...பல்சுவை பக்கம்!

.

Saturday, August 29, 2020

மிஸ்டர் தாம்பு (சிறுகதை) #149செப்டம்பர் 2020 மாதத்தின் 'தேன் சிட்டு' மின்னிதழில் வெளியான நான் எழுதிய சிறுகதை!
* * *

ஓடி ஓடி வேலை செய்யோணும்!

(நகைச்சுவை சிறுகதை)

-நீடூர்
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

சிற்றுந்து வந்து நின்றதும்
தாம்பு ஏறி காலியாய் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.

ஓட்டுனர் காலையும் ஆட்டிக் கொண்டிருந்தார்! கையையும் ஆட்டிக் கொண்டிருந்தார்! தலையையும் ஆட்டிக் கொண்டிருந்தார். கண்டக்டர் வந்ததும் டிக்கெட் வாங்கினான்.

ஸ்பீக்கரில் எம்.எஸ்.வி. 'பயணம் பயணம் பயணம்' என்று திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தார். 'அட இப்ப மினி பஸ்ல
இந்தப் பாட்டெல்லாம் போடுறாங்களா?' என நினைத்துக் கொண்டே
இருக்கைக்கு மேலே பார்த்தான், 'பூவையர்' என்று எழுதியிருந்தது!
' பூவை ஏன் வையணும்?' என்று சந்தேகம் வந்தது. 'அடடா, இது பெண்கள் உட்கார்ர சீட்டுடோய்' என்பது மூளையில் உறைக்க, மாறி உட்காரலாம் என எழுந்தான்.

அப்போது இடம் தேடி வந்த ஒரு நடுத்தர வயது ஆசாமி, இவனருகே வந்ததும், இவன் தோளை அழுத்தி, 'பரவாயில்லை உட்காருங்க சார்!' என்றான்.
'அடடே, துணைக்கு ஆள் வந்திடுச்சி' என்று நிம்மதி அடைந்தான் தாம்பு.

அப்போது முன் சீட்டின் பின் பக்கத்தில் இவனுக்கு முன்பாக  சுருட்டி வைக்கப் பட்டிருந்த ஒரு சீட்டைப் பார்த்தான் தாம்பு. அதை எடுத்து பி(வி)ரித்துப் படித்தான். அது ஒரு விளம்பர பிட் நோட்டீஸ்.
'பூ, மலர் அலங்காரத் தேவைகளுக்கு தொடர்பு கொள்ளவும்' என்று போட்டு முகவரி, தொலைபேசி எண்கள் அனைத்தும் அதில் குறிக்கப் பட்டிருந்தன.

அதைப் படித்து குழம்பிப் போய் பக்கத்து இருக்கை ஆசாமியைப் பார்த்தான்.

நோட்டீஸைப் பார்த்துவிட்டு அந்த ஆசாமி, "சார், அலங்காரம் ஆர்டர் பண்ணனுமா? என் ஃபோன்ல கால் பண்ணவா?" என்று செல்ஃபோனை எடுத்தான். 'விட்டால், கால் டாக்சியில் அந்த அட்ரஸுக்கே கொண்டுபோய் விட்ருவான் போல' என பயந்த தாம்பு, "இல்லை, இதிலே 'பூ மலர்
அலங்காரம்'னு போட்ருக்கே, பூ-ன்னா என்ன?
மலர்-னா என்ன?"
என்று கேட்டான்.

அந்த ஆசாமி பலமாக சிரித்துக் கொண்டே,
"இது தெரியாதா?
பூக்குறது 'பூ'.
மலர்-ரது 'மலர்'. அவ்வளவுதான்!" என்று விளக்கம் கொடுத்தான்.

நம்ம தாம்பு அரண்டுபோய் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே, 'என்னென்ன பொருட்கள் வாங்கணும்' என்று லிஸ்ட் மனனம் செய்ததை திரும்ப சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

'காய்கறிலாம் வாங்கணும்.
கடைசியா தக்காளி வாங்கி அ(இ)டி படாமல் மேலே வச்சிக்கணும்.
ஜீனி , பால், காப்பித் தூள்,
மிளகாய்த் தூள்
எல்லாம் வாங்கணும்.
எல்லாத்தையும் டெ(டே)ஸ்ட் பண்ணி வாங்கச் சொன்னாளே?' என்று மனைவியை நினைத்துக் கொண்டான்.

'ஜீனி பால் காஃபித் தூள் எல்லாத்தையும் வாங்கி எப்படி டெஸ்ட் பண்றது? மூனையும் சேர்த்து காஃபி போட்டு குடிச்சிப் பார்த்து வாங்கணுமோ?
மளிகைக் கடைக்காரர் மூஞ்சிலயே தண்ணிய ஊத்திடுவாரே!' என்று குழம்பி-னான்.

'மிளகாய் பொடி எப்படி டெஸ்ட் பண்றது? உறைக்குமே?' என்ற உண்மை உறைத்தது.

நடத்துனர் பிகில் ஊதியதும் சிற்றுந்து நின்றது.
"சார், நீங்க எங்கே இறங்கணும்?" என்று சந்தேகத்துடன் இவனைப் பார்த்து கேட்டார் அவர்.

ஜன்னல் வழியே பார்த்தான் தாம்பு. 'தமிழ் பூக்கடை' என்ற கடை போர்ட் தெரிந்தது.
அடித்துப் பிடித்து இறங்கினான்.

அடடா, இவன் இறங்க வேண்டிய இடம்
'பூக்கடை நிறுத்தம்' அல்லவோ?
ஆனால், பூக்கடையைப் பார்த்தும் இறங்கி விட்டான்.

ஆக, 'மனைவியின் இன்றைய ஆராதனை ஆரம்பம் நிச்சயம்' என்று முடிவு செய்து கொண்டவன்,
அடுத்த மூன்று நிறுத்தம் தாண்டியுள்ள இடத்திற்குப் போவதற்கு பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்தான்.

அடுத்த பேருந்திலும்
காய்கறி மளிகைக் கடையிலும்
இதேபோல ஏதாவது ஒரு வம்பு வரும்
என்று பயந்து போய் நிற்கிறான்
மிஸ்டர் வம்பு,
இல்லை இல்லை
மிஸ்டர் தாம்பு
என்கிற மிஸ்டர் தாமோதரன்!

******


இந்த இதழில் வெளியான எனது விமர்சனக் கடிதம்!'தேன்சிட்டு' மின்னிதழ் ஆசிரியர் அவர்களுக்கு,

ஆகஸ்ட் 2020 மாதத்தின் இதழ் படித்தேன்!
'நகைச்சுவை சிறப்பிதழ்' என்பது பக்கத்துக்குப் பக்கம் நிரூபித்துக் கொண்டிருந்தது. தனி ஒருவனாய் தங்கள் உழைப்பில் மலர்ந்து சிரிப்பு பரப்பிய சிறப்பான மலர்!

'மாபெரும் நகைச்சுவை சிறுகதைப் போட்டி'யின் பரிசுக் கதைகளும் சிரி(ற)ப்பாய இருந்தன.

ஒருவரே அனைத்தும் தயாரிப்பு என்பதால் நிறைய பிழைகள் காண முடிந்தன.

காசிநாதன் சார் எழுதிய கட்டுரையில் பாடலாசிரியர் தஞ்சை ராமைய்யா தாஸ் பெயரையே காணவில்லை.

மலர்மதி சாரின் கதையின் இடையிடையே,
1, 2, 3 என எண்கள் வருகின்றன.
அத்தியாய எண்களா என பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. வேர்ட் ஃபைலாக அனுப்பும்போது குறிக்கப்பட்ட பக்க எண்களும்  கதையில் இடையிடையே வந்துவிட்டன.

கிரேசி மோகன் பற்றிய கட்டுரையில் வார்த்தைகள் பல இடம் மாறி, வாக்கிய அமைப்பை படிக்க சிரமம் தந்தன.

ஹரிகோபி சார் பற்றிய அறிமுகத்தில் கடைசி வரியில் வார்த்தை குழப்பம்.

படித்து சிரிக்க, இரசிக்க நல்லதொரு மலர்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
பேங்காக்.


எனது சிறுகதையையும் குறைகளைச் சுட்டிக்
காட்டியபோதிலும் பரந்த மனதுடன் விமர்சனக் கடிதத்தையும் வெளியிட்ட தேன்சிட்டு ஆசிரியர்
எஸ். சுரேஷ் பாபு அவர்களுக்கு நன்றிகள்!


தேன்சிட்டு இணையதள முகவரி:

https//:thenchittu.com


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Monday, August 3, 2020

தர்மமும் தியாகமும் (சிறுகதை) #148

தர்மமும் தியாகமும் (சிறுகதை) -அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


இன்று வெளியான சென்னைப் பதிப்பு 'மக்கள் குரல்' நாளிதழில் (வெளியூர்களில் இன்ஷா அல்லாஹ் நாளை காலை வெளியாகும்) பிரசுரமாகியுள்ள எனது சிறுகதை!
**-**-**-**-**     **-**-**-**-**

'தர்மமும் தியாகமும்' -சிறுகதை

- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

-------------------------
பக்ரீத் பண்டிகை சிறப்பாக முடிந்தது. பெருநாள் சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு, குர்பானி ஆடு அறுத்து, அதில் மூன்றில் ஒரு பங்கு சொந்த உபயோகத்திற்கு வைத்துக்கொண்டு, ஒரு பங்கை உறவினர்களுக்கும் மற்றொரு பங்கை எளியவர்களுக்கும் பகிர்ந்தளித்தோம்.

சுவையான உணவு உண்டுவிட்டு மாலை நேரமானதும் நானும் என் மனைவியும் தஞ்சாவூர் நகருக்கு புறப்பட்டுச் சென்றோம்.

எஸ். ட்டீ. ஹாஸ்ப்பிடல்  (ப்பீ) லிமிடெட்,  தஞ்சாவூரின் தரமான மருத்துவமனைகளில் ஒன்று. நான்கு தளங்களுடன், தனது பெயரை நியான் விளக்குகள் மூலமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது.

மாலை 6 மணி.

நான் எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு என் மனைவியுடன் மருத்துவமனை நோக்கி சென்றேன்.

கேண்ட்டீன் காரர் என்னைப் பார்த்து, "சார், ட்டீ குடிக்கிறீங்களா?" எனக் கேட்டார்.

என் மனைவியிடம் கேட்டுவிட்டு, "திரும்ப வரும்போது குடிக்கிறோம் சார், இன்ஷா அல்லாஹ்!" என அவருக்கு பதில் கூறிவிட்டு  படிகள் ஏறி
இருவரும் மருத்துவமனையின் உள் சென்றோம்.

மருத்துவமனை பெண் ஊழியர் எங்களைப் பார்த்து, "எந்த டாக்டர் பார்க்கணும்? எஸ்.ட்டீ. சாரா? ட்டீ.சி. சாரா?" எனக் கேட்டாள்.

மருத்துவரைப் பார்த்து ஆலோசனை கேட்க கூடியிருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டே, "டாக்டர் யாரையும் பார்க்க வேண்டாம்; அன்புக்குடிலுக்கு நன்கொடை கொடுக்கணும்! கேஷ் கவுண்ட்டர்ல கட்டி இரசீது வாங்கிக்கலாமா?" என நான் கேட்டேன்.

"கேஷ் கவுண்ட்டர்ல கட்ட வேண்டாம்; டாக்டர்ட்டையே கட்டி இரசீது வாங்கிக்கலாம் நீங்க!" என்றாள் அந்தப் பெண்.

"டாக்டரைப் பார்க்க கூட்டம் நிறைய இருக்கு! எனக்கும் அதுவரை காத்திருக்க முடியாது! வேற இடத்துக்கும் போகணும்! கேஷ் கவுண்ட்டர்லயே கட்டிட்டுப் போய் விடுறேன்" என்று நான் சொன்னேன்.

"இல்லை சார்! நீங்க அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க; டாக்டரைப் பார்த்திடலாம்!" என்று கூறி அமரவைத்தாள்.

டாக்டரின் அறையிலிருந்து நோயாளி வெளியேறி, அடுத்த நபர் உள்ளே செல்லும்போது அந்த உதவியாளரும் உள்ளே சென்று விட்டு வந்தாள்.
டாக்டரிடம் தகவல் சொல்லியிருப்பாள் போலிருக்கிறது.

அடுத்து, உள்ளிருந்த நபர் வெளியானதும்
டாக்டரின் அறைக்கு எங்களை அனுப்பி வைத்தாள்.

நாங்கள் உள்சென்றதும் டாக்டர் எழுந்து, கை நீட்டி என் கையைப் பிடித்து குலுக்கி, "சார் நீங்களா!!! வாங்க, வாங்க! உட்காருங்க!" என்றார்.

"பரவாயில்லை சார்! நம்ம அன்புக்குடிலுக்கு கொஞ்சம் நன்கொடை தரலாம்னு வந்தோம்!" என்றவாறு பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

"சார், வெளியே கூட்டம் நிறைய இருக்கு! ரசீது கொடுத்தால் புறப்பட்டுருவோம்" என்றேன்.

"முதலில் உட்காருங்க!" என்றதும் உட்கார்ந்தோம்.

"சார், நாங்க உங்ககிட்ட நேரடியா, அன்புக்குடிலுக்கு நன்கொடை குடுங்கன்னு கேட்டோமா?" என்று கேட்டார்.

"இல்ல சார்!
சென்ற முறை வந்தபோது வெளியே விளம்பர போஸ்டர் பார்த்தோம்! அதனால
இன்றைக்கு பணம் கொண்டுவந்தோம்!" என்றேன்.

"அதான் சார்! நீங்களாகவே, ஓர் ஆர்வத்துல உதவணும்னு வறீங்க! அப்ப நாங்க உங்களுக்கு தகுந்த மரியாதை செய்யணும்ல? அதனாலதான், முன்னுரிமை அடிப்படையில உங்கள உள்ளே வரச் சொன்னது!"
சொல்லிக் கொண்டே இரசீது எழுதினார்!

"சார்... அன்புக்குடில்ங்கறது கறந்தையில, ஒரு பெரிய வீடு, தோட்டத்தோட அமைஞ்சிருக்கற ஓர் அமைதியான இடம்.

"அங்கே, புற்றுநோயால கஷ்டப்படுறவங்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் சேவை அடிப்படையில உதவிகள் செஞ்சிட்டிருக்கோம். சுமார் 50 நபர்கள் உள் நோயாளியாக அங்கே இருக்காங்க! மேலாளர், உதவியாளர், தோட்டக்காரர், சமையல்காரர், உதவியாளர்னு இன்னும் ஏழு பேர்கள் அங்கே பணியில இருக்காங்க!

"வீட்டோடவே சொந்த காய்கறி தோட்டம் இருக்கு!

"நாங்க 3 டாக்டர்கள் சேர்ந்து நடத்துறோம்! தினமும் போய் கவனிச்சிக்கிறோம். சிறப்பு மருத்துவர்களும் வாரத்தில இரு நாட்கள் வற்ராங்க!

"இன்னும்,
மூணு வேளையும் சத்தான சாப்பாடு, ஆரோக்கியமான பழங்கள், காஃபி, ட்டீ, உள்ளேயே ட்டீவி, நடைபயிற்சிக்கு இடம், வழிபாடு, தியானம் இதுக்கெல்லாம் தனி இடம், பொழுதுபோக்கு, பத்திரிகைகள்னு குறையென்று  எதுவுமில்லைனு சொல்லும்படியா சிறப்பா சேவையாக இதை செய்திட்டிருக்கோம்!

"உங்களப்போல நல்ல உள்ளம் படைத்த அன்பர்கள் தரும் உதவிகள்தான் இந்த இல்லம் இயங்குறதுக்கான உயிர் நாடியா விளங்குது.
இந்த சேவை தொடரணும்னு பிரியப்படுறேன்!

" 'மனிதன் சேமித்த செல்வத்தில்,
உண்டு கழித்தது,
உடுத்தி கிழித்தது,
தர்மம் செய்தது
இந்த மூன்று மட்டுமே அவனுக்கு சொந்தமானது'-னு நபிகள் நாயகம் சொன்னதை நான் படித்திருக்கிறேன்!

"நீங்களும் இன்றைக்கு பக்ரீத் குர்பானி முடிச்சிட்டு, எங்ககிட்டே உங்களோட தர்மம் செய்ற தொகையை, கணவன் மனைவி இணைந்து வந்து கொடுத்திருக்கீங்க!

"அந்த வகையில
குர்பானி கொடுத்ததற்கும் தர்மம் செய்ததற்குமான கூலி, இறைவனிடமிருந்து நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.

"நீங்களும் உங்களுக்கு வசதிப்படுற நேரத்தில அங்கே வந்து பார்வையிடணும்னு கேட்டுக்கறேன்!" என்று கருணையான குரலில் கேட்டுக் கொண்டார்.

"இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) விரைவில் அவசியம் வற்ரோம் சார்!" என்று கூறி அவரிடமிருந்து இரசீதைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.

அதையடுத்து, சிற்றுண்டி விடுதிக்குச் சென்று, அங்கு வந்த வயதான எளியவருக்கு வடை, ட்டீ வாங்கிக் கொடுத்துவிட்டு நாங்களும் சாப்பிட்டு பார்சலும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு வயிறு நிறைய சிற்றுண்டியுடனும் மனம் நிறைய மகிழ்ச்சியுடனும்
உதவிட நல்வாய்ப்பு தந்த இறைவனுக்கு நன்றி கூறி,
மகிழ்ச்சியில் திளைத்தவண்ணம் இரு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்து புறப்பட்டோம்.
+++++++++++++++++++++++++++
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, August 2, 2020

நறுக்ஸ் நொறுக்ஸ் விமர்சனப் போட்டி #147

நறுக்ஸ் நொறுக்ஸ் விமர்சனப் போட்டி! #147

'தமிழக எழுத்தாளர்கள் குழும'த்தில் ஒரு போட்டி வைக்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் தளத்தில் 'நறுக்ஸ் நொறுக்ஸ்' எனும் தலைப்பில் படைப்புகள் வழங்கிவரும் எழுத்தாளர் திரு.ரிஷிவந்தியா அவர்கள், அந்தப் படைப்புகளைப் பற்றிய விமர்சனங்களை வரவேற்று வைத்த போட்டிதான் அது.


அதற்கு நான் எழுதிய விமர்சனம் பரிசு பெற்றது. அது இங்கே:

ரிஷிவந்தியா சார் வழங்கும் நறுக்ஸ்-நொறுக்ஸ் ஆச்சரியம் தரும் கருத்துக் குவியல்!

3-4-5 வரிகளில்,
ஒரு தத்துவம், தன்முனைப்பு வாசகம்,
மாத்தி யோசித்த கோணம், அறிவுரைகள், நகைச்சுவைக்க வைக்கும் வசனம் என...
இரசித்த பொழுதினில் எதைப் பாராட்டுவது என வியப்பைத் தருகின்றது.

அதோடு, தகுந்த படத்தை இணைத்து படிக்க சுலபமாய், சுவைக்க கல்கண்டாய்  தரும் பாங்கு சபாஷ் போட வைத்துவிட்டது!

*'தன்னம்பிக்கை உடையோனுக்கு சருகுகளும் சிறகுகளே!*
+சிறு துரும்பும் பல் குத்த உதவும்!
+வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
-என்கிற வகையில் இதையும் இணைக்கலாம்!

இன்ஷா அல்லாஹ்,
இந்த வாசகங்கள் விரைவில் தொகுப்பு நூலாக மலரும் என நம்புகிறேன்!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

ஐடி:
nizampakkam

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Related Posts Plugin for WordPress, Blogger...