டு நண்பர் புறப்பட்டார்.

இத்தனை நாளாக நடைபெற்ற அனைத்து சம்பவங்களையும் பார்த்துக் கொண்டிருந்த முதலாளி நண்பரிடம் "சார், இனி எப்போதும் உங்களுக்கு தோசைக்கு ஜீனி உண்டு" எ‌ன்று அனும‌தி அளித்தார். சர்வரிடம் முதலாளி "இனி உனக்கு சர்வர் வேலை கிடையாது. நிறுவனத்தின் நடைமுறைகளை நன்கு கடைபிடிக்கிறாய். இனி நீ சூப்பர்வைசர்." எ‌ன்று சொல்லி மிகவும் பாராட்டினார்.

அன்பர்களே, இதிலிருந்து என்ன தெரிகிறது?

பின் இணைப்பு:
இந்தக் கதையிலிருந்து அறியப்படும் நீதி:
1. விடாமுயற்சிக்கு வெற்றி நிச்சயம். (நண்பர்)
2. கடின உழைப்புக்கு உயர்வு நிச்சயம். (சர்வர்)

-இந்த தோசையை சுட்டவர்:அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...