...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label ஜிகினா. Show all posts
Showing posts with label ஜிகினா. Show all posts

Saturday, September 10, 2022

இனிய உதயம் இதழில் எனது புகைப்படம்! #172




இனிய உதயம் இதழில் எனது புகைப்படம்! #172

அட்டையில் மருதநாயகம் கமல்ஹாசன் புகைப்படம்.

'இனிய உதயம்'
(தீபாவளி சிறப்பிதழ்) 
மாத இதழில் நவம்பர் 1997-ல் முதன்முறையாக எனது புகைப்படம் ஒரு பத்திரிகையில் வெளியான மாதம்.

இதை நகல் எடுத்து எனக்கு பேங்காக்குக்கு அனுப்பியவர் எழுத்தாளர் திரு. 'மின்னொளி சீனிவாசன்' அவர்கள்.

அப்போது அவர் எனக்கு எழுதிய கடிதமும் இத்துடன் இணைத்துள்ளேன்!

நன்றி சீனீவாசன் சார்!
நலமாய் இருக்கிறீர்களா?

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, September 4, 2022

ஆயிரம் ரூபாய் பரிசு, எனக்கே எனக்கா?




ஆயிரம் ரூபாய் பரிசு, எனக்கே எனக்கா!!!? #171

2007-ஆம் காலக் கட்டம்!

மயிலாடுதுறையிலிருந்து
சிதம்பரம் வழியாக லால்பேட்டைக்கு செல்லும்போது அல்லது லால் பேட்டையில் இருந்து சிதம்பரம் வழியாக மயிலாடுதுறைக்கு வரும்போது (லால்பேட்டையில் எங்கள் அக்கா வீடு) சிதம்பரம் பேருந்து நிலையத்தில் வழமையாக ஒரு குறிப்பிட்ட கடையில் ஞாயிறன்று தினமலரும் வாரமலரும் வாங்குவது வழக்கம்.

அதில் வந்த சிறுக(எ)தையோ
படித்துவிட்டு விமர்சனம் எழுதினேன்.

ஒரு வாரத்திற்கு மறு வாரம் ஞாயிற்றுக்கிழமை (08/07/2007)  எனது தங்கையும் தங்கையின் கணவரும் சிதம்பரம் வழியாக நீடூருக்கு வரும்போது தினமலர் +  வாரமலர் வாங்கி வரச் சொல்லியிருந்தேன்.

அப்படியே வாங்கி வந்து கொடுத்தார்கள். பார்த்தால் தினமலர் இருக்கிறது; வாரமலர் அதில் இல்லை.

அடடா, என்ன செய்வது?

அதன்பின்
13/07/2007 வியாழக் கிழமை நான் லால்பேட்டைக்குச் சென்றேன்.

சிதம்பரத்தில் அதே கடைக்குப் போய், "அண்ணே, ஞாயிற்றுக்கிழமை நீங்க தினமலரோடு வாரமலர் கொடுக்கலையே? அந்த வாரமலர் இருக்காண்ணே?" என்று கேட்டேன்.

என்னைப் பார்த்ததும் 'நம்ம கஸ்டமர்தான்' என நினைத்தாரோ, புன்னகைத்தவாறே, "தேடிப் பார்க்கிறேன் தம்பி!" என சொல்லிவிட்டு தேடினார்; உடனே கிடைத்துவிட்டது. கொடுத்தார். வாங்கிப் பிரித்தேன்!

எனது அர்ச்சனைக்கு 1,000 ரூபாய் பரிசு என்பதைக்கண்டு மகிழ்ச்சி மேலிட, கடைக்காரரிடமே காட்டினேன்!

"அட, நீங்களா தம்பி? நல்லாருக்கு!" என்று அவரும் சந்தோஷப்பட்டார்!

உடனே, வேறு இரு புதினங்கள் அவரிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டு 'நன்றி' சொல்லி வந்தேன்!

ஒரு வாரத்திற்குள் பரிசுப் பணம் அஞ்சலாணை மூலமாக வந்து சேர்ந்தது! அஞ்சல்காரருக்கும் அன்பளிப்பு வழங்கி மகிழ்வித்தேன்!


மேலும் ஒரு தகவல்!
அப்போது வாரமலரில் இது உங்கள் இடம் பகுதிக்கு முதல் பரிசு ரூபாய் 1,000, இரண்டாம் பரிசு ரூபாய் 500,
மற்ற கடிதங்களுக்கு ரூபாய் 150 மட்டும் சன்மானமாக வழங்கப்பட்டது!

.



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
...

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Friday, August 12, 2022

ட்டீ.ராஜேந்தர் + குமுதம் + நான் #169.


ட்டீ.ராஜேந்தர் + குமுதம் + நான் #169


                                          

         

ட்டீ.ராஜேந்தரின் பேட்டி ஒரு தொலைகாட்சி அலைவரிசையில் 2005-ஆம் ஆண்டு வாக்கில் ஒலிபரப்பானது!

"திரையுலகில் எனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவர் ஒரு முஸ்லிம்! அதன்காரணமாக எப்பொழுதும் சாப்பிட ஆரம்பிக்கும்போது, 'இன்ஷா அல்லாஹ்' என்று சொல்லிவிட்டுதான் சாப்பிட ஆரம்பிக்கிறேன்!" என்று நன்றியுடன் குறிப்பிட்டார்.

பிறகும் குமுதம் 03/08/2005 இதழில் பேட்டியிலும் அவ்வாறே சொன்னார்!

அவர் சொன்னதை திருத்தி, விளக்கி நான் எழுதிய கடிதம் 'குமுதம் 10/08/2005' இதழில் எனது கையெழுத்துடன் வெளியானது. (கடிதம் வ. எண் 3.)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.






ட்டீ.ராஜேந்தரிடம் சொல்லுங்கள்! 'இன்ஷா அல்லாஹ்' என்பது எதிர்காலச் செயலைச் சொல்லும்போது பயன்படுத்த வேண்டிய வார்த்தை. உதாரணம்: இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நாளை வருவேன்! அதனால் சாப்பிட ஆரம்பிக்கும்போது அல்லது ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும்போது சொல்ல வேண்டிய வார்த்தை 'பிஸ்மில்லாஹ்'. அதாவது 'அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆரம்பிக்கிறேன்!'

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

 



 





. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Thursday, February 2, 2017

முல்லை தங்கராசன் #131

 முல்லை தங்கராசன்.

 No automatic alt text available.


முல்லை தங்கராசன்.
இந்தப் பெயர் 'முத்து காமிக்ஸ்' மூலமாக அறிமுகம். முத்து காமிக்ஸ் அட்டையிலேயே 'பதிப்பாசிரியர்: முல்லை தங்கராசன்' என்று அச்சிட்டிருக்கும்.

சிறிய கால இடைவெளிக்குப் பின்னால், "ரத்னபாலா" எனும் பாலர் வண்ண மாதமலர் ஆசிரியராகவும், தொடர்ந்து 'மணிப்பாப்பா' ஆசிரியராகவும் தெரியும்.

சுப்ரஜா ஸ்ரீதரன் ஆசிரியராகவும்  கீழை அ. கதிர்வேல் உதவி ஆசிரியராகவும் கொண்டு வெளிவந்த 'வாதினி' மாத இதழில் சமீபத்தில் முல்லை தங்கராசன் எழுதிய 'பணம், பெண், பகை' எனும் புதினத்தைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.

மேலே குறிப்பிட்டிருந்த இடைவெளி காலத்தில் 'மக்கள் குரல்' நாளிதழின் 'நவரத்தினம்' மாத இதழில் முல்லை தங்கராசன் எழுதிய புதினம் வந்திருந்தது. தலைப்பு: "ஊர் சிரித்த கதை".

கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும், "இப்படியாக அந்த ஊர் சிரித்தது" என்று முடித்திருப்பார்.

இதற்குமுன் இப்படி எந்த எழுத்தாளரும் செய்தார்களா என்பது தெரியாது. ஆனால் சுஜாதா பிறகுதான் "ஆ..." என்ற பாணியில் ஆனந்த விகடனில் தொடர்கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.



. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Wednesday, February 6, 2013

ஜிகினா 8 : "பிக்பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?" 'கல்கி'யில்!

ஜிகினா 8 : "பிக்பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?" 'கல்கி'யில்!

முன் குறிப்பு: கல்கி இதழில் 'ட்டீ.வி., வீடியோ பக்கங்கள்' என்ற போட்டியில் எனது கட்டுரை வெளியானது. அந்த கல்கி 09.07.1989 இதழ் உங்களிடம் இருந்தால் எனக்குத் தெரியப் படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 நானும் எங்கள் சித்தப்பாவும் பாட்டியும் ஆக 3 பேர்கள், திருவண்ணாமலையிலிருந்து, மயிலாடுதுறைக்கு 'பட்டுக்கோட்டை அழகிரி'
பேருந்தில் வந்தோம். பேருந்து பயணக் கட்டணம் ஒருவருக்கு ரூபாய் 15. மூவருக்கும் டிக்கெட் வாங்கியபோது எங்களிடமிருந்த எவர்சில்வர் பாத்திரங்கள் கொண்ட மூட்டைக்கும் டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறினார் கண்டக்டர்.  

நாங்கள் 100 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியபோது, எங்கள் மூவருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு லக்கேஜுக்கான டிக்கெட் கொடுக்காமல் சென்றுவிட்டார். மீதம் அப்புறம் தருவதாகக் கூறினார். 

பிறகு டிக்கெட் கொடுத்துக் கொண்டு வந்தபோதும் கேட்டதற்கு, டிக்கெட் தர்றேன் என்று கூறி சென்று விட்டார். 

கடைசியாக, மயிலாடுதுறைக்கு வந்து இறங்கும்போது, மீதி பணம் 40 ரூபாயைத் தந்துவிட்டு, விரைவாக டைம்கீப்பர் அலுவலகம் நோக்கி சென்று விட்டார்; டிக்கெட் தரவேயில்லை. 

அப்போது கல்கியில் வெளியாகி வந்து கொண்டிருந்த  'வாசகர் குமுறல்' பகுதிக்கு இதை எழுதி அனுப்பியிருந்தேன். அந்தக் கடிதம் பெரிய எழுத்துக்களில், 'பிக் பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?' என்ற தலைப்புடன் பத்திரிகையில் வெளிவந்தது. 

அதைப் பார்த்ததும் மனதிற்கு சிறிது ஆறுதலாக இருந்தது.  இரு தினங்களில், கல்கி இலவசப் பிரதி, தபாலில் வந்தது. 

சுமார் 3 வாரங்கள் சென்றபின், எனது கடிதத்தைப் பிரசுரித்தமைக்கான சன்மானமும் எம்.ஓ. மூலம் வந்தடைந்தது. ஆக, கண்டக்டரிடம் விட்ட பணம் ரூபாய் 15-ஐப் பற்றி மனதினுள் இருந்து வந்த மனக் குமுறல் கல்கியின் வழியாக, அழிந்து மனம் அமைதியானது.

நன்றி கல்கி!

இதோ அந்தக் கடிதம்:

படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கிப் படியுங்கள்.

அடுத்த ஜிகினாவில்...

பழக்க தோஷத்தில் டைப்பி விட்டேன். அடுத்த ஜிகினா கூடிய விரைவில் வரும்.

இறைவன் நாடினால்... அடுத்தது... 'குண்டப்பா; மண்டப்பா!'

இதையும் படிக்கலாம்:


ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Monday, January 28, 2013

ஜிகினா 7: 'ஹாய் மதன்'-இல் என் கேள்வியும் விகடனின் பெரும் மாற்றமும்!

ஜிகினா 7: 'ஹாய் மதன்'-இல் என் கேள்வியும் விகடனின் பெரும் மாற்றமும்!

முதலில் விகடனில் வந்த என் கேள்வியையும் ஹாய் மதனின் பதிலையும் பார்த்து விடுவோம்:

 கேள்வி: 101 மாடி, 105 மாடி என்று கட்டடங்களின் உயரம் அதிகரிக்க, அதிகரிக்க அந்தக் கட்டடத்தின் பாதுகாப்புத் தன்மை குறையும் அல்லவா?

 படத்தின்மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் படிக்கலாம்.

பதில்: கட்டடக் கலை அட்டகாசமாக முன்னேறிவிட்டது. சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள அலுவலகக் கட்டடத்தின் உயரம் 1500 அடிகள். மிக மிக உயரமான கட்டடம்  (காற்றின் அழுத்ததைச் சமாளிக்க) இலேசாக அசையும்படியாகக்கூட இப்போது கட்டுகிறார்கள். உள்ளே இருப்பவர்களுக்குத் தெரியாது. இருப்பினும் பின்லேடன்கள் இருக்கும்வரையில் ஆபத்துதான்.

அடுத்து...
விகடனின் பெரிய மாற்றம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், என் கேள்வி வெளியான 23.07.2008 இதழில் இருந்துதான் ஆனந்த விகடன் ரூபாய் 17 விலையில் பெரிய அளவு இதழாக மாற்றப்பட்டது. ஹி... ஹி...

அடுத்த ஜிகினாவில்...
"பிக்பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?" 'கல்கி'யில்!

இதையும் படிக்கலாம்:

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Wednesday, January 23, 2013

ஜிகினா 6: சங்கேத பாஷையில் 'குமுதம்' அரசு பதில்கள்!

ஜிகினா 6: சங்கேத பாஷையில் 'குமுதம்' அரசு பதில்கள்!

குமுதம் அரசு பதில்கள் பகுதிக்கு ஒரு கேள்வி எழுதி அனுப்பியிருந்தேன். இரு வாரங்களில் அந்தக் கேள்வி குமுதத்தில் பிரசுரம் ஆனது. இதுதான் அந்தக் கேள்வி:

 தான் சொல்ல வந்த செய்தியை, விஷயத்தை, தகவலை, 
நேரடியாக, சுற்றி வளைக்காமல், தேவையற்ற 
வார்த்தைகளைச் சேர்க்காமல் சொல்வதை, கூறுவதை, 
உரைப்பதை விட்டுவிட்டு, ஒரே பொருளை, ஒரே 
அர்த்தத்தைத் தரும் பல்வேறு சொற்களை, மிகவும் 
கஷ்டத்துடன் சேகரித்து, கடினப்படுத்திக் கோர்த்து 
வார்த்தைப் பின்னல் போடும், வாய்ச் சவடால் இடும் 
ஒரு சிலரைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
என்ன எண்ணுகிறீர்கள்?

இந்தக் கேள்விக்கு என்ன பதில் தந்தார் அரசு தெரியுமா? பதில் இதோ:

தெ. நி. வை. சு. வே.

இந்தப் பதிலைப் படித்து மண்டை காய்ந்து போனேன். நீங்களும் படித்துப் பாருங்கள். 

படத்தின்மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் படியுங்கள்.





அடுத்த ஜிகினாவில்...
'ஹாய் மதன்'-இல் என் கேள்வியும் விகடனின் பெரும் மாற்றமும்!

இதையும் படிக்கலாம்:

ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன  சம்பந்தம்?

ஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்!

ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, January 20, 2013

ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!

ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!

தினமணி வெளீயீடாக,  "கதைக்கதிர்" என்கிற புதின (Novel) மாத இதழ் வெளிவந்தது. அவ்வப்போது படித்து நானும் சில விமர்சனங்கள், கேள்விகள் எழுதி அனுப்பி பிரசுரமும் ஆகின.  

ஒரு தடவை ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய "இவர்கள்" என்கிற நவீனம் படித்துவிட்டு, விமர்சனம் எழுதி அனுப்பியிருந்தேன். அடுத்த மாத கதைக்கதிரில், அயன்புரம் த.சத்தியநாராயணன் எழுதிய விமர்சனம் முதல் பரிசு பெற்றதென்றும் பரசலூர் ஆர்.நாகராஜன் எழுதிய விமர்சனம் இரண்டாம் பரிசு பெற்றதேன்றும் நான் எழுதியிருந்த விமர்சனம் மூன்றாம் பரிசு பெற்றதென்றும் குறிப்புடன் எனது விமர்சனம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. பரிசுத் தொகை விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.  

அந்த விமர்சனம்  இதோ: [படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கிப் படியுங்கள்]






இதழ் வெளிவந்து சுமார் 20 தினங்கள் சென்றபின் எம்.ஓ. மூலமாக பரிசுத்தொகை எனக்கு வந்து சேர்ந்தது. 

அந்த மாத ஆரம்பத்திலேயே அந்த மாதம்  வெளிவந்த கதைக்கு நான் விமர்சனம் அனுப்பியிருந்தேன். பரிசுப் பணம் வந்ததும் நன்றி தெரிவித்து கதைக்கதிர் முகவரிக்கு ஒரு கடிதமும் அனுப்பினேன்.  

அடுத்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து கதைக்கதிர் வெளிவருகிறதா என ஆவலுடன் எதிர்பார்த்தேன். 

ஆனால்      பரிதாபம்...    அதன்  பிறகு  அந்தக்    கதைக்கதிர்   மாத   இதழ்  வெளிவரவேயில்லை.


கதைக்கதிரில் வெளிவந்த மணிவண்ணன் பதில்கள் பகுதியிலிருந்து என் கேள்விகள்:

கேள்வி 1:


கேள்வி 2:


கேள்வி 3:


ஒரு விமர்சனக் கடிதம்:


மணிவண்ணன் என்கிற பெயரில் பதில்கள் தந்தவர் திரு. நா. பார்த்தசாரதி அவர்கள்!

அடுத்த ஜிகினாவில்...

"சங்கேத பாஷையில் "குமுதம் அரசு பதில்கள்!"

இதையும் படிக்கலாம்:


ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன  சம்பந்தம்?

ஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்!.

படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Thursday, January 17, 2013

ஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்!

ஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்!

நக்கீரன்  பதிப்பகத்திலிருந்து "உதயம்" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்ததே!

அந்த 'உதயம்' இதழின் ஆரம்பக் காலங்களில், 'வாசகர் கடிதம்' பகுதியில் ஒரு வாசகர்,  கடிதம் எழுதியிருந்தார்.   அதில், "உதயம் இதழில் சமையல் குறிப்புகள் பகுதி ஆரம்பிக்கலாமே?" என்று கேட்டிருந்தார்.

அந்த கடிதத்தின் கீழேயே, "இந்த கம்ப்யூட்டர் காலத்தில் சமையல் குறிப்பு வேண்டும் என்று கேட்கிறீர்களே? -ஆ-ர்." என்று ஆசிரியரும் பதில் கொடுத்திருந்தார்.

அதைப் பார்த்த நான், "கம்ப்யூட்டர் காலத்தில் சமையல் குறிப்பா என்று கேட்கும் நீங்கள் 'ஜாதகம் சாதகமா?' என்ற பகுதியை வெளியிடலாமா?" என்று பதில் கேள்வி ஒன்று கேட்டு, வாசகர் கடிதம் எழுதி அனுப்பினேன். அந்தக் கடிதம் அடுத்த மாத 'உதயம்' இதழிலேயே பிரசுரமானது. அந்தக் கடிதம் கீழே:

                                                                

ஆனால், எனது அந்தக் கேள்விக் கடிதத்திற்கு ஆசிரியர் பதில் எதுவும் தரவில்லை. ஆனாலும் அடுத்த மாதமே உதயம் இதழில் பதில் இருந்தது.

என்னவென்றால், அந்த 'ஜாதகம் சாதகமா?' பகுதியே நிறுத்தப் பட்டு விட்டது. ஆமாம்... அந்தப் பகுதி அதன்பின் வரவேயில்லை.

அடுத்த ஜிகினாவில்...
தினமணியின் கதைக்கதிர் இதழில் பரிசு பெற்ற எனது விமரிசனக்  கடிதம் பிரசுரமானது. அப்புறம் என்ன ஆனது?

-அ . முஹம்மது நிஜாமுத்தீன். 

இதையும் படிக்கலாம்:
ஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்!
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, December 5, 2010

ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

விகடன் வலையோசையில் வந்த இந்தப் பதிவை 
இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன  சம்பந்தம்?

சாவி அவர்களின் 'சாவி' வார இதழை 'அஷோக் 
உமா பப்ளிகேஷன்' வெளியிட்டுவந்தது. இன்னும்
திசைகள் (ஆசிரியர் மாலன்), மோனா (மாத நாவல்),
பூவாளி (மாத டைஜஸ்ட்) மற்றும் 'சுஜாதா' எனும்
மகளிர் இதழ் ஆகியனவற்றையும் இந்த பப்ளிகேஷன் 
வெளியிட்டது. 

பின்னாட்களில் இந்தப் பத்திரிகைகள் நிறுத்தப்பட்டாலும்
'பார்வதி பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்தினர் 'சுஜாதா'
என்ற பெயரில் மாத நாவல் பத்திரிகையை ஆரம்பித்தனர்.
('பூந்தளிர்' சிறுவர் இதழை தமிழில் வெளியிட்டவர்களும் 
இவர்களே!)

இந்த சுஜாதா இதழில் கேள்வி பதில் பகுதியும் உண்டு.
சிறப்பான ஒரு கேள்விக்கு பரிசும் உண்டு. 



ஒரு முறை நான் எழுதிய  கேள்வியையும் அதன்
பதிலையும் பிரசுரித்து, சிறந்த கேள்வி என்று எனது
கேள்விக்கு பரிசும் அறிவித்து கேள்வியின்மேலேயே 
எனது பெயர், ஊரை முழு முகவரியுடன் பிரசுரித்திருந்தார்கள்
இந்த மாத நாவல் இதழ் வெளியாகி சுமார் நான்கு
அல்லது ஐந்து நாட்களுக்குப்பின் எனக்கு ஒரு
'இன்லான்ட் லெட்டர்' வந்தது. திருப்பத்தூரிலிருந்து
குணசேகரன் அனுப்பியிருந்தார் என்று ஃபிரம் அட்ரஸ்
பார்த்து தெரிந்துகொண்டேன். அப்படி ஒரு
ந(ண்)பரை எனக்குத் தெரியாதே என்ற யோசனையுடனே 
கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். 

"அன்புள்ள குஷ்பு அவர்களுக்கு" என்று ஆரம்பமாக
எழுதியிருந்ததும் அதிர்ச்சியாகி மீண்டும் 'டூ அட்ரஸ்' 
பார்த்தேன். சரியாக என் முகவரிதான் எழுதப்பட்டிருந்தது.
'சரிதான்' என்று மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

அன்புள்ள குஷ்பு  அவர்களுக்கு,
எனது பெயர் பி.குணசேகரன்.
நான் உங்களது ரசிகன். உங்களது எல்லாப் படத்தையும்
பார்த்து விடுவேன். எந்தப் புதுப்படம் நீங்கள் நடித்து
வந்தாலும் பார்த்துவிடுவேன். முதல் நாளே
பார்த்துவிடுவேன். திரும்பத் திரும்பப் பார்ப்பேன். 
நீங்கள் அழகாயிருக்கிறீர்கள்.  நன்றாக நடிக்கிறீர்கள்.
உங்கள் பாட்டு கேசட் வாங்கி அடிக்கடி பாட்டு 
கேட்பேன். 

நான் சிவகங்கை பக்கத்தில் திருப்பத்தூர் என்ற ஊரில்
இருக்கிறேன். எட்டாம் வகுப்பு படிக்கிறேன். என் தம்பி
ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கும் உங்க 
படம்லாம் பிடிக்கும். எங்க அப்பா ரைஸ் மில் 
வச்சிருக்காரு. அவருக்கும் உங்க படம்லாம்
பிடிக்கும். அதனால், உங்க  ஃபோட்டோ ஒன்னு
கண்டிப்பா எனக்கு அனுப்பி வைக்கவும்.
இப்படிக்கு,
பி.குணசேகரன்.

இன்ட்லாந்து லெட்டர் உள்ளே உள்ள செய்தி எல்லாம் 
குஷ்புவுக்கு. மேலே அட்ரஸ் மட்டும் எனது பெயரும்
எனது முகவரியும்.  சிறிது யோசனை செய்த நான்
மறுபடியும் சுஜாதா இதழைத் தேடி எடுத்துப் பார்த்தேன்.

அட, முதல் கேள்வி நடிகை  குஷ்பு பற்றி ஒரு வாசகர்
எழுப்பிய கேள்வியும் அதற்கான பதிலும் முடிந்து 
அதைத் தொடர்ந்து எனது முழு முகவரி மற்றும்
கேள்வியும் பிரசுரமாகியிருந்தது. ஆக, என்
முகவரியைத்தான் குஷ்பு முகவரி என்று நினைத்து,
அந்தப் பையன் லெட்டரை  எனக்கு அனுப்பிவிட்டான்
என்று புரிந்து கொண்டேன். எனவே, அவனுக்கு பதில் எழுதினேன்.

   " தம்பி, அது குஷ்பு முகவரியில்லை;
   என்னுடைய முகவரி.   அதனால், நீ
   வேறு கடிதம் எழுதி குஷ்புவின் முகவரிக்கு
   அனுப்பு. 'நடிகை குஷ்பு, சென்னை ' என்று போட்டு அனுப்பு.
   அல்லது நானே விசாரித்து குஷ்புவின் முகவரி அடுத்த
   கடிதத்தில் எழுதி அனுப்புகிறேன்.  குஷ்பு ஃபோட்டோ
   என்னிடம் இல்லை; வேண்டுமெனில் என்னுடைய 
   ஃபோட்டோவை உனக்கு அனுப்பி  வைக்கிறேன்."
-என்று பதில் எழுதி 'நன்றாகப் படிக்கணும்' என
அறிவுரைகள் எழுதி, (மாட்டினாண்டா  ஓர் அடிமை!)
போஸ்ட் செய்துவிட்டு அதை மறந்தும்விட்டேன்.  

அடுத்த ஐந்தாறு தினங்களில் அந்தப் பையனிடமிருந்து
பதில் கடிதம் வந்தது.
"அன்பிற்கும் பரியாதைக்குமுரிய  அண்ணாவிற்கு,
(நல்ல பாசக்காரப்  பையனாயிருக்கானே!) 
வணக்கம்.  உங்க கடிதம் கிடைத்தது.
நடிகை குஷ்பு என்று நினைத்து உங்க முகவரிக்கு
கடிதம் அனுப்பிவிட்டேன். மன்னிக்கவும்.
(நல்ல பண்புள்ளவனாயிருக்கானே!)
குஷ்புவோட அட்ரஸ் அனுப்புறதா எழுதியிருந்தீங்க.
அப்படி குஷ்பு அட்ரஸ் அனுப்பாட்டியும் பரவாயில்லை. 
உங்க ஃபோட்டோவை தயவு செய்து அனுப்பிடாதீங்க.
இப்படிக்கு,
பி.குணசேகரன்."
(அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ....!.)

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.




படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, November 26, 2010

ஜிகினா 2: பத்து புரோட்டா பார்சல்!

பத்து  புரோட்டா பார்சல்!

பஸ் ஸ்டாண்ட் புத்தகக் கடையில் புத்தகங்கள்
புரட்டிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர்
வந்தார்.

"ரமேஷு! அரை கிலோ ஆட்டா மாவு பாக்கெட்
ஒன்னு கொடுங்க"  என்று கேட்டார்.

கடைக்காரர் ரமேஷ் (விழித்துவிட்டு) : " ரமேஷு என்
பேருதான். ஆனால், ஆட்டா மாவு, அது அடுத்த மளிகைக் கடை"

அந்த வாடிக்கையாளர் : "ஓ... ஆட்டா மாவு வாங்கினால்
ஒரு குங்குமம் பத்திரிகை ஃப்ரீன்னாங்களே, ரேடியோவிலே! "

ரமேஷ்: "தம்பி! சாருக்கு ஒரு குங்குமமும் ஒரு
ஆட்டா பாக்கெட்டும் குடுப்பா. சார், ஆட்டா மாவு
கேட்டிங்க, கொடுத்திட்டேன். அடுத்த வாரம் வந்து,
'10 புரோட்டா பார்சல்; அப்படியே சட்னி-சாம்பார்'
அப்படினுலாம் ஆர்டர் பண்ணாதீங்க. அப்புறம்,
மளிகைக் கடையை சொன்னமாதிரி காளியாக்குடி,
ஆரியபவன்லாம் என்னாலக் காட்டிக்கிட்டிருக்க முடியாது.
ஆட்டா பாக்கெட்ட எடுத்து , குடுத்து கையெல்லாம்
பிசுபிசுன்னு மாவு. அதுக்கு பதிலா தண்ணி பாக்கெட்டாவது
ஃப்ரியா கொடுத்திருக்கலாம்"

அதே வாடிக்கையாளர்: "அட தண்ணி பாக்கெட் ஃப்ரியா?"

ரமேஷ்: "சார் அது அடுத்த வாரம், இப்ப நீங்க போங்க சார்!"

நண்பர் சின்னஞ்சிறு கோபு சார் வருகிறார்.



சி.சி.கோபு: "என்ன என்னமோ தண்ணி பாக்கெட், அப்படின்னு
பேசினாமாதிரி இருந்ததே?"

நான்: "ஏன் சார், ஆட்டா மாவுலாம் ஃபிரியா
கொடுக்கறாங்களே, புக்கு வாங்கும்போது நோட் கொடுக்கலாமே?"

சி.சி.கோபு: " நோட்? கரன்சி நோட்? அப்படின்னா
புக்கு அசசடிக்கிறவங்களே நோட்டும் அச்சடிச்சா
அந்த மாதிரி பத்து ரூபாய்க்கு புக்கு வாங்கும்போது
இருபது ருபாய் நோட்டு இலவசமாய் கொடுக்கலாம்.
இல்லேன்னா அவிங்க நோட்டு எல்லாம் வேட்டுத்தான்.
அப்புறம் நடு ரோட்டுக்குத்தான் வரணும். நல்ல
ஐடியாக் கொடுக்கறிங்களே,!!!"

நான்: "ரமேஷ்! எனக்கு ஒரு ஆட்டா மாவு பாக்கெட்
குடுங்க!"

ரமேஷ்: "  'அதிரடி' பத்திரிகை வாங்கினால்
உருட்டுக்கட்டையால ஒரு அடி ஃப்ரியாம்; வேணுமா சார்?"

நான்: "  அதிரடி' பத்திரிகை மட்டும் கொடுங்க;  ஃப்ரி
நீங்களே வெச்சிக்குங்க..."

வாடிக்கையாளர்: " ரமேஷ், அந்த ஃப்ரி தண்ணி பாட்டிலு..."

ரமேஷ்: "அடுத்த வாரம் நானே எடுத்து வைக்கிறேன் சார்,
நீங்க இன்னும் கிளம்பலையா ?
(எங்களிடம் திரும்பி) சார், அப்பா வர்றாங்க..."

சி.சி.கோபு & நான்: " சரி அப்ப வர்றோம் நாங்க "

அரட்டை தொடர(முடிய)வில்லையே என்று வருத்ததோடு
புறப்பட்டோம் அங்கிருந்து.

டிஸ்கி: பெயர் குறிப்பிடப்பட்ட பத்திரிகை தவிர ,
மற்ற உரையாடல்கள் யாவும் இடுகையின் சுவை
கூட்டலுககான உண்மையற்ற உவமைகள்தான் அன்றி,
யாரையும் சம்பந்தப்படுத்தவில்லை.

ஜிகினா - 3-ல் : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?



படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Monday, November 1, 2010

ஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்!

ஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்!


 குமுதம் விலை 3 ரூபாய்! அடுத்தடுத்து 7 அல்லது 8
கடைகளில் விசாரித்துவிட்டேன். ஆனால் குமுதம்
கிடைக்கவில்லை. "வித்துப்போச்சு", "சரியாப்போச்சு" ,
தீர்ந்துப்போச்சு" என்றுதான் எல்லாக் கடைகளிலும்
சொன்னார்களே அன்றி, புத்தகம் எங்குமே கிடைக்கவில்லை.

அடுத்ததாய் ஒரு கடையில் விசாரித்துவிட்டு, கிடைக்காமல்
யோசனையாய் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியே
வந்துகொண்டிருந்த நண்பன், "என்ன நிஜாம் இங்கே
யோசனையா நிக்கிறமாதிரி தெரியுதே" என்று கேட்டான்.

அவனிடம் விவரத்தை சொன்னேன். அந்தக் கடையைத்
திரும்பி ஒரு முறை பார்த்துவிட்டு, "கடைக்காரர்கிட்டப்
போயி 'குமுதம் மட்டும் தாங்க' என்று கேள்" என்றான்.
நான் அவனை ஙே என்று விழித்துப் பார்த்தேன்.
"போ! மறுபடியும் போய் நான்  சொன்னமாதிரி கேள்" என்றான்.

நான் தயக்கமாய் கடைக்காரரிடம் சென்று, "குமுதம்
மட்டும் கொடுங்க" என்று கேட்டேன். அலமாரி
உள்ளிருந்து அடுக்கியிருந்த குமுதத்தில் ஒன்று
எடுத்து என்னிடம் கொடுத்தார்.

அட! வாங்கிப் பார்த்தேன். 'இந்த இதழுடன் விக்ஸ்
வேபோரப் ஒன்று இலவசம்' என்று அட்டையில்
போட்டிருந்ததைப் பார்த்து கடைக்காரரிடம், 'அண்ணே..."
என்று ஆரம்பித்தேன். "தம்பி, குமுதம் மட்டும் கேட்டிங்க.
வாங்கிட்டிங்கள்ல? போய்ட்டேயிருங்க!" என்று விரட்டினார்
அவர்.

நண்பன் விளக்கம் சொன்னான்.

"குமுதம் 3 ரூபாய். விக்ஸ் வேபோரப்பும் 3 ரூபாய்! குமுதம்
வித்தா 30 பைசா கிடைக்கும். விக்ஸ் டப்பா ஃப்ரியாக்
கொடுக்கணும். அதனால் குமுதத்தை உள்ள்ள்ளே
எடுத்து ஒளிச்சிட்டு, விக்ஸை எடுத்து ஷோகேஸ்ல
வரிசையா அடுக்கிட்டாங்க. குமுதம்
வித்துப்போயிடுச்சின்னு சொல்லிடுறாங்க. சிலபேரு
குமுதம் மட்டும் கொடுன்னு கேக்குறவங்களுக்கு அதை
மட்டும் கொடுத்திடறாங்க. விக்ஸ் வேபோரப்பை ஸ்டாக்
பண்ணிட்டு, அதை 3 ரூபாய்க்கு வித்திடுவாங்க. 2 ரூபாய்
70 பைசா அடக்கவிலை குமுதத்தவச்சி 6 ரூபாய்
சம்பாதிக்கிறாங்க. இதுதான் விஷயம்." இப்படி நண்பன்
சொன்னதைக் கேட்டு அசந்துபோனேன். (122% இலாபம்.)

அடுத்த முறை இலவசத்தைக் கொடுக்கும்போது,
பொருளைத் தனியாகக் கொடுக்காமல்,
பாலித்தீன் கவரில் குமுததையும் இலவசப்
பொருளையும் போட்டு பேக் செய்து கொடுத்து
விட்டது குமுதம். இப்போது வியாபாரிகள்
பாலித்தீன் கவரிலிருந்து எடுத்து குமுததை
ஒளித்து வைக்கவுமில்லை; இலவசப்
பொருளை ஷோகேசில் அடுக்கவுமில்லை.

காரணங்கள்:

1. குமுதத்தின் விலையோடு ஒப்பிடுகையில்
இலவசப் பொருளின் விலை மிகவும் மலிவு.

2. முன் நடந்த சம்பவத்தின்போதே கடைக்காரர்களை
குமுதம் ஏஜெண்ட் , இனி இதுபோல்
செய்யக்கூடாதென எச்சரிக்கை செய்துவிட்டார்.
பரிதாப வியாபாரிகள்!!!

ஜிகினா 2 -ல் '10 புரோட்டா பார்சல்!'


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...