...பல்சுவை பக்கம்!

.

Tuesday, December 31, 2013

குண்டப்பா & மண்டப்பா (11) #119

2013 நிறைவுப் பதிவு!
குண்டப்பா & மண்டப்பா 11.

ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. குண்டப்பா இவரைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துக்கொண்டுவிட்டு, மண்டப்பாவிடம் ஒரு கேள்வி கேட்டார்.

குண்டப்பா: "மிஸ்டர் மண்டப்பா. உங்க குவாலிஃபிகேஷன்லாம் பார்த்தேன். இப்ப உங்களிடம் ஒரே ஒரு கஷ்டமான கேள்வி கேட்கவா? அல்லது ஈஸியான 100 கேள்விகள் கேட்கவா? உங்க சாய்ஸ் என்ன?"

மண்டப்பா: (மனதினுள்: 'அடடா வம்பாப் போச்சே, 100 ஈஸியான கேள்விதான், இருந்தாலும் ஒரு கேள்வி மட்டுமாவது பதில் தெரியாவிட்டால்கூட , வேலை கிடைக்காதே, இப்ப என்ன செய்யலாம்?')  "ம்க்கும்... சார் ஒரே ஒரு அந்தக் கஷ்டமான கேள்வியையே கேளுங்க சார்!" 

குண்டப்பா: "மிஸ்டர் மண்டப்பா! 6 தலை, 3 கண்கள்,  2 தும்பிக்கை, 18 கால்கள், 3 வால் கொண்ட ஒரு மிருகத்தின் பெயர் என்ன,  சொல்லுங்க!!!"

மண்டப்பா: (மனதினுள்: 'யார்ரா இவன் கிறுக்கனாயிருப்பாம்போலிருக்கே!!!') "சார், அந்த மிருகத்தின் பெயர் 'ஆதனை'!"  உற்சாகமாகப் பதில் சொன்னார் மண்டப்பா!

குண்டப்பா: "மிஸ்டர் மண்டப்பா, எப்படி 'ஆதனை'ன்னு நிச்சயமா சொல்றீங்க?"  

மண்டப்பா: "சார் ஒரே ஒரு கேள்வி, ஒரே ஒரு கஷ்டமான கேள்வி கேட்கறேன்னு சொல்லிட்டு, இப்ப ரெண்டாவதா கேள்வி கேட்குறீங்களே சார்?"

குண்டப்பா பதில் சொல்லமுடியாமல், அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரில் கையெழுத்துப் போட்டு நீட்டினார் மண்டப்பாவிடம்.
.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

குண்டப்பா; மண்டப்பா (10) #118

2013 நிறைவுப் பதிவு!
குண்டப்பா; மண்டப்பா 10

சில மாதங்களுக்கு முன் மண்டப்பாவை நோஸ்கட் செய்துவிட்டார்  குண்டப்பா. அவரை எப்படியாவது பழி வாங்கிடணும் என்று காத்திருந்தார் மண்டப்பா.

ஒரு நாள். அந்த ஊரில் ஒரு சிறப்பான நாள் ஒன்று வந்தது. அதாவது மிகப் பெரும் கண்காட்சி, சந்தை மற்றும் பல்வகை விளையாட்டுக்கள் - போட்டிகள் என்று ஊரே பரபரப்பாகயிருந்தது.

குண்டப்பாவும் மண்டப்பாவும் வேடிக்கை பார்க்க போனார்கள். அப்போது குண்டப்பாவுக்குத் தெரியாமல் பாட்டுப் போட்டியில் குண்டப்பாவின் பெயரைக் கொடுத்துவிட்டு வந்துவிட்ட மண்டப்பா எதுவும் அறியாதவர்போல் குண்டப்பாவுடன் சேர்ந்துகொண்டார்.திடீரென்று "பாட்டுப் போட்டியில் அடுத்து பாடவருகிறார் குண்டப்பா!" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் மைக்கில் அறிவிப்பு செய்பவர். குண்டப்பா முழி, முழியென்று விழிக்கவும் மண்டப்பாவோ குண்டப்பாவை நைசாகப் பேசி மேடைக்குக் கொண்டு சென்றுவிட்டார். வேறு வழியில்லாத நிலையில் (வழியைத்தான் மண்டப்பா அடைத்துக் கொண்டு நிற்கிறாரே!)  மேடையில் ஏறி ஏதோ ஒரு பாட்டையும் பாட ஆரம்பித்துவிட்டார் குண்டப்பா.

எப்படியோ பாடி முடித்து குண்டப்பா மேடையிலிருந்து இறங்குவதற்குள் மண்டப்பா, "ஒன்ஸ் மோர்!" என்று சப்தமாய் குரல் கொடுத்தார்.

மண்டப்பா குரல் விட்டதைத் தொடர்ந்து, மற்ற பார்வையாளர்களும் அவ்வாறே  கத்த ஆரம்பித்துவிட்டனர். இதை எதிர்பாக்கவில்லை குண்டப்பா. 'நம்ம பாட்டை இவ்வளவு பேர் விரும்பிக் கேட்கும்போது மறுபடியும் பாடுவோமே!' என்று மகிழ்ந்து அந்தப் பாட்டை திரும்பவும் பாடினார் குண்டப்பா.

பாடி முடிக்கவும் மறுபடியும் "ஒன்ஸ் மோர்" என்று குரல் விட்டனர் மண்டப்பாவும் மற்றவர்களும். "அடடே" என்று நினைத்துக் கொண்டு மறுபடியும் பாடினார் குண்டப்பா.


பாடி முடித்ததும் இப்பவும் அனைவரும் "ஒன்ஸ் மோர்" என்றனர். குண்டப்பா சலிப்புற்றவராக, "ஏன் இப்படி திரும்பத் திரும்பப் பாடச் சொல்றீங்க?" என்று கேட்டார். 


"நீங்க அந்தப் பாட்டை ஒழுங்காப் பாடாதவரைக்கும் உங்கள விடமாட்டோம்" என்று நக்கலாகச் சொன்னார் மண்டப்பா.

அதைக் கேட்டு மனம் நொந்துபோய், மண்டப்பாவைத் திட்டிக் கொண்டே வீடு திரும்பினார் குண்டப்பா.
.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, March 17, 2013

ரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி! #117

ரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி! #117ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப எங்கே இருக்கிறது?

**********************************************************************

பஸ்ஸில் அருகிலிருந்த பெரியவர் என்னிடம் கேட்டார்: "அங்கே 'கரம், சிரம், புறம் நீட்டாதீர்கள்'னு போட்ருக்காங்களே, அப்டின்னா என்னா தம்பி அர்த்தம்? "

நான், "அதுக்கு 'கை, தலை வெளியே நீட்டாதீங்க'ன்னு அர்த்தம் ஐயா" என்று பதில் சொன்னேன்.

"அடங்கொப்புரானே! நீங்க சொன்னமாதிரி தமிழ்ல்லயே எழுதியிருக்கலாமே" என்றார் அந்தப் பெரியவர்.

அதானே!


*********************************************************************

ஒரே கால கட்டத்தில் 2, 3 பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் இப்போது (10.40PMயிலல்ல; இக்காலத்தில்) என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

********************************************************************

"எங்கும் எதிலும் கலப்படம் - அதை

எடுத்துச் சொன்னால்தான் புலப்படும்"


********************************************************************

" தயிர் எடுங்க மோர, பால உண்ணுங்க...  - மேனி

தங்கமா வளரும் இத செய்து பாருங்க...! "

********************************************************************

நெஸ்கஃபேயின் "சன் ரைஸ்", தி.மு.க.வின் மற்றுமொரு தயாரிப்பா? #நான் ரொம்ப வெகுளி
**********************************************************************
ஆதி இறையின் தூதர் நபி நாயகம் - அருள்

நீதி நிறைந்த மக்கா அவரின் தாயகம்.

-'பொதிகை'யில் இஸ்லாமியப் பாடல்கள் 

********************************************************************

ஊருக்கு ஊர் "ஆரிய"பவன் இருக்கு. ஒரே ஒரு "திராவிட"பவன் கூட இல்லையே? #திராவிட கட்சிகளே, உங்களுக்குத்தான் இந்தக் கேள்வி! #கிளப்பிவுடுடோய்...
*******************************************************************

"ரயில் கட்டண உயர்வு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது" -ஜெயலலிதா. #பால் விலை, பேருந்து கட்டணம், மின் கட்டணம் எல்லாத்தையும் உயர்த்தி நான்தான் வெந்த புண்ணை ஏற்படுத்திட்டேனே, அதிலே மேலும் வேல் பாய்ச்சலாமா? -ஜெ. மனதில் நினைத்தல்.
*********************************************************************

"இந்(த புத்)தாண்டிலிருந்து சிகரெட் பிடிப்பதையும் பொய் சொல்றதையும் நீ விட்டிறணும்" என்றேன் நண்பனிடம்.

"சிகரெட் பிடிக்கிறதை இந்த ஆண்டே விட்டிர்றேன். பொய் சொல்றதை அடுத்த ஆண்டு விட்டிர்றேன்" என்கிறான் நண்பன்!
#தெளிவாத்தான் இருக்கான்.

**********************************************************************

எங்கள் அக்காளின் 2 வயது பேரன் தனது சின்ன அண்ணனை 'அண்ணன்' என்கிறான். பெரிய அண்ணனை 'அண்ணண்ணன்' (அண்ணனின் அண்ணன்) என்று கூப்பிடுகிறான்.
********************************************************************** 
இன்றைய (அ)லட்சியம் - நாளைய ஏ(மா)ற்றம்
**********************************************************************
இன்றைய (அ)லட்சியம் - நாளைய (ஏ)மாற்றம்

**********************************************************************
வீட்டிலிருந்து வெளியேறும் பெரியவர் முதுகில் 2012. வீட்டில் நுழையும் சிறுவன் முதுகில் 2013. 'இன்று புத்தாண்டு பிறந்தது'. தந்தி கார்ட்டூன்
**********************************************************************
கம்னாட்டி சில்கஸ், நொன்னை சில்க்ஸ் அப்டின்னு பஸ்ஸு சைடு கண்ணாடி முழுசும் விளம்பர போஸ்டர ஒட்டிர்றானுங்க.
பஸ்ல ஸடாண்டிங்ல வரும்போது நாம இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் பார்க்க முடியாம தடுமாற வேண்டியிருக்கு.
எவன் கொ(கெ)டுத்த ஐடியாடா இது?

***********************************************************************

கொஞ்சூண்டு ஜலதோஷம் எனக்கு. #இன்று 'சளி'க்கிழமை!
***********************************************************************

இந்துக்கள் கொண்டாடும் துளசியும் இஸ்லாம் வலியுறுத்தும் கருஞ்சீரகமும் புற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவை -Prof.பரத் அகர்வால்.
***********************************************************************


இந்தியர்கள்மட்டும் மலக்குடல் புற்று நோயால் பாதிக்கப்படாததற்கு உணவில் இந்தியர்கள் சேர்க்கும் மஞ்சளின் மகிமையே காரணம் -Dr. கு.சிவராமன்.

***********************************************************************
திரு.நாராயணசாமி-யாருக்கு ஒரு கேள்வி: 'ஒரு 15 நாள்' என்பது குத்துமதிப்பாக எத்தனை நாட்கள்னு சொல்லமுடியுமா?

***********************************************************************
அம்மாவுக்கு ஒரு கேள்வி: மலிவு விலை உணவகங்களுக்கு என்ன பெயர் வைக்கிறீங்க? 'மிஸ் அம்மா மெஸ்'?

***********************************************************************

கலைஞரய்யாவுக்கு ஒரு கேள்வி: '2ஆம் செம்மொழி மாநாடு' இனி எப்ப(டி) நடத்துவீங்க?
**********************************************************************

மாதம்தோறும் டீசல் விலை 50பை. உயரும் -பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி # இனி வீ.மொய்லியை FB, ட்வீட்டரில் மாதம்தோறும் கலாய்க்கலாம்
**********************************************************************

 கயவன், கொலைஞன் கோட்சேவால், காந்திஜி கொல்லப்பட்ட கரு(ப்பு)நாள் 30.01.1948
**********************************************************************

ஏமாத்துறவன் 10% நல்லவனா நடிச்சா, நீங்க மேலும் 90% நல்லவனா அவனை நம்புறீங்க #ஏமாறாதீங்க #நீயா, நானா.?
**********************************************************************
சரித்திரம் படைக்கும் மனிதனுக்கு அ(ந்த சரித்திரத்)தை எழுத நேரமி(ருப்பதி)ல்லை. #ப(பி)டித்தது

***********************************************************************
சின்ன ஊர்லருந்து பெரிய ஊருக்குப் போற சாலை, பெரிய ஊர்லருந்து சின்ன ஊருக்கும் வரும்ல? -விளம்பரத்தில் பிடித்த வாசகம்
***********************************************************************
1.12.2012 சனி. "ஸ்கூல் போகலயா"ன்னேன் அக்கா பேரனிடம். "செகண்ட் சார்ட்டர்டே, ஸ்கூல் லீவு"ன்றான் கூலாக. 1ந் தேதியே 2ஆவது சனி! புதுசாயிருக்கே!
***********************************************************************
நான்: "என்ன படிச்சே?"
அவன்: "+2 படிச்சேன்."
"முடிச்சியா?"
"முடிச்சேன்."
"மேலே படிக்கலையா?"
"படிக்கலை."
"ஏன்?"
"பிடிக்கலை."

***********************************************************************

'ரோஸ் மில்க்' என்பதற்கு "ரோஜா பால்" என்றுதான் நான் சொல்றது வழக்கம்.
***********************************************************************

எங்கள் தாத்தா, "அன்புக்கு'க்கு'றிய" என்று கடிதத்தை ஆரம்பிப்பார். கேட்டால் சொல்வார்: 'மிகுந்த அன்புக்குரிய' என்று அர்த்தமாம்.

***********************************************************************
சென்ற ஆண்டு ரயில் தண்டவாளத்தை கடந்தபோது 2637 பேர் சாவு -செய்தி # தண்டவாளத்துல க(ந)டக்காதீங்கப்பா

***********************************************************************

பழைய உலகம் அழிந்தது. "புதியதோர் உலகம் செய்வோம்!" இன்று வெற்றிகரமான 2ஆம் நாள். (22/12/2012)

***********************************************************************

ஒருவன்: "என் ஜாதகப்படி எனக்கு அறிவு ஜாஸ்தி."
மற்றவன்: "அதனாலதான் நான் ஜாதகத்தையே நம்பறதில்லை."

***********************************************************************

 காற்று வாங்கப் போனேன்; காற்று வாங்கி வந்தேன் #கவிதைன்னு நினைக்கிறேன்.

***********************************************************************
கையில் டிக்கெட் கட்டுகளோடு "டிக்கெட், டிக்கெட்" என்று கூவிக் கொண்டே வருகிறார் கண்டக்டர்.
ஒரு குட்டிப் பாப்பா அம்மாவிடம் சொல்லுது: "இங்கே பாரும்மா அவர. கையில இவ்வளவு டிக்கெட் வச்சிக்கிட்டு நம்மகிட்ட  டிக்கெட் கேட்குறாரு"

***********************************************************************

"வெஜிடேரியன் சாப்பிடுவேன் நான். நீங்க வெஜிடேரியனா, நான் -வெஜிடேரியனா" கேட்டார் நண்பர். "நான் ரெண்டுமே சாப்பிடுவேன்" என்றேன் #உண்மை
***********************************************************************

எனது முகநூல் சுவரிலிருந்து சிலவற்றை இங்கே தொகுத்துளித்தேன். நன்றி!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன். ***************************************
.படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, March 10, 2013

விழுந்தா உங்க தலையிலதான் விழும்! [#116]


விழுந்தா உங்க தலையிலதான் விழும்! [#116]

பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை!

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறைக்கு தமிழ்நாடு அரசு
விரைவுப்  பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். நடுவில் 
பாதையை ஒட்டிய இருக்கையில் இடதுபுறமாக நான் 
அமர்ந்திருந்தேன். அதே பாதையை ஒட்டிய வலதுபுறமாக
ஒருவர் உட்கார்ந்திருந்தார்.

அவருக்கு மேலே சாமான்கள் வைக்கும் லக்கேஜ் கேரியரில்
சற்றே பெரியதொரு பேக் இருந்தது. நான் பார்க்கும்போது
அந்த பேக்கின் பாதிக்கும் அதிகமாக அந்த கேரியரிலிருந்து
வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

நான் உடனே அந்த பெரியவரிடம், "சார் அந்த பேக்
விழுந்திடுறமாதிரி இருக்கு சார்" என்றேன். 


அதற்கு அவர், "அந்த பேக் என்னுடையதில்லை" என்று
விரைப்பாகச் சொன்னார்.

"பேக் உங்களுடைதில்லைன்னே வச்சுக்குவோம்;
தலை உங்களுதுதானே? விழுந்தா உங்க தலையிலதான்
விழும். டேமேஜ் அந்த பேக்குக்கு இல்ல; உங்களுக்குத்தான்
பார்த்துக்குங்க" என்று நான் சொன்னேன்.

கடுப்போடு அவர் அண்ணாந்து பார்க்கும்போது சரியாக
அந்த பேக் அவர் மேல் விழுந்தது.
அவர் பார்த்துக் கொண்டே இருந்ததால், தலையில்
விழாமல் கையால் பிடித்துக் கொண்டார்.
பிறகு சிரித்துக் கொண்டே என்னிடம் சொன்னார்:
"தேங்க்ஸ் சார்" என்று.

எனக்கு ஓர் உதவி புரிந்த நிம்மதி!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன். 

(நன்றி : பாக்யா)

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Wednesday, February 13, 2013

குண்டப்பா - மண்டப்பா 9

குண்டப்பா - மண்டப்பா 9 #115

மண்டப்பாவைத் தேடி குண்டப்பா போனபோது மண்டப்பா அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் குளித்துக் கொண்டிருந்தார். மண்டப்பாவின் மனைவி மண்டப்பா குளித்துக் கொண்டிருப்பதாகவும் 'போய் பாருங்கள்' என்றும் சொன்னாள்.

குண்டப்பா போனதும் கேட்டார்: "மண்டப்பா! இப்பத்தான் குளிக்க ஆரம்பிச்சியா?" என்று.

மண்டப்பாவும் பதில் சொன்னார் : "ஆமாம், இப்பத்தான் குளிக்க ஆரம்பிச்சேன்" என்று.

குண்டப்பா நக்கலாக சொன்னார் : " அட, இப்பத்தான் குளிக்கவே ஆரம்பிச்சியா? நான்லாம் பிறந்ததிலிருந்தே குளிக்க ஆரம்பிச்சிட்டேன்"

இதைக் கேட்டு கடுப்பான மண்டப்பா, எப்படியாவது குண்டப்பாவைப் பழி வாங்கணும்னு யோசிச்சிட்டிருக்கார்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Wednesday, February 6, 2013

ஜிகினா 8 : "பிக்பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?" 'கல்கி'யில்!

ஜிகினா 8 : "பிக்பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?" 'கல்கி'யில்!

முன் குறிப்பு: கல்கி இதழில் 'ட்டீ.வி., வீடியோ பக்கங்கள்' என்ற போட்டியில் எனது கட்டுரை வெளியானது. அந்த கல்கி 09.07.1989 இதழ் உங்களிடம் இருந்தால் எனக்குத் தெரியப் படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 நானும் எங்கள் சித்தப்பாவும் பாட்டியும் ஆக 3 பேர்கள், திருவண்ணாமலையிலிருந்து, மயிலாடுதுறைக்கு 'பட்டுக்கோட்டை அழகிரி'
பேருந்தில் வந்தோம். பேருந்து பயணக் கட்டணம் ஒருவருக்கு ரூபாய் 15. மூவருக்கும் டிக்கெட் வாங்கியபோது எங்களிடமிருந்த எவர்சில்வர் பாத்திரங்கள் கொண்ட மூட்டைக்கும் டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறினார் கண்டக்டர்.  

நாங்கள் 100 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியபோது, எங்கள் மூவருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு லக்கேஜுக்கான டிக்கெட் கொடுக்காமல் சென்றுவிட்டார். மீதம் அப்புறம் தருவதாகக் கூறினார். 

பிறகு டிக்கெட் கொடுத்துக் கொண்டு வந்தபோதும் கேட்டதற்கு, டிக்கெட் தர்றேன் என்று கூறி சென்று விட்டார். 

கடைசியாக, மயிலாடுதுறைக்கு வந்து இறங்கும்போது, மீதி பணம் 40 ரூபாயைத் தந்துவிட்டு, விரைவாக டைம்கீப்பர் அலுவலகம் நோக்கி சென்று விட்டார்; டிக்கெட் தரவேயில்லை. 

அப்போது கல்கியில் வெளியாகி வந்து கொண்டிருந்த  'வாசகர் குமுறல்' பகுதிக்கு இதை எழுதி அனுப்பியிருந்தேன். அந்தக் கடிதம் பெரிய எழுத்துக்களில், 'பிக் பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?' என்ற தலைப்புடன் பத்திரிகையில் வெளிவந்தது. 

அதைப் பார்த்ததும் மனதிற்கு சிறிது ஆறுதலாக இருந்தது.  இரு தினங்களில், கல்கி இலவசப் பிரதி, தபாலில் வந்தது. 

சுமார் 3 வாரங்கள் சென்றபின், எனது கடிதத்தைப் பிரசுரித்தமைக்கான சன்மானமும் எம்.ஓ. மூலம் வந்தடைந்தது. ஆக, கண்டக்டரிடம் விட்ட பணம் ரூபாய் 15-ஐப் பற்றி மனதினுள் இருந்து வந்த மனக் குமுறல் கல்கியின் வழியாக, அழிந்து மனம் அமைதியானது.

நன்றி கல்கி!

இதோ அந்தக் கடிதம்:

படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கிப் படியுங்கள்.

அடுத்த ஜிகினாவில்...

பழக்க தோஷத்தில் டைப்பி விட்டேன். அடுத்த ஜிகினா கூடிய விரைவில் வரும்.

இறைவன் நாடினால்... அடுத்தது... 'குண்டப்பா; மண்டப்பா!'

இதையும் படிக்கலாம்:


ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Monday, January 28, 2013

ஜிகினா 7: 'ஹாய் மதன்'-இல் என் கேள்வியும் விகடனின் பெரும் மாற்றமும்!

ஜிகினா 7: 'ஹாய் மதன்'-இல் என் கேள்வியும் விகடனின் பெரும் மாற்றமும்!

முதலில் விகடனில் வந்த என் கேள்வியையும் ஹாய் மதனின் பதிலையும் பார்த்து விடுவோம்:

 கேள்வி: 101 மாடி, 105 மாடி என்று கட்டடங்களின் உயரம் அதிகரிக்க, அதிகரிக்க அந்தக் கட்டடத்தின் பாதுகாப்புத் தன்மை குறையும் அல்லவா?

 படத்தின்மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் படிக்கலாம்.

பதில்: கட்டடக் கலை அட்டகாசமாக முன்னேறிவிட்டது. சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள அலுவலகக் கட்டடத்தின் உயரம் 1500 அடிகள். மிக மிக உயரமான கட்டடம்  (காற்றின் அழுத்ததைச் சமாளிக்க) இலேசாக அசையும்படியாகக்கூட இப்போது கட்டுகிறார்கள். உள்ளே இருப்பவர்களுக்குத் தெரியாது. இருப்பினும் பின்லேடன்கள் இருக்கும்வரையில் ஆபத்துதான்.

அடுத்து...
விகடனின் பெரிய மாற்றம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், என் கேள்வி வெளியான 23.07.2008 இதழில் இருந்துதான் ஆனந்த விகடன் ரூபாய் 17 விலையில் பெரிய அளவு இதழாக மாற்றப்பட்டது. ஹி... ஹி...

அடுத்த ஜிகினாவில்...
"பிக்பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?" 'கல்கி'யில்!

இதையும் படிக்கலாம்:

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Wednesday, January 23, 2013

ஜிகினா 6: சங்கேத பாஷையில் 'குமுதம்' அரசு பதில்கள்!

ஜிகினா 6: சங்கேத பாஷையில் 'குமுதம்' அரசு பதில்கள்!

குமுதம் அரசு பதில்கள் பகுதிக்கு ஒரு கேள்வி எழுதி அனுப்பியிருந்தேன். இரு வாரங்களில் அந்தக் கேள்வி குமுதத்தில் பிரசுரம் ஆனது. இதுதான் அந்தக் கேள்வி:

 தான் சொல்ல வந்த செய்தியை, விஷயத்தை, தகவலை, 
நேரடியாக, சுற்றி வளைக்காமல், தேவையற்ற 
வார்த்தைகளைச் சேர்க்காமல் சொல்வதை, கூறுவதை, 
உரைப்பதை விட்டுவிட்டு, ஒரே பொருளை, ஒரே 
அர்த்தத்தைத் தரும் பல்வேறு சொற்களை, மிகவும் 
கஷ்டத்துடன் சேகரித்து, கடினப்படுத்திக் கோர்த்து 
வார்த்தைப் பின்னல் போடும், வாய்ச் சவடால் இடும் 
ஒரு சிலரைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
என்ன எண்ணுகிறீர்கள்?

இந்தக் கேள்விக்கு என்ன பதில் தந்தார் அரசு தெரியுமா? பதில் இதோ:

தெ. நி. வை. சு. வே.

இந்தப் பதிலைப் படித்து மண்டை காய்ந்து போனேன். நீங்களும் படித்துப் பாருங்கள். 

படத்தின்மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் படியுங்கள்.

அடுத்த ஜிகினாவில்...
'ஹாய் மதன்'-இல் என் கேள்வியும் விகடனின் பெரும் மாற்றமும்!

இதையும் படிக்கலாம்:

ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன  சம்பந்தம்?

ஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்!

ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, January 20, 2013

ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!

ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!

தினமணி வெளீயீடாக,  "கதைக்கதிர்" என்கிற புதின (Novel) மாத இதழ் வெளிவந்தது. அவ்வப்போது படித்து நானும் சில விமர்சனங்கள், கேள்விகள் எழுதி அனுப்பி பிரசுரமும் ஆகின.  

ஒரு தடவை ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய "இவர்கள்" என்கிற நவீனம் படித்துவிட்டு, விமர்சனம் எழுதி அனுப்பியிருந்தேன். அடுத்த மாத கதைக்கதிரில், அயன்புரம் த.சத்தியநாராயணன் எழுதிய விமர்சனம் முதல் பரிசு பெற்றதென்றும் பரசலூர் ஆர்.நாகராஜன் எழுதிய விமர்சனம் இரண்டாம் பரிசு பெற்றதேன்றும் நான் எழுதியிருந்த விமர்சனம் மூன்றாம் பரிசு பெற்றதென்றும் குறிப்புடன் எனது விமர்சனம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. பரிசுத் தொகை விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.  

அந்த விமர்சனம்  இதோ: [படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கிப் படியுங்கள்]


இதழ் வெளிவந்து சுமார் 20 தினங்கள் சென்றபின் எம்.ஓ. மூலமாக பரிசுத்தொகை எனக்கு வந்து சேர்ந்தது. 

அந்த மாத ஆரம்பத்திலேயே அந்த மாதம்  வெளிவந்த கதைக்கு நான் விமர்சனம் அனுப்பியிருந்தேன். பரிசுப் பணம் வந்ததும் நன்றி தெரிவித்து கதைக்கதிர் முகவரிக்கு ஒரு கடிதமும் அனுப்பினேன்.  

அடுத்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து கதைக்கதிர் வெளிவருகிறதா என ஆவலுடன் எதிர்பார்த்தேன். 

ஆனால்      பரிதாபம்...    அதன்  பிறகு  அந்தக்    கதைக்கதிர்   மாத   இதழ்  வெளிவரவேயில்லை.


கதைக்கதிரில் வெளிவந்த மணிவண்ணன் பதில்கள் பகுதியிலிருந்து என் கேள்விகள்:

கேள்வி 1:


கேள்வி 2:


கேள்வி 3:


ஒரு விமர்சனக் கடிதம்:


மணிவண்ணன் என்கிற பெயரில் பதில்கள் தந்தவர் திரு. நா. பார்த்தசாரதி அவர்கள்!

அடுத்த ஜிகினாவில்...

"சங்கேத பாஷையில் "குமுதம் அரசு பதில்கள்!"

இதையும் படிக்கலாம்:


ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன  சம்பந்தம்?

ஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்!.

படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Thursday, January 17, 2013

ஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்!

ஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்!

நக்கீரன்  பதிப்பகத்திலிருந்து "உதயம்" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்ததே!

அந்த 'உதயம்' இதழின் ஆரம்பக் காலங்களில், 'வாசகர் கடிதம்' பகுதியில் ஒரு வாசகர்,  கடிதம் எழுதியிருந்தார்.   அதில், "உதயம் இதழில் சமையல் குறிப்புகள் பகுதி ஆரம்பிக்கலாமே?" என்று கேட்டிருந்தார்.

அந்த கடிதத்தின் கீழேயே, "இந்த கம்ப்யூட்டர் காலத்தில் சமையல் குறிப்பு வேண்டும் என்று கேட்கிறீர்களே? -ஆ-ர்." என்று ஆசிரியரும் பதில் கொடுத்திருந்தார்.

அதைப் பார்த்த நான், "கம்ப்யூட்டர் காலத்தில் சமையல் குறிப்பா என்று கேட்கும் நீங்கள் 'ஜாதகம் சாதகமா?' என்ற பகுதியை வெளியிடலாமா?" என்று பதில் கேள்வி ஒன்று கேட்டு, வாசகர் கடிதம் எழுதி அனுப்பினேன். அந்தக் கடிதம் அடுத்த மாத 'உதயம்' இதழிலேயே பிரசுரமானது. அந்தக் கடிதம் கீழே:

                                                                

ஆனால், எனது அந்தக் கேள்விக் கடிதத்திற்கு ஆசிரியர் பதில் எதுவும் தரவில்லை. ஆனாலும் அடுத்த மாதமே உதயம் இதழில் பதில் இருந்தது.

என்னவென்றால், அந்த 'ஜாதகம் சாதகமா?' பகுதியே நிறுத்தப் பட்டு விட்டது. ஆமாம்... அந்தப் பகுதி அதன்பின் வரவேயில்லை.

அடுத்த ஜிகினாவில்...
தினமணியின் கதைக்கதிர் இதழில் பரிசு பெற்ற எனது விமரிசனக்  கடிதம் பிரசுரமானது. அப்புறம் என்ன ஆனது?

-அ . முஹம்மது நிஜாமுத்தீன். 

இதையும் படிக்கலாம்:
ஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்!
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Thursday, January 10, 2013

இருவர் ! #109

இருவர் !உக்காஸ் -  அஃப்ராஜ் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். பெரியவர்களாகிய பின்னும் அவர்களின் நட்பு தொடர்ந்தது. இருவரும் நல்ல வசதிகளோடு வாழ்ந்து வந்தார்கள்.

இப்படி இருக்கும்போது ஒரு தடவை, உக்காஸ் அவரது  ஒரு நிலத்தை விற்கும்போது, அஃப்ராஜ் அதை நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டார்.

சில மாதங்கள் சென்ற பின், அந்த நிலத்தில் பயிரிடுவதற்காக நிலத்தை உழுதார், அஃப்ராஜ். அப்போது, ஏர் கலப்பையின் கீழே "டங்" என்றொரு சப்தம் கேட்டது. அஃப்ராஜ் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது, நிலத்தின் சில அடிகள் கீழே ஒரு வெங்கலப் பானை இருக்கக் கண்டார்.

ஆச்சரியத்தோடு பானையை எடுத்துப் பார்த்தார். கனமாக இருந்தது. 'உள்ளே என்ன இருக்கிறது' என்கிற ஆவல் கொண்டு திறந்து பார்த்தார். பானை  முழுவதும் தங்க நகைகள் இருந்தன.


 'ஆஹா இது நண்பர்  உக்காஸ் இடமிருந்து வாங்கிய நிலத்தில் இருந்து கிடைத்திருப்பதால் இந்தப் புதையல் உக்காஸுக்குரியதே; அதனால் இதை அவரிடமே ஒப்படைத்து விடுவோம்' என்று எண்ணி, அந்தப் பானையுடன் உக்காஸ் வீட்டிற்குச் சென்றார் அஃப்ராஜ்.

நம்  நாட்டில்  உள்ளதுபோல் நிலத்தில் கிடைக்கும் பு  தையல்    அரசாங்கத்திற்கு    சொந்தம் என்கிற சட்டம் எதுவும்   அவர்கள் வசித்த நாட்டில் கிடையாது.

உக்காஸை சந்தித்து விவரம் சொன்னார் அஃப்ராஜ். ஆனால் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார் உக்காஸ். "நான் நிலத்தை  விற்று விட்டேன். அதனால் அதிலிருந்து கிடைக்கும் அனைத்துமே உனக்கே சொந்தம். நான் பெற்றுக் கொள்ள மாட்டேன்" என்று, பிடிவாதமாக கூறி விட்டார். 


என்ன செய்வது என்று யோசித்த அஃப்ராஜ், உடனடியாக அந்த நாட்டின் நீதிபதியிடம் சென்று, விபரம் கூறி, இதை உக்காஸ் இடம் ஒப்படைத்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.

உக்காஸை அழைத்துவரச் சொல்லி ஊழியரை அனுப்பினார் நீதிபதி. 

"நிலம் மட்டும்தான் நான் வாங்கினேன். அதனுள்ளே இருந்த புதையலை உக்காஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்கிறார் அஃப்ராஜ்.

"நிலத்தை நான் அஃப்ராஜ் இடம் விற்று விட்டதால், அதில் இருக்கும் புதையலும் அவருக்கே சொந்தம்" என்கிறார் உக்காஸ்.


யோசனை செய்த நீதிபதி உக்காஸைப் பார்த்து கேட்டார்: "உங்களுக்கு பிள்ளைகள் யாரும் இருக்கிறார்களா?"

உக்காஸ் சொன்னார்: "எனக்கு திருமண வயதில் ஓர்  ஆண்மகன் இருக்கிறான்"

நீதிபதி அஃப்ராஜைப் பார்த்துக் கேட்டார்: "உங்களுக்குப் பிள்ளகள் உண்டா?"

அஃப்ராஜ் சொன்னார்: "எனக்கு திருமண வயதில் ஒரு பெண்மகள் இருக்கிறாள்"


நீதிபதி முடிவாய் அவர்களிடம் சொன்னார்: "அந்த ஆண்மகனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் செய்வித்து, அவர்களின் மணவாழ்விற்கு இந்தப் புதையலை மணக்கொடையாக கொடுத்து விடுங்கள். இதில் உங்கள் இருவருக்கும் நல்ல தீர்வு இருக்கிறது. சரியென்றால் மணமக்களாகப் போகும் இருவரின் சம்மதத்தையும் கேட்டு திருமணம் செய்துவிடுங்கள்"

இந்த யோசனை இருவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அண்மகனுக்கும் பெண்ணுக்கும் திருமணம் பெரியோர்களின்  வாழ்த்துக்களோடு நடந்தேறியது. மணமக்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்தார்கள்.  

நாமும் வாழ்த்துவோமே! 

குறிப்பு: ஒரு சொற்பொழிவில் நான் கேட்டது இந்தக் கதை. பிடித்ததால் பகிர்ந்தேன்.
. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...