...பல்சுவை பக்கம்!

.

Friday, December 31, 2021

அவரவர்க்கு உரியது - சிறுகதை #160


ஃப்ரான்ஸிலிருந்து வெளிவரும் 'தமிழ் நெஞ்சம்' ஜனவரி 2022 இதழில் பிரசுரமான எனது சிறுகதை!
*

அவரவர்க்கு உரியது  (சிறுகதை)
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்
------------ --------

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து சிராஜுத்தீன் வெளியில் வந்தபோது நேரம் மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. அலுவலகக் கட்டடத்தின் வாயிலருகிலேயே இருந்த ப‌ஸ் ஸ்டாண்டுக்கு வ‌ந்து பஸ்ஸுக்காக காத்திருந்தான்.
ப‌ஸ் வரக்காணோம்.

அப்பொழுது தரையில் கிடந்த கலர் பேப்பரை எடுத்துப்பார்த்தான். அட! ரிசர்வ் பேங்க் கவர்னர் கையெழுத்துப் போட்டிருந்த 500 ரூபாய் தாள்!

சிராஜுத்தீனுடைய டூ வீலர் பழுதாகி, உதிரி பாகங்கள் மாற்ற 450 ரூபாய் ஆகும் என்று பழுது நீக்குநர் சொன்னதால் அவன் இன்று பஸ்ஸில் அலுவலகத்திற்கு வந்திருந்தான். 

கைவசம் இருப்பதோ 500 ரூபாய் மட்டிலுமே. இன்னும் இந்த மாதத்தின் ஐந்து நாட்களை ஓட்டவேண்டும். இந்த நிலையில்தான் அந்த பஸ் ஸ்டாண்டில் 500 ரூபாய் கிடக்கிறது.

சிராஜுத்தீன் சுற்றும் முற்றும் பார்த்தான். இது யாருடைய பணம்? இதை எப்படி உரியவரிடம் சேர்ப்பது? காவல் நிலையத்தில் கொடுத்தாலும் அது எங்கு போய் சேரும் என்பதை யோசித்தான்.

'சரி, இந்த பணத்தை பள்ளிவாசலின் உண்டியலில் சேர்த்துவிடுவோம்' என்ற முடிவுடன், வந்த பஸ்ஸில் ஏறினான்.

கடைத்தெரு பஸ் ஸ்டாப்பில் இறங்கி, ஐந்து வயது மகள் ஜன்னத்திற்கு மிகவும் பிடித்த மாதுளம் பழம் வாங்கிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

"அத்தா" என்று மகிழ்வோடு ஓடிவந்தவளை தூக்கி கன்னத்தில்
முத்தமிட்டு, கீழே இறக்கியபோது, "அத்தா, அத்தா, ஒரு காரு
வேகமா என்மேலே மோதவந்துச்சித்தா..." என்றாள் ஜன்னத்.

"பஸ்ஸிலே வந்து ரொம்ப களைப்பா இருக்கீங்க, இந்த டீயைக்
குடிங்க" என்று சொல்லி டீயைக் கொடுத்த அவன் மனைவி ஆபிதா,
"நம்ம ஜன்னத் சாயங்காலம் தெருவிலே விளையாடிக்கிட்டிருக்கும் போது யாரோ ஒருத்தன், என்னத்தைக் குடிச்சிருந்தான்போல... தாறுமாறாக் காரை வளைச்சி, வளைச்சி ஓட்டிட்டு வந்திருக்கான். அப்போ எதிர்வீட்டுக்கு வந்து வெயிட்டிங்ல இருந்த ஆட்டோ
டிரைவர் அபுல்ஹஸன் பாய்ஞ்சி புள்ளையைத் தூக்கிக்கிட்டு
உருண்டு சின்ன காயம்கூட படாம புள்ளயக் காப்பாத்திட்டான். ஆனால் அவனுக்குத்தான் கை, காலெல்லாம் அடி. அப்படியும் அவன் உடனே சவாரிக்குப் போயிட்டான்" என்று விளக்கமாகச்
சொல்லி முடித்தாள்.

ஆட்டோ டிரைவர் அபுல்ஹஸன் நாணயமானவன். சரியான
கட்டணம்தான் வாங்குவான். இருப்பினும் கஷ்டப்படும்
குடும்பம்தான்.

"அல்ஹம்துலில்லாஹ்!" (அல்லாஹ்வுக்கு நன்றி!) என்று கூறி எழுந்தவன், "இதோ அஞ்சி நிமிஷத்துலே வந்திடுறேன்,
ஆபிதா" என்றவண்ணம் செருப்பினுள் காலை நுழைத்தான்.

அந்த ஐனூறு ரூபாயை எங்கே, யாரிடம் கொடுக்கவேண்டும் என்பதை அவன் முடிவு செய்துவிட்டான். 'சம்பளம் வந்ததும் பள்ளிவாசல் பைத்துல்மால் உண்டியலில் முன்பு நினைத்த
ஐனூறு ரூபாயைப் போடணும்' என்று
நிய்யத் (நேர்ச்சை) செய்துகொண்டான்.
*

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, October 3, 2021

முற்பகல் செய்யின் (சிறுகதை) #159

முற்பகல் செய்யின்! (சிறுகதை)
 -அ. முஹம்மது நிஜாமுத்தீன். 

 குமணன், அந்தப் பெட்டிக் கடையின் வாசலில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது அவ்வழியாக அகிலன் நடந்து வருவதை பார்த்ததும், அவசர அவசரமாக அந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு திடீரென்று அந்த வாழைப்பழ தோலை தெருவில் போட்டான். 

 எதிர்பாராத விதமாக தன் முன்னே வந்து விழுந்த வாழைப்பழத்தை பார்த்து சுதாரிப்பதற்குள் அதன் மேல் காலை வைத்துவிட்ட அகிலன் வழுக்கி தடுமாறி கீழே விழுந்தான். 

 அவன் கீழே விழுந்ததை பார்த்த குமணன், நக்கலாக பெருங்குரலெடுத்து சிரிக்கவும் அவன் பக்கத்தில் இருந்த அவனது நண்பர்களும் இணைந்து சிரித்தார்கள். 

 சுதாரித்து எழுந்த அகிலன் அவர்களைப் பார்த்தும் எதுவும் சொல்லாமல் தன் உடை மேலும் உடல் மேலும் பட்டிருந்த மண்துகள்களை தட்டி விட்டுக் கொண்டு அமைதியாக சென்று விட்டான். 
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
மற்றொரு நாள் அகிலன் சைக்கிளில் சந்தைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது தனக்கு முன்னே சென்றுகொண்டிருந்த குமணன் கல் தடுக்கி கீழே விழுந்ததை பார்த்தான். 

 ஓடோடி சென்று அவனை தூக்கி அவன் முகத்தில் அடிபட்டு இருந்த காயத்திலிருந்து வழிந்த ரத்தத்தை துடைத்துவிட்டு பக்கத்து தெருவில் இருந்த கிளினிக் சென்று டாக்டரிடம் காட்டினான். 

 ஊசி போட்டு பின் காயங்களுக்கு மருந்து போட்டு விட்டதும் அவனை அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விட்டு புறப்பட்டான். 

 அகிலனின் கைகளைப் பிடித்துக்கொண்டு குமணன் அழுது மன்னிப்பு கேட்டான்.

 "அன்னைக்கு நான் வாழைப்பழத் தோலை போட்டு உன்னை தடுமாறி விழ வைத்தேன். அதை மனசுல வச்சுக்காமல் என்னை உடனடியாக அழைத்துச் சென்று டாக்டரிடம் காட்டி, வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டு போறியேப்பா! உன் நல்ல மனச புரிஞ்சுக்காம உன்னை காயப்படுத்திட்டேன் நான்! மன்னிச்சுக்கோ அகிலா!" என்றான். 

 "குமணா! அன்னைக்கு நீ இல்லாம வேற யாரும் விழுந்திருந்தாலும் நான் இப்படித்தான் செய்யவேன். நீ விழுந்தாலும் இப்படித்தான் செய்வேன். ஏன்னா நாம வாழப்போவது கொஞ்ச(ம்) காலம்! 

 "உனக்கும் எனக்கும் என்ன பகை? இந்தப் பகை நம்ம பிள்ளைகளுக்கும் அவங்க பிள்ளைகளுக்கும் பரம்பரையா தொடரணுமா?

 "குர்ஆன்-ல எனக்கு பிடிச்ச ஒரு வாசகம் 'ஒற்றுமை என்னும் கயிற்றை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்'னு வருது! 

 "நம்ம காந்தியடிகளும் 'அகிம்சை கொள்ளுங்கள்; அன்பு செய்யுங்கள்' என்று தானே சொன்னாரு? 

 "வீடு, மனை இதெல்லாம் என்னப்பா சொத்து? அன்புதானப்பா நமக்கு ஒரு சொத்து! விலை மதிக்க முடியாத சொத்து!" என்று கூறிய அகிலனை நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டான் குமணன்.

 (சுபம்.)

நேற்று: அக்டோபர் 2.
காந்தி ஜெயந்தி.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, July 17, 2021

கவிஞர் ரிஷிவந்தியா கவிதைகள் #158

கவிஞர் ரிஷிவந்தியா கவிதைகள்! #158நறுக்ஸ்நொறுக்ஸ் கவிதைகள்!           திரு. ரிஷிவந்தியா அவர்கள்

கவிஞர் ரிஷிவந்தியா அவர்களின் 'நறுக்-நொறுக்ஸ்' பற்றிய விமர்சனம். எழுதுபவர்: அ.முஹம்மது நிஜாமுத்தீன். 

...
 ரிஷிவந்தியா அவர்களின் ஆயிரம் படைப்புகளில் இருந்து குறைந்தபட்சம் 25 படைப்புகளை விமர்சிக்க வேண்டும். 25 படைப்புகளை என்ன, 250 படைப்புகளை கூட விமர்சிக்கலாம். ஏன் ஆயிரம் படைப்புகளை கூட விமர்சிக்கலாம். எதை எடுப்பது எதை விடுப்பது? தயங்கி நிற்கிறேன்! நான் தேனுண்ட வண்டு! மயங்கி நிற்கிறேன்! இருந்தாலும் என் அளவிலே என்னால் முடிந்த அளவிலே சுமார் 26 படைப்புகளை இங்கு விமர்சனம் செய்கிறேன்.  1. கை கழுவினோம் மரங்களை மூச்சுத்திணறலோ 
மண்ணுக்கு? 

 மனிதன் உயிர் வாழ அவசியம் தேவை உயிர் வாயு என்கிற பிராணவாயு என்கிற ஆக்சிஜன். அந்த ஆக்ஸிஜனை உருவாக்கி தருவன மரங்கள். அந்த மரங்களை மனிதன் வெட்டி தள்ளி அழிக்கிறான். 

 ஆகவே அதன் மூலம் மரங்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கின்றன. அப்படி மரங்கள் அழிபட்டால் அடுத்ததாக உயிரினங்கள் அழியும். மனிதனும் அழிவான். 

 இதைத்தான் கவிஞர் இங்கே சுருக்கமாக குறிப்பிடுகிறார். 

 2. கூட இருந்தே குழி பறித்தவனை 
கும்பிட்டு குழியில் விழுந்தது 
விதை. 

 மனிதரில் சில வகை உண்டு. நம்மிடமே உறவாடி, நம்மை நயவஞ்சகம் செய்து நம்மைக் கெடுப்பார்கள். குழிபறித்து நம்மை எப்பொழுது தள்ளிவிடலாம், காலை வாரி விடலாம் என்று இருப்பார்கள். 

 ஆனால் விதை விருட்சமாய் வளர, முதலில் குழி வெட்ட வேண்டும். அதன் பிறகு தண்ணீர் விட்டு பராமரிக்க வேண்டும். முதலில் குழி பறித்தவனுக்கு நன்றி சொல்லி அந்த குழிக்குள் விழுகிறதாம் விதை. 

 இது ஒரு 'விதை'யான கவிதை. 

 3. எண்ணிப்பார்த்து வாழ்வோம் 
 நாசிக் கரன்சிகளை அல்ல. 
 நல்லோர் கருத்துக்களை. 

 'சான்றோர் சொல் கேட்க வேண்டும்' என்று பெரியவர்கள் கூறுவார்கள். அப்படியே அந்த சொற்களைக் கேட்பதோடு நின்று விடாமல் அதை எண்ணிப் பார்க்கவேண்டும். எண்ணிப் பார்ப்பதுடன் இருந்துவிடாமல் செயலிலும் கொண்டுவரவேண்டும். நல்ல செயல்கள் செய்ய வேண்டும். 

 ஆகவே அதைத்தான் பணத் தாள்களை மட்டும் எண்ணிக் கொண்டிருக்காதே, நல்ல செயல்களையும் சான்றோர் கருத்துக்களையும் வார்த்தைகளையும் எண்ணிக்கொண்டு இருக்கவேண்டும் என்று கவிஞர் சொல்கிறார்.

 4. புன்னகைக்கும் பூக்கள் 
 புரிய வைக்கின்றன, 
அற்ப ஆயுள் என்றாலும் 
ஆனந்தித்திரு. 

 பூக்களை ரசிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? அதை ஆராதிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? பார்த்தாலே மகிழ்ச்சி ஏற்படுமே! புன்னகை ஏற்படுமே! அதன் அழகும் அதன் வாசமும் நம்மைக் கவருகின்றனவே! 

 அதன் ஆயுள் ஒரு நாள், இரு நாள் என்று குறைவாக இருந்தாலும் அவை இதழ் விரித்து புன்னகைக்கின்றனவே?! நாமும் அப்படிப் புன்னகைப்போம். 
 
 பூப்போல சிரித்திடு!! 

 5. எவரும் உருகுவதில்லை 
நமக்காக 
மெழுகுவர்த்திகளைத் தவிர. 

 மெழுகுவர்த்திகள் தம்மையே அழித்துக் கொள்கின்றன. இருளைப் போக்குகின்றன; வெளிச்சம் அளிக்கின்றன. 

 ஆகவே, மனிதர்கள் நா(மு)ம் மெழுகுவர்த்திகளை போலவே மற்றவர்களுக்காக, மற்றவர்கள் நலனுக்காக சிறிதேனும் முயற்சிக்க வேண்டும் என்பதையே கவிஞர் உவமையாக சொல்கிறார்.

 6. எலி வேட்டை ஒத்திவைப்பு 
பூனையின் குறுக்கே 
மனிதன். 

 வெளியில் செல்லும்போது 'பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம்' என்று திரும்பி விடுகிறான் மனிதன். 

அதேபோல் எலி வேட்டைக்கு பூனை செல்லும்போது மனிதன் குறுக்கே போனால் பூனையும் 'கெட்ட சகுனம்' என்று எண்ணினால் எப்படி இருக்கும் என்று நகைச்சுவையாக சொல்கிறார் கவிஞர். 

 ஆனால் அப்படி பூனைகள் சகுனம் பார்த்தால் அவற்றிற்கு எலி கிடைக்காது. வெறும் பட்டினி தான் கிடைக்கும். 

 7. எத்தனை ஆயிரம் 
புத்துணர்வு முகாம்கள் தேவை 
'மதம்' பிடித்த மாந்தர்க்கு!? 

 உலகில் மதம் பிடித்த உயிரினங்கள் இரண்டு. ஒன்று யானை மற்றொன்று மனிதன்.

 அதேபோல் மதம், மனிதனோடு இருவகையில் சம்பந்தப்பட்டிருக்கிறது. எப்படி? முதலாவது அவன் மதம் சார்ந்து இருக்கிறான். அடுத்ததாக அவன் மதம்பிடித்தவனாக இருக்கிறான்.

 இதில் மதம் பிடித்தவன் என்பது மதவெறியை குறிக்கிறது. யானைக்கு மதம் பிடித்தால் உயிரினங்களை அழிக்கிறது; உடமைகளை உடைக்கிறது. அதுவே மனிதனுக்கு மதம் பிடித்தால் அவனே அழிந்து சாகிறான். 

 ஆகவே, மதம் கடப்போம்! மனித நேயம் காப்போம்!!

 8. வாழ்வாங்கு வாழ்கிறார்கள் பலர் 
 'என் கடன் வட்டி கொடுப்பதே' என.

 கடன் வாங்குபவர்களிடம் வட்டி பலவகையில் வசூலிக்கப்படுகிறது. கந்து வட்டி, மீட்டர் வட்டி என்ற பல பெயர்களில். வட்டிக்கு கடன் வாங்குவது என்பது ஒரு கொடிய விஷம். கடன் வாங்குபவனை நிம்மதியாக இருக்க விடாது. இரவு தூக்கத்தையும் கெடுத்துவிடும். 

 வட்டிக்கு பணம் வாங்கியவர்கள், வட்டி கட்டியே அவர்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து விட்டார்கள். ஆனால் கடன் முடிந்தபாடில்லை. பலபேர் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலையை நோக்கிச் செல்லும் சோகங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன . 

 'வட்டி தொழிலாலே வருகின்ற லாபம், ஏழை விழிநீரில் எரிகின்ற தீபம்; என்று அறியாமலே, உண்மை புரியாமலே, ரத்தக்கறை படிந்து உலகில் நீயும் வாழலாகுமா?' என்று இசை முரசு நாகூர் ஈ. எம். ஹனிபா அவர்கள் பாடிய பாடல் நினைவுக்கு வருகின்றது. 

கடன் கொடுத்து வட்டி வாங்குவதை, தனது தொழிலாக கொள்பவர்கள், சற்றே மன சாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். 

 9. அன்பு செலுத்தினால் 
நீராக மண் நோக்கு; 
அடிமைப்படுத்தினால் 
தீயாக விண் நோக்கு.

 'அன்பு செலுத்தினால் அடிமையாக அடங்கு; அடிமைப்படுத்தினால் புரட்சியாக வெடி' என்கிறார் கவிஞர். 

 10. முதுமையால் 
முகச்சுருக்கம் 
முன்கதை சுருக்கம். 

 நமது பெரியவர்கள் என்பவர்கள் அனுபவத்தின் தொகுப்பு ஆகும். அவர்கள் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ அல்லது கடைப்பிடிக்கிறோமோ, செயல் படுத்துகிறோமோ இல்லையோ, அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். 

சிறு வயது முதலே நம்மை அவர்கள் பாதுகாத்து வளர்த்து வந்துள்ளார்கள். அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டியது அவசியம். 

நமக்கும் அதுபோல முதுமை வரும். 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'. மனதில் வைப்போம்! 

 11. வளரும் 
 வரம் 
 மரம்.  

மிக மிக சுருக்கமான நறுக் இது! மரத்தினால் நாம் அடையும் பயன்கள் எண்ணற்றவை; கணக்கிலடங்காதவை. 

ஆகவே தான் அதை 'வரம்' என்கிறார் கவிஞர். நமது முன்னோர்கள் வளர்த்துத் தந்ததை நாம் இப்போது அனுபவிக்கிறோம். ஆகவே நமக்குப் பிறகு வரும் சந்ததிகள் அனுபவிப்பதற்காக நாம் மரங்களை நடவேண்டும். 

காலத்தின் கட்டாயம்! 

 12. எதிர்கால விருட்சத்தை 
விழுங்கியது 
நிகழ் காலப் பறவை. 

 செடிகள், மரங்கள், பூ பூக்க மகரந்தச்சேர்க்கை அவசியம். அது காற்றினால் நிகழ்வது. 

 அது போல ஓர் இடத்தில் வளரும் செடி, கொடி, மர வகைகள் வேறு இடத்தில் வளர்வதற்கு அவசியமாகிறது பறவைகளின் எச்சங்கள். 

அதைத்தான் இதில் கவிஞர் சொல்லி இருக்கிறார். 

 13. மணக்கிறது மண் 
உழவனின் வியர்வை 
நாற்றத்தில். 

 'நாற்றம்' என்ற சொல்லுக்கு தமிழில் வாசம், மணம் என்ற அர்த்தங்கள் உண்டு. விவசாயின் வியர்வையும் அந்த விவசாயியோடு சேர்ந்து, மண்ணில் விழுந்து, புரண்டு உழைக்கிறது.

 தொழில்கள் அனைத்திற்குமே தலையாயது உழவுத் தொழில்தான். 

உழவை மதிப்போம்! உழவனை மதிப்போம்! 

 14. பிளக்காதீர்கள் 
இயற்கையின் இதயத்தை...
 மரம். 

 மனிதனுக்கு இதயம் எவ்வளவு அவசியமோ அதுபோல இயற்கைக்கு மரம் மிக மிக அவசியம். மனிதர்கள் புதிதாக மரங்களை செடிகளை வளர்க்கிறார்களோ இல்லையோ பழைய மரங்களை வெட்டி தள்ளுகிறார்கள். என்று மாறும் இந்த நிலைமை? 

 ஒரு பழைய மரத்தை வெட்டுவதற்கு முன், புதிதாக ஐந்து மரக்கன்றுகளை நட வேண்டும் என்று சட்டம் வகுக்க வேண்டும்!

 15. திரவப் புதையல் 
நிலத்தடி நீர்! 

 நிலக்கரியை 'கருப்புத் தங்கம்' என்பார்கள். அதுபோல, நீரின் அவசியத்தை உணர்த்துவதற்காக எழுதப்பட்டது இந்த 
கவிதை!

 'நீரின்றி அமையாது உலகு' என்று சொல்லப்பட்டதை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். 

 16. வெட்டுபவனின் சொட்டும்
 வியர்வைக்கு வெட்டப்பட்டு 
வீழும்வரை வீசியது சாமரம்... 
மரம். 

 தன்னை குழிப்பறிப்பவனையும் வெட்டுபவனையும் கீழே விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது பூமி என்று, பூமியை பொறுமைக்கு உதாரணமாக சொல்வார்கள். 

அது போல தன்னை வெட்டுபவனது வியர்வையையும் காற்று கொண்டு வீசுகிறதாம் மரம்! 

 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்! 

 17. கையில் செல் 
கடவுச்சொல் 
இதுவும் கடந்து போகும்! 

 இந்தியர்கள் அனைவரையும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்கச் சொன்னார்கள்!

 மனிதனோடு ஆதார் கார்டையும் இணைத்துவிட்டார்கள். 

இப்பொழுது மனிதன் தனது கையோடு கைபேசியும் இணைத்தே நடந்து செல்கிறான்; கடந்து செல்கிறான். 

 நடக்கட்டும்! நடக்கட்டும்!! 

 18. மயானங்களில் திரும்பிடும் 
மயான அமைதி 
கொரோனாவுக்கும் கட்டிடுவோம் 
விரைவில் சமாதி! 

 இந்த கொரோனாவை கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை. அவன் மட்டும் என் கையில் கிடைத்தால் சமாதி கட்டலாம் என்று ஆத்திரங்கள் வரு(கிற)து மக்களே! 

 பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்தால் மயான பயணத்தை நீண்ட நாட்களுக்குத் தவிர்க்கலாம்!!! 

 19. சாயம் போவதே இல்லை 
வானவில் வண்ணமும் 
மனித நேய எண்ணமும்! 

 மனிதநேயம் எண்ணம் கொண்டவர்கள் எப்போதும் வெளிச்சமாக இருப்பார்கள்; வண்ணமயமாக இருப்பார்கள் என்பது இதன் கருத்து. 

 ஆனால் வானவில் வண்ணம் சாயம் போகாது என்கிறார் கவிஞர். வானவில் அதன் வண்ணத்தை சில சில நிமிடங்களில் இழந்துவிடும். 

ஆனால், சாயம் போகாது என்கிறாரே கவிஞர்! எப்படி என்று தெரியவில்லை! 

 20. பிள்ளைகளைக் கரைசேர்க்க 
எந்நாளும் எதிர்நீச்சல் 
 அப்பா! 

 பிள்ளைகளை வளர்ப்பதற்கு எந்நாளும் ஓயாமல் உழைக்கும் அன்பு உள்ளங்கள் அம்மாவும் அப்பாவும்! 

 அதுபோல பிள்ளைகளுக்காக மெழுகுவர்த்தி போல் தியாகமாக தன்னை மாற்றிக்கொண்டு தன் வாழ்நாளை அர்ப்பணிப்பவர் அப்பா!

 அப்பப்பா!!!!! 

 21. நூல் இருக்க  
ஊசிப் போகாது 
வாழ்க்கை! 

 நூலும் ஊசியும் துணி தைக்க மிக அவசியம். அதுபோல நூல், நல்ல புத்தகம் இருப்பது, மனித வாழ்க்கை உயர்வு அடைய, மிக மிக முக்கியம்!

 22. மயில் இறகு போடும் 
 குட்டிகள் தெரியும் 
குழந்தையின் கண்ணுக்கு! 

 குழந்தைப்பருவம் குதூகலமான பருவம்! கவலைகள் இல்லாத பருவம்! புத்தகப் பக்கங்கள் இடையே மயிலிறகை வைத்து, அது குட்டி போடுகிறதா என்று தினம் தினம் எதிர்பார்க்கும் பருவம்! 

 அந்தப் பருவம், இந்தப் பாடலில் தெரிகிறது என் கண்ணுக்குள்ளே! 

 23. விதை நட்டேன் 
சிலிர்த்தது வியர்த்திருந்த 
மேகம்! 

 விதையை நட்டதும் வியர்த்திருந்த, கறுத்திருந்த மேகம் சிலிர்த்துக்கொண்டு மழையை பொழிந்ததாம்! 

 சிலிர்த்த மேகம் மழை பொழிந்தால் விதைக்கு கொண்டாட்டம்தான்!!  

24. ஏணியில் ஏறும் பாம்பு 
 நவீன பரமபதம் 
நடப்பு வாழ்க்கை! 

 என்னதான் ஆத்தாடி என்று கூத்தாடி கரணம் போட்டாலும் பாம்பு வந்து கொத்துவதும் நாம் வாய்விட்டு கத்துவதும் இப்படி ஆகிவிட்டது நடுநிலை மக்களின் வாழ்க்கையும் ஏழை மக்களின் வாழ்க்கையும்! வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு. 

இது ஒரு நாள் மாறும்! வாழ்க்கைத் தரம் முன்னேறும்! 

 25. மன திடம் 
வேண்டினேன் 
மனதிடம்! 

 மனதில் உறுதி வேண்டும்! அது மட்டும் இருந்தால் போதும் எவ்வளவு கவலைகள், கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் வந்தாலும் வாழ்க்கையில் ஊதித் தள்ளி போய்க்கொண்டே இருக்கலாம்! 

 அப்புறமென்ன டேக் இட் ஈசி பாலிசி தான்! 

 26. பெற்றோர் தினம் 
கொண்டாடப்படுகிறது  
முதியோர் இல்லத்தில்! 

 பெற்றோர்கள் நமக்காகத் தானே வாழ்ந்தார்கள்? அவர்களின் தள்ளாத வயதில் அவர்களை நாம் முதியோர் இல்லத்தில் தள்ளலாமா? 

 அவர்களின் வயதான காலத்திலும் நாம் நம்முடன் வைத்து பராமரிக்க வேண்டும்! அவர்களை அன்பால் அணைப்போம்!!!

 விமர்சித்தவர்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

குறிப்புகள்:
1. தமிழக எழுத்தாளர் குழுமத்தின் விமர்சனப் போட்டிக்காக எழுதப்பட்டது.

2. இன்ஸ்டாகிராமில், திரு.ரிஷிவந்தியா அவர்களின் நறுக்ஸ்நொறுக்ஸ்-ஐப் படிக்க கீழுள்ள இணைப்பை சொடுக்குங்கள்:
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, April 11, 2021

அன்புள்ள ரஜினிகாந்த் #157


அன்புள்ள ரஜினிகாந்த்!

#அன்புள்ள_ரஜினிகாந்த்
(அட, நீங்க நடிச்ச படத்துப் பெயர்.!)

உங்களுக்கு ஒரு மடல்.
"ரஜினி வந்தார்;  நடித்தார்; போனார்னு இருக்கக்கூடாது. என்ன (என்னை) வாழ வச்ச தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாச்சும் (நல்லவை) செய்யணும்" அப்டினு அடிக்கடி சொல்லிட்டிருக்கீங்க!

நீங்க நூறாண்டு வாழணும்னு வாழ்த்தறேன்! (இப்ப எதுக்கு வாழ்த்து?) 

இப்ப உங்க வயசு எத்தனை ஆண்டுகள்? 70-ஆ? 
மக்களுக்கு என்ன செய்யப்போறீங்க? எப்ப(டி) செய்யப்போறீங்க?

'கட்சி ஆரம்பிக்கறதை மனசால நினைக்கறதையே விட்றுங்க'-னு டாக்டர் சொன்னபடி கட்சி ஆரம்பிக்காம விட்டீங்களே, அதுவா? ம்... அதுவும் நல்லதுதான்!
#கட்சியெல்லாம்_இப்ப_நமக்கெதுக்கு?

வேற, வேற, வேற என்ன செய்யப்போறீங்க?

உங்க உலக நாயகன்கூட, 'சக்கர நாற்காலியில் அமர்ந்து அரசியல் செய்து மக்களை சோதிக்க மாட்டேன்'னுருக்கார். மய்யத் தலைவருக்கு பிடிக்காத அச்செயலை நீங்களும் செய்யப்போவதில்லை. #காலத்தின்_கையில்_அது இருக்கு!

அகரம் பவுண்டேசன்?
வேணாம், அது சூர்யா ஆரம்பிச்சுட்டாரு! 'தகரம் பவுண்டேசன்'? பேரு நல்லால்ல!!! 'சிகரம் பவுண்டேசன்' அப்டினு ஆரம்பிச்சு வசதியற்ற மாணவர்களுக்கு கட்டணமில்லாக் கல்வி தரப்போறீங்களா?

'ஆஸ்ரம் பள்ளி'னு உங்க( மனைவி)கிட்டே இருக்கு! நீங்க 'தர்ம ஆஸ்ரம் பள்ளி'னு ஆரம்பிக்கலாம்!
 விவசாயிகளுக்கு நல் உதவிகள் செய்யலாம். ஏற்கெனவே கார்த்தி செஞ்சிட்டிருக்கார். சீமானுக்கு சின்னம் விவசாயியாம். அதுக்காக நீங்க விவசாயிகளை கைவிட்றாதீங்க!

கிராமங்களில் புதிதாக
மருத்துவ வசதி செய்து தரலாம்.  ஜோதிகாவும் அப்படிதான் சொல்றாங்க!

அரசு உதவிகள் சென்று சேராத கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, குடியிருப்பு வசதிகள் செய்து தரலாம்.

நீட்டை தடைசெய்யும்வரை
நீட் இலவச பயிற்சி மையங்கள் நடத்தலாம்.

காவிரி நீர் கிடைக்க குரல் கொடுக்கலாம்; முயற்சிகள் எடுக்கலாம்.
(போராட்டம் செய்து சுடுகாடாக ஆக்கமாட்டீங்க, தெரியும்!)

நதிகள் இணைப்பிற்கான முயற்சிகள் ஆரம்பிக்கலாம்! ஏற்கெனவே 'மிஸ்ட் கால்' கேட்டு வாங்கி சில நதிகளை சில பேர் இணைச்சிட்டாங்க! நீங்க மீதியிருக்கிற நதிகளை பார்த்துக்குங்க!

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முன்பே ஒரு கோடி (-எவ்வளவுப்பு? ஒரு கோடிப்பு!-)
குடுத்திருக்கீங்க! அதை யார்ட்ட குடுத்தீங்க? பத்திரமா வச்சிக்கச் சொல்லுங்க!

புயல், வெள்ள நிவாரண நிதி என தனியாக நிதி ஆதாரத்துடன் அறக்கட்டளை துவங்கலாம்!

முக்கியமானது: நீங்க நடிச்ச படம் பார்க்க வருகிற ரசிகர்களுக்கு சலுகையாக டிக்கெட் கட்டணம் 50 ரூபாய் மட்டும்தான் அப்டினு
உரக்க ஒரு தடவை சொல்லுங்க!
நீங்க ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி!

எவ்வளவோ திட்டமிருக்கு!
#என்னவோ_திட்டமிருக்கு!

உங்க காலத்திற்குப் பின்னே மக்களுக்கு எதுவும் செய்வீங்க, அதெல்லாம் இருக்கட்டும்!
இருக்கும் காலத்தில் எதையாவது செய்ங்க!
என்ன செய்யப்போறீங்க, அதையாவது சொல்லுங்க!

தமிழக மக்களின் வேண்டுகோள்!

***

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, January 2, 2021

சைக்கிள் ஓட்டலாம், வாங்க! #156

சைக்கிள் ஓட்டலாம், வாங்க!எனக்கும் எங்கள் தெருவில் இன்னொரு பையனுக்கும் முதன்முதலாக எங்கள் அண்ணன்தான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தார்!

அரை சைக்கிள் என்பார்கள், சின்ன சைக்கிளை!
நமக்கு பெரிய சைக்கிள்தான்! குரங்குப் பெடலும் கிடையாது; பார் கம்பியில் உட்கார்ந்துதான் ஓட்டப் பழகினோம்!

இந்த பக்கத்தில் திண்ணை தாழ்வாரம் இருக்கும். பத்து வீடுகள் தள்ளி அங்கே எலக்ட்ரிக் போஸ்ட்டுக்கு அருகில் ஒரு கருங்கல் கிடக்கும். ஆக, இங்கே புறப்பட்டால் அந்த முனையில் கருங்கல்லில் போய் காலை வைத்துதான் நிறுத்துவோம்!  மற்றபடி தரையிலிருந்து ஏறவோ, தரையில் கால் வைத்து நிறுத்தவோ தெரியாது!

இரண்டாவது நாளின் பாதியிலேயே என்னுடன் பழகிய பையன், தரையில் இருந்து உந்தித் தள்ளி சைக்கிள் 'பார் கம்பி'யில் ஏறவும் தரையில் கால் வைத்து நிறுத்தவும் பழகிவிட்டான்!

எனக்கோ நாமும் அவ்வாறு கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற உத்வேகம் வந்துவிட்டது!

சரி ஏறிடலாம் என்று தரையில் கால் வைத்து உந்தி, உந்தி ஏறுவதற்கு முயற்சிக்கிறேன்; தூக்கி போட கால் எட்டவில்லை.

உந்தி, உந்தியே சென்றதில் மறுமுனையே வந்துவிட்டது! அடடா, இது என்ன வம்பு என்று மனதில் புலம்புகிறேன்!

அங்கிருந்து என் அண்ணனும் அந்த பையனும் உற்றுப் பார்க்கிறார்கள்!

சிறிது நேரம் அமைதியாக யோசித்தேன்!
அதன்படியே, பறப்பட்டேன்! நல்ல வேகமாக தரையில் உந்தி சைக்கிள் வெகு தூரம் செல்லும் வகையில் செய்துகொண்டு, அப்படியே காலை தூக்கி பின்பக்கமாக கொண்டு சென்று அடுத்த பக்கத்தில் போட்டேன்!  சீட்டிலும் அமர்ந்துவிட்டேன்! 

சைக்கிள் வேகம் குறைந்ததும் 'பாரி'ல் இறங்கி பெடல் செய்து வேகம் எடுத்து, இந்தப் பக்கம் வரும்போது, நிதானமாக பிரேக்கை அழுத்தி காலை ரிவர்ஸ் பாணியில் போட்டு இறங்கினேன்!

ஆக, சைக்கிள் ஓட்ட கற்றுத் தந்த எங்கள் அண்ணன் (பெரியம்மா மகன் ஃபாரூக் சார் M.Sc., M.Ed.) அவர்களுக்கு நன்றி!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Friday, January 1, 2021

குமுதம் இதழில் என் துணுக்கு #155

குமுதம் இதழில் எனது துணுக்கு!
.


எனது துணுக்கு 'குமுதம்' இதழில்!

'வாசகர் வாய்ஸ்' பகுதியில் நான் எழுதிய துணுக்கு ஒன்று,
25/11/2020 தேதியிட்ட 'குமுதம்' இதழில் பிரசும் ஆனது.
*
அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு (2021) வாழ்த்துகள்!


*
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...