...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, July 28, 2022

சிறுகதைப் போட்டி! #165

சிறுகதைப் போட்டி #165

24/07/2022 ஞாயிறன்று 'தமிழக எழுத்தாளர்கள்' குழுமத்தில், ஒரு கதையைப் பதிவிட்டு, அதன் சரியான முடிவை எழுதுங்கள் என்பதாக ஒரு போட்டி வைக்கப்பட்டது.




பரிசு பெற்ற மூன்றில் நான் எழுதிய கதை முடிவும் ஒன்று!

இதோ கதையும் மூன்று முடிவுகளும்!

சிறுகதை:

நேரம்! - திருப்பூர் சாரதி
====== ===============

       " கோபுசாரைப் பார்க்கணும்! "

குரல் கேட்டு நிமிர்ந்தார் அந்தக் கம்பெனியின் செக்யூரிட்டி. எதிரே கல்லூரி மாணவன் ஒருவன் நின்றிருந்தான்.

" அப்பாயின்மென்ட் இருக்கா தம்பி? "

" இல்லேங்க "

செக்யூரிட்டி சிரித்தபடியே, 
" சாரைப் பார்க்க அப்பாயின்மென்ட் வாங்கவே எத்தனை நாளாகும்னு தெரியுமா? சும்மா நினைச்ச நேரத்தில் யாரும் பார்த்திட முடியாது. உங்க பேரையும், போன் நம்பரையும் எழுதிவச்சுட்டுப் போங்க, உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தாக் கூப்பிடுவாங்க. " என்றார் நக்கலாக!

 " ஆனா அவர் எங்க காலேஜ் விழாவுக்கு வந்தப்போ, மாணவர்கள் ஏதாச்சும் உதவி தேவைப்பட்டா எந்த நேரமும் என்னை வந்து பார்க்கலாம்னு சொல்லிட்டு வந்தாரே...! " 

 " அவங்க மேடைக்காக பேசறதை எல்லாம் நம்பி இப்படி வரக்கூடாது தம்பி. வேலை ஆகணும்னா காத்திருந்துதான் ஆகணும். கிளம்புங்க, போன் வரும்! "

ஏமாற்றத்துடன் கிளம்பினான் அந்தக் கல்லூரி மணவன்.

அடுத்தநாள் காலை...
" எனக்காக எத்தனைபேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடான்னா... " என்றபடி ...

கதாசிரியர் எழுதியிருந்த முடிவு:

திரு.திருப்பூர் சாரதி அவர்கள் எழுதிவைத்திருந்த முடிவு:

தன் பங்களாவுக்கு வெளியே, கக்கா போக முரண்டு பிடித்த நாயைப் பிடித்துக்கொண்டு ஒருமணி நேரமாகக் காத்திருந்தார் கோபு!


திருப்பூர் திரு. சாரதி அவர்கள்
...................................
இனி பரிசு பெற்ற 3 முடிவுகள்:

பரிசு பெற்றவை:

அடுத்தநாள் காலை...
" எனக்காக எத்தனைபேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடான்னா... " என்றபடி ...

தொடர்ச்சி:
டாய்லட் வாசலருகே நின்றவர், "ஒன்றறை லிட்டர் காஃபி குடிச்சும் இந்த கக்கா வருவேனாங்குதே!?!" என புலம்பலானார்!

முடிவு எழுதியவர்:
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
...................................
இன்றைய போட்டிக்காக...

"எனக்காக எத்தனைபேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடான்னா நான்தான் கூட்டிட்டு போகணும்னு அடம் பிடிக்குறே..." என்றபடி தனது செல்லநாயை வாக்கிங் அழைத்துச் சென்றார் கோபு.

- அஜித்
...................................
திருப்பூர் சாரதி சாரின் நேரம் கதையின் முடிவை யூகிக்கும் போட்டி!

நேரம்!
======

"எனக்காக எத்தனை பேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடானா", என்றபடி                                 

தன்மேல் ஆசையாய் தாவி ஏறிய டாமியை கட்டிக்கொண்டார் கோபு

அ.வேளாங்கண்ணி, திருச்சி.





  .படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, February 5, 2022

உறவுகள் தொடரும் -சிறுகதை #163



ஃபிரான்ஸிலிருந்து வெளிவரும் 'தமிழ்நெஞ்சம்' பிப்ரவரி 2022 மின்னிதழில் பிரசுரமான எனது சிறுகதை!
*
உறவுகள் தொடரும்! (சிறுகதை) 
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

உறவுகள் தொடரும்!
(சிறுகதை)
-நீடூர் அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வெளியே மழை 'ஜோ'வென பெய்து கொண்டிருந்தது.

'பாண்டியன் கடை'-க்கு மளிகை சாமான்கள் வாங்கச் சென்றிருந்த மகள் மதனா இன்னும் திரும்பி வரவில்லை. 

அப்போதுதான் வாங்கவேண்டிய மளிகைப் பட்டியலில்,
'கடலைப் பருப்பு' என எழுதாதது நினைவில் வந்தது விமலாவுக்கு.
மதனாவுக்கு எப்படி தெரிவிப்பது? கடை அண்ணாச்சிக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று பார்த்தால், அலைபேசியில் மின்கலத்தின் சக்தி தீர்ந்திருந்தது! வீட்டிலும் மின்சாரம் இல்லை.
மழையும் சீராக பெய்து கொண்டிருந்ததால், தானும் செல்ல இயலாமல் விமலா தவித்தாள்.

மழை விட்டு சிறிது நேரத்தில் மதனா வந்துவிட்டாள்.

பையிலிருந்து பொருட்களை எடுக்கும்போது, அதில் கடலைப் பருப்பும் இருந்தது.

"அம்மா! எனக்கு பள்ளி விடுமுறைங்கறதால, நாளைக்கு ஊரிலிருந்து ரெண்டு தாத்தாவும் ரெண்டு பாட்டியும் வர்ராங்கள்ல? 
தாத்தா ரெண்டு பேருக்குமே
மசாலா வடை பிடிக்கும்; கடலைப் பருப்பு தீர்ந்து போச்சி-னு நீ நேத்து அப்பாட்ட சொல்லிட்டிருந்தியே, அது ஞாபகம் வந்தது. பட்டியலில் நீ எழுத மறந்திட்டே! ஆனா, நான் வாங்கி வந்திட்டேன்! கடலைப் பருப்பைதானேம்மா நீ முதலில் எழுதியிருக்கணும்?" என்று
உறவுகளை மதிக்கும் மதனா கேட்டதும் விக்கித்துப்போன விமலா, மகிழ்ச்சி மேலிட "என் செல்லக்குட்டி" என்று மதனாவை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்!
*

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, January 16, 2022

பிக் பாக்கெட் (சிறுகதை) # 161

பிக் பாக்கெட் -சிறுகதை
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


பிக் பாக்கெட் (சிறுகதை)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

மிகுந்த கூட்டமாக இருந்த பேருந்தில் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் ஏறினார் ஒரு தாய். என்னருகே வந்து நின்று கொண்டவரிடமிருந்து அந்த குழந்தையை, உட்கார்ந்திருந்த நான் வாங்கிக் கொண்டேன். 

புன்னகை முகத்துடன் இருந்த குழந்தையின் உடலில் காது, கழுத்து, கை, கால் எங்கும் பொன்னகைகள் அலங்கரித்தன. 

அந்த தாயிடம், "என்னம்மா, குழந்தையின் உடம்பு முழுதும் கவரிங் நகைகளா?" என்று சத்தமாக நான் கேட்டேன். 

"என்னது, கவரிங் நகைகளா? எல்லாம் பவுன் நகைகள்!" என்று உடனடியாக பதில் சொன்னார் அந்த தாய். 

இப்பொழுது பேருந்தில் இருந்தவர்கள் அனைவரின் பார்வைகளும் அந்த குழந்தையின் மேல் தான். 

'அப்பாடா, இனி பிக்பாக்கெட் திருடன் எவனும் குழந்தையை நெருங்க மாட்டான். நகை கீழே விழுந்து விட்டாலும் கூட நமக்கு எந்த கவலையும் இல்லை; ஏனென்றால் பஸ்ஸில் எல்லோருடைய பார்வையும் குழந்தையின் மேலேதான்' என நிம்மதியாக பயணத்தை தொடர்ந்தேன்.
 *


திருவண்ணாமலையில் 26/12/2021 அன்று நடந்த 'தமிழக எழுத்தாளர்கள்' குழுவின் 7-ஆவது சந்திப்பில் வெளியிடப்பட்ட, குழு உறுப்பினர்களின் படைப்புகளின் தொகுப்பு நூலான 'அருணையில் பூத்த மலர்கள்' நூலில் இடம்பெற்ற எனது படைப்பு.
++++++++++++++++++++++++++++++

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Friday, December 31, 2021

அவரவர்க்கு உரியது - சிறுகதை #160


ஃப்ரான்ஸிலிருந்து வெளிவரும் 'தமிழ் நெஞ்சம்' ஜனவரி 2022 இதழில் பிரசுரமான எனது சிறுகதை!
*

அவரவர்க்கு உரியது  (சிறுகதை)
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்
------------ --------

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து சிராஜுத்தீன் வெளியில் வந்தபோது நேரம் மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. அலுவலகக் கட்டடத்தின் வாயிலருகிலேயே இருந்த ப‌ஸ் ஸ்டாண்டுக்கு வ‌ந்து பஸ்ஸுக்காக காத்திருந்தான்.
ப‌ஸ் வரக்காணோம்.

அப்பொழுது தரையில் கிடந்த கலர் பேப்பரை எடுத்துப்பார்த்தான். அட! ரிசர்வ் பேங்க் கவர்னர் கையெழுத்துப் போட்டிருந்த 500 ரூபாய் தாள்!

சிராஜுத்தீனுடைய டூ வீலர் பழுதாகி, உதிரி பாகங்கள் மாற்ற 450 ரூபாய் ஆகும் என்று பழுது நீக்குநர் சொன்னதால் அவன் இன்று பஸ்ஸில் அலுவலகத்திற்கு வந்திருந்தான். 

கைவசம் இருப்பதோ 500 ரூபாய் மட்டிலுமே. இன்னும் இந்த மாதத்தின் ஐந்து நாட்களை ஓட்டவேண்டும். இந்த நிலையில்தான் அந்த பஸ் ஸ்டாண்டில் 500 ரூபாய் கிடக்கிறது.

சிராஜுத்தீன் சுற்றும் முற்றும் பார்த்தான். இது யாருடைய பணம்? இதை எப்படி உரியவரிடம் சேர்ப்பது? காவல் நிலையத்தில் கொடுத்தாலும் அது எங்கு போய் சேரும் என்பதை யோசித்தான்.

'சரி, இந்த பணத்தை பள்ளிவாசலின் உண்டியலில் சேர்த்துவிடுவோம்' என்ற முடிவுடன், வந்த பஸ்ஸில் ஏறினான்.

கடைத்தெரு பஸ் ஸ்டாப்பில் இறங்கி, ஐந்து வயது மகள் ஜன்னத்திற்கு மிகவும் பிடித்த மாதுளம் பழம் வாங்கிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

"அத்தா" என்று மகிழ்வோடு ஓடிவந்தவளை தூக்கி கன்னத்தில்
முத்தமிட்டு, கீழே இறக்கியபோது, "அத்தா, அத்தா, ஒரு காரு
வேகமா என்மேலே மோதவந்துச்சித்தா..." என்றாள் ஜன்னத்.

"பஸ்ஸிலே வந்து ரொம்ப களைப்பா இருக்கீங்க, இந்த டீயைக்
குடிங்க" என்று சொல்லி டீயைக் கொடுத்த அவன் மனைவி ஆபிதா,
"நம்ம ஜன்னத் சாயங்காலம் தெருவிலே விளையாடிக்கிட்டிருக்கும் போது யாரோ ஒருத்தன், என்னத்தைக் குடிச்சிருந்தான்போல... தாறுமாறாக் காரை வளைச்சி, வளைச்சி ஓட்டிட்டு வந்திருக்கான். அப்போ எதிர்வீட்டுக்கு வந்து வெயிட்டிங்ல இருந்த ஆட்டோ
டிரைவர் அபுல்ஹஸன் பாய்ஞ்சி புள்ளையைத் தூக்கிக்கிட்டு
உருண்டு சின்ன காயம்கூட படாம புள்ளயக் காப்பாத்திட்டான். ஆனால் அவனுக்குத்தான் கை, காலெல்லாம் அடி. அப்படியும் அவன் உடனே சவாரிக்குப் போயிட்டான்" என்று விளக்கமாகச்
சொல்லி முடித்தாள்.

ஆட்டோ டிரைவர் அபுல்ஹஸன் நாணயமானவன். சரியான
கட்டணம்தான் வாங்குவான். இருப்பினும் கஷ்டப்படும்
குடும்பம்தான்.

"அல்ஹம்துலில்லாஹ்!" (அல்லாஹ்வுக்கு நன்றி!) என்று கூறி எழுந்தவன், "இதோ அஞ்சி நிமிஷத்துலே வந்திடுறேன்,
ஆபிதா" என்றவண்ணம் செருப்பினுள் காலை நுழைத்தான்.

அந்த ஐனூறு ரூபாயை எங்கே, யாரிடம் கொடுக்கவேண்டும் என்பதை அவன் முடிவு செய்துவிட்டான். 'சம்பளம் வந்ததும் பள்ளிவாசல் பைத்துல்மால் உண்டியலில் முன்பு நினைத்த
ஐனூறு ரூபாயைப் போடணும்' என்று
நிய்யத் (நேர்ச்சை) செய்துகொண்டான்.
*

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!



. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, October 3, 2021

முற்பகல் செய்யின் (சிறுகதை) #159

முற்பகல் செய்யின்! (சிறுகதை)
 -அ. முஹம்மது நிஜாமுத்தீன். 

 குமணன், அந்தப் பெட்டிக் கடையின் வாசலில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது அவ்வழியாக அகிலன் நடந்து வருவதை பார்த்ததும், அவசர அவசரமாக அந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு திடீரென்று அந்த வாழைப்பழ தோலை தெருவில் போட்டான். 

 எதிர்பாராத விதமாக தன் முன்னே வந்து விழுந்த வாழைப்பழத்தை பார்த்து சுதாரிப்பதற்குள் அதன் மேல் காலை வைத்துவிட்ட அகிலன் வழுக்கி தடுமாறி கீழே விழுந்தான். 

 அவன் கீழே விழுந்ததை பார்த்த குமணன், நக்கலாக பெருங்குரலெடுத்து சிரிக்கவும் அவன் பக்கத்தில் இருந்த அவனது நண்பர்களும் இணைந்து சிரித்தார்கள். 

 சுதாரித்து எழுந்த அகிலன் அவர்களைப் பார்த்தும் எதுவும் சொல்லாமல் தன் உடை மேலும் உடல் மேலும் பட்டிருந்த மண்துகள்களை தட்டி விட்டுக் கொண்டு அமைதியாக சென்று விட்டான். 
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
மற்றொரு நாள் அகிலன் சைக்கிளில் சந்தைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது தனக்கு முன்னே சென்றுகொண்டிருந்த குமணன் கல் தடுக்கி கீழே விழுந்ததை பார்த்தான். 

 ஓடோடி சென்று அவனை தூக்கி அவன் முகத்தில் அடிபட்டு இருந்த காயத்திலிருந்து வழிந்த ரத்தத்தை துடைத்துவிட்டு பக்கத்து தெருவில் இருந்த கிளினிக் சென்று டாக்டரிடம் காட்டினான். 

 ஊசி போட்டு பின் காயங்களுக்கு மருந்து போட்டு விட்டதும் அவனை அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விட்டு புறப்பட்டான். 

 அகிலனின் கைகளைப் பிடித்துக்கொண்டு குமணன் அழுது மன்னிப்பு கேட்டான்.

 "அன்னைக்கு நான் வாழைப்பழத் தோலை போட்டு உன்னை தடுமாறி விழ வைத்தேன். அதை மனசுல வச்சுக்காமல் என்னை உடனடியாக அழைத்துச் சென்று டாக்டரிடம் காட்டி, வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டு போறியேப்பா! உன் நல்ல மனச புரிஞ்சுக்காம உன்னை காயப்படுத்திட்டேன் நான்! மன்னிச்சுக்கோ அகிலா!" என்றான். 

 "குமணா! அன்னைக்கு நீ இல்லாம வேற யாரும் விழுந்திருந்தாலும் நான் இப்படித்தான் செய்யவேன். நீ விழுந்தாலும் இப்படித்தான் செய்வேன். ஏன்னா நாம வாழப்போவது கொஞ்ச(ம்) காலம்! 

 "உனக்கும் எனக்கும் என்ன பகை? இந்தப் பகை நம்ம பிள்ளைகளுக்கும் அவங்க பிள்ளைகளுக்கும் பரம்பரையா தொடரணுமா?

 "குர்ஆன்-ல எனக்கு பிடிச்ச ஒரு வாசகம் 'ஒற்றுமை என்னும் கயிற்றை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்'னு வருது! 

 "நம்ம காந்தியடிகளும் 'அகிம்சை கொள்ளுங்கள்; அன்பு செய்யுங்கள்' என்று தானே சொன்னாரு? 

 "வீடு, மனை இதெல்லாம் என்னப்பா சொத்து? அன்புதானப்பா நமக்கு ஒரு சொத்து! விலை மதிக்க முடியாத சொத்து!" என்று கூறிய அகிலனை நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டான் குமணன்.

 (சுபம்.)

நேற்று: அக்டோபர் 2.
காந்தி ஜெயந்தி.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Friday, September 18, 2020

மன வலி-மை (சிறுகதை) #150





'மன வலி-மை (சிறுகதை)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

"அம்மா, கால் வலிக்கு டாக்டர் சொன்ன ஆயின்மென்ட் வாங்கி வந்திருக்கேன்! காலை நீட்டு" என்று சொல்லி, மருந்தைத் தடவிவிட்டான் பாபு!

"அப்பா, பாட்டிக்கு நான் குணமா தடவிவிடுறேன்!" என்று வாங்கி தடவிவிட்டான் பேரன் ராஜா.

"வலி இப்ப பரவாயில்லை கண்ணுகளா! நீங்க ரெண்டு பேரும் தடவிவிட்டதுமே வலி பறந்து போச்சிப்பா" என்றாள் அம்மா.

"டாக்டர்ட்ட போலாமா அம்மா?" 

"இப்ப வேணாம்ப்பா! போன வாரம்தானே போய் காட்டினோம்? 'வயசாயிடுச்சி; அப்படிதான் வலி வரும்'னு சொன்னாறே?"

"வயசாயிடுச்சிங்கறதுக்காக வர்ற வலி இல்லம்மா இது! வயசுங்கறது நம்மளோட வாழ்நாள் அனுபவம். ஏதோ ஒரு வலி எல்லாருக்குமே உண்டுதானேமா?"

"நீ சொல்றது சரிதான் பாபு! அப்பா இறந்து போனதும் எனக்கு மன வலிதானே?"

"மன வலியை,
மனவலிமையா மாத்திக்கணும்மா! அப்பா இறந்தா என்னம்மா? நாங்களாம் இருக்கோம்ல?"

"அப்பா இருந்தா, அது ஒரு தெம்புதானே? அவரும் போயிட்டாரு! எனக்கும் என்ன என்னமோ வியாதி வந்து படுத்துது! வயசும் ஆயிடுச்சு! அப்பா போன மாதிரியே நானும் போக வேண்டியதுதான்!"

"அப்படி சொல்லாதேமா! இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக் குறிச்சி வச்சிருக்கான்! வயசானதுக்காகவெல்லாம் நாம போக முடியாது! 6 வயசுலயும் இறப்பு! 100 வயசுலயும் இறப்பு! இன்னும், 5, 10, 30 வயசு, 
50 வயசுனு எத்தனை பேரு எத்தனை விதமா இறக்குறாங்க? ஏன் எல்லாரும் வயசாகி, வயசாகி இறக்குறதில்லே? இறைவன்தான் இங்கே முதலாளி! அதனால இந்த மாதிரி நினைப்பையெல்லாம் மூட்டை கட்டி வை!
நீ 100 ஆண்டு வாழ்வேமா! நான் இறைவன்ட்ட வேண்டிட்டே இருப்பேன்! ராஜாவுக்கு கல்யாணம், பிறக்குற குழந்தை எல்லாத்தையும் நீ பார்ப்பே!
நிம்மதியா தூங்கு!"

அம்மாவின் முகம் தெளிவானதைப் பார்த்தவாறே, அம்மாவின் மடியிலே படுத்து தூங்கிவிட்ட ராஜாவைத் தூக்கி, பாயில் போட்டுவிட்டு, மனைவி செல்வியைப் பார்த்தான் பாபு!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்

'தமிழக எழுத்தாளர் குழுமம்' நடத்திய போட்டிக்காக எழுதப்பட்டது. 

'எழுத்தாளர் ரிஷிவந்தியா' அவர்கள், இன்ஸ்டாகிராம்-ல் பதிவுசெய்துவரும் 'நறுக்ஸ் நொறுக்ஸ்'-லிருந்து ஒரு கருத்தை வைத்து கதை எழுதும் புதுமையான போட்டி!

நறுக்ஸ் நொறுக்ஸ் இணைய முகவரி:



விடியற் காலை எழுந்தவுடன்
விரல் நடுங்க எடுக்கின்றனர்
மூத்த குடிமக்கள் கைப்பேசிகளை...
எந்த நண்பரின் இரங்கல் செய்தி
வந்திருக்குமோ எனும் நடுக்கத்துடன்...
    - ரிஷிவந்தியா




. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, August 29, 2020

மிஸ்டர் தாம்பு (சிறுகதை) #149



செப்டம்பர் 2020 மாதத்தின் 'தேன் சிட்டு' மின்னிதழில் வெளியான நான் எழுதிய சிறுகதை!
* * *

ஓடி ஓடி வேலை செய்யோணும்!

(நகைச்சுவை சிறுகதை)

-நீடூர்
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

சிற்றுந்து வந்து நின்றதும்
தாம்பு ஏறி காலியாய் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.

ஓட்டுனர் காலையும் ஆட்டிக் கொண்டிருந்தார்! கையையும் ஆட்டிக் கொண்டிருந்தார்! தலையையும் ஆட்டிக் கொண்டிருந்தார். கண்டக்டர் வந்ததும் டிக்கெட் வாங்கினான்.

ஸ்பீக்கரில் எம்.எஸ்.வி. 'பயணம் பயணம் பயணம்' என்று திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தார். 'அட இப்ப மினி பஸ்ல
இந்தப் பாட்டெல்லாம் போடுறாங்களா?' என நினைத்துக் கொண்டே
இருக்கைக்கு மேலே பார்த்தான், 'பூவையர்' என்று எழுதியிருந்தது!
' பூவை ஏன் வையணும்?' என்று சந்தேகம் வந்தது. 'அடடா, இது பெண்கள் உட்கார்ர சீட்டுடோய்' என்பது மூளையில் உறைக்க, மாறி உட்காரலாம் என எழுந்தான்.

அப்போது இடம் தேடி வந்த ஒரு நடுத்தர வயது ஆசாமி, இவனருகே வந்ததும், இவன் தோளை அழுத்தி, 'பரவாயில்லை உட்காருங்க சார்!' என்றான்.
'அடடே, துணைக்கு ஆள் வந்திடுச்சி' என்று நிம்மதி அடைந்தான் தாம்பு.

அப்போது முன் சீட்டின் பின் பக்கத்தில் இவனுக்கு முன்பாக  சுருட்டி வைக்கப் பட்டிருந்த ஒரு சீட்டைப் பார்த்தான் தாம்பு. அதை எடுத்து பி(வி)ரித்துப் படித்தான். அது ஒரு விளம்பர பிட் நோட்டீஸ்.
'பூ, மலர் அலங்காரத் தேவைகளுக்கு தொடர்பு கொள்ளவும்' என்று போட்டு முகவரி, தொலைபேசி எண்கள் அனைத்தும் அதில் குறிக்கப் பட்டிருந்தன.

அதைப் படித்து குழம்பிப் போய் பக்கத்து இருக்கை ஆசாமியைப் பார்த்தான்.

நோட்டீஸைப் பார்த்துவிட்டு அந்த ஆசாமி, "சார், அலங்காரம் ஆர்டர் பண்ணனுமா? என் ஃபோன்ல கால் பண்ணவா?" என்று செல்ஃபோனை எடுத்தான். 'விட்டால், கால் டாக்சியில் அந்த அட்ரஸுக்கே கொண்டுபோய் விட்ருவான் போல' என பயந்த தாம்பு, "இல்லை, இதிலே 'பூ மலர்
அலங்காரம்'னு போட்ருக்கே, பூ-ன்னா என்ன?
மலர்-னா என்ன?"
என்று கேட்டான்.

அந்த ஆசாமி பலமாக சிரித்துக் கொண்டே,
"இது தெரியாதா?
பூக்குறது 'பூ'.
மலர்-ரது 'மலர்'. அவ்வளவுதான்!" என்று விளக்கம் கொடுத்தான்.

நம்ம தாம்பு அரண்டுபோய் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே, 'என்னென்ன பொருட்கள் வாங்கணும்' என்று லிஸ்ட் மனனம் செய்ததை திரும்ப சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

'காய்கறிலாம் வாங்கணும்.
கடைசியா தக்காளி வாங்கி அ(இ)டி படாமல் மேலே வச்சிக்கணும்.
ஜீனி , பால், காப்பித் தூள்,
மிளகாய்த் தூள்
எல்லாம் வாங்கணும்.
எல்லாத்தையும் டெ(டே)ஸ்ட் பண்ணி வாங்கச் சொன்னாளே?' என்று மனைவியை நினைத்துக் கொண்டான்.

'ஜீனி பால் காஃபித் தூள் எல்லாத்தையும் வாங்கி எப்படி டெஸ்ட் பண்றது? மூனையும் சேர்த்து காஃபி போட்டு குடிச்சிப் பார்த்து வாங்கணுமோ?
மளிகைக் கடைக்காரர் மூஞ்சிலயே தண்ணிய ஊத்திடுவாரே!' என்று குழம்பி-னான்.

'மிளகாய் பொடி எப்படி டெஸ்ட் பண்றது? உறைக்குமே?' என்ற உண்மை உறைத்தது.

நடத்துனர் பிகில் ஊதியதும் சிற்றுந்து நின்றது.
"சார், நீங்க எங்கே இறங்கணும்?" என்று சந்தேகத்துடன் இவனைப் பார்த்து கேட்டார் அவர்.

ஜன்னல் வழியே பார்த்தான் தாம்பு. 'தமிழ் பூக்கடை' என்ற கடை போர்ட் தெரிந்தது.
அடித்துப் பிடித்து இறங்கினான்.

அடடா, இவன் இறங்க வேண்டிய இடம்
'பூக்கடை நிறுத்தம்' அல்லவோ?
ஆனால், பூக்கடையைப் பார்த்தும் இறங்கி விட்டான்.

ஆக, 'மனைவியின் இன்றைய ஆராதனை ஆரம்பம் நிச்சயம்' என்று முடிவு செய்து கொண்டவன்,
அடுத்த மூன்று நிறுத்தம் தாண்டியுள்ள இடத்திற்குப் போவதற்கு பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்தான்.

அடுத்த பேருந்திலும்
காய்கறி மளிகைக் கடையிலும்
இதேபோல ஏதாவது ஒரு வம்பு வரும்
என்று பயந்து போய் நிற்கிறான்
மிஸ்டர் வம்பு,
இல்லை இல்லை
மிஸ்டர் தாம்பு
என்கிற மிஸ்டர் தாமோதரன்!

******


இந்த இதழில் வெளியான எனது விமர்சனக் கடிதம்!



'தேன்சிட்டு' மின்னிதழ் ஆசிரியர் அவர்களுக்கு,

ஆகஸ்ட் 2020 மாதத்தின் இதழ் படித்தேன்!
'நகைச்சுவை சிறப்பிதழ்' என்பது பக்கத்துக்குப் பக்கம் நிரூபித்துக் கொண்டிருந்தது. தனி ஒருவனாய் தங்கள் உழைப்பில் மலர்ந்து சிரிப்பு பரப்பிய சிறப்பான மலர்!

'மாபெரும் நகைச்சுவை சிறுகதைப் போட்டி'யின் பரிசுக் கதைகளும் சிரி(ற)ப்பாய இருந்தன.

ஒருவரே அனைத்தும் தயாரிப்பு என்பதால் நிறைய பிழைகள் காண முடிந்தன.

காசிநாதன் சார் எழுதிய கட்டுரையில் பாடலாசிரியர் தஞ்சை ராமைய்யா தாஸ் பெயரையே காணவில்லை.

மலர்மதி சாரின் கதையின் இடையிடையே,
1, 2, 3 என எண்கள் வருகின்றன.
அத்தியாய எண்களா என பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. வேர்ட் ஃபைலாக அனுப்பும்போது குறிக்கப்பட்ட பக்க எண்களும்  கதையில் இடையிடையே வந்துவிட்டன.

கிரேசி மோகன் பற்றிய கட்டுரையில் வார்த்தைகள் பல இடம் மாறி, வாக்கிய அமைப்பை படிக்க சிரமம் தந்தன.

ஹரிகோபி சார் பற்றிய அறிமுகத்தில் கடைசி வரியில் வார்த்தை குழப்பம்.

படித்து சிரிக்க, இரசிக்க நல்லதொரு மலர்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
பேங்காக்.


எனது சிறுகதையையும் குறைகளைச் சுட்டிக்
காட்டியபோதிலும் பரந்த மனதுடன் விமர்சனக் கடிதத்தையும் வெளியிட்ட தேன்சிட்டு ஆசிரியர்
எஸ். சுரேஷ் பாபு அவர்களுக்கு நன்றிகள்!


தேன்சிட்டு இணையதள முகவரி:

https//:thenchittu.com


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Monday, August 3, 2020

தர்மமும் தியாகமும் (சிறுகதை) #148

தர்மமும் தியாகமும் (சிறுகதை) -அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


இன்று வெளியான சென்னைப் பதிப்பு 'மக்கள் குரல்' நாளிதழில் (வெளியூர்களில் இன்ஷா அல்லாஹ் நாளை காலை வெளியாகும்) பிரசுரமாகியுள்ள எனது சிறுகதை!
**-**-**-**-**     **-**-**-**-**

'தர்மமும் தியாகமும்' -சிறுகதை

- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

-------------------------
பக்ரீத் பண்டிகை சிறப்பாக முடிந்தது. பெருநாள் சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு, குர்பானி ஆடு அறுத்து, அதில் மூன்றில் ஒரு பங்கு சொந்த உபயோகத்திற்கு வைத்துக்கொண்டு, ஒரு பங்கை உறவினர்களுக்கும் மற்றொரு பங்கை எளியவர்களுக்கும் பகிர்ந்தளித்தோம்.

சுவையான உணவு உண்டுவிட்டு மாலை நேரமானதும் நானும் என் மனைவியும் தஞ்சாவூர் நகருக்கு புறப்பட்டுச் சென்றோம்.

எஸ். ட்டீ. ஹாஸ்ப்பிடல்  (ப்பீ) லிமிடெட்,  தஞ்சாவூரின் தரமான மருத்துவமனைகளில் ஒன்று. நான்கு தளங்களுடன், தனது பெயரை நியான் விளக்குகள் மூலமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது.

மாலை 6 மணி.

நான் எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு என் மனைவியுடன் மருத்துவமனை நோக்கி சென்றேன்.

கேண்ட்டீன் காரர் என்னைப் பார்த்து, "சார், ட்டீ குடிக்கிறீங்களா?" எனக் கேட்டார்.

என் மனைவியிடம் கேட்டுவிட்டு, "திரும்ப வரும்போது குடிக்கிறோம் சார், இன்ஷா அல்லாஹ்!" என அவருக்கு பதில் கூறிவிட்டு  படிகள் ஏறி
இருவரும் மருத்துவமனையின் உள் சென்றோம்.

மருத்துவமனை பெண் ஊழியர் எங்களைப் பார்த்து, "எந்த டாக்டர் பார்க்கணும்? எஸ்.ட்டீ. சாரா? ட்டீ.சி. சாரா?" எனக் கேட்டாள்.

மருத்துவரைப் பார்த்து ஆலோசனை கேட்க கூடியிருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டே, "டாக்டர் யாரையும் பார்க்க வேண்டாம்; அன்புக்குடிலுக்கு நன்கொடை கொடுக்கணும்! கேஷ் கவுண்ட்டர்ல கட்டி இரசீது வாங்கிக்கலாமா?" என நான் கேட்டேன்.

"கேஷ் கவுண்ட்டர்ல கட்ட வேண்டாம்; டாக்டர்ட்டையே கட்டி இரசீது வாங்கிக்கலாம் நீங்க!" என்றாள் அந்தப் பெண்.

"டாக்டரைப் பார்க்க கூட்டம் நிறைய இருக்கு! எனக்கும் அதுவரை காத்திருக்க முடியாது! வேற இடத்துக்கும் போகணும்! கேஷ் கவுண்ட்டர்லயே கட்டிட்டுப் போய் விடுறேன்" என்று நான் சொன்னேன்.

"இல்லை சார்! நீங்க அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க; டாக்டரைப் பார்த்திடலாம்!" என்று கூறி அமரவைத்தாள்.

டாக்டரின் அறையிலிருந்து நோயாளி வெளியேறி, அடுத்த நபர் உள்ளே செல்லும்போது அந்த உதவியாளரும் உள்ளே சென்று விட்டு வந்தாள்.
டாக்டரிடம் தகவல் சொல்லியிருப்பாள் போலிருக்கிறது.

அடுத்து, உள்ளிருந்த நபர் வெளியானதும்
டாக்டரின் அறைக்கு எங்களை அனுப்பி வைத்தாள்.

நாங்கள் உள்சென்றதும் டாக்டர் எழுந்து, கை நீட்டி என் கையைப் பிடித்து குலுக்கி, "சார் நீங்களா!!! வாங்க, வாங்க! உட்காருங்க!" என்றார்.

"பரவாயில்லை சார்! நம்ம அன்புக்குடிலுக்கு கொஞ்சம் நன்கொடை தரலாம்னு வந்தோம்!" என்றவாறு பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

"சார், வெளியே கூட்டம் நிறைய இருக்கு! ரசீது கொடுத்தால் புறப்பட்டுருவோம்" என்றேன்.

"முதலில் உட்காருங்க!" என்றதும் உட்கார்ந்தோம்.

"சார், நாங்க உங்ககிட்ட நேரடியா, அன்புக்குடிலுக்கு நன்கொடை குடுங்கன்னு கேட்டோமா?" என்று கேட்டார்.

"இல்ல சார்!
சென்ற முறை வந்தபோது வெளியே விளம்பர போஸ்டர் பார்த்தோம்! அதனால
இன்றைக்கு பணம் கொண்டுவந்தோம்!" என்றேன்.

"அதான் சார்! நீங்களாகவே, ஓர் ஆர்வத்துல உதவணும்னு வறீங்க! அப்ப நாங்க உங்களுக்கு தகுந்த மரியாதை செய்யணும்ல? அதனாலதான், முன்னுரிமை அடிப்படையில உங்கள உள்ளே வரச் சொன்னது!"
சொல்லிக் கொண்டே இரசீது எழுதினார்!

"சார்... அன்புக்குடில்ங்கறது கறந்தையில, ஒரு பெரிய வீடு, தோட்டத்தோட அமைஞ்சிருக்கற ஓர் அமைதியான இடம்.

"அங்கே, புற்றுநோயால கஷ்டப்படுறவங்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் சேவை அடிப்படையில உதவிகள் செஞ்சிட்டிருக்கோம். சுமார் 50 நபர்கள் உள் நோயாளியாக அங்கே இருக்காங்க! மேலாளர், உதவியாளர், தோட்டக்காரர், சமையல்காரர், உதவியாளர்னு இன்னும் ஏழு பேர்கள் அங்கே பணியில இருக்காங்க!

"வீட்டோடவே சொந்த காய்கறி தோட்டம் இருக்கு!

"நாங்க 3 டாக்டர்கள் சேர்ந்து நடத்துறோம்! தினமும் போய் கவனிச்சிக்கிறோம். சிறப்பு மருத்துவர்களும் வாரத்தில இரு நாட்கள் வற்ராங்க!

"இன்னும்,
மூணு வேளையும் சத்தான சாப்பாடு, ஆரோக்கியமான பழங்கள், காஃபி, ட்டீ, உள்ளேயே ட்டீவி, நடைபயிற்சிக்கு இடம், வழிபாடு, தியானம் இதுக்கெல்லாம் தனி இடம், பொழுதுபோக்கு, பத்திரிகைகள்னு குறையென்று  எதுவுமில்லைனு சொல்லும்படியா சிறப்பா சேவையாக இதை செய்திட்டிருக்கோம்!

"உங்களப்போல நல்ல உள்ளம் படைத்த அன்பர்கள் தரும் உதவிகள்தான் இந்த இல்லம் இயங்குறதுக்கான உயிர் நாடியா விளங்குது.
இந்த சேவை தொடரணும்னு பிரியப்படுறேன்!

" 'மனிதன் சேமித்த செல்வத்தில்,
உண்டு கழித்தது,
உடுத்தி கிழித்தது,
தர்மம் செய்தது
இந்த மூன்று மட்டுமே அவனுக்கு சொந்தமானது'-னு நபிகள் நாயகம் சொன்னதை நான் படித்திருக்கிறேன்!

"நீங்களும் இன்றைக்கு பக்ரீத் குர்பானி முடிச்சிட்டு, எங்ககிட்டே உங்களோட தர்மம் செய்ற தொகையை, கணவன் மனைவி இணைந்து வந்து கொடுத்திருக்கீங்க!

"அந்த வகையில
குர்பானி கொடுத்ததற்கும் தர்மம் செய்ததற்குமான கூலி, இறைவனிடமிருந்து நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.

"நீங்களும் உங்களுக்கு வசதிப்படுற நேரத்தில அங்கே வந்து பார்வையிடணும்னு கேட்டுக்கறேன்!" என்று கருணையான குரலில் கேட்டுக் கொண்டார்.

"இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) விரைவில் அவசியம் வற்ரோம் சார்!" என்று கூறி அவரிடமிருந்து இரசீதைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.

அதையடுத்து, சிற்றுண்டி விடுதிக்குச் சென்று, அங்கு வந்த வயதான எளியவருக்கு வடை, ட்டீ வாங்கிக் கொடுத்துவிட்டு நாங்களும் சாப்பிட்டு பார்சலும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு வயிறு நிறைய சிற்றுண்டியுடனும் மனம் நிறைய மகிழ்ச்சியுடனும்
உதவிட நல்வாய்ப்பு தந்த இறைவனுக்கு நன்றி கூறி,
மகிழ்ச்சியில் திளைத்தவண்ணம் இரு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்து புறப்பட்டோம்.
+++++++++++++++++++++++++++




. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, December 1, 2019

தொல்லைப்பேசி -சிறுகதை #139


'தமிழக எழுத்தாளர் குழுமம்' நடத்திய 'படத்திற்கேற்ற கதை போட்டி'-க்காக எழுதப்பட்ட கதை இது!

தொல்லைபேசி!
- ஒரு பக்கக் கதை!
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

  பவானி கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தாள்.

  "அந்தக் காலத்தில வெளியூரில் இருப்பவர்களுக்கு செய்தியை சொல்ல, தபால்தான் இருந்தது. அதற்குப் பின்னால, மொபைல் ஃபோன் அந்த இடத்தை பிடித்தது. இப்ப அந்த ஃபோன், நம்ம வாழ்க்கையிலே, நம்மளுடைய அதிகபட்ச நேரத்தையே
பிடிச்சிக்கிட்டது துரதிர்ஷ்டவசமானது.
 
  "நீண்ட நேரம் ஃபோனிலேயே நாம இருக்கிறதாலே நம்முடைய உழைக்கும் திறன் குறைஞ்சிட்டே வருது. இரவு நேரத்திலும் ஃபோன் பயன்பாட்டினால், தூக்கத்தை தூண்டுற சுரப்பிகள் உற்பத்தி குறையுது.

   "அதனால, பல உடல் நலக் கேடுகள், ஃபோனுக்கு அடிமையாகிற பரிதாபம்லாம் ஏற்படுது.

   "உங்க வீடுகள்ல, சிறு குழந்தைகளுக்கு அழுதால், ஃபோன் கொடுக்காமல், கிளுகிளுப்பை கொடுத்து பழக்கப்படுத்துங்க! ஃபோனை, தூரமா வச்சிட்டு, அவங்களோட தாயம், பல்லாங்கழி, ஆடுபுலி ஆட்டம், பரமபதம்னு நீங்களும் சேர்ந்து விளையாடுங்க! சிறுவர்களுக்கு, கபடி, கிட்டிப் புல், கிரிக்கெட், ஆபியம், கோலி குண்டு, கேரம், சதுரங்கம்னு விளையாட ஊக்கப்படுத்துங்க! ஃபோனில் விளையாடாதீங்க! அரட்டை அடிக்காதீங்க! தேவையானதை பேசுங்க!

   "வாட்ஸ்ஆப்ல இருந்தா, அதையே திரும்ப திரும்ப பார்க்காம, 1 மணி நேரத்துக்கு இல்லனா அரை மணி நேரத்துக்கு ஒரு முறை போய் பார்த்தீங்கனா, எல்லா மெசேஜ்-ஐயும் படிச்சிடலாம்; உடனே அழிச்சிடலாம்!
டேட்டா இலவசமா கிடைக்குதுனு, அதுக்கு பதிலா நம்ம நேரத்தை அதுல செலவழிச்சிடாமல், உபயோகமா பயன்படுத்திக்குங்க! நன்றி!!" என்று பேச்சை முடித்தாள் பவானி.

   மறுநாள், சனிக்கிழமை பவானி அவளுடைய சிறிய பெட்டிக் கடையைத் திறந்து வியாபாரம் செய்யும்போது வந்தான் சிறுவன் தாமரைச்செல்வன்.

   "அக்கா, எங்க அம்மா சென்னாங்க, ஃபோனில் விளையாடாமல், தெருவில விளையாட சொன்னீங்களாம்! அதனால, இந்த நம்பருக்கு நெட் பேக் போட வேண்னாம்; டாக் டைம் மட்டும் டாப்-அப் பண்ணிவிடுங்க!"
என்றான் அவன்.

   அதைக் கேட்ட பவானிக்கு, 'வருமானம்' குறைந்தது; அவளின் 'பெருமனம்' நிறைந்தது!
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, November 23, 2019

'அம்மா சொன்ன கதை', தேன்சிட்டு இதழில்! #138

இம்மாத (நவம்பர் 2019) தீபாவளி சிறப்பிதழ், 'தேன்சிட்டு' இதழில் நான் எழுதிய, "அம்மா சொன்ன கதை" பிரசுரம் ஆகியுள்ளது!

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Friday, March 15, 2019

கணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133






கணேஷுக்கு கால்கட்டு!
சிறுகதை(?) மாதிரி.
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

நண்பர் பாலகணேஷ் ஓர் ஓவியத்தைக் கொடுத்து அதற்கு சிறுகதை கேட்டார். (பாவம் அவர்!)
(நன்றி: ஓவியர் தமிழ்.)

கணேஷ் கத்தினான்: "தப்பு உங்கமேலேதான்!"

பாலா கத்தினாள்: "தப்பு உங்கமேலேதான்!"

"ஏங்க, நான் பாட்டுக்கு நேரா போய்க்கிட்டிருக்கேன்!
நீங்க சாமான்கள எடுத்திட்டு வந்து என்மேல இடிச்சிட்டு இப்படி கத்துறீங்களே?" என்றான் கணேஷ்.

"நான்தான் சாமான்லாம் வச்சிருந்தேன். நீங்க பார்த்து வரமாட்டீங்களா?" திருப்பிக் கேட்டாள் பாலா.

"நான் நேரா வந்தேன். நீங்கதான் குறுக்கே வந்திட்டீங்க! சரி, நகருங்க நான் ஆஃபிஸ் போகணும்" அவசரப்பட்டான் கணேஷ்.

"அதெல்லாம் முடியாது. நீங்க தட்டிவிட்டுட்டீங்க;
நீங்கதான் என் கார்ல எடுத்துவைக்கணும்"
தடுத்தாள் பாலா.

"ஐய்யய்யே! நான் கம்பெனில அசிஸ்டன்ட் மேனேஜர். ரெண்டு தெரு தள்ளி ஒரு கஸ்டமரப் பார்க்க, நடந்துபோய்ட்டு வறேன். எங்க எம்.டி.வேற திடீர்னு ஆஃபிஸ்-க்கு வந்துட்டதா மேனேஜர் ஃபோன் பண்றாரு.
நீ வேற இப்படி படுத்தறியேமா!!!?" கடுப்படித்தான் கணேஷ்.

ஆனால் பாலா விடவில்லை. சாமான்கள் அனைத்தையும் காரில் வைத்தபின்புதான் அவனை விட்டாள்.

கணேஷ் பதட்டப்பட்டான்.
"லேட் ஆயிடுச்சி; நடந்து போனால் இன்னும் லேட் ஆகிடும்.  கார்லயே என்னை ட்ராப் பண்ணிட்டுப் போ!" என்று அவளை மடக்கினான் கணேஷ்.

"சார், கார் உள்ளே இடமில்லை. கேரியர்ல உட்கார்ந்துக்கிறீங்களா?" ஏளனமாகக் கேட்டாள் பாலா.

"ஓகே" என்றான் கணேஷ்.

அவன் கார் மேலே ஏறியதும் விழுந்துவிடாமல் இருப்பதற்காக அவனை கேரியருடன் சேர்த்து கட்டிவிட்டாள் பாலா.

அப்படி இருவரும் ஹாயாக காரில் போகும்போதுதான் பாலாவின் தோழி கலா, அதை தனது ஃபோனில் படம் எடுத்து, பாலாவிடம் கேட்காமலே ஃபேஸ்புக்கில் பதிவிட்டுவிட்டாள்.

அதைப்பார்த்த கலாவின் நண்பன் கண்ணன் அதில் தனது நண்பன் கணேஷை டேக் பண்ணிவிட்டான்.

உடனே இந்த செய்தி இணையம் முழுவதும் வைரல் ஆகிவிட்டது.
ட்டீ.வி. மற்ற மீடியாக்களும் கதை, கதையாய் இதை தமிழகம் எங்கும் கொண்டு சேர்த்தன.

பாலாவின் பெற்றோர் அவளிடம், "யாருடி அவன்? அவனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு?" என்று குறுக்கு விசாரணை ஆரம்பித்துவிட்டார்கள்.

கணேஷின் பெற்றோரும் கணேஷிடம் கேள்விமேல் கேள்வி கேட்டு திணறடித்தார்கள்.

இதைத் தொடர்த்து கணேஷின் நண்பர்களும் பாலாவின் தோழிகளும் இரு வீட்டாரிடமும் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.
திருமணமும் சு(ல)பமாய் முடிந்தது.

கணேஷின் நண்பர்களும் பாலாவின் தோழிகளும் 'இதுபோல நமக்கு ஒரு துணை கிடைக்குமா!?' என்று தேட ஆரம்பித்து விட்டார்கள்.

(முற்றியது.)

.

படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Thursday, January 10, 2013

இருவர் ! #109

இருவர் !



உக்காஸ் -  அஃப்ராஜ் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். பெரியவர்களாகிய பின்னும் அவர்களின் நட்பு தொடர்ந்தது. இருவரும் நல்ல வசதிகளோடு வாழ்ந்து வந்தார்கள்.

இப்படி இருக்கும்போது ஒரு தடவை, உக்காஸ் அவரது  ஒரு நிலத்தை விற்கும்போது, அஃப்ராஜ் அதை நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டார்.

சில மாதங்கள் சென்ற பின், அந்த நிலத்தில் பயிரிடுவதற்காக நிலத்தை உழுதார், அஃப்ராஜ். அப்போது, ஏர் கலப்பையின் கீழே "டங்" என்றொரு சப்தம் கேட்டது. அஃப்ராஜ் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது, நிலத்தின் சில அடிகள் கீழே ஒரு வெங்கலப் பானை இருக்கக் கண்டார்.

ஆச்சரியத்தோடு பானையை எடுத்துப் பார்த்தார். கனமாக இருந்தது. 'உள்ளே என்ன இருக்கிறது' என்கிற ஆவல் கொண்டு திறந்து பார்த்தார். பானை  முழுவதும் தங்க நகைகள் இருந்தன.


 'ஆஹா இது நண்பர்  உக்காஸ் இடமிருந்து வாங்கிய நிலத்தில் இருந்து கிடைத்திருப்பதால் இந்தப் புதையல் உக்காஸுக்குரியதே; அதனால் இதை அவரிடமே ஒப்படைத்து விடுவோம்' என்று எண்ணி, அந்தப் பானையுடன் உக்காஸ் வீட்டிற்குச் சென்றார் அஃப்ராஜ்.

நம்  நாட்டில்  உள்ளதுபோல் நிலத்தில் கிடைக்கும் பு  தையல்    அரசாங்கத்திற்கு    சொந்தம் என்கிற சட்டம் எதுவும்   அவர்கள் வசித்த நாட்டில் கிடையாது.

உக்காஸை சந்தித்து விவரம் சொன்னார் அஃப்ராஜ். ஆனால் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார் உக்காஸ். "நான் நிலத்தை  விற்று விட்டேன். அதனால் அதிலிருந்து கிடைக்கும் அனைத்துமே உனக்கே சொந்தம். நான் பெற்றுக் கொள்ள மாட்டேன்" என்று, பிடிவாதமாக கூறி விட்டார். 


என்ன செய்வது என்று யோசித்த அஃப்ராஜ், உடனடியாக அந்த நாட்டின் நீதிபதியிடம் சென்று, விபரம் கூறி, இதை உக்காஸ் இடம் ஒப்படைத்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.

உக்காஸை அழைத்துவரச் சொல்லி ஊழியரை அனுப்பினார் நீதிபதி. 

"நிலம் மட்டும்தான் நான் வாங்கினேன். அதனுள்ளே இருந்த புதையலை உக்காஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்கிறார் அஃப்ராஜ்.

"நிலத்தை நான் அஃப்ராஜ் இடம் விற்று விட்டதால், அதில் இருக்கும் புதையலும் அவருக்கே சொந்தம்" என்கிறார் உக்காஸ்.


யோசனை செய்த நீதிபதி உக்காஸைப் பார்த்து கேட்டார்: "உங்களுக்கு பிள்ளைகள் யாரும் இருக்கிறார்களா?"

உக்காஸ் சொன்னார்: "எனக்கு திருமண வயதில் ஓர்  ஆண்மகன் இருக்கிறான்"

நீதிபதி அஃப்ராஜைப் பார்த்துக் கேட்டார்: "உங்களுக்குப் பிள்ளகள் உண்டா?"

அஃப்ராஜ் சொன்னார்: "எனக்கு திருமண வயதில் ஒரு பெண்மகள் இருக்கிறாள்"


நீதிபதி முடிவாய் அவர்களிடம் சொன்னார்: "அந்த ஆண்மகனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் செய்வித்து, அவர்களின் மணவாழ்விற்கு இந்தப் புதையலை மணக்கொடையாக கொடுத்து விடுங்கள். இதில் உங்கள் இருவருக்கும் நல்ல தீர்வு இருக்கிறது. சரியென்றால் மணமக்களாகப் போகும் இருவரின் சம்மதத்தையும் கேட்டு திருமணம் செய்துவிடுங்கள்"

இந்த யோசனை இருவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அண்மகனுக்கும் பெண்ணுக்கும் திருமணம் பெரியோர்களின்  வாழ்த்துக்களோடு நடந்தேறியது. மணமக்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்தார்கள்.  

நாமும் வாழ்த்துவோமே! 

குறிப்பு: ஒரு சொற்பொழிவில் நான் கேட்டது இந்தக் கதை. பிடித்ததால் பகிர்ந்தேன்.
. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...