...பல்சுவை பக்கம்!

.

Friday, September 11, 2009

நல்லா ஒழுகுமா?

மயிலாடுதுறை காந்திஜி சாலையில்
(இரண்டாம் இலக்கச் சாலை என்றும்
மற்றொரு பெயர் உண்டு.) வடநாட்டு
சேட்டுகள் நிறைய கடை வைத்துள்ளார்கள்.

அந்தக் கடைகளில் கடை முதலாளி
சேட்டுகள் தனது ஊரிலிருந்து சிறு வயது
பையன்களை வரவழைத்து சேல்ஸ்மேனாக
வைத்துக் கொண்டிருப்பார்கள். அந்தப்
பையன்கள் தமிழை புதுமாதிரியாகப்
பேசி, வியாபாரம் செய்வார்கள்.

"இந்தப் பிஸ்கட் நல்லாயிருக்குமா"
என்று கேட்டால் "நல்லாயிருக்கும்"
என்பார்கள்.

"இந்த வாஷிங் பவுடர் நல்லா வெளுக்குமா"
என்று கேட்டால் "நல்லா வெளுக்கும்"
என்பார்கள்.

அதில் ஒரு பொது வணிகக் கடையில்
(ஜெனரல் ஷாப்) நான் அடிக்கடி பொருள்கள்
வாங்குவதுண்டு.

அப்படி ஒரு நாள் நான் பொருள் வாங்கிக்
கொண்டிருக்கும்போது, பக்கத்தில் மற்றொரு
வயதான பெரியம்மா 5 லிட்டர் கொள்ளளவு
கொண்ட வாட்டர் கேன்(அல்லது ஆயில் கேன்)
ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பிளாஸ்டிக்காலான அந்தக் கேனை கையில்
வைத்து, அடிப்புறம் பார்த்துக் கொண்டே,
"இந்தக் கேன் ஒழுகுமா?" என்று அந்தக்
கடைப் பையனைக் கேட்டார்கள்.

உடனே அந்தப் பையனும் "நல்லா ஒழுகும்"
என்றான்.

அந்தப் பெரியம்மா சேட்டிடம், "என்னா சேட்டு,
'ஒழுகுமா'ன்னுக் கேட்டா 'நல்லா
ஒழுகும்'ங்குறான்?" என்று கேட்டார்கள்.

சேட்டும் அந்தப் பையனை ஹிந்தியில்
திட்டிவிட்டு, "இல்ல பெரியம்மா,
நல்லா ஒழுகும்னு அவன் சொல்லல.
'நல்லா ஒழைக்கும்'ங்குறான்" என்று
திருத்தம் சொன்னார் பெரியம்மாவிடம்.

"சேட்டு நல்லா சமாளிக்கிற சேட்டு!
பொழச்சிக்குவே!!"என்று பெரியம்மா
சேட்டைப் பாராட்டி விட்டு சிரித்தவாறு
பணத்தைக் கொடுத்து கேனை வாங்கிச்
சென்றார்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>
Related Posts Plugin for WordPress, Blogger...