...பல்சுவை பக்கம்!

.

Sunday, September 6, 2026

'தடம் மாறும் தடயங்கள்' நூல் விமர்சனம்! #190

தடம் மாறும் தடயங்கள் -கவிதை நூல் விமர்சனம்!






'தமிழகம் பதிப்பகம்' வெளியிட்டுள்ள கவிதை நூல், 'தடம் மாறும் தடயங்கல்!'
 இதன் ஆசிரியர் கவிஞர் கவிச்செம்மல் செ.புதூர் இல.ரவி அவர்கள்.
இவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர்.
இவர் துணுக்குகள்,  கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என அனைத்து தடங்களிலும் முத்திரை  படைத்த, படைக்கும் பன்முகப் படைப்பாளி ஆவார்! இந்த நூல் இவரது ஏழாவது நூலாகும்!

இந்தக் கவிஞர் தமிழாசிரியராக இருந்ததால், தான் பார்க்கும் காட்சிகளை தனது எண்ணங்களாக்கி,  வார்த்தைகளாக கோர்த்து அதை அழகான கவிதை ஆக்கி விடுகிறார்!

தனது கவிதைகளில் இவர் தொடாத துறையே இல்லை.
அரசியல், மதம்,
காதல்,
உழைப்பாளர்,
விவசாயம்,
இயற்கை... 
இப்படி அனைத்தைப் பற்றியும் தனது கவிப் பார்வையை வெளிக் காட்டியுள்ளார்.

•ஒரு குறிக்கோள் கொண்டு இயங்கும் ஒரு லட்சியவாதி எப்படி இருப்பான் என்பதை சொல்கிறது இந்தக் கவிதை! 

'குளத்துக் கரையில் ஒற்றைக்காலில் தவமிருக்கும் கொக்கிற்கு கால்கள் வலிப்பதில்லை, தேடலின் வலிமை!'

•நீதித்துறையின் அவலத்தை சாடுகின்றது இந்தக் கவிதை!

'சில சிறைச்சாலை அறைகளின் இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து இருக்கின்றன, அப்பாவி நிரபராதிகள் சிந்திய கண்ணீராகக் கூட இருக்கலாம்!

•அரசுப் பள்ளிகளை அலட்சியப்படுத்திவிட்டு,
தனியார் பள்ளிகளைத் தாங்கிப் பிடிக்கும் இன்றைய கால பெற்றோர்களைக் குறி வைத்துக் குறை சொல்கிறது, 'தாய்ப்பாலும் தாய்மொழியும்' எனும் தலைப்பிலான  இந்தக் கவிதை! (சில வரிகள்!)

'அரசுப் பள்ளிகள் அனாதையாக்கப்பட்டு ஆங்கிலப் பள்ளிகள் ஆண்டுக்கு ஆண்டு அமோக விளைச்சலுடன்...! 
வீதிக்கு வீதி பிள்ளைப் பிடிக்கும் மஞ்சள் நிறப் பேருந்துகள்!'

•வாழ்க்கையின் அறநெறியை வலியுறுத்தும் இந்தக் கவிதை! 

'ஆழ உழுதும்  
அகல உழுதும்   
எந்த பலனுமில்லை   
தரமற்ற விதை     
அறமற்ற வாழ்க்கை!'

•விவசாயிகளுக்கு விவசாய நிலங்களுக்கு விவசாயம் செய்வதற்கு ஆதாரம் நீர்.
நமக்கு வர வேண்டிய காவிரி நீர் சரியான நேரத்தில் வந்தால் தான், வந்து அணை திறந்தால் தான் சாகுபடி செய்ய முடியும்; விளைச்சல் காண முடியும்! அதுதான், 'பருவத்தே பயிர் செய்!' என்று சொல்லப்பட்டது. காவிரி நீர் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் பொருத்தமாய் இந்தக் கவிதை!

'இங்கு யாருமே பருவத்தில் 
பயிர் செய்வதில்லை 
அப்படியே செய்தாலும் 
ஒன்று விதை பழுதாகி இருக்கும்  இல்லையென்றால் 
நிலம் பழுதாகி இருக்கும்  
இரண்டுமே சரியாக இருந்தாலும் 
நீரின்றி காய்ந்து கிடக்கும்.'

•பாரதியாரைப் பாராட்டும் பாடல் இது! (சில வரிகள்!)

'அவன் பாட்டுக்கு உண்டு கொழுத்து உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இவன் பாட்டுக்கு இமயத்தையே சரியச் செய்தவன்!'

•உலகில் வாழ்கின்ற மனிதனுக்கும் மற்ற, மற்ற உயிரினங்களுக்கும் உணவு முக்கியம்! உணவுச் சங்கிலியும் முக்கியம்!
உணவு பற்றி இந்தக் கவிதை! 

'இரை தேடிய குற்றத்திற்காக 
மீனுக்கு தூண்டிலில் தூக்கு!' 

•மனிதனின் மனதில் பொதுநலத்தை விட, இப்பொழுது சுயநலமே முக்கியமாகிவிட்டது என்பதை உணர்த்துகிறது இந்தக் கவிதை! 

'இரு பக்கமும்  திண்ணை வைத்து  கட்டிய தாத்தாவின்  பழைய ஓட்டு வீட்டை 
பேரன் புதுப்பித்துக்  கட்டினான் அஞ்சாறு கடைகளாய்...!'

இப்படியாக கவிதைகள் அனைத்தையும் வாசிக்கலாம்! ரசிக்கலாம்! சிறிது நேரம் யோசிக்கலாம்!
வாங்கிப் படிக்கும் அனைவருமே இந்நூலை விரும்புவார்கள் என்பது உறுதி!

நூல் விவரங்கள்:
தடம் மாறும் தடயங்கள் - கவிதை நூல். 
ஆசிரியர்: கவிச்செம்மல் செ.புதூர் இல.இரவி.

வெளியீடு: தமிழகம் பதிப்பகம், 
செ. புதூர் அஞ்சல் 612203,
தஞ்சாவூர் மாவட்டம்.
அலைபேசி:
99521 13194,
மின்னஞ்சல்: ravispr1962@gmail.com

-அ.முஹம்மது நிஜாமுத்தீன், பேங்காக்.
.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...