...பல்சுவை பக்கம்!

.

Tuesday, April 13, 2010

ரயில் வரும் நேரமாச்சு!


ரயில் வரும் நேரமாச்சு!


பயணம் செய்வதற்கு எனக்கு மிகவும் படித்த வாகனம்
எதுவென்றால், அது ரயில்தான். இதை புகைவண்டி,
தொடர்வண்டி என்று தமிழில் குறிப்பிடுகிறார்கள்.

நான் 1990-களின் ஆரம்பத்தில் சிதம்பரத்தில் உள்ள
தி புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் சுமார் ஆறு மாத
காலம் பணியாற்றினேன். அது கூரியர் சர்வீஸ்களின்
ஆரம்பக் காலம்.

அப்போதெல்லாம் வெளிநாட்டிலிருந்தும்,
வெளிமாநிலத்திலிருந்தும், தமிழ்நாட்டின்
எந்த ஊரிலிருந்தும் வரும் கடிதம் மற்றும்
டாக்குமெண்ட்கள் போன்றவை சென்னைக்குச்
சென்று, பிறகுதான் மற்ற ஊர்களுக்கு செல்லும்.


அதாவது, மயிலாடுதுறையிலிருந்து ஒரு சகோதரர்
இரவு சுமார் 8 மணியளவில் ரயிலில் புறப்பட்டு
திருச்சிக்குச் நள்ளிரவு 12 மணியளவில் சென்றடைவார்.

சிலமணி நேரம் காத்திருந்ததும் அதிகாலையில்
சென்னையிலிருந்து வரும் ரயிலில் வந்தவரிடமிருந்து
கூரியர்களைப் பெற்றுக் கொண்டு, அதிகாலை 6 மணி
அளவில் புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸில் புறப்பட்டு
சுமார் 10 மணி அல்லது 10.15 மணிக்கு மயிலாடுதுறை
ஜங்ஷனில் இறங்கும்போது சிதம்பரத்திற்கு வந்துள்ள
கடித பார்சலை என்னிடம் கொடுத்து, அவரிடம் உள்ள
நோட்டில் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அவர்
மயிலாடுதுறை கூரியர் அலுவலகத்திற்குச் சென்று
விடுவார்.


இடையிலிருக்கும் தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற
மற்ற ஊர்களுக்குரிய பார்சல்களை, அந்தந்த ஊர்
ஊழியர்களே திருச்சிக்குச் சென்று வாங்கி வந்து
விடுவார்கள்.

இப்படியாக மயிலாடுதுறை ஜங்ஷனில் கூரியர்
பார்சலைப் பெற்றுக் கொண்ட நான் அதே சோழன்
எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை சுமார் 11.15 அளவில்
சிதம்பரம் சென்று, அலுவலகத்தில் பதிவு (?) போட்டு,
உரியவர்களுக்கு அந்த கூரியர்களைக் கொண்டு
சேர்ப்பேன்.

மீண்டும் அலுவலகத்திலிருந்து பார்சலுடன்
புறப்பட்டு, சுமார் 7 மணிக்கு சிதம்பரத்திலிருந்து
நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் புறப்பட்டு 8 மணிக்கு
மயிலாடுதுறை ஜங்ஷனில் இறங்கும்போது,
அங்கிருந்து புறப்படும் மயிலாடுதுறை அலுவலக
சகோதரரிடம் என்னிடமிருக்கும் பார்சலைக் கொடுத்து
என்னிடமிருக்கும் நோட்டில் கையெழுத்துப்
பெற்றுக் கொள்வேன். அந்தப் பார்சல் இவ்வாறாக,
திருச்சி வழியாக சென்னை சென்றடையும்.


சரக்கு வேன் போன்ற வாகன வசதிகள் அதிகம்
பயன்படுத்தப்பட ஆரம்பிக்காத காலக் கட்டம் அது.
அப்போதெல்லாம், பெரிய பார்சல்கள் கூரியரில்
எப்போதாவதுதான் அனுப்பப்பட்ட காலம்.

இதன் காரணமாக ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து
மற்ற ஆறு தினங்கள் தினசரி நான் காலையில்
ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும்
ரயில் பயணங்களில்தான் இருப்பேன்.

அந்த நேரங்களில் வார இதழ்கள் வாசிப்பது,
வாசகர் கடிதம் எழுதுவது, பேனா நண்பர்களுக்குக்
கடிதம் எழுதுவது, ரயிலின் ஜன்னல் ஊடே பசுமையான
வயல், மரம், செடிகள் கண்டு களிப்புறுவது,
சக பயணிகளோடு உரையாடுவது, பயணிகளின்
சிறு குழந்தைகளோடு உரையாடி மகிழ்வது,
ரயில் வியாபாரிகளிடம் மாங்காய்,
வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி வாங்கிச்
சாப்பிடுவது, சூடான சுண்டல் என்று கூவி
விற்பதை வாங்கும்போது கையைச் சுடுவதாய்
ஆஆ என்று சொல்லி வாங்கி ஜில்லென்று
வாயில் போட்டு சாப்பிடுவது,
அந்த வியாபாரிகள் ஒரு பெட்டியிலிருந்து
மற்றொரு பெட்டிக்கு கையில் கூடையோடு
தாவி செல்லும் ஆபத்தான செயலை
அனாயாசமாகச் செய்வதை ஆச்சரியமாகப்
பார்ப்பது, இருபுற கம்பங்களில்
எண்களை பார்த்துக் கொண்டே வருவது,
முதல் நாள் ஒரு பெரிய ஆல மரத்தைக்
குறிப்பு வைத்துக் கொண்டு மறுநாள் அந்த இடம்
வரும்போது சரியாகக் கண்டு கொள்வது,
புத்தகத்தில் ஜோக் படித்துவிட்டு எதிராளிகள்
பயந்து விடக்கூடாதென்று படார் என்று சிரிக்காமல்
மொக்கையாய் சிரிப்பது என்றெல்லாம்
அந்த ரயில் பயணங்கள் தந்த மகிழ்வினை
என்றென்றும் மறக்க முடியாது.

மற்றும் அந்தப் பணியில்தான் கூரியரின் உரிமையாளர்
அன்பு அண்ணன் மௌலவி கணியூர் இஸ்மாயில் நாஜி
நீடூரி அவர்களிடமிருந்து பல அறிவுச் செறிவான பொது
அறிவு விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என்பதனை
இங்கு குறிப்பிட விழைகிறேன்.

சமீப காலமாக (அதாவது கடந்த நான்காண்டுகளுக்கு
மேலாக) மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய
ஊர்களுக்கிடையே மீட்டர் கேஜ் இருப்புப் பாதையை
அகற்றிவிட்டு, அகல ரயில் பாதை அமைக்கும் பணி
நடைபெற்று வந்தது. சுமார் ஆறு மாத காலத்தில்
அமைக்கப்பட்டுள்ள இருப்புப் பாதையில் பலமுறைகள்
சோதனை ஓட்டங்கள் பல கட்டங்களில் செய்யப்பட்டன.

இருப்பினும் டிக்கெட் கவுண்ட்டர்கள், பிளாட்ஃபார்ம்,
பயணியர் தங்குமிடம், நீர் வசதி, கழிவறைகள் போன்ற
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தபின்னும்,
"ஓடும்... ஓடும்..." என்று பலமுறை சொல்லியும்
சொல்லப்பட்ட மாதங்கள்தான் ஓடினவேயன்றி
ரயில் போக்குவரத்து ஆரம்பித்தபாடில்லை.
சிறு வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தினர், தினசரி
வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் மற்றும்
நோயாளிகளுக்கு ஏற்றது ரயில் பயணமே!

தற்போது 100 ரூபாயில் சென்றிடக்கூடிய
மயிலாடுதுறை - சென்னை பயணத்திற்கு
ஆம்னி சொகுசு ஏசி வராத பேருந்துகளில்
400 ரூபாய் கொடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
அரசு பேருந்தில் செல்லலாமே... அரசு
பேருந்துகளின் தரம் சொல்லவோ, எழுதவோ,
கேட்கவோ, படிக்கவோ தேவையில்லை.

கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆய்வுப்பணி மேற்கொண்ட
தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிஷன்
அவர்கள் "வருகிற ஏப்ரல் 15 அன்று ரயில் சேவை
தொடங்கப்படும்" என்று பத்திரிகை, தொலைக்காட்சிகளிடம்
தெரிவித்துள்ளார். நம்பலாமா?

சோதனை ஓட்டம் சேவையாக எப்போ மாறும்?
வேதனை வாட்டம் மக்களிடம் எப்போ தீரும்?

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.





வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, April 9, 2010

அது ஒரு கதைக்காலம்!

அது ஒரு கதைக்காலம்!



'கதை கேளு' என்ற தொடர் பதிவிற்கு அழைப்பு

விடுத்துள்ளார் நண்பர் ஸ்டார்ஜன். இதோ கதையுடன்

வந்துவிட்டேன்.



எனது சிறுவயதில் எங்கள் பாட்டியிடம் (அம்மாவின்

அம்மா) நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். அதே

சமயம் சிதம்பரத்தில் இருந்த எங்கள் பெரியம்மா

அவர்களும் எனக்கு நிறைய கதைகள் சொல்வார்கள்.

இதனால், அடிக்கடி எங்கள் அம்மாவுடன் சிதம்பரம்

போய்வருவதுண்டு. அடிக்கடி பெரியம்மாவும் எங்கள்

வீட்டிற்கு வருவார்கள். அந்த நேரங்களில் சுமார்

25 அல்லது 30 கதைகள்வரை பெரியம்மா

சொல்வார்கள். அவையெல்லாம் 'அம்புலிமாமா'வில்

படித்ததாகச் சொல்வார்கள். இப்போது அவர்கள்

சொன்ன கதை:


ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.



ம்ஹூம், இந்தக் கதை வேணாம்; வேற கதை

சொல்லுங்கள்.


சரி வேற கதை. வேற ஒரு ஊர்ல வேற ஒரு

ராஜா இருந்தானாம்.


ம், சொல்லுங்க, சொல்லுங்க.


இது வேணாம். ஒரு ஊர்ல பெரியண்ணன் அப்படிங்கிற

அண்ணனும் சின்னத்தம்பி அப்படிங்கிற தம்பியும்

இருந்தாங்க.


ஒரு நாள் இரண்டு பேரும் வியாபார சம்பந்தமாக

வெளியூருக்குப் புறப்பட்டுப் போனாங்க. போக்குவரத்து

வசதி இல்லாததால நடந்துதான் போனாங்க. அப்போ

உச்சிவெயில் மதியம் நேரம் வந்துடுச்சி. பசியா

இருந்ததால் சாப்பிடலாம்னு உட்கார்ந்து அவங்கவங்க

மனைவி கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப்

பிரிச்சாங்க.

 
பெரியண்ணன் பொட்டலத்தில மூன்று தோசைகளும்

சின்னத்தம்பி பொட்டலத்தில இரண்டு தோசைகளும்

இருந்திச்சி.


(ஆஹா மறுபடியும் தோசை கதையா!!!?

முதல் தோசைக் கதை இங்கே படிக்கலாம்.

அடுத்து தோசை நகைச்சுவை இங்கு படிக்கலாம்.)



சாப்பிடலாம்னு தோசையில் கையை வைக்கும்போது

ஒரு பிச்சைக்காரர் மாதிரியான வயசானவர் வந்து,

"ஐயாக்களே! ரொம்ப பசியா இருக்கு. சாப்பிட

ஏதாவது கொடுங்கள் ஐயா!" என்று கெஞ்சிக்

கேட்டார்.


பெரியண்ணனும் சின்னத்தம்பியும் என்ன செய்வது

என்று யோசித்தார்கள். பிறகு இருவருடைய

தோசைகள் ஐந்தையும் ஒன்னாச் சேர்த்து அந்த

ஐந்து தோசைகளையும் ஒவ்வொரு தோசையையும்

நான்கு, நான்கு துண்டுகளாகப் பிய்த்தார்கள். இப்போ

மொத்தம் இருபது துண்டுகள் இருந்தன.


அதில், 6 துண்டுகளை அந்தப் பெரியவருக்குக்

கொடுத்துவிட்டு மீதம் இருந்ததில் 7 துண்டுகளை

பெரியண்ணனும் 7 துண்டுகளை சின்னத்தம்பியும்

சாப்பிட்டார்கள்.


மூவரும் சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பெரியவர்

எழுந்து நன்றி சொல்லிவிட்டுப் புறப்படும்முன்

பெரியண்ணனிடம் 6 பொற்காசுகளை (24 கேரட்)

கொடுத்து, "ஐயா, நீங்கள் இருவரும் பிரித்து

எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு

சென்றுவிட்டார்.



இப்போ பெரியண்ணன் 4 பொற்காசுகளை தான்

எடுத்துக் கொண்டு, 2 பொற்காசுகளை தம்பியிடம்

கொடுத்தான்.



தம்பியோ, "அந்தப் பெரியவர் ரெண்டு பேரும்

பிரிச்சிக்குங்க என்றுதான் சொன்னார். அதனால

சமமா நீ 3 பொற்காசுகள் எடுத்துக் கொண்டு

எனக்கும் 3 பொற்காசுகள் கொடுத்தால்தான்

வாங்குவேன்" என்று சண்டை போட்டான்.



பெரியண்ணன் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்

அடுத்த ஊருக்குப் போனதும் ஆலமரத்தடி (+சொம்பு)

நாட்டாமையிடம் முறையிட்டார்கள்.



நாட்டாமை நல்லா விசாரிச்சிட்டு தீர்ப்புச் சொன்னார்.

(நாட்டாமை, தீர்ப்பை மாத்தமுடியாது.)



நாட்டாமை தம்பிக்காரனைக் கூப்பிட்டார்.


"தம்பி, நீ கொண்டு வந்தது 2 தோசைகள். அதை

8 துண்டுகள் போட்டு, 7 துண்டுகள் நீ சாப்பிட்டாய்.

அந்தப் பெரியவருக்கு நீ ஒரு துண்டுதான் கொடுத்தாய்.

அதனால உனக்கு ஒரு பொற்காசுதான்" என்றார்.



நாட்டாமை அண்ணனைக் கூப்பிட்டார்.


"ஏனப்பா, நீ கொண்டு வந்தது 3 தோசைகள். அதை

12 துண்டுகள் போட்டு, 7 துண்டுகள் நீ சாப்பிட்டாய்.

அந்தப் பெரியவருக்கு நீ 5 துண்டுகள் கொடுத்தாய்.

அதனால் உனக்கு 5 பொற்காசுகள்" என்றார்.



தீர்ப்பைக் கே(கெ)ட்டு தம்பி 'உள்ளதும் போச்சே' என்று

நொந்து நூடுல்ஸ் ஆகிப் போனான். (தோசைக் கதையில்

நூடுல்ஸும் வந்திடுச்சே!)


சரி, இப்ப கதையின் நீதியைச் சொல்லிடலாமா?

அ, கதையைப்  படிச்சீங்கள்ல? நீங்களே சொல்லிடுங்க.



தொடர் பதிவில், இணைந்துகொள்ள இவர்களை

அழைக்கிறேன்.



1.ஸ்ரீகிருஷ்ணா

2.இப்படிக்கு நிஜாம்

3.கவிஞர் மலிக்கா.



அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, April 2, 2010

நாம் எங்கே போகிறோம்?


எங்கள் கம்பெனியின் எம்.டி. ஒருநாள்

கான்ஃப்ரன்ஸ் மீட்டிங் வைத்தார். கம்பெனியின்

வளர்ச்சி, வியாபார உயர்வு, இலாப அதிகரிப்பு,

வருமானம் கூட்டுதல் போன்ற சப்ஜெக்ட்கள் பற்றி

ஆலோசனைகள் தந்து கொண்டிருந்தார்.





பேசும்போது, "நாம் வருமானம் ஈட்டி வரும்

பணத்தை நாமே வைத்துக் கொண்டு, நமக்காகவும்

நமது குடும்பத்திற்காகவும் மட்டுமே செலவு செய்து

கொண்டிருக்கிறோம்.அப்படியல்லாமல், நமக்கு

கொடையாக இறைவன் கொடுத்த அந்த பணத்திற்கு

நன்றி செய்யும் விதமாக, நம்மைவிட ஏழ்மையான,

உழைக்க முடியாத, செயல்பட முடியாத ஏழைகளுக்கு,

அனாதைகளுக்கு அதிலிருந்து ஒரு பகுதியை,

சிறு பகுதியை தானமாக, தர்மமாக, கொடையாக,

உதவியாக கொடுக்க வேண்டும். அப்படி செய்வது

நமது வியாபரத்தில் அபிவிருத்தியை உண்டாக்கும்."

என்று நல்லதொரு தெளிவான விளக்கம் அளித்தார்.



தொடர்ந்து, " நாம் பணம், பணம் என்று

அலைகிறோமே, போகும்போது பணத்தை எடுத்துக்

கொண்டா போகப் போகிறோம்?" என்று கேட்டார்.



அப்போது சக ஊழியர் ஒருவர், "போகும்போது

நாமளே எப்படி போக முடியும்? நாமே போக

முடியாதே! நம்மையே இன்னும் நாலு பேர்கள்

அல்லவா தூக்கிப் போகிறார்கள்? அப்பறம்

அந்தக் காசு, பணத்தை எப்படி சார் எடுத்து போக

முடியும்? நீங்கள் சொல்வது நல்லதொரு கருத்து

சார்" என்றார்.



அதற்கு, "சரியாகச் சொன்னீர்கள். நாமே

தன்னிச்சையாகப் போக முடியாதபோது,

பணத்தையா எடுத்துப் போக முடியும்? ஆகவே,

மற்றவர்களுக்கு நாம் உதவுவதற்கான வாய்ப்பைப்

பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று சொன்னார்

எம்.டி.



அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...