...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label குண்டப்பாவும் மண்டப்பாவும். Show all posts
Showing posts with label குண்டப்பாவும் மண்டப்பாவும். Show all posts

Tuesday, December 31, 2013

குண்டப்பா & மண்டப்பா (11) #119

2013 நிறைவுப் பதிவு!
குண்டப்பா & மண்டப்பா 11.

ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. குண்டப்பா இவரைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துக்கொண்டுவிட்டு, மண்டப்பாவிடம் ஒரு கேள்வி கேட்டார்.

குண்டப்பா: "மிஸ்டர் மண்டப்பா. உங்க குவாலிஃபிகேஷன்லாம் பார்த்தேன். இப்ப உங்களிடம் ஒரே ஒரு கஷ்டமான கேள்வி கேட்கவா? அல்லது ஈஸியான 100 கேள்விகள் கேட்கவா? உங்க சாய்ஸ் என்ன?"

மண்டப்பா: (மனதினுள்: 'அடடா வம்பாப் போச்சே, 100 ஈஸியான கேள்விதான், இருந்தாலும் ஒரு கேள்வி மட்டுமாவது பதில் தெரியாவிட்டால்கூட , வேலை கிடைக்காதே, இப்ப என்ன செய்யலாம்?')  "ம்க்கும்... சார் ஒரே ஒரு அந்தக் கஷ்டமான கேள்வியையே கேளுங்க சார்!" 

குண்டப்பா: "மிஸ்டர் மண்டப்பா! 6 தலை, 3 கண்கள்,  2 தும்பிக்கை, 18 கால்கள், 3 வால் கொண்ட ஒரு மிருகத்தின் பெயர் என்ன,  சொல்லுங்க!!!"

மண்டப்பா: (மனதினுள்: 'யார்ரா இவன் கிறுக்கனாயிருப்பாம்போலிருக்கே!!!') "சார், அந்த மிருகத்தின் பெயர் 'ஆதனை'!"  உற்சாகமாகப் பதில் சொன்னார் மண்டப்பா!

குண்டப்பா: "மிஸ்டர் மண்டப்பா, எப்படி 'ஆதனை'ன்னு நிச்சயமா சொல்றீங்க?"  

மண்டப்பா: "சார் ஒரே ஒரு கேள்வி, ஒரே ஒரு கஷ்டமான கேள்வி கேட்கறேன்னு சொல்லிட்டு, இப்ப ரெண்டாவதா கேள்வி கேட்குறீங்களே சார்?"

குண்டப்பா பதில் சொல்லமுடியாமல், அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரில் கையெழுத்துப் போட்டு நீட்டினார் மண்டப்பாவிடம்.
.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

குண்டப்பா; மண்டப்பா (10) #118

2013 நிறைவுப் பதிவு!
குண்டப்பா; மண்டப்பா 10

சில மாதங்களுக்கு முன் மண்டப்பாவை நோஸ்கட் செய்துவிட்டார்  குண்டப்பா. அவரை எப்படியாவது பழி வாங்கிடணும் என்று காத்திருந்தார் மண்டப்பா.

ஒரு நாள். அந்த ஊரில் ஒரு சிறப்பான நாள் ஒன்று வந்தது. அதாவது மிகப் பெரும் கண்காட்சி, சந்தை மற்றும் பல்வகை விளையாட்டுக்கள் - போட்டிகள் என்று ஊரே பரபரப்பாகயிருந்தது.

குண்டப்பாவும் மண்டப்பாவும் வேடிக்கை பார்க்க போனார்கள். அப்போது குண்டப்பாவுக்குத் தெரியாமல் பாட்டுப் போட்டியில் குண்டப்பாவின் பெயரைக் கொடுத்துவிட்டு வந்துவிட்ட மண்டப்பா எதுவும் அறியாதவர்போல் குண்டப்பாவுடன் சேர்ந்துகொண்டார்.



திடீரென்று "பாட்டுப் போட்டியில் அடுத்து பாடவருகிறார் குண்டப்பா!" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் மைக்கில் அறிவிப்பு செய்பவர். குண்டப்பா முழி, முழியென்று விழிக்கவும் மண்டப்பாவோ குண்டப்பாவை நைசாகப் பேசி மேடைக்குக் கொண்டு சென்றுவிட்டார். வேறு வழியில்லாத நிலையில் (வழியைத்தான் மண்டப்பா அடைத்துக் கொண்டு நிற்கிறாரே!)  மேடையில் ஏறி ஏதோ ஒரு பாட்டையும் பாட ஆரம்பித்துவிட்டார் குண்டப்பா.

எப்படியோ பாடி முடித்து குண்டப்பா மேடையிலிருந்து இறங்குவதற்குள் மண்டப்பா, "ஒன்ஸ் மோர்!" என்று சப்தமாய் குரல் கொடுத்தார்.

மண்டப்பா குரல் விட்டதைத் தொடர்ந்து, மற்ற பார்வையாளர்களும் அவ்வாறே  கத்த ஆரம்பித்துவிட்டனர். இதை எதிர்பாக்கவில்லை குண்டப்பா. 'நம்ம பாட்டை இவ்வளவு பேர் விரும்பிக் கேட்கும்போது மறுபடியும் பாடுவோமே!' என்று மகிழ்ந்து அந்தப் பாட்டை திரும்பவும் பாடினார் குண்டப்பா.

பாடி முடிக்கவும் மறுபடியும் "ஒன்ஸ் மோர்" என்று குரல் விட்டனர் மண்டப்பாவும் மற்றவர்களும். "அடடே" என்று நினைத்துக் கொண்டு மறுபடியும் பாடினார் குண்டப்பா.


பாடி முடித்ததும் இப்பவும் அனைவரும் "ஒன்ஸ் மோர்" என்றனர். குண்டப்பா சலிப்புற்றவராக, "ஏன் இப்படி திரும்பத் திரும்பப் பாடச் சொல்றீங்க?" என்று கேட்டார். 


"நீங்க அந்தப் பாட்டை ஒழுங்காப் பாடாதவரைக்கும் உங்கள விடமாட்டோம்" என்று நக்கலாகச் சொன்னார் மண்டப்பா.

அதைக் கேட்டு மனம் நொந்துபோய், மண்டப்பாவைத் திட்டிக் கொண்டே வீடு திரும்பினார் குண்டப்பா.
.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Wednesday, February 13, 2013

குண்டப்பா - மண்டப்பா 9

குண்டப்பா - மண்டப்பா 9 #115

மண்டப்பாவைத் தேடி குண்டப்பா போனபோது மண்டப்பா அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் குளித்துக் கொண்டிருந்தார். மண்டப்பாவின் மனைவி மண்டப்பா குளித்துக் கொண்டிருப்பதாகவும் 'போய் பாருங்கள்' என்றும் சொன்னாள்.

குண்டப்பா போனதும் கேட்டார்: "மண்டப்பா! இப்பத்தான் குளிக்க ஆரம்பிச்சியா?" என்று.

மண்டப்பாவும் பதில் சொன்னார் : "ஆமாம், இப்பத்தான் குளிக்க ஆரம்பிச்சேன்" என்று.

குண்டப்பா நக்கலாக சொன்னார் : " அட, இப்பத்தான் குளிக்கவே ஆரம்பிச்சியா? நான்லாம் பிறந்ததிலிருந்தே குளிக்க ஆரம்பிச்சிட்டேன்"

இதைக் கேட்டு கடுப்பான மண்டப்பா, எப்படியாவது குண்டப்பாவைப் பழி வாங்கணும்னு யோசிச்சிட்டிருக்கார்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, December 23, 2012

குண்டப்பா - மண்டப்பா 8 #107

குண்டப்பா - மண்டப்பா 8 #107

மண்டப்பாவைப் பார்க்க, அவரது வீட்டிற்குச் சென்றார்
குண்டப்பா. அப்போது மண்டப்பா குளித்துக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்ததும் குண்டப்பாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

குண்டப்பா கேட்டார்: "மண்டப்பா, என்ன செய்துட்டிருக்கே?"

மண்டப்பா சொன்னார்: குண்டப்பா, நான் குளிச்சிட்டிருக்கேன்!"

குண்டப்பா கேட்டார்: "ஏன் மண்டப்பா சட்டையைப் போட்டுக்கிட்டு குளிக்கிறே?"

மண்டப்பா சொன்னார்: "ஒரே குளிரா இருக்கில்லையா? சட்டை
போட்டுக்கிட்டு குளிச்சால், குளிராதுன்னு சட்டையைப் போட்டுக்கிட்டு குளிக்கிறேன்"

குண்டப்பா பாவம் மண்டை காய்ந்து போனார்.



. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Sunday, May 27, 2012

குண்டப்பா: மண்டப்பா - 7#101

குண்டப்பா: மண்டப்பா - 7

குண்டப்பா அதிகாலையில் வாக்கிங் போய்கிட்டிருந்தார்.
அப்ப மண்டப்பா ஆற்றில் நின்று என்னவோ செய்துட்டிருந்தார்.
குண்டப்பா அருகே போய் பார்த்தால், மண்டப்பா ஒரு பூனையை
ஆற்றில் முக்கி, முக்கி எடுத்து குளிப்பாட்டிட்டிருந்தார்.

"அடேய், பூனையை ஆற்றில முக்கி, முக்கி எடுக்கிறயே,
பூனை செத்துப் போய்டும்டா" என்றார் குண்டப்பா.

"எனக்குத் தெரியும்- நீ போய்க்கிட்டேயிரு" என்றார் மண்டப்பா.

http://i1.kym-cdn.com/entries/icons/original/000/007/263/photo_cat2.jpg

குண்டப்பா அமைதியாய் போய்விட்டார். வாக்கிங் போய்விட்டு
திரும்பி வரும்போது மண்டப்பா அழுதுக்கிட்டிருந்தார்.

தரையில் பூனை இறந்துபோய் கிடந்தது.

"பூனையைக் குளிப்பாட்டாதே; செத்துப் போயிடும்னு
சென்னேனே, கேட்டியா? இப்ப பூனை செத்துப்
போச்சி" என்றார் குண்டப்பா.

"குளிப்பாட்டும்போது பூனை சாவலை; குளிப்பாட்டினதுக்கு
அப்புறம் பூனை ஈரமாயிருக்கேன்னு பிழிஞ்சேன். அப்பத்தான்
பூனை செத்துடுச்சி" என்று விவரமாய் பதில் சொன்னார்
மண்டப்பா!

குண்டப்பா திகைத்துவிட்டார்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

இதையும் படியுங்களேன்:

குண்டப்பா; மண்டப்பா 6

சுஜாதாவிடம் செல கேள்விகள் -100 ஆவது பதிவு!

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Thursday, June 23, 2011

குண்டப்பா; மண்டப்பா - 6

குண்டப்பா; மண்டப்பா - 6
(பார்த்திபன்: 'குண்டக்க'ன்னா என்னா? 'மண்டக்க'ன்னா என்னா?

வடிவேலு: 'குண்டக்க'ன்னா குண்டப்பா! 'மண்டக்க'ன்னா மண்டப்பா!)

இதோ மீண்டும் குண்டப்பா & மண்டப்பா!

மண்டப்பா கடை வைத்திருந்தார். குண்டப்பா துணி சோப்
வாங்க வந்தார். அப்போது துணி சோப் 12 கட்டிகள் (கேக்)
கொண்டது ஒரு பார் ஆக கிடைக்கும்.

குண்டப்பா கேட்டார்: துணி சோப் ஒரு பார் எவ்வளவு?

மண்டப்பா பதில்: பதினொரு ரூபாய்.

குண்டப்பா : ஒரு கட்டி எவ்வளவு?

மண்டப்பா : ஒரு ரூபாய்.

குண்டப்பா (மனதிற்குள்) : ஒரு ஒரு கட்டியா வாங்கினால்
பனிரண்டு கட்டி 12 ரூபாய். ஒரே தடவையில் வாங்கினால்
11 ரூபாய்தான். (இப்போது சப்தமாக) இந்தா ஒரு பாருக்கு
உண்டான காசு 11 ரூபாய். ஒரு கட்டியை மட்டும்
இப்போ கொடு; மீதி பதினொரு கட்டியையும்
நீயே கடையில் வச்சிக்க. இந்தக் கட்டி
தீர்ந்துபோனதும் இன்னொரு கட்டி வாங்கிக்கிறேன்.
வீட்டுக்கு எடுத்திட்டுப் போனால், என் பெண்டாட்டி
சோப்பை காலி பண்ணிடுவாள். அதனால நீயே
11 கட்டியை வாசிக்க. ரெண்டு, முனு நாள் கழிச்சி
வரேன். வரட்டுமா?

கூறிய குண்டப்பா போறதையே பார்த்துக்கிட்டுருந்தார்
மண்டப்பா.

-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

முந்தைய கதைகள் படிக்க இங்கே சுட்டவும்.
. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, March 25, 2011

குண்டப்பா & மண்டப்பா - 5!

குண்டப்பா & மண்டப்பா - 5!




குண்டப்பா வேலை முடிந்து வீடு திரும்பியவர் இரவு
சாப்பாடு ரெடியானதும் சாப்பிட உட்கார்ந்தார்.
குண்டப்பாவின் மனைவி தட்டு வைத்து சோறு
போட்டு சைட் டிஷ்ஷாக முட்டை ஆம்லேட் வைத்தார்.

குண்டப்பா கடுப்பாகிவிட்டார்.
"ஏன் ஆம்லேட் செய்தாய்? முட்டையை அவித்திருக்கலாமே?"
என்று திட்டிவிட்டு சாப்பிட்டு போய்விட்டார்.

மறுநாள் இரவு சாப்பிடும்போது குண்டப்பாவின் மனைவி
அவித்த முட்டையை வைத்தார்.
கோபமான குண்டப்பா, " ஏன் முட்டையை ஆம்லேட்
போட்டிருக்கலாமே? " என்று சப்தம் போட்டு விட்டு
சாப்பிட்டு எழுந்து போனார்.

மூன்றாம் நாள் மிசஸ் குண்டப்பா முன்னெச்சரிக்கையாக
ஒரு முட்டை அவித்தும் ஒரு முட்டை ஆம்லேட்டாகவும்
செய்து வைத்து மிஸ்டர் குண்டப்பாவை சாப்பிட
அழைத்தார்.

சாப்பிட உட்கார்ந்த குண்டப்பா ஆம்லேட், அவித்த முட்டை
இரண்டும் இருப்பதைப் பார்த்துவிட்டு, திரும்பி
மிசஸ் குண்டப்பாவிடம் அவித்த முட்டையைக் காட்டி,
"இந்த முட்டையை ஆம்லேட் போட்டுருக்கணும்" என்று
சொல்லிவிட்டு ஆம்லேட்டைக் காட்டி, "இதை அவித்திருக்கணும்;
மாத்தி செஞ்சிட்டியே!" என்று கூறிவிட்டு, சமர்த்தாக
சாப்பிட்டு எழுந்து போனார்.

மிசஸ் குண்டப்பா எதுவும் தோன்றாமல் திகைத்து நின்றார்.

டிஸ்கிகள்:

1 . பதிவு போட்டு ஒரு மாதத்திற்கு மேலாவதால் இந்த திடீர் பதிவு.

2 . சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கேட்ட
நகைச்சுவைக் கதையை 'குண்டப்பா மண்டப்பா'வாக உல்ட்டா
செய்துவிட்டேன்.

3 . இந்தக் கதையில் மண்டப்பா கிடையாது. குண்டப்பாவும்
மிசஸ் குண்டப்பாவும்தான்.

4 . முந்தைய 'குண்டப்பா & மண்டப்பா' கதைகள் படிக்க இந்த
லிங்கில் கிளிக் செய்யுங்கள்:


.
படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, October 1, 2010

குண்டப்பா & மண்டப்பா (4)

குண்டப்பா & மண்டப்பா (4)




குண்டப்பா & மண்டப்பா (3) இங்கே!

மண்டப்பாவை, குடும்பத்தோடு விருந்துக்கு வருமாறு
அழைத்திருந்தார் குண்டப்பா. சம்மதித்த மண்டப்பா,
விருந்து நாளன்று தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன்
வந்திருந்தார்.

விருந்து கோலாகலமாக ஆரம்பமாகியது. தடபுடலான
சாப்பாடு. மட்டன் பிரியாணி, சிக்கன் ரோஸ்ட், தாளிச்சா,
கறி குழம்பு, பொறியல், வதக்கல், துவையல், பச்சடி,
பாயசம், பழம் என்று அமோகமாயிருந்தது சாப்பாடு.

"நல்லா சாப்பிடு; நல்லா சாப்பிடுங்க!" என்று
மண்டப்பாவையும் அவர் மனைவி, பிள்ளைகளையும்
கவனித்துக் கொண்டிருந்தார் குண்டப்பா.

சாப்பிட்டுக் கொண்டே, "சாப்பாடு எல்லா ஐட்டமும்
வெகு பிரமாதம்; நல்லா டேஸ்ட்டா இருக்கு!
உன் மனைவி சுவையாய் சமைத்திருக்கிறாங்க!" என்று
கூறிக் கொண்டே சாப்பிட்டார், மண்டப்பா.

அப்போது, "என் மனைவி எல்லா சாப்பாடும் ரொம்ப
சுவையாய் சமைப்பாள். அதிலும் ஊறுகாய்
ரொம்ப அருமையாய் செய்வாள். மாவடு ஊறுகாய்
என் மனைவி செய்தது, அஞ்சு வருஷமாய் எங்களிடம்
இருக்கு!" என்று மனைவியைப் பற்றி பெருமையாய்
மண்டப்பாவிடம் சொன்னார் குண்டப்பா.

"அப்படியா, அதை எடுத்துவரச் சொல்லு; சாப்பிட்டுப்
பார்ப்போம்" என்றார் மண்டப்பா.

"என்னது, சாப்பிட்டுப் பார்க்கணுமா!? அப்படி சாப்பிட்டு
பார்த்திருந்தால், இப்படி அஞ்சு வருஷம் வைத்திருக்க
முடியுமா???" என்று பதறினார் குண்டப்பா.

அதைக் கேட்ட மண்டப்பா விருந்து சாப்பிடுவதை
மறந்து திகைத்துவிட்டார். குண்டப்பா யாரு? அறிவுக் கொழுந்து அல்லவா!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, September 17, 2010

குண்டப்பா & மண்டப்பா - 3

குண்டப்பா & மண்டப்பா - 3




குண்டப்பா & மண்டப்பா - 2 இங்கே!


குண்டப்பாவும் மண்டப்பாவும் ஒரு நாள்
இரவு காட்சி திரைப்படம் பார்க்கப் போனார்கள். 5 கி.மீ.
தொலைவிலுள்ள பக்கத்து ஊருக்கு போகும்போது
பஸ்ஸில் போய்விட்டார்கள்.

அது ஒரு பேய் படம். (ஆமாம்... ஒரு பேய்தான்!)
பயந்துகொண்டே பார்த்து இரசித்துவிட்டு, ஊருக்குத்
திரும்பி வருவதற்கு நள்ளிரவு 12 மணியாகிவிட்டதால்
பஸ் இல்லை. ஐந்து கிலோ மீட்டர் தூரத்தையும்
நடந்து போய்விடலாம் என்று நடக்க ஆரம்பித்தார்கள்.
அவர்களின் ஊர் முனைவரையிலும் வந்துவிட்டார்கள்.

அங்கிருந்து சாலை இரண்டுபுறமும் பிரிந்து
குண்டப்பா வீட்டிற்கு வலப்புறம் செல்லவேண்டும்.
மண்டப்பா வீட்டிற்கு இடப்புறம் செல்லவேண்டும்.

அந்த இடம் வந்ததும் குண்டப்பாவிற்கு அதற்குமேல்
தனியாகச் செல்ல பயம் வந்துவிட்டது. மண்டப்பாவை
தனது வீடுவரை வந்து விட்டுச் செல்லுமாறு
கூப்பிட்டான். அதனால், குண்டப்பா வீடுவரை
வந்த மண்டப்பா கிளம்பும்போது அவனுக்கு பயம்
வந்துவிட்டது. "ம்ஹூம் எனக்கு பயமாயிருக்கு.
நீ எங்கள் வீடுவரை வந்து விட்டுட்டுப் போ" என்று
குண்டப்பாவைக் கூப்பிட்டான்.

"நீ முதலிலேயே கூப்பிட்டிருந்தால் நானே வந்து
உன் வீடுவ்ரை கூடவந்து விட்டிருப்பேனே;
நீ என்னைவிட பயந்தாங்கொள்ளியா இருக்கியே!"
என்று திட்டிக்கொண்டே மண்டப்பாவை அவன் வீட்டில்
கொண்டுபோய் விட்டான், குண்டப்பா.

அப்படி கிளம்பும்போது குண்டப்பாவுக்கு பயம்வந்து,
மண்டப்பாவைத் துணைக்குக் கூப்பிட்டான் குண்டப்பா!
இப்படி இருவரில் யாருக்குமே தனியாக துணிச்சலாக
போவதற்கு தைரியம் வரவில்லை.

இந்த மாதிரியே இரண்டு பேரும் மாறி, மாறி
இருவர் வீட்டிற்கும் நடந்துகொண்டே இருந்தார்கள்.

அப்புறம்...
பொழுதும் விடிஞ்சிருச்சி!
கதையும் முடிஞ்சிருச்சி!!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

குண்டப்பா & மண்டப்பா - 4 இங்கே!


வாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்! நன்றி!!

Saturday, November 28, 2009

குண்டப்பா & மண்டப்பா (2)


குண்டப்பா & மண்டப்பா (2) நகைச்சுவை

குண்டப்பா & மண்டப்பா (1) இங்கே!

குண்டப்பா, தனது வீட்டின் சுவரில் ஆணி அடிப்பதற்காக ஏணியில் ஏறினார்.
உதவி மண்டப்பா அவர்கள். குண்டப்பா ஏணியில் ஏறியதும், மண்டப்பா
ஆணியையும சுத்தியலையும் எடுத்து குண்டப்பாவிடம் கொடுத்தார்.

மண்டப்பா கொடுத்த ஆணியை வாங்கி அப்படியே சுவரில்
வைத்து அடித்தார் குண்டப்பா. அதாவது தலைப் பக்கத்தை
சுவரில் வைத்து, கூர்முனையை சுத்தியலால் அடித்தார்
குண்டப்பா. அதனால் ஆணி சுவரில் இறங்கவில்லை.

நான்கு தடவைகள் அடித்து பார்த்துவிட்டு, "எ‌ன்ன மண்டப்பா
இ‌‌ந்த ஆணி சுவரில் இறங்க மாட்டேங்குதே" என்றார் குண்டப்பா.

வாங்கிப்பார்த்துவிட்டு, "அட இ‌து தலைகீழ் மாற்றமாக தயா‌ர்
பண்ணி இருக்கான்கள்" எ‌ன்று விளக்கினார் மண்டப்பா.

"அப்படியா! அட அப்படியில்லப்பா.இ‌து எதிர் சுவரில் அடிக்க
வேண்டிய ஆணிப்பா, அப்படித்தான் இருக்கும்" எ‌ன்று
கூறிவிட்டு அப்படியே எதிர் சுவரில் போய் ஆணி அடித்து
காலண்டரை மாட்டினார் குண்டப்பா!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

குண்டப்பா & மண்டப்பா - 3 இங்கே!



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Thursday, October 1, 2009

குண்டப்பா & மண்டப்பா! (1)




குண்டப்பா & மண்டப்பா!
=======================
குண்டப்பா தனது கிராமத்திலிருந்து,
டவுனுக்கு ஓர் அரசாங்க அலுவலகத்திற்கு
ஒரு காரியமாக வந்தார்.

வேலை முடிய மதியம் ஒரு மணியாகிவிட்டது.
மதியம் 1.15 பஸ்ஸில் புறப்பட்டால் அவரது
கிராமத்திற்குப் போய் சேர ஒரு மணி நேரமாகும்.
பசி அவரது வயிற்றைக் கிள்ளி, வயிறே புண்ணாகி
விட்டது. ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாம்
என்று நினைக்கும்போது, 'சாப்பாடு என்றால்
50 ரூபாய் செலவாகி விடுமே, என்ன செய்யலாம்'
என்று யோசித்தார்.

அப்போதுதான் அதே டவுனில் நான்கு தெருக்கள்
தள்ளிதான் அவரது நண்பர் மண்டப்பாவின்
வீடு இருப்பது நினைவுக்கு வர, 'சாப்பாட்டுச்
செலவை மிச்சம் பண்ணிடுவோம்' என்று
எண்ணியபடி ஐந்து நிமிடங்கள் நடந்து,
மண்டப்பாவின் வீட்டிற்குச் சென்றார்.

குண்டப்பாவைப் பார்த்த அவரது நண்பர்
மண்டப்பா, அவரிடம் பேச ஆரம்பித்தார்.
பேச ஆரம்பித்தவர்தான், பேசிக் கொண்டே
இருந்தாரே அன்றி, சாப்பிடக் கூப்பிடவே
இல்லை. குண்டப்பாவும் ஒரு மணி
நேரமாகப் பொறுத்துப் பார்த்து விட்டார்.
மணியும் இரண்டைத் தாண்டி விட்டது.

குண்டப்பா எழுந்து கொண்டார்.
"அப்ப நான் ஊருக்குப் புறப்படுகிறேன்"
என்றார்.

அதற்கு, "எங்க வீட்டில சாப்பிடச்
சொன்னா சாப்பிடவாப் போறீங்க?"
என்று கேட்டார் மண்டப்பா.

"மாட்டேன்னா நீங்க விடவாப் போறீங்க?"
என்று திருப்பிக் கேட்டுக் கொண்டு
அங்கேயே நின்று கொண்டிருந்தார் குண்டப்பா.

'ஆஹா... இவுரு நம்ம வீட்டுல சாப்பிடாமப்
போக மாட்டாரு போலருக்கே, எப்படி இவர
துரத்தலாம்' என்று யோசித்த மண்டப்பா,
சமாளிப்பாக, "அப்படி நீங்க நம்ம
வீட்டுல சாப்பிட்டாலும் என் ரெண்டு
பிள்ளைங்களுக்கும் ஐம்பது, ஐம்பது
ரூபாய் அன்பளிப்பு கொடுக்காமயா
போயிடப் போறீங்க?" என்று கோர்த்து
வாங்கினார்.

'ஹோட்டல்ல சாப்பிட்டா ஐம்பது ரூபாய்தானே,
இந்த ஆளு நூறு ரூபாய்க்கு அடி போடுறானே'
என்று பயந்தாலும் குண்டப்பா, "என்னங்க
இப்படிச் சொல்லிட்டீங்க? உங்க பிள்ளைங்க
தங்கம்ல? உங்க பிள்ளைங்களும் உங்க மாதிரியில?
நான் பணம் கொடுத்தாலும் அவங்க
வாங்கவாப் போறாங்க? நீங்க
அப்படியா பிள்ளைங்கள வளர்த்திருக்கீங்க?"
என்று மடக்கினார்.

இவ்வளவு பேச்சு நடந்த பிறகும் குண்டப்பா
அந்த வீட்டில் சாப்பிட்டிருப்பாரா, மாட்டாரா?

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

குண்டப்பா & மண்டப்பா (2) இங்கே!

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...