...பல்சுவை பக்கம்!

.

Saturday, September 12, 2009

அரிய நீல நிற வைரம்!



அரிய நீலநிற வைரம்

உறுதிக்கு வைரத்தை உதாரணமாகச் சொல்வார்கள்.
'வைர நெஞ்சம்',
'வைரம் பாஞ்ச கட்டை'
என்றெல்லாம் சொல்வார்கள்.
'வைரத்தை
வைரத்தால்தான் அறுக்க வேண்டும்' என்றொரு சொலவடையும் உண்டு.

வைரம் கருப்பு, மஞ்சள், வெள்ளை என
பல நிறங்களில் கிடைத்தாலும்
சிவப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைப்பது
மிக அரிது. அப்படி இந்த இரு நிறங்களில்
கிடைக்கும் வைரங்கள் மிக, மிக விலை
மதிப்பு மிக்கவை.

கடந்த 12.05.2009 அன்று ஜெனீவாவில் தொலைபேசிவழி நடந்த ஒரு ஏல
நிகழ்ச்சியில் நீல நிற வைரம் ஒன்று விற்பனையாகியது. இது 7.03 கேரட் எடை கொண்ட சதுர வடிவிலானதாகும். இந்த வைரம் 9.49 மில்லியன் அமெரிக்கன் டாலர்
தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. (இந்திய ரூபாய் மதிப்பு ரூபாய் 46 கோடியே 50 லட்சம்.) ஒரு கேரட் விலையாக அதிகபட்சத் தொகைக்கு விற்கப்பட்டது என்று
இது புதிய உலக சாதனையாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த வைரத்தை ஏலம் மூலமாக விற்றுக்
கொடுத்த ஏல நிறுவனம்
இதன்மூலம் தங்களுக்குக் கிடைத்த
தரகுத் தொகை (கமிஷன்) எவ்வளவு
என்பதையும் வாங்கியவர் பெயரையும் வெளியிடவில்லை.

இதற்கு முன்னர் 6.04 கேரட் எடை கொண்ட
வைரம் அக்டோபர் 2007-ல்
ஹாங்காங்கில் 7.9 மில்லியன் அமெரிக்கன்
டாலருக்கு அதிகபட்சமாக
விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வைரம் மற்றும் நவமணிகளை கேரட் என்ற
அளவால் குறிப்பிடுவர். 5 கேரட் கொண்டது
ஒரு கிராம் ஆகும். அதாவது
0.20 கிராம் என்பது ஒரு கேரட் எடையாகும்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Friday, September 11, 2009

கீழேயா? மேலேயா?

தெருவில் சைக்கிளில் ஒரு வியாபாரி
பெரிய வெங்காயம் விற்றுக் கொண்டு
போய்க்கொண்டிருந்தபோது எங்கள்
பக்கத்து வீட்டருகில் மணலில்
சைக்கிள் சக்கரம் சிக்கி கீழே விழுந்து
விட்டார். பெரிய வெங்காயம் எல்லாம்
மணலில் கொட்டி விட்டது.

இதைப் பார்த்த நானும் பாபுவும்
அவற்றைப் பொறுக்கி எடுத்து
மணலைத் தட்டி விட்டு மீண்டும்
சாக்குப் பையில் போட அவருக்கு
உதவிக் கொண்டிருந்தோம்.

அப்போது தெருவாசலுக்கு வந்த
பக்கத்து வீட்டுப் பாட்டி, பாபுவிடம்,
"ஏண்டா பாபு வெங்காயமெல்லாம்
கீழே கொட்டிடுச்சா?" என்று கரிசனமாகக்
கேட்டார்கள்.

"கொட்டினது கீழே இல்ல பாட்டி;
தரை மேலே" என்று பாட்டியிடம்
பதில் சொன்னான், பாபு.

"இந்த எடக்கு மடக்குக்கு ஒன்னும்
கொறச்சல் இல்ல. நீயும் உன்
வாயும்" என்று பாபுவைத் திட்டி
விட்டு திரும்பவும் வீட்டுக்குள்ளே
போய்விட்டார்கள் அந்தப் பாட்டி.

கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்
அதே புன்சிரிப்புடன் அந்த வியாபாரிக்கு
உதவிக் கொண்டிருக்கிறான் பாபு!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

நல்லா ஒழுகுமா?

மயிலாடுதுறை காந்திஜி சாலையில்
(இரண்டாம் இலக்கச் சாலை என்றும்
மற்றொரு பெயர் உண்டு.) வடநாட்டு
சேட்டுகள் நிறைய கடை வைத்துள்ளார்கள்.

அந்தக் கடைகளில் கடை முதலாளி
சேட்டுகள் தனது ஊரிலிருந்து சிறு வயது
பையன்களை வரவழைத்து சேல்ஸ்மேனாக
வைத்துக் கொண்டிருப்பார்கள். அந்தப்
பையன்கள் தமிழை புதுமாதிரியாகப்
பேசி, வியாபாரம் செய்வார்கள்.

"இந்தப் பிஸ்கட் நல்லாயிருக்குமா"
என்று கேட்டால் "நல்லாயிருக்கும்"
என்பார்கள்.

"இந்த வாஷிங் பவுடர் நல்லா வெளுக்குமா"
என்று கேட்டால் "நல்லா வெளுக்கும்"
என்பார்கள்.

அதில் ஒரு பொது வணிகக் கடையில்
(ஜெனரல் ஷாப்) நான் அடிக்கடி பொருள்கள்
வாங்குவதுண்டு.

அப்படி ஒரு நாள் நான் பொருள் வாங்கிக்
கொண்டிருக்கும்போது, பக்கத்தில் மற்றொரு
வயதான பெரியம்மா 5 லிட்டர் கொள்ளளவு
கொண்ட வாட்டர் கேன்(அல்லது ஆயில் கேன்)
ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பிளாஸ்டிக்காலான அந்தக் கேனை கையில்
வைத்து, அடிப்புறம் பார்த்துக் கொண்டே,
"இந்தக் கேன் ஒழுகுமா?" என்று அந்தக்
கடைப் பையனைக் கேட்டார்கள்.

உடனே அந்தப் பையனும் "நல்லா ஒழுகும்"
என்றான்.

அந்தப் பெரியம்மா சேட்டிடம், "என்னா சேட்டு,
'ஒழுகுமா'ன்னுக் கேட்டா 'நல்லா
ஒழுகும்'ங்குறான்?" என்று கேட்டார்கள்.

சேட்டும் அந்தப் பையனை ஹிந்தியில்
திட்டிவிட்டு, "இல்ல பெரியம்மா,
நல்லா ஒழுகும்னு அவன் சொல்லல.
'நல்லா ஒழைக்கும்'ங்குறான்" என்று
திருத்தம் சொன்னார் பெரியம்மாவிடம்.

"சேட்டு நல்லா சமாளிக்கிற சேட்டு!
பொழச்சிக்குவே!!"என்று பெரியம்மா
சேட்டைப் பாராட்டி விட்டு சிரித்தவாறு
பணத்தைக் கொடுத்து கேனை வாங்கிச்
சென்றார்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Thursday, September 10, 2009

அன்பாக... ஆதரவாக...

அன்பாக... ஆதரவாக...

அன்பருக்கு நலமில்லை ஆஸ்பத்திரிக்குப் போனார்.
டாக்டர் பார்த்தார் செக் பண்ணார்.

இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை,
ஸ்கேன், எக்ஸ்ரே, ஈசிஜி எடுத்தார்.

"ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்குங்கள்,
மாத்திரை, மருந்துகள் சாப்பிடுங்கள்"

சொன்ன மருத்துவர் கொழிக்கின்றார்;
நோயாளி பணத்தை செலவழிக்கின்றார்.

"இந்த சாப்பாடாடெல்லாம் மருந்துங்க;
மத்த எல்லாத்தையும் மறந்துடுங்க;

தினமும் கொஞ்ச தூரம் நடந்திடுங்க;
உடல் பழையநிலை அடைந்திடுங்க"

சொன்னார் டாக்டரும் நன்றே!
அன்பரும் தங்கினார் அன்றே!

நண்பர்கள், உறவினர்கள் வந்தனரே!
நன்றாய் அறிவுரை தந்தனரே!

'மதுவும் சிகரெட்டும் வேண்டாமே!
மாதுவால் எய்ட்ஸ் வந்திடுமே!'

வந்தவர்கள் சும்மாவா இருந்தார்கள்?
சூழ்நிலை தன்னை மறந்தார்கள்.

"மனோகர் அப்படித்தான் நலமில்லை;
மறுநாள் அந்த ஆளே இல்லை"

"பொன்னுசாமி மாமாவுக்கு வயித்துப்போக்கு;
போயிட்டாரு மறுநாளு சுடுகாட்டுக்கு"

"ஆறுமுகம் அத்தானுக்கு ஹார்ட் அட்டாக்கு;
அய்யய்யோ அப்பவே அங்கேயே போயிட்டாரு"

மற்றும் பற்பல உரைத்தார்கள்.
வயிற்றில் புளியைக் கரைத்தார்கள்.

நோயாளிக்கு கிலியைக் கிண்டலாமா?
இருக்கின்ற பயத்தைத் தூண்டலாமா?

யாருக்குமே உள்ளபடி சாதகமா?
நோயாளிக்குமே உள்ளத்திற்கு பாதகமே!

நல்லதை ஆறுதல் சொல்லலாமே?
உள்ளத்தை தேறுதல் செய்யலாமே?

நோயாளிக்கு ஊட்டணும் தெம்பு!
நமக்கேனுங்க ஊர்வழக்கு வம்பு?

வந்தாலும் வாய்ப்பேச்சு, வெட்டிப்பேச்சு.
வராங்காட்டி ரொம்பவே நல்லதாச்சு.

உறவையும் நட்பையும் மறந்திடுங்கள்.
ஊட்டுக்குள்ளே கம்முனு இருந்திடுங்க.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

இந்த நாள் இனிய நாள்!

இன்று (07.08.2009) இனிய நாளாய் அமைந்திடும்
அனைவருக்கும்.


அதோடு இன்றைய நாளில் ஒரு சுவாரஸ்யமான
நேரமும் உண்டு. பிற்பகல் 12 மணி 34 நொடி
56 வினாடிதான் அது. இதன்படி நேரத்தையும்
தேதியையும் வரிசையாக எழுதினால்
பின்வருமாறு எழுதலாம்:

12:34:56 - 7/8/9.


எல்லா இலக்கங்களும் வரிசையாக அமைந்துள்ளன,
0-ஐத் தவிர.


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

[பின் குறிப்பு: இந்தக் குறிப்பு 2009 ஆகஸ்ட்
7-ஆம் நாளன்று எழுதப்பட்டது.]

Wednesday, September 9, 2009

பஸ்ஸை ஓட்டிப் பார்க்கலாமா?

சோழன் போக்குவரத்துக் கழகத்தின் டிரைவர்
சீனு எனக்கு நண்பர். நான் எங்களூரில்
எப்போதாவது பஜாரில் நண்பர்களோடு
நின்று பேசிக் கொண்டிருந்தால், என்னை
பார்த்து கையாட்டிவிட்டுச் செல்வார்.

அதுபோல் ஒரு நாள் காலையில் சீனு
பஸ்ஸை ஓட்டிக் கொண்டே என்னைக்
கடைத்தெருவில் பார்த்து கையாட்டிவிட்டுச்
சென்றார்.

பஸ்ஸுக்கள் மதியம் சுமார் 12-லிருந்து
1 மணிக்குள் பணிமனை சென்று டூட்டி
மாற்றி வருவார்கள்.

ஆனால், அன்று மாலையே நான் மயிலாடுதுறை
செல்ல வேண்டியிருந்ததால், கடைத்தெருவில்
பஸ்ஸுக்காகக் காத்திருந்தால், வந்த பஸ்ஸை
காலையில் ஓட்டிய ஓட்டுனர் சீனுவே ஓட்டிக்
கொண்டிருந்தார்.

பஸ்ஸில் ஏறியதும் நான் அவர் அருகில் சென்று,
"என்ன சீனு, காலையிலும் ஓட்டினீங்க; இப்பவும்
ஓட்டிக்கிட்டு இருக்கீங்களே,ஏன்?" என்று கேட்டேன்.

அதற்கு, "அதுவா நிஜாம்? ஓட்டிப் பார்த்துக்கிட்டு
இருக்கேன்" என்றார் சீனு.

நான் பதறிப் போய், "என்ன ஓட்டிப் பார்த்துக்கிட்டு
இருக்கீங்களா? லைசென்ஸ் எப்ப எடுப்பீங்க? நாங்க
50, 60 பேர் உங்களை நம்பி, உங்கப் பின்னால
இருக்கோம்,நீங்கதான் பொறுப்பு" என்றேன்.

"அட நீ வேற பீதியக் கிளப்பாதப்பா. நான் சொன்னது
'ஓட்டி' இல்ல! அதாவது 'ஓ.ட்டீ'. ஓவர் டைம்
டூட்டி பார்க்கிறேன்னு சொன்னேன்" என்று நண்பர்
சீனு சொன்னதும் பஸ்ஸில் அருகிலிருந்த
சக பயணிகளிடையே கல... கல... கல...

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Tuesday, September 8, 2009

அ(ங்கே) ஆ(ரம்பித்து) இ(ங்கே)...

அன்பு : அம்மா + அப்பா

ஆர்வம் : நூல்கள் படிப்பதில்

இன்பம் : இறைவனது அற்புதங்களை இரசிப்பதில்

ஈகை : தேவையுடையோருக்குத் தகுந்த
சமயத்தில் உதவுதல்

உயர்வு : முயற்சியுள்ளவரையில் உயர்வு உண்டு

ஊக்கம் : அரிய செயல்களைப் புரிய
மற்றவர்களுக்கு நாம் கொடுப்பது

எண்ணம் : அனைவரும் இன்புற வேண்டும்

ஏன் இந்தப்
பதிவு? : சுட்டீஸ் லாஃபிரா அழைத்ததால்

ஐயம் : நம்பியபின் ஐயம் ஏன்?

ஒற்றுமை : சண்டைகள், பிரிவுகள், வேறுபாடுகள்
களைந்தால் வருவது

ஓட்டம் : எதிலும் 'ஓட்டம்' நன்றாயிருந்தால்
எதுவும் நன்றாய் 'நடக்கும்'

ஔடதம் : மனதார சிரித்து மகிழ்வது

அஃது : என் பேனா: நண்பன்

இதில் கை கோர்க்க அழைக்கிறேன்; அபி அப்பா, கிருஷ்ணா.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Monday, September 7, 2009

கலாட்டா காலேஜி; கலாட்டா பாலாஜி!

நானும் நண்பன் பாலாஜியும் பஸ்ஸில்
காலேஜுக்குச் சென்று கொண்டிருந்தோம்.
காலேஜ், மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ.
தூரத்தில், பூம்புகாருக்கு 3 கி.மீ. முன்பாக
உள்ள மேலையூரில் அமைந்துள்ள
'பூம்புகார் பேரவைக் கல்லூரி'. சுருக்கமாக ப்பீ.ப்பீ.கே.
(இப்போது அதன் பெயர் 'இந்து சமய அறநிலை ஆட்சித்
துறையின் பூம்புகார் கல்லூரி')

அன்று திங்கள் காலை நேரம்.

பஸ்ஸில் நிறைவான கூட்டம். மாணவர்கள் அனைவரும்
அரட்டைப் பேச்சுடன் சென்று கொண்டிருக்கிறோம்.
எங்கள் இருவருக்கும் உட்கார இருக்கைகள் கிடைத்து விட்டன.

நான் பேசிக் கொண்டேயிருக்க, 'உம்' போட்டு, கேட்டு
வந்த பாலாஜி இடையிடையே கண் சொக்கி தூங்க ஆரம்பித்தான்.

நான் அவனிடம், "என்னப்பா தூங்கி விழறயே, ஏன்?" என்று
கேட்டேன்.

"சென்னை போய்விட்டு நேற்று நைட்தான் பஸ்ஸில ஊர் வந்தேன்"
என்றான் பாலாஜி.

"அட அப்படின்னா வீட்டிலயே தூங்கி ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே?"
என்று நான் கேட்டேன்.

"அதுக்குத்தானே காலேஜுக்கு வரேன்" என்று பட்டென்று பதில் சொன்னான் பாலாஜி.

'தூங்கினாலும் காலேஜ் போகணும் என்று காலேஜ் வருகிறானே என்று
பாராட்டுவதா; காலேஜுக்கு வந்தும் தூங்கப் போறானே என்று
திட்டுவதா' என்று நான் திகைத்து விட்டேன்.

வேடிக்கையை வாடிக்கையாய் கொண்ட கலகல நண்பன் பாலாஜி
இப்போது நம்மிடையே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக
நோய் தாக்கி அகால மரணமடைந்தா(ன்)ர்.

அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
Related Posts Plugin for WordPress, Blogger...