...பல்சுவை பக்கம்!

.

Thursday, April 27, 2023

புத்தக விமர்சனம் - 'இன்னுமென்ன உறக்கம்! Book review #181

புத்தக விமர்சனம் - 'இன்னுமென்ன உறக்கம்! - கவிஞர் எல்.இரவி #181



நண்பர், ஓய்வு பெற்ற தமிழாசிரியர், கவிஞர் எல். இரவி அவர்கள் எழுதிய 'இன்னுமென்ன உறக்கம்!' கவிதைத் தொகுப்பு நூலை வாசித்தேன்.

மிகவும் குட்டி குட்டியான கவிதைகள்.
70 பக்கங்களில் சுமார் 95 கவிதைகள்.

அனைத்துமே கடுகு போல அளவில் சிறுசு; ஆனால் அவை தரும் பொருள் காரம் பெரிசு!

ஜாதிய வன்முறைகள், மதக்கலவரங்கள், அரசியல் தந்திரங்கள், வறுமை, காதல், தன்னம்பிக்கை, 
பாசம், உழைப்பு, தத்துவம்
என அனைத்து பொருள்கள் பற்றியும்  அர்த்தத்துடன் பொருள் செறிவுடன்  கவிதைகள் புனைந்துள்ளார்.

அரசாங்கத்தின் திட்டங்கள் சாமானியன் வரைக்கும் சென்று சேர்வதில்லை என்பதை 'எங்கள் நம்பிக்கை!' என்ற தலைப்பின் கீழ்,

'எங்களுக்காக இயற்றப்படும் திட்டங்கள் எல்லாம்  எங்களைப் போலவே 
திசைமாறிப் போய்விடுகின்றன'
என்று கவிதையாய் பாடுகிறார்.

தொலைக்காட்சித் தொடர்களில் அடிமையாகிக் கிடக்கும் பெண்களைப் பற்றி,

'கணவனின் வருகைக்குக்  காத்திருப்பதை விட  தொலைக்காட்சித்  தொடர்களுக்காக  காத்திருக்கும் குடும்ப குத்துவிளக்குகள்' 
- எனக் குறிப்பிட்டு சாடியுள்ளார்.

மீனவர்கள் என்ற தலைப்பில் எழுதிய கவிதையில்,

'இவர்கள் - கடல் மூழ்கி 
முத்து எடுப்பார்கள் சொத்து சேர்க்க அல்ல!
வயிற்று சோத்துக்காக...' என வரும் வரிகள் - 
'ஆடி முடித்து இறங்கி வந்தா அப்புறம்தான்டா சோறு' என்ற பாடல் வரிகளை ஞாபகப்படுத்துகின்றன.

அதே கவிதையின்
அடுத்த பத்தியில்,

'அசைக்க முடியாத  நம்பிக்கையில்  இவர்களின் பயணம்  தொடர்ந்து கொண்டே இருக்கும்  
கடல் அலை மேல்'  என்று குறிப்பிடுகிறார்.
கடலில் மூழ்கி முத்தெடுப்பதையும் அதேபோல் 'கடல் அலை மேலே' பயணம் போவதையும் இங்கு குறிப்பிடுகிறார்.
அந்த கடைசி வரியை, 
'கடல் அலை போல்' என்று முடித்திருக்கலாம்.

'இழந்ததை நினைத்து  கன்னத்தில் 
கை வைக்கும் இளைஞனே!  இருப்பதை வைத்து - உன்  எண்ணத்தில் நம்பிக்கை வை வானம் உன் வசமாகும்!' 
- இது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை 'நம்பிக்கை' என்ற தலைப்பில்.

இப்படியாக  படிக்க, 
படித்து ரசிக்க, ரசித்து படித்த  கவிதையைப் பற்றி யோசிக்க என பரவசம் உண்டாக்குகின்ற கவிதைகளைத்   தொகுப்பாகக் கொண்டுள்ளது  இந்நூல்!

படிக்கலாம்! ரசிக்கலாம்!!




விவரக் குறிப்புகள்:  

நூலின் பெயர்: 
'இன்னும் என்ன உறக்கம்!' (கவிதைகள்)

ஆசிரியர்:          
கவிஞர் எல். இரவி 

பக்கங்கள்: 71

விலை: 
ரூபாய் 80

வெளியீடு:
'தமிழகம்', 
1/84, தெற்குத் தெரு,
செ. புதூர் அஞ்சல்,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
அலைபேசி எண்: 
99521 13194

அன்பன்,
அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விமர்சனம் அருமை...

அ.முஹம்மது நிஜாமுத்தீன். said...

கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி சார்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...