விழுந்தா உங்க தலையிலதான் விழும்! [#116]
பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை!
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறைக்கு தமிழ்நாடு அரசு
விரைவுப் பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். நடுவில்
பாதையை ஒட்டிய இருக்கையில் இடதுபுறமாக நான்
அமர்ந்திருந்தேன். அதே பாதையை ஒட்டிய வலதுபுறமாக
ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
அவருக்கு மேலே சாமான்கள் வைக்கும் லக்கேஜ் கேரியரில்
சற்றே பெரியதொரு பேக் இருந்தது. நான் பார்க்கும்போது
அந்த பேக்கின் பாதிக்கும் அதிகமாக அந்த கேரியரிலிருந்து
வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
நான் உடனே அந்த பெரியவரிடம், "சார் அந்த பேக்
விழுந்திடுறமாதிரி இருக்கு சார்" என்றேன்.
அதற்கு அவர், "அந்த பேக் என்னுடையதில்லை" என்று
விரைப்பாகச் சொன்னார்.
"பேக் உங்களுடைதில்லைன்னே வச்சுக்குவோம்;
தலை உங்களுதுதானே? விழுந்தா உங்க தலையிலதான்
விழும். டேமேஜ் அந்த பேக்குக்கு இல்ல; உங்களுக்குத்தான்
பார்த்துக்குங்க" என்று நான் சொன்னேன்.
கடுப்போடு அவர் அண்ணாந்து பார்க்கும்போது சரியாக
அந்த பேக் அவர் மேல் விழுந்தது.
அவர் பார்த்துக் கொண்டே இருந்ததால், தலையில்
விழாமல் கையால் பிடித்துக் கொண்டார்.
பிறகு சிரித்துக் கொண்டே என்னிடம் சொன்னார்:
"தேங்க்ஸ் சார்" என்று.
எனக்கு ஓர் உதவி புரிந்த நிம்மதி!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
(நன்றி : பாக்யா)
