...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Monday, September 26, 2022

தாயார் தயாரித்த தம்ரூட்! #173

தாயார் தயாரித்த தம்ரூட்! #173



தாயார் தயாரித்த தம்ரூட்!

காலையில் ரொட்டி (பிரட்) வாங்க அடுமணைக் கடைக்கு (பேக்கரி ஷாப்) சென்றிருந்தேன்.

கடைக்காரர் 'பிரட்'டைக் கொடுக்கும்போதே, "தம்ரூட் இருக்கு வேணுமா? கால் கிலோ 90 ரூபாய்! ஒரு கிலோ 350 ரூபாய்தான்!" என்று ஆசைமூட்டினார். எனக்கு எங்கள் அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது.

எனது சிறுவயதில் எங்கள் அம்மா 'ரவ்வாடை' எனும் 'தம்ரூட்' செய்வார்கள்.




ர(வ்)வா, முட்டை, பால், ஜீனி, நெய், முந்திரி அனைத்தையும் கலந்து பாத்திரத்தில்  வைத்து அடுப்பில் ஏற்றி தீமூட்டுவார்கள்!

அந்தநேரம் நான் கையை நீட்டி பணியார மாவை கேட்பேன்! மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் ஊற்றுவார்கள்!
அதை நான் (நக்கி) சாப்பிட்டுவிட்டு மறுபடியும் கேட்பேன்; மறுபடியும் சிறிது ஊற்றுவார்கள்.
"உனக்கு மாவுக்கும் ஆசை; பணியாரத்திற்கும் ஆசை!" என்று செல்லமாக திட்டுவார்கள்!

சாப்பிட்டுவிட்டு மறுபடியும் கேட்பேன்!
"இனிமேல் தரமாட்டேன்! அப்படி கேட்டால் ரவ்வாடை ஒரு துண்டு மட்டும்தான் தருவேன்!" என்று வி(மி)ரட்டுவார்கள்!

ஆனால், ரவ்வாடை சுட்டு முடித்ததும் என் அக்கா, தங்கை அனைவர்களுக்கும் கொடுக்கும்போது எனக்கு சிறிதளவு கூடுதலாகத் தருவார்கள்!

துண்டுகள் போட்டு எடுத்து வேறு பாத்திரத்தில் போட்டுவைத்ததும் ரவ்வாடை தயாரித்த  பாத்திரத்தின் அடியில் ஒட்டியிருக்கும் பணியாரத் துகள்களை கரண்டி எடுத்து சுரண்டி  சாப்பிட, எங்களுக்குள் 'சிறிய' போராட்டமே நடக்கும்! அம்மா, அதைத் தடுத்து சமாதானம் செய்வார்கள்!

அதன்பிறகான ரவ்வாடை சுடும் காலம் எல்லாம் முன்னதாகவே
ஒரு கிண்ணத்தில் எனக்காக தனியே எடுத்து வைத்து என்னிடம் கொடுப்பார்கள்!

எங்களின் பாசத்திற்குரிய அம்மா அவர்கள் கடந்த 02/07/2022 அன்று எங்களிடமிருந்து விடைபெற்று, இறைவனின் அழைப்பை ஏற்று மௌத் (இறப்பு) ஆனார்கள்.




எங்கள் அம்மாவின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நல் சுவனம் கிடைக்கப் பெற அன்பு நண்பர்கள் அனைவரும் துஆ (பிரார்த்தனை) செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.





. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...