...பல்சுவை பக்கம்!

.

Sunday, November 16, 2025

மலர்மதியின் புதினம் - நூல் விமர்சனம்! #186

மலர்மதியின் புதினம் - புத்தக மதிப்புரை
#186.




புதினம் : காட்டேறி காடு 
எழுத்தாளர்: மலர்மதி 
வெளியீடு: மாலைமதி 
தேதி 1-15 நவம்பர் 2025
விலை:: ரூபாய் 30 

தனது பரம்பரை காட்டு பங்களாவில் மனைவி இல்லாமல் தனியாக வசிக்கிறார் வரதராஜன். அவருடைய மகள் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறாள். நான்கு வேலையாட்கள் மட்டும் துணை இருக்க தனியாக வசிக்கும் வரதராஜனைத் தேடி வாரம் ஒருமுறை வந்துவிடுவார் அவரது நண்பர் கோதண்டன்.

ஒரு நாள் வரதராஜன் மது போதையில் மனம் தடுமாறி, சமையல்காரப் பெண் வாணியிடம் அத்துமீற முயற்சிக்கும் போது, தவறி மாடிப்படிகளில் விழுந்து மரணம் அடைந்து விடுகிறாள் அவள்! 
திகைத்துப் போன வரதராஜனை அந்த இக்கட்டில் இருந்து மீட்பதற்காக உதவிக்கு வரும் கோதண்டனுடன் வரதராஜனுடம் சேர்ந்து இறந்து போன பெண்ணின் பிணத்தை தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக புதைத்து விடுகிறார்கள்!

பிறகு அந்த மாளிகையில் இரவு நேரங்களில் சலங்கை சத்தம் கேட்கிறது! வாகனத்தில் ரோட்டில் செல்லும்போது ரத்தக் காட்டேரியாக எதிரில் வந்து அவர்களை பயமுறுத்துகிறாள் வாணி!

அதனால் நண்பர் கோதண்டன் கூறும் யோசனைப்படி பக்கத்து நகரத்தில் ஒரு பங்களா வாங்கி குடியேறுகிறார் வரதராஜன்! அந்தக் காட்டு பங்களாவில் பகல் நேரத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலையை நடத்த ஆரம்பிக்கிறார் கோதண்டன்!

வரதராஜனின் மகள் ஷர்மிளா தனது காதலன் ரஞ்சனுடன் அந்த பங்களாவில் ஒரு வார காலத்திற்கு  தங்க வருகிறாள்! சலங்கைச் சத்தம், மோகினிப் பிசாசு இவற்றைப் பார்த்து சந்தேகப்பட்டு ஆராய ஆரம்பிக்கிறான் ரஞ்சன்!

அவற்றின் காரணம் என்ன, காரண கர்த்தா யார் என்பவற்றைக் கண்டுபிடிக்கிறான்!
எப்படி கண்டுபிடிக்கிறான், எப்படி மர்மத்தை வெளிக்கொண்டு வருகிறான் என்பது மீதிக் கதை!  

'பெண் பிள்ளைகள் தான் எவ்வளவு சடுதியில் மசமசவென வளர்ந்து விடுகிறார்கள்?' என்று ஓர் இடத்தில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.  (பக்கம் 51.) "சும்மா மசமசனு நிக்காம போய் வேலையைப் பாரு" என்று திட்டுவதற்கு பயன்படுத்துவார்கள், அந்த வார்த்தையை! 'மள மளவென்று வளர்ந்து விடுகிறார்கள்' என்று குறிப்பிட்டிருக்கலாம் ஆசிரியர்! 

' மம்டி' என்ற வார்த்தையை  ஈரிடங்களில் மென்மையாக பயன்படுத்தி உள்ளார் ஆசிரியர். (ப- 24, 94.) புரிவதற்கு சிறிது நேரம் ஆகிவிட்டது. 
'மம்ட்டி' என்று அழுத்தி எழுதி மண்வெட்டியை நமக்கு காட்டியிருக்கலாம் ஆசிரியர்.

கதை பரபரப்பாக, விறுவிறுப்பாக, பயங்கரமாக, ஒரே நேர்கோட்டில் பயணிப்பது சிறப்பு!   
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.



. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...