...பல்சுவை பக்கம்!

.

Thursday, January 20, 2011

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்...சென்ற ஆண்டில்  எனக்கு மிகவும் பழக்கமுடைய 
இருவருக்கு நடந்த இரு சம்பவங்களை அறிய 
நேர்ந்தபோது,  எனக்கு சில எண்ண ஓட்டங்கள் தோன்றின.
அவற்றை உங்களோடு பகிர்ந்துகொண்டால்
மற்றவர்களும் எச்சரிக்கையாய் செயல்பட
உதவும் என்று நம்புகிறேன்.


சம்பவம் 1:
அந்த நகரத்தில் அந்த நபருக்கு பெரிய வணிக நிறுவனம்
உண்டு. ஒரு தொழிற்சாலை நடத்தி அதில் சில 
தயாரிப்புக்களும் செய்து வினியோகமும் செய்கின்றார்.
அவரது அண்ணன், அப்பா நிறுவனத்தை கவனித்துக்
கொள்ள அவர் தொழிற்சாலையை நிர்வகித்து வருகின்றார்.
ஒரு நாள் அவரது வீட்டில் தொழிலதிபரது மனைவி மட்டும்
இருக்கும்போது, இரு பெண்கள்  ஒரு சிறு குழந்தையுடன்
வந்து, ஒருவரின் பெயரைச் சொல்லி அவரது
வீட்டுக்குப் போவதாகவும் சொல்லி, சில வார்த்தைகள்
பேசிவிட்டு, குடிக்க தண்ணீர் கேட்டிருக்கிறார்கள்.
அந்தப் பெண்மணியும் தண்ணீர் எடுத்துவந்து 
கொடுத்துள்ளார்.   


தண்ணீர் குடித்தவர்கள் போய் விட்டார்கள். தொழிலதிபரின்
மனைவி வீட்டினுள்ளே போனவர் பார்க்கிறார். 
முதலில் உள்ள அறையில் திறந்திருக்கும் கதவையும்தாண்டி
அமைந்திருக்கும் அலமாரியின் கதவு திறந்து கிடக்கின்றது.
80 பவுன் அளவிற்கு நகையும் சிறிதளவு ரொக்கமும் 
திரு(ட்)டு போய்விட்டது.


அதன்பின், டீ.வி. சேனலிடம் பேட்டி கொடுக்கும்போது,
"நல்லவங்கன்னு நம்பித்தான் வந்தவங்களுக்கு 
தாகத்திற்கு தண்ணீர் கொடுத்து உதவலாம்னு நெனச்சோம்;
இப்ப நஷ்ட்டப்பட்டு நிக்கிறோம். இனிமேல் யாருக்காவது
எப்படி உதவ மனம் வரும்?" என்று ஆதங்கத்தோடும்  
வெறுப்போடும் சொன்னார் அந்த தொழிலதிபர்.


சம்பவம் 2: 
இந்த இளைஞர் சிறு வயதிலேயே திறமையுடன் 
முன்னேறி சுயதொழில் ஆரம்பித்து, சிறப்பாய்
இருந்தார். சில காலங்களுக்குப்பின் வேறு தொழிலில்
ஈடுபட்டார்.  அதாவது ரியல் எஸ்டேட் பிசினஸ்.
சில மாதங்களுக்குமுன் வீட்டின்பேரில் அவர்
அடமானம் வைத்து பெற்றிருந்த தொகையை
வட்டியுடன் சேர்த்து திருப்பிக் கட்டுமாறு
வங்கியிலிருந்து அறிவிப்பு வந்தது அவருக்கு.
அசல் மற்றும் வட்டி சேர்த்து கட்டவேண்டிய
தொகை ரூபாய் நான்கு இலட்சம். அந்த இளைஞரும் 
அவருக்கு தெரிந்தவரிடம் அந்த வீட்டை ரூபாய் பத்து
இலட்சத்துக்கு விலை பேசி, முன் பணமாக 
ரூபாய் நான்கு இலட்சத்தை வாங்கி, அதை 
வங்கியில் கட்டி, வீட்டு பத்திரங்களை வங்கியிலிருந்து
மீட்டார்.  


அடுத்து, பத்திரப் பதிவு அலுவலகம் சென்று முறைப்படி
அந்த வீட்டை வாங்கியவருக்கு பெயர் மாற்றம் செய்து,
மீதம் தொகையான ரூபாய் ஆறு இலட்சத்தையும்
பெற்றுக் கொண்டார்.


அதன்பின், அவரது தொழிலுக்குத் தேவையான, 
பைக் ஒன்றை வாங்கும்பொருட்டு, அவரிடமிருந்த 
பழைய பைக்கை விற்றார். புதிய பைக்கும் வாங்கினார்.
அத்தியாவசியக் குடும்ப செலவுகள் மற்றும் குடியிருக்கும்
வீட்டை சற்று பராமரிப்பு செய்தல் ஆகியனவற்றிற்காக
ரூபாய் இரண்டு இலட்சம் செலவு செய்ததுபோக, கையில்
மீதமிருப்பது ரூபாய் நான்கு இலட்சம். அந்தப் பணத்தை
என்ன செய்யலாம்? நண்பர்களிடத்தில் ஆலோசனை 
கேட்டார்.


பலரும் பல யோசனைகளை சொன்னார்கள். 'நிதி 
நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள்' என்று சொன்னார்
ஒரு நண்பர். ''நான் ஐம்பதினாயிரம் ரூபாய் முதலீடு 
செய்திருக்கிறேன். எனக்கு கடந்த மூன்று மாத
காலமாக, ஒவ்வொரு மாதமும் ரூபாய் 7,500 
வருமானம் வந்து கொண்டிருக்கிறது. ஓராண்டு
முடிந்ததும் நான் முதலீடு செய்த தொகை ரூபாய்
75,000-ஆக திரும்பி வந்துவிடும். இதுபோல் நீயும் 
செய்'' என்று ஐடியா(?) கொடுத்தார் அவர்.


மாதா மாதம் ஒரு இலட்ச ரூபாய்க்கு ரூ.15,000
பணம் வட்டியாக வரும். அப்படியானால், ரூ.4,00,000
தொகைக்கும் மாதம் ரூ.60,000 வீதம் கிடைக்கும். 
ஓராண்டு முடிந்ததும் நாம் முதலீடு செய்த தொகை
ரூ.6,00,000-ஆக திரும்பக் கிடைக்கும் என்று முடிவு
செய்த அவர் அவ்விதமே நிதி நிறுவனத்தில் முதலீடு
செய்தார் அந்த ரூ.4,00,000 தொகையை. (இது என்ன 
வகை கணக்கீடு என்று எனக்கு புரியவேயில்லை.)


ஒவ்வொரு மாத குறிப்பிட்ட தேதியிலும் ரூ.60,000-க்கு
பின்  தேதியிட்டு 12 செக்குகள் பெற்றுக் கொண்டார் அவர்.
முதலாவது செக்கை அவரது வங்கிக் கணக்கில் டெபாசிட்
செய்யும் முதல் நாளன்று, அந்த நிதி நிறுவன அதிபர்
இறந்துவிட்டார். அட, தற்கொலைங்க...!


கிளியரிங் அனுப்பிய செக் பெளன்ஸ் ஆகிவிட்டது.
(எனக்கே ஷாக்!)


பிறகு விசாரித்தால், நிதி நிறுவன அதிபர் மனைவியும் 
மகனும், அந்த நிறுவனத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தம்
எதுவுமில்லை என்று கூறிவிட்டனர். அந்த நிறுவனத்தில்
தான் சம்பளத்திற்குத்தான் வேலை பார்த்ததாக மகன்
சொன்னான். தாங்கள் நிறுவனத்தில் பார்ட்னர் கிடையாது;
அதிபர் மட்டுமே எம்.டி. என்றும் தாங்கள் இருப்பதும் 
வாடகை வீடுதான் என்றும் கூறிவிட்டனர். ஆக,
நிதி நிறுவனம் திரட்டிய முதலீடு தொகை எங்கே போனது,
என்ன ஆனது என்பது யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.


இந்த இரு சம்பவங்களும் நான் கேள்விப்பட்டபோது,
'திட்டம்போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டேஇருக்குது;
அதை சட்டம்போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொன்டிருக்குது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது'
என்ற பாடல் நினைவுக்கு வந்தது.


ஆனால், திருட-ன்-கள் திருந்துவான்கள் என்பது நடவாத
காரியம்.  நாம்தான் முன்னெச்சரிக்கையாயிருக்கவேண்டும்.


1. புதியவர்கள் வந்தால், நம்மோடு பேச்சு கொடுத்தால், 
     பேசிவிட்டு இதுபோல தண்ணீர் கேட்டால், அவசியம்
     தெருக்கதவினை தாழ்போட்டுவிட்டு உள்ளே செல்ல
     வேண்டும். 
2. தனிமையில் இருக்கும்போது அனைத்து அறைகளையும் 
     திறந்து வைத்திருக்கக்கூடாது.
3. பணம், நகை, மற்ற சாவிக்கொத்து, முக்கிய பத்திரங்கள்
     மற்றும் ஆவணங்கள் தெருக்கதவிற்கு அருகிலிருக்கும்
     அறையின் அலமாரியில் வைக்கவேண்டாம்.
4. அலமாரி சாவியினை அலமாரியிலேயே வைக்கவேண்டாம்.
5. அதிகமான நகைகளை, தேவையில்லாத காலங்களில்
     வங்கிப் பெட்டகத்தில் வைக்கவும்.
6.அதிக ரொக்கப் பணம் வீட்டில் வைத்திருக்க வேண்டாம்.
7. அதிக பணத்திற்கு (அதாவது வட்டிக்கு) ஆசைப்பட்டு,
     தொகைகளை (அ)நீதி நிறுவனங்களில் முதலீடு
     செய்ய வேண்டாம். அஞ்சல் சேமிப்பிலோ வங்கியிலோ
     முதலீடு செய்யவும்.
8.வீட்டில் வேலையாட்கள் வைத்திருப்பவர்கள் விலையுயர்ந்த
     தங்கள் பொருட்களை, தாங்களே பாதுகாப்பான இடத்தில்
     வைத்துக்கொள்ளவும். காணாமல் போனபின் வேலையாட்களிடம்
     குறை காண்பதைவிட நாமே கருத்துடன் செயல்பட்டு வரும்முன்
     காத்துக்கொள்ளலாம்.


பணத்தை சம்பாதிப்பது திறமையாகாது. அதனை தக்க வழியில்
பாதுகாப்பது, சேமிப்பது அறிவான செயல் ஆகும். 
நமது வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை, எளியோருக்கும்
அனாதைகளுக்கும் படிக்கவிரும்பும் வறியவர்களுக்கும் 
நாம் உதவிகள் செய்து, நாமும் மகிழ்ந்திருந்து, நம்மை 
சுற்றியுள்ளவர்களையும் மகிழ்வித்து, இறைவனை
மகிழ்வித்திடுவோம். 


-அ.முஹம்மது நிஜாமுத்தீன். 
  
படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...