...பல்சுவை பக்கம்!

.

Sunday, April 11, 2021

அன்புள்ள ரஜினிகாந்த் #157


அன்புள்ள ரஜினிகாந்த்!

#அன்புள்ள_ரஜினிகாந்த்
(அட, நீங்க நடிச்ச படத்துப் பெயர்.!)

உங்களுக்கு ஒரு மடல்.
"ரஜினி வந்தார்;  நடித்தார்; போனார்னு இருக்கக்கூடாது. என்ன (என்னை) வாழ வச்ச தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாச்சும் (நல்லவை) செய்யணும்" அப்டினு அடிக்கடி சொல்லிட்டிருக்கீங்க!

நீங்க நூறாண்டு வாழணும்னு வாழ்த்தறேன்! (இப்ப எதுக்கு வாழ்த்து?) 

இப்ப உங்க வயசு எத்தனை ஆண்டுகள்? 70-ஆ? 
மக்களுக்கு என்ன செய்யப்போறீங்க? எப்ப(டி) செய்யப்போறீங்க?

'கட்சி ஆரம்பிக்கறதை மனசால நினைக்கறதையே விட்றுங்க'-னு டாக்டர் சொன்னபடி கட்சி ஆரம்பிக்காம விட்டீங்களே, அதுவா? ம்... அதுவும் நல்லதுதான்!
#கட்சியெல்லாம்_இப்ப_நமக்கெதுக்கு?

வேற, வேற, வேற என்ன செய்யப்போறீங்க?

உங்க உலக நாயகன்கூட, 'சக்கர நாற்காலியில் அமர்ந்து அரசியல் செய்து மக்களை சோதிக்க மாட்டேன்'னுருக்கார். மய்யத் தலைவருக்கு பிடிக்காத அச்செயலை நீங்களும் செய்யப்போவதில்லை. #காலத்தின்_கையில்_அது இருக்கு!

அகரம் பவுண்டேசன்?
வேணாம், அது சூர்யா ஆரம்பிச்சுட்டாரு! 'தகரம் பவுண்டேசன்'? பேரு நல்லால்ல!!! 'சிகரம் பவுண்டேசன்' அப்டினு ஆரம்பிச்சு வசதியற்ற மாணவர்களுக்கு கட்டணமில்லாக் கல்வி தரப்போறீங்களா?

'ஆஸ்ரம் பள்ளி'னு உங்க( மனைவி)கிட்டே இருக்கு! நீங்க 'தர்ம ஆஸ்ரம் பள்ளி'னு ஆரம்பிக்கலாம்!
 விவசாயிகளுக்கு நல் உதவிகள் செய்யலாம். ஏற்கெனவே கார்த்தி செஞ்சிட்டிருக்கார். சீமானுக்கு சின்னம் விவசாயியாம். அதுக்காக நீங்க விவசாயிகளை கைவிட்றாதீங்க!

கிராமங்களில் புதிதாக
மருத்துவ வசதி செய்து தரலாம்.  ஜோதிகாவும் அப்படிதான் சொல்றாங்க!

அரசு உதவிகள் சென்று சேராத கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, குடியிருப்பு வசதிகள் செய்து தரலாம்.

நீட்டை தடைசெய்யும்வரை
நீட் இலவச பயிற்சி மையங்கள் நடத்தலாம்.

காவிரி நீர் கிடைக்க குரல் கொடுக்கலாம்; முயற்சிகள் எடுக்கலாம்.
(போராட்டம் செய்து சுடுகாடாக ஆக்கமாட்டீங்க, தெரியும்!)

நதிகள் இணைப்பிற்கான முயற்சிகள் ஆரம்பிக்கலாம்! ஏற்கெனவே 'மிஸ்ட் கால்' கேட்டு வாங்கி சில நதிகளை சில பேர் இணைச்சிட்டாங்க! நீங்க மீதியிருக்கிற நதிகளை பார்த்துக்குங்க!

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முன்பே ஒரு கோடி (-எவ்வளவுப்பு? ஒரு கோடிப்பு!-)
குடுத்திருக்கீங்க! அதை யார்ட்ட குடுத்தீங்க? பத்திரமா வச்சிக்கச் சொல்லுங்க!

புயல், வெள்ள நிவாரண நிதி என தனியாக நிதி ஆதாரத்துடன் அறக்கட்டளை துவங்கலாம்!

முக்கியமானது: நீங்க நடிச்ச படம் பார்க்க வருகிற ரசிகர்களுக்கு சலுகையாக டிக்கெட் கட்டணம் 50 ரூபாய் மட்டும்தான் அப்டினு
உரக்க ஒரு தடவை சொல்லுங்க!
நீங்க ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி!

எவ்வளவோ திட்டமிருக்கு!
#என்னவோ_திட்டமிருக்கு!

உங்க காலத்திற்குப் பின்னே மக்களுக்கு எதுவும் செய்வீங்க, அதெல்லாம் இருக்கட்டும்!
இருக்கும் காலத்தில் எதையாவது செய்ங்க!
என்ன செய்யப்போறீங்க, அதையாவது சொல்லுங்க!

தமிழக மக்களின் வேண்டுகோள்!

***

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, January 2, 2021

சைக்கிள் ஓட்டலாம், வாங்க! #156

சைக்கிள் ஓட்டலாம், வாங்க!எனக்கும் எங்கள் தெருவில் இன்னொரு பையனுக்கும் முதன்முதலாக எங்கள் அண்ணன்தான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தார்!

அரை சைக்கிள் என்பார்கள், சின்ன சைக்கிளை!
நமக்கு பெரிய சைக்கிள்தான்! குரங்குப் பெடலும் கிடையாது; பார் கம்பியில் உட்கார்ந்துதான் ஓட்டப் பழகினோம்!

இந்த பக்கத்தில் திண்ணை தாழ்வாரம் இருக்கும். பத்து வீடுகள் தள்ளி அங்கே எலக்ட்ரிக் போஸ்ட்டுக்கு அருகில் ஒரு கருங்கல் கிடக்கும். ஆக, இங்கே புறப்பட்டால் அந்த முனையில் கருங்கல்லில் போய் காலை வைத்துதான் நிறுத்துவோம்!  மற்றபடி தரையிலிருந்து ஏறவோ, தரையில் கால் வைத்து நிறுத்தவோ தெரியாது!

இரண்டாவது நாளின் பாதியிலேயே என்னுடன் பழகிய பையன், தரையில் இருந்து உந்தித் தள்ளி சைக்கிள் 'பார் கம்பி'யில் ஏறவும் தரையில் கால் வைத்து நிறுத்தவும் பழகிவிட்டான்!

எனக்கோ நாமும் அவ்வாறு கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற உத்வேகம் வந்துவிட்டது!

சரி ஏறிடலாம் என்று தரையில் கால் வைத்து உந்தி, உந்தி ஏறுவதற்கு முயற்சிக்கிறேன்; தூக்கி போட கால் எட்டவில்லை.

உந்தி, உந்தியே சென்றதில் மறுமுனையே வந்துவிட்டது! அடடா, இது என்ன வம்பு என்று மனதில் புலம்புகிறேன்!

அங்கிருந்து என் அண்ணனும் அந்த பையனும் உற்றுப் பார்க்கிறார்கள்!

சிறிது நேரம் அமைதியாக யோசித்தேன்!
அதன்படியே, பறப்பட்டேன்! நல்ல வேகமாக தரையில் உந்தி சைக்கிள் வெகு தூரம் செல்லும் வகையில் செய்துகொண்டு, அப்படியே காலை தூக்கி பின்பக்கமாக கொண்டு சென்று அடுத்த பக்கத்தில் போட்டேன்!  சீட்டிலும் அமர்ந்துவிட்டேன்! 

சைக்கிள் வேகம் குறைந்ததும் 'பாரி'ல் இறங்கி பெடல் செய்து வேகம் எடுத்து, இந்தப் பக்கம் வரும்போது, நிதானமாக பிரேக்கை அழுத்தி காலை ரிவர்ஸ் பாணியில் போட்டு இறங்கினேன்!

ஆக, சைக்கிள் ஓட்ட கற்றுத் தந்த எங்கள் அண்ணன் (பெரியம்மா மகன் ஃபாரூக் சார் M.Sc., M.Ed.) அவர்களுக்கு நன்றி!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Friday, January 1, 2021

குமுதம் இதழில் என் துணுக்கு #155

குமுதம் இதழில் எனது துணுக்கு!
.


எனது துணுக்கு 'குமுதம்' இதழில்!

'வாசகர் வாய்ஸ்' பகுதியில் நான் எழுதிய துணுக்கு ஒன்று,
25/11/2020 தேதியிட்ட 'குமுதம்' இதழில் பிரசும் ஆனது.
*
அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு (2021) வாழ்த்துகள்!


*
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Thursday, December 31, 2020

கிளிக்; களுக் - காமதேனு இதழில்! #154

காமதேனு இதழில் எனது படைப்பு!


கிளிக்... களுக்... காமதேனு இதழில்!

'காமதேனு' வார இதழின் 02/02/2020 தேதியிட்ட இதழில்,
'புகைப்படத்திற்கேற்ற நகைச்சுவை வாசகம்' எழுதுகின்ற,
'கிளிக்... களுக்...' பகுதியில் தேரவாகி வெளியான எனது படைப்பு!
 


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

விகடனில் எனது புகைப்படம் #153


விகடனில் எனது புகைப்படம்!
விகடனில் எனது புகைப்படம்! ஆனந்த விகடனில் ஓர் அறிவிப்பு!

'நீங்கள் விகடன் வாசகரா? உங்கள் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்புங்கள்; அட்டையில் வெளியிடுகிறோம்!' -இதுதான் அந்த அறிவிப்பு. 

நானும் எனது புகைப்படத்தை அனுப்பிவைத்தேன். சிறிது தாமதமாக அனுப்பியதால் அட்டையில் எனது புகைப்படம் இடம்பெறவில்லை! 

ஆனாலும், இன்ப அதிர்ச்சியாக இரு வாரங்கள் கடந்த பின் வந்த ஆனந்த விகடன் உள்பக்கத்தில் வாசகர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள் பலருடைய புகைப்படங்களுடன் எனது புகைப்பட(மு)ம் பிரசுரம் ஆனது, 'வாசகர்களே எங்களது முகவரி' என்கிற குறிப்புடன். 

ஆனந்த விகடன் 26/11/2020 இதழ்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Tuesday, October 27, 2020

இயக்குனர் கதிர் அவர்களே! #152

இயக்குனர் கதிர் அவர்களே!


'காதல் தேசம்' -இது, இயக்குனர் கதிர் இயக்கிய படம். கே.ட்டீ.குஞ்சுமோன் இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்ததுடன் படத்தை தயாரித்தும் இருந்தார்.

அப்பாஸும் (அருண்) வினீத்தும் (ஆனந்த்) நண்பர்கள். இருவருக்கும் தபு (திவ்யா) நண்பர். இருவருமே தபுவைக் காதலிப்பது தபுவுக்குத் தெரியாது.

ஒருமுறை இரவு நேரத்தில்  ரவுடிகளிடமிருந்து தபுவைக் காப்பாற்றிவிடுவார் வினீத்.
அடுத்தது தபுவைக் காப்பாற்றவேண்டியது அப்பாஸின் முறை.

அப்பாஸும் தபுவும் பேசிக்கொண்டே ரயில்வே ட்ராக்கில் வரும்போது தபுவின் (ஒரு) கால் மட்டும் அருகருகே இருக்கும் இரு தண்டவாளங்களுக்கு இடையே மாட்டிக்கொள்ளும்! எவ்வளவு முயன்றாலும் காலை எடுக்கமுடியாது. கரெக்ட்டாக அப்பொழுது ஒரு ரயிலும் வரும்! இந்த நேரத்தில் தபுவை அப்பாஸ் காப்பாற்றணுமே?!!!

ரயில் அருகே வந்துகொண்டே இருக்கும். திடீரென்று அப்பாஸ் ஓடிச்சென்று சற்று தூரத்தில் இருக்கும் ஒரு லிவரைப் பிடித்து இழுத்துவிடுவார். ரயில் இவர்களை மோதாமல் உடனே அடுத்த ட்ராக்குக்கு மாறி, சென்றுவிடும்! (அடேங்கப்பா!!!)

பாவம் அந்த ரயில்; பாம்பே போகவேண்டிய ரயிலை இவர் திருப்பிவிட்டதால் பூனேவுக்கு போயிட்டிருக்கும்!!! (ஹாஹாஹா...!)
அடுத்ததாக, சுதாரிப்பதற்குள்ளாகவே, இவர்கள் இருக்கும் தண்டவாளத்தில் எதிர்புறத்திலிருந்து வேறு ஒரு ரயில் இவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கும்! (அடடா, அப்புறம் என்ன ஆச்சு?)
அப்பாஸுஸூஸூஸூ பார்ப்பார், அங்கே ஒரு பெரிய இரும்பு சங்கிலி கிடக்கும்! அதை தூதூதூதூக்கி முன்பு போன ரயிலை நோக்கி வீசுவார். கரெக்ட்டா ரயிலின் அடிப்பாகத்தில் மாட்டிக் கொள்ளும். அப்பாஸும் அந்த சங்கிலியை இழுப்பார்; ரயிலும் இழுக்கும்! தபுவின் காலை பிடித்துவைத்திருக்கும் இரு தண்டவாளங்களும் பிரிந்துவிடும்! தபுவின் கால் விடுவிக்கப்பட்டதும் இருவரும் தண்டவாளத்திற்கு வெளியில் புரண்டுவிடுவார்கள்! ரயில் இவர்களை பார்க்காதமாதிரி போய்விடும்!!!

இயக்குநர் கதிர் அவர்களே!
யார் வேணும்னாலும் லிவரை இயக்கி, ரயிலை வேறு பாதையில் செல்லுமாறு அமைப்பை எந்த ஊர்ல வச்சிருக்காங்க, சொல்லுங்க? அப்படி செய்தால் ரயில் போகவேண்டிய ஊருக்குப் போகாமல் வேறு ஊருக்கு அல்லவா போகும்? அப்படியே யாரும் லிவரை திருப்பினால் எதிரில் சற்று தூ(நே)ரத்தில் அதே ட்ராக்கில் வரும் வேறு ஒரு ரயிலில் அல்லவா மோதும்? அது உங்களுக்குப் புரியாதா?

சரி, அப்பாஸ் லிவரை மாற்றிவிட்டாரு, ரயில் வேறு ட்ராக்கில் சென்றுவிட்டது!
ஆனால், முதலாவது ட்ராக்கில் எதிர்பக்கத்திலிருந்து வேறு ஒரு ரயில் வருகிறதே எப்படி?
அப்பாஸ், டராக் மாற்றிவிடாவிட்டால் இரு ரயில்களும் எதிர் எதிர் வந்து மோதிக் கொண்டிருக்குமே, அதுவும் உங்களுக்குப் புரியாதா?

என்ன ஒரு திறமை(?)யான கதை, காட்சி அமைப்பு?

தயாரிப்பாளர் இதை எப்படி ஏற்றுக் கொண்டார்?
உதவி இயக்குனர் யாருமே இதை உங்களுக்கு சுட்டிக் காட்டவில்லையா?

என்னமோ போங்க!

இப்படிக்கு,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

இதோ இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம்!
(பிரேம தேசம் -தெலுங்கு)
நேரம்:  01:36:30-யிலிருந்து!

https://youtu.be/1M2g-Fktxcw


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, October 17, 2020

பாடலாசிரியரே, பதில் சொல்க! #151

பாடலாசிரியரே, பதில் சொல்க!பாடலாசிரியர் பதில் தருவாரா?

பாடல் காட்சியைப் பார்த்தீர்களா?
பாடல் வரிகளைக் கேட்டீர்களா?

ஆணும் பெண்ணும் கேள்வி பதில் பாணியில் பாடும் பாடல்!  

ஆண்களுக்கு பெண்களும் பெண்களுக்கு ஆண்களும் மிக அவசியம் என்பதை, அழகாக விளக்கும் பாடல்.

இப்பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர்: 'சமுத்திரம்'!

இதில் ஆண் கேட்கும் கேள்விக்கு பெண் பதில் தருகிறாள்!

"பெண்களுக்கென்று தனித்துவம் ஏது?
உங்கள் பெயரை சொல்கிற எதுவும் ஊரில் கிடையாதே?"

"இந்திய நாட்டில் பதினெட்டு நதிகள்!
ஓடுற நதியில் ஆண்களின் பெயரில் ஒன்றும் கிடையாதே?"

'கிருஷ்ணா நதி'-யை விட்டுவிட்டார் கவிஞர்!

'பிரம்மபுத்திரா' என்ற பெயரிலும் நதி இருக்கின்றது!

இப்பாடலை எழுதிய கவிஞர்,
யார் அவர்?

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்
..
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Friday, September 18, 2020

மன வலி-மை (சிறுகதை) #150


'மன வலி-மை (சிறுகதை)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

"அம்மா, கால் வலிக்கு டாக்டர் சொன்ன ஆயின்மென்ட் வாங்கி வந்திருக்கேன்! காலை நீட்டு" என்று சொல்லி, மருந்தைத் தடவிவிட்டான் பாபு!

"அப்பா, பாட்டிக்கு நான் குணமா தடவிவிடுறேன்!" என்று வாங்கி தடவிவிட்டான் பேரன் ராஜா.

"வலி இப்ப பரவாயில்லை கண்ணுகளா! நீங்க ரெண்டு பேரும் தடவிவிட்டதுமே வலி பறந்து போச்சிப்பா" என்றாள் அம்மா.

"டாக்டர்ட்ட போலாமா அம்மா?" 

"இப்ப வேணாம்ப்பா! போன வாரம்தானே போய் காட்டினோம்? 'வயசாயிடுச்சி; அப்படிதான் வலி வரும்'னு சொன்னாறே?"

"வயசாயிடுச்சிங்கறதுக்காக வர்ற வலி இல்லம்மா இது! வயசுங்கறது நம்மளோட வாழ்நாள் அனுபவம். ஏதோ ஒரு வலி எல்லாருக்குமே உண்டுதானேமா?"

"நீ சொல்றது சரிதான் பாபு! அப்பா இறந்து போனதும் எனக்கு மன வலிதானே?"

"மன வலியை,
மனவலிமையா மாத்திக்கணும்மா! அப்பா இறந்தா என்னம்மா? நாங்களாம் இருக்கோம்ல?"

"அப்பா இருந்தா, அது ஒரு தெம்புதானே? அவரும் போயிட்டாரு! எனக்கும் என்ன என்னமோ வியாதி வந்து படுத்துது! வயசும் ஆயிடுச்சு! அப்பா போன மாதிரியே நானும் போக வேண்டியதுதான்!"

"அப்படி சொல்லாதேமா! இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக் குறிச்சி வச்சிருக்கான்! வயசானதுக்காகவெல்லாம் நாம போக முடியாது! 6 வயசுலயும் இறப்பு! 100 வயசுலயும் இறப்பு! இன்னும், 5, 10, 30 வயசு, 
50 வயசுனு எத்தனை பேரு எத்தனை விதமா இறக்குறாங்க? ஏன் எல்லாரும் வயசாகி, வயசாகி இறக்குறதில்லே? இறைவன்தான் இங்கே முதலாளி! அதனால இந்த மாதிரி நினைப்பையெல்லாம் மூட்டை கட்டி வை!
நீ 100 ஆண்டு வாழ்வேமா! நான் இறைவன்ட்ட வேண்டிட்டே இருப்பேன்! ராஜாவுக்கு கல்யாணம், பிறக்குற குழந்தை எல்லாத்தையும் நீ பார்ப்பே!
நிம்மதியா தூங்கு!"

அம்மாவின் முகம் தெளிவானதைப் பார்த்தவாறே, அம்மாவின் மடியிலே படுத்து தூங்கிவிட்ட ராஜாவைத் தூக்கி, பாயில் போட்டுவிட்டு, மனைவி செல்வியைப் பார்த்தான் பாபு!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்

'தமிழக எழுத்தாளர் குழுமம்' நடத்திய போட்டிக்காக எழுதப்பட்டது. 

'எழுத்தாளர் ரிஷிவந்தியா' அவர்கள், இன்ஸ்டாகிராம்-ல் பதிவுசெய்துவரும் 'நறுக்ஸ் நொறுக்ஸ்'-லிருந்து ஒரு கருத்தை வைத்து கதை எழுதும் புதுமையான போட்டி!

நறுக்ஸ் நொறுக்ஸ் இணைய முகவரி:விடியற் காலை எழுந்தவுடன்
விரல் நடுங்க எடுக்கின்றனர்
மூத்த குடிமக்கள் கைப்பேசிகளை...
எந்த நண்பரின் இரங்கல் செய்தி
வந்திருக்குமோ எனும் நடுக்கத்துடன்...
    - ரிஷிவந்தியா
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...