தாய்லாந்து தமிழ் சங்க மலரில் எனது சிறுகதை! #183
புதையல்! (சிறுவர் சிறுகதை)
-நீடூர் அ.முஹம்மது நிஜாமுத்தீன், பேங்காக்.
உக்காஸ் - அஃப்ராஜ் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். பெரியவர்களாகிய பின்னும் அவர்களின் நட்பு தொடர்ந்தது. இருவரும் நல்ல வசதிகளோடு வாழ்ந்து வந்தார்கள்.
இப்படி இருக்கும்போது ஒரு தடவை, உக்காஸ் அவரது ஒரு நிலத்தை விற்கும்போது, அஃப்ராஜ் அதை நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டார்.
சில மாதங்கள் சென்ற பின், அந்த நிலத்தில் பயிரிடுவதற்காக நிலத்தை உழுதார், அஃப்ராஜ். அப்போது, ஏர் கலப்பையின் கீழே "டங்" என்றொரு சப்தம் கேட்டது. அஃப்ராஜ் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது, நிலத்தின் சில அடிகள் கீழே ஒரு வெங்கலப் பானை இருக்கக் கண்டார்.
ஆச்சரியத்தோடு பானையை எடுத்துப் பார்த்தார். கனமாக இருந்தது. 'உள்ளே என்ன இருக்கிறது' என்கிற ஆவல் கொண்டு திறந்து பார்த்தார். பானை முழுவதும் தங்க நகைகள் இருந்தன.
'ஆஹா இது நண்பர் உக்காஸ் இடமிருந்து வாங்கிய நிலத்தில் இருந்து கிடைத்திருப்பதால் இந்தப் புதையல் உக்காஸுக்குரியதே; அதனால் இதை அவரிடமே ஒப்படைத்து விடுவோம்' என்று எண்ணி, அந்தப் பானையுடன் உக்காஸ் வீட்டிற்குச் சென்றார் அஃப்ராஜ்.
நம் நாட்டில் உள்ளதுபோல் 'நிலத்தில் கிடைக்கும் புதையல் அரசாங்கத்திற்கு சொந்தம்' என்கிற சட்டம் எதுவும் அவர்கள் வசித்த நாட்டில் கிடையாது.
உக்காஸை சந்தித்து விவரம் சொன்னார் அஃப்ராஜ். ஆனால் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார் உக்காஸ். "நான் நிலத்தை விற்று விட்டேன். அதனால் அதிலிருந்து கிடைக்கும் அனைத்துமே உனக்கே சொந்தம். நான் பெற்றுக் கொள்ள மாட்டேன்" என்று, பிடிவாதமாக கூறி விட்டார்.
என்ன செய்வது என்று யோசித்த அஃப்ராஜ், உடனடியாக அந்த நாட்டின் நீதிபதியிடம் சென்று, விபரம் கூறி, புதையலை உக்காஸ் இடம் ஒப்படைத்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.
உக்காஸை அழைத்துவரச் சொல்லி ஊழியரை அனுப்பினார் நீதிபதி.
"நிலம் மட்டும்தான் நான் வாங்கினேன். அதனுள்ளே இருந்த புதையலை உக்காஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்கிறார் அஃப்ராஜ்.
"நிலத்தை நான் அஃப்ராஜ் இடம் விற்று விட்டதால், அதில் இருக்கும் புதையலும் அவருக்கே சொந்தம்" என்கிறார் உக்காஸ்.
யோசனை செய்த நீதிபதி உக்காஸைப் பார்த்து கேட்டார்: "உங்களுக்கு பிள்ளைகள் யாரும் இருக்கிறார்களா?"
உக்காஸ் சொன்னார்: "எனக்கு திருமண வயதில் ஓர் ஆண்மகன் இருக்கிறான்"
நீதிபதி அஃப்ராஜைப் பார்த்துக் கேட்டார்: "உங்களுக்குப் பிள்ளகள் உண்டா?"
அஃப்ராஜ் சொன்னார்: "எனக்கு திருமண வயதில் ஒரு பெண்மகள் இருக்கிறாள்"
நீதிபதி முடிவாய் அவர்களிடம் சொன்னார்: "அந்த ஆண்மகனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் செய்வித்து, அவர்களின் மணவாழ்விற்கு இந்தப் புதையலை மணக்கொடையாகக் கொடுத்து விடுங்கள். இதில் உங்கள் இருவருக்கும் நல்ல தீர்வு இருக்கிறது. சரியென்றால் மணமக்களாகப் போகும் இருவரின் சம்மதத்தையும் கேட்டு திருமணம் செய்துவிடுங்கள்"
இந்த யோசனை இருவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவ்வாறே உக்காஸின் மகனுக்கும் அஃப்ராஜின் மகளுக்கும் திருமணம் பெரியோர்களின் வாழ்த்துக்களோடு நடந்தேறியது. மணமக்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்தார்கள்.
நாமும் வாழ்த்துவோமே!
சங்க உறுப்பினர் பட்டியல்!