...பல்சுவை பக்கம்!

.

Sunday, September 6, 2009

பேய்க்கு பயப்படலாமா?

'இல்லறம் சிறக்க பெரிதும் பங்காற்றுவது கணவனா?
மனைவியா?' என்ற தலைப்பில் பட்டிமனறம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது. இரு அணியினரும் நகைச்சுவையுடனும்
கருத்துக்களுடனும் தங்கள் வாதங்களை முழங்கிக்
கொண்டிருந்தனர்.அப்பொழுது நேரம் சுமார் 9.30 மணி இருக்கலாம்.

ஒரு பேச்சாளர் பேசிக் கொண்டிருந்தார்.. "ஒரு நண்பரிடத்தில்
'நீங்க பேயைப் பார்த்திருக்கீங்களா?' என்று கேட்டேன்.
'அதுகூடத்தானே 15 வருஷமாய் குடும்பம் நடத்திக்கிட்டிருக்கேன்'
என்று வேதனையோடு நொந்துபோய் பதில் சொன்னார் நண்பர்.
அவருடைய அனுபவம் அப்படி.

ஓர் ஆள் மனைவியைப் பார்க்க மாமியாருடைய ஊருக்குப் போறாரு.
போற வழி அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுபோன்ற பாதை. இரவு நேரம்
ஆகிடுது. இருட்டுப் பாதையில் பயந்துகொண்டே, பாட்டு பாடிக்கொண்டு
போறாரு. அப்போ வேற ஒரு நபர் குறுக்குப் பாதையிலருந்து வந்து
இவர் கூடவே சேர்ந்து நடக்கிறாரு.

நம்ம ஆளு 'துணைக்கு ஆளு வந்துடுச்சி' என்று தெம்போட,
வந்த நபர்கிட்டே பேச்சு கொடுத்துக்கொண்டே, 'இந்த பாதையில
பேய் நடமாட்டம் இருக்குன்றாங்களே, நிஜமா?'னு கேட்குறாரு.
அதுக்கு அந்த நபர், 'எனக்குத் தெரியாது; நான் செத்துப்போய்
மூணு வருஷம் ஆகிடுச்சி. வேற யாராவது உயிரோட
இருக்கிறவங்களாப் பார்த்துக் கேளுங்க'னு சொன்னாரு பாருங்க,
நம்ம ஆளு எடுத்த ஓட்டம், மாமியார் வீட்டுலபோய்த்தான்
நின்னாரு"

இப்படி பேச்சாளர் பேசிக்கொண்டு இருக்கும்போதே,
நடு(வில் குறுக்கிடுப)வர் இடைமறித்து, "அட நீங்களும் இந்த
இரவு நேரத்தில பொண்டாட்டி, பேய்னு கதைசொல்லி
எல்லோரையும் பயமுறுத்தறீஙகளே, நியாயமா?
நான் மற்றவங்களைச் சொன்னேன். எனக்கு இந்த பிசாசு,
பேய் எதுவும் பயம் கிடையாது......" என்று நிறுத்தி,
நிதானமாய், இழுத்துச் சொன்னவர் தொடர்ச்சியாய்,
"அதாவது பகலில்" என்று சொன்னதும் சிரிப்பொலியும்
கரவொலியும் அடங்க சில நிமிடங்களாயின.

கண்டு இரசித்தவர்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Saturday, September 5, 2009

இன்பமான நேரம்

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது
என்னவென்றால்!

இந்த ஆண்டு (கி.பி.2009) செப்டம்பர் மாதம்
9-ஆம் நாள் அன்று காலை சுமார் 9 மணியளவில்
அனைவரும் நினைவில் கொள்ளத்தக்க வகையில்
அமைந்துள்ள ஓர் அம்சம் உள்ளது.

அன்றைய தினத்தின் காலை 9 மணி 9 நிமிடம்
9 வினாடி என்பது விந்தையான வேளை ஆகும்.

அந்த நேரத்தில் நாம் நினைத்துக் கொள்வோம்,
பின் வரும் கால குறியீட்டை.

அதை இப்படி குறிக்கலாம்:
09/09/09 - 09:09:09


இதே மாதிரி இன்னும் 13 மாதங்களில் வரும்
சிறப்பான நேரம்:- 10/10/10 - 10:10:10

அவ்வளவுதான் மேட்டர்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Friday, September 4, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 1

அம்மா பேய் : "நம்ம பையனுக்கு மனுஷன் கதை சொல்லாதீங்கன்னேன், கேட்டீங்களா?"

அப்பா பேய் : "ஏன் நம்ம பையனுக்கு என்ன ஆச்சு?"

அம்மா பேய் : " பயந்துபோய் அழறான்"

******************************************************

நோயாளியின் நண்பர்: "டாக்டர், நீங்க ஆபரேஷன் பண்ணுன ராமு இப்ப எங்க இருக்காரு?"

டாக்டர் : "அவரு எங்க இருக்காரு?!?!?"

******************************************************
ரயில் இருப்புப்பாதையில் நடந்துகொண்டே.....

ஒரு பைத்தியம்: "முட்டாளுங்க, மாடிப்படியை எவ்வளவு தள்ளித் தள்ளி வச்சிருக்கானுங்க!!!"

மறு பைத்தியம்: "அதாவது பரவாயில்லை. மாடிப்படிக்கு, கைப்பிடியை எவ்வளவு கீழே கொண்டுபோய் வச்சிருக்கானுங்க!!!"

*******************************************************

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Thursday, September 3, 2009

சர்க்கஸா? சினிமாவா? ஸ்கூலா?



சர்க்கஸா? சினிமாவா? ஸ்கூலா?

ஒரே வகுப்பில் படிக்கும் மூன்று மாணவர்கள் நண்பர்களாய் இருந்தார்கள்.
எப்போதும் எங்கே போனாலும் வந்தாலும் ஒன்றாகவே போவார்கள்,
ஒன்றாகவே வருவார்கள்.

ஒரு நாள். மூவரும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, முதல்
நண்பன், "நம்ம ராஜன் தோட்டம் மைதானத்துல மெஜினி சர்க்கஸ்
வந்துருக்கு. அதுக்குப் போவோமாடா?" என்று கேட்டான்.

அதற்கு இரண்டாம் நண்பன், "நம்ம வானதி தியேட்டர்ல கூர்யா
நடிச்ச படம் வந்திருக்கு. அதுக்குப் போவோம்டா" என்று சொன்னான்.

முன்றாவது நண்பன், "மெஜினி சர்க்கஸும் வேணாம், கூர்யா
படமும் வேண்டாம். நம்ம ஸ்கூலிலேயே அடுத்த மாதம் எக்ஸாம்
வருதுடா. அதனால கிளாஸுக்கே போலாம்டா" என்றான்.

அப்பொழுது முதல் நண்பன், "ஒரு ஐடியா. ஒரு ரூபா காயின்
எடுத்து பூவா, தலையா போட்டுப் பார்ப்போம். பூ விழுந்தால்,
மெஜினி சர்க்கஸ் போவோம்; தலை விழுந்தால், கூர்யா
படத்துக்குப் போவோம்" என்று யோசனை கொடுத்தான்.

கிளாஸுக்குப் போகவேண்டுமென்று சொன்ன அந்த மூன்றாவது
நண்பன், "என்னங்கடா, காயின்ல ரெண்டு சைடுதானடா
இருக்கு? நான் கிளாஸுக்குப் போகணுமின்னு சொல்றேனே,
அதுக்கு எப்படிடா சாய்ஸ் பார்க்குறது?" என்று கேட்டான்,
பரிதாபமாக.

உடனே, "சுண்டி போடுற காயின் நட்டுக் குத்தலா
நின்னுச்சுன்னால், நிச்சயமா ஸ்கூலுக்குப் போகலாம்டா"
என்றான் இரண்டாவது நண்பன், கூலாக.

ஆகவே,
நல்லவர் எனில் பழகு;
இல்லை எனில் விலகு.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்

Wednesday, September 2, 2009

என்ன வரம் வேண்டும்?



'சிரிண்டா'! வீட்டிலிருந்தாலும் ஆஃபிஸிலிருந்தாலும் பெட்டிக்கடைக்குப் போனாலும் ரெஸ்டாரெண்டுக்குப் போனாலும் எங்கேயும் எப்போதும் சிரிண்டாவைத்தான் வாங்கிக் குடிப்பார் அந்த ந(ண்)பர்.

ஒரு நாள்.

ரெஸ்டாரெண்டில் அமர்ந்து சிரிண்டாவை துளி, துளியாக உறிஞ்சிக்
கொண்டே, "பாட்டிலில் சிரின்டா குறையக் குறைய தீர்ந்துபோகாமல்
மறுபடியும் மறுபடியும் வந்துகொண்டே இருந்தால், நன்றாக
இருக்குமே" என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார் அந்த நபர்.

அடுத்த நொடி.
படக் என்று சத்தம்.
பளிச் என்று வெளிச்சம்.
கடவுளே அந்த நபரின்முன்னே தோன்றிவிட்டார்.

"ஓ மனிதா... நீ நினைத்ததுபோலவே உனக்கு பாட்டிலில் சிரிண்டா வந்து
கொண்டேயிருக்க அருள் புரிந்தோம். உனக்கு மூன்று வரங்கள் தருகிறேன்.  இன்னும் இரண்டு வரங்கள் என்ன வேண்டும்? கேள்" என்றார் கடவுள்.

"கடவுளே, சற்று பொறு" என்று கூறிவிட்டு, சிரிண்டாவை முழுவதும்
காலி செய்துவிட்டு பாட்டிலை மேஜையில் வைத்தார் அந்த நபர்.
திரும்பவும் பாட்டிலில் சிரிண்டா முழுமையாக நிரம்பிவிட்டது.

"ஓ சூப்பர் தலைவா, சூப்பர், சூப்பர்" என்று கடவுளைப் பாராட்டிவிட்டு,
'இன்னும் இரண்டு வரங்கள் இருக்கின்றன' என்று மனதில் யோசித்த
அந்த நபர் உடனே வாயைத் திறந்து கேட்டார், "இதுபோலவே இன்னும்
இரண்டு சிரிண்டா பாட்டில் வேண்டும்" என்று.

கடவுள் அப்ப ஷாக்க்க்க்கானவர்தான், இன்னமும் அங்கேயேதான்
அசந்துபோயி நிக்கிறாராம்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Tuesday, September 1, 2009

கற்றுத் தராதது!

கற்றுத்தராதது!

*எழுதியவர்: ப.ரியாஜ் அஹமது, லால்பேட்டை.

*மொழிகள் பயில
இலக்கணம்
கற்றுத் தந்தீர்கள்
முன்னோர்களே!

*வாழ்வதற்கும்
இலக்கணம்
வகுத்துத் தந்தீர்கள்
மூதோர்களே!

*நல்வழியில்
நடக்கவும்
இலக்கணம்
கற்றுத் தந்தீர்கள்!

*காதலிக்கவும்
இலக்கணம்
கற்றுத் தந்தீர்கள்.
ஆனால்,
காதலில் வெற்றிபெற
இலக்கணம்
கற்றுத்தராமல்
சென்றுவிட்டீர்களே!

*வெளியீடு: தினமலர் வாரமலர் 13/09/1998.
அனுப்பித்தவர்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Monday, August 31, 2009

தோசை (கதை)யைப் பிடிக்கும்தானே?-



உங்களுக்கு தோசை பிடிக்கும்தானே! அப்படியானால் இந்தக் கதை உங்களுக்குத்தான். (தோசை பிடிக்காதவர்களும் படிக்கலாம்.)

எனது நண்பருக்கு வெளியூருக்கு வேலை மாற்றலாகிவிட்டது.

முத‌ல் நாள்.வேலை முடிந்து திரும்பும்போது ரெஸ்டாரெண்டுக்குச் செ‌ன்று, தோசையும் காபியும் ஆர்டர் செய்தார். சர்வர் கொண்டுவந்து வைத்ததும், "தோசைக்கு சட்னியும் சாம்பாரும் வேண்டாம்; ஜீனி கொண்டுவாருங்கள்" என்றார் நண்பர். "தோசைக்கு ஜீனி கிடையாது, சட்னி, சாம்பார்தான்" என்றார் சர்வர். எனக்கு ஜீனிதான் வேண்டும் எ‌ன்று சண்டைபோட்டு வாங்கிசாப்பிட்டுவிட்டு வந்தார் நண்பர்.

இரண்டாம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் "இன்றுமுதல் தோசைக்கு ஜீனி கிடையாது" என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் சாம்பார், சட்னியும் வந்தது. நண்பர் உடனே மறுபடியும் தோசை கொண்டுவரச்சொன்னார். வந்தது. நண்பர் ஜீனி கொண்டுவரச்சொன்னார். சர்வர் மெனு போர்டைக் காட்ட, நண்பரோ, "இன்று, முத‌ல் தோசைக்கு ஜீனி கிடையாதுதான்; நா‌ன் இரண்டாவது தோசைக்குதான்ஜீனி கேட்டேன்" எ‌ன்று சொல்லி ஜீனி வாங்கி இரு தோசைகளையும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டார்.

மூன்றாம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் "இனிமேல் தோசைக்கு ஜீனி கிடையாது" என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் சாம்பார், சட்னியும் வந்தது. நண்பர் உடனே மறுபடியும் தோசை கொண்டுவரச் சொன்னார். வந்தது. ஏற்கெனவே தட்டிலிருந்த தோசையின்மேல் இந்த தோசையையும் வைத்துவிட்டு நண்பர் ஜீனி கொண்டுவரச்சொன்னார். சர்வர் மெனு போர்டை காட்ட, நண்பரோ, "இனி, மேல் தோசைக்கு ஜீனி கிடையாதுதான். நா‌ன் கீழ் உ‌ள்ள தோசைக்குத்தான் கேட்டேன்" என்று பிடிவாதமாய் கேட்டுவாங்கி இரண்டு தோசைகளையும் ஜீனியுடன் சாப்பிட்டு புறப்பட்டார்.

நான்காம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் "இனி தோசைக்கு ஜீனி கிடையாது" என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் சாம்பார், சட்னியும் வந்தது. நண்பர் உடனே இட்லி கொண்டுவரச் சொன்னார். வந்தது. நண்பர் ஜீனி கொண்டுவரச்சொன்னார். சர்வர் மெனு போர்டை காட்ட, நண்பரோ, "நா‌ன் தோசைக்கு ஜீனி கேட்கவில்லை; இட்லிக்குத்தான் கேட்டேன்" என்று கேட்டுவாங்கி இட்லியையும் கூடவே தோசையையும் ஜீனியுடன் சாப்பிட்டு புறப்பட்டார்.

ஐந்தாம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் "இனி தோசை, இட்லி, பூரி எதற்கும் ஜீனி கிடையாது" என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் ஜீனிபோடாமல் காபி கொண்டுவரச்சொன்னார். சர்வர் காபி கொண்டு வந்தார்.. நண்பர் காபியைக் குடித்துப்பார்த்துவிட்டு ஜீனி கொண்டுவரச் சொன்னார். வந்தது. நண்பர் இப்போது தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் வந்தது. தோசையை ஜீனியுடன் சாப்பிட்டுவிட்டு, காபியை ஜீனியில்லாமலே குடித்துவிட்டு நண்பர் புறப்பட்டார்.

இத்தனை நாளாக நடைபெற்ற அனைத்து சம்பவங்களையும் பார்த்துக் கொண்டிருந்த முதலாளி நண்பரிடம் "சார், இனி எப்போதும் உங்களுக்கு தோசைக்கு ஜீனி உண்டு" எ‌ன்று அனும‌தி அளித்தார். சர்வரிடம் முதலாளி "இனி உனக்கு சர்வர் வேலை கிடையாது. நிறுவனத்தின் நடைமுறைகளை நன்கு கடைபிடிக்கிறாய். இனி நீ சூப்பர்வைசர்." எ‌ன்று சொல்லி மிகவும் பாராட்டினார்.

அன்பர்களே, இதிலிருந்து என்ன தெரிகிறது?

பின் இணைப்பு:
இந்தக் கதையிலிருந்து அறியப்படும் நீதி:
1. விடாமுயற்சிக்கு வெற்றி நிச்சயம். (நண்பர்)
2. கடின உழைப்புக்கு உயர்வு நிச்சயம். (சர்வர்)

-இந்த தோசையை சுட்டவர்:அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

நல்வரவு!


அன்பானவர்களே!

அனைவர்கள்மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

எனது விருப்பம் இன்று நிறைவேறுகிறது. எனது இந்த புதிய வலைப்பூவிற்கு உங்கள் அனைவரையும் மிக மகிழ்வோடு வரவேற்கிறேன்.'நிஜாம் பக்கம்' என்கிற எனது புதிய வலைப்பூவில் பல்சுவை அம்சங்களும் உள்ளடங்கியதாய், அதாவது நான் கேட்டதையும் படித்ததையும் கண்டதையும் - அதாவது கண்ட எதையும் சுவாரஸ்யமாய் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன். ஏற்கெனவே நான் எழுதியவைகளுடன் பல புதிய அம்சங்களும் இதில் இடம்பெறும், நீங்கள் இரசிக்கும் வண்ணம்.

முதன்முதலாய் இணையதளத்தில் எனக்கு வாய்ப்புகள் அளித்து உற்சாகமூட்டிய சகோதரர் திரு.தமிழ்நேசன் அவர்களுக்கும் வலைப்பூவினைத் துவங்க என்னை ஊக்கமூட்டி, வழிமுறைகளும் காட்டித் தந்த எழுத்தாளர் திருமதி.சுமஜ்லா அவர்களுக்கும் முதற்கண் எனது நன்றிகள் உரித்தாகுக!

அன்பர்கள் படித்து, இதன் நிறை, குறை, கருத்துக்கள் ஆகியனவற்றை 'கமெண்ட்ஸ்' ஆகத் தந்து ஆதரவுக் கரம் கொடுங்கள் என்று நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.



உங்கள் அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
Related Posts Plugin for WordPress, Blogger...