...பல்சுவை பக்கம்!

.

Tuesday, September 29, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 3

என்னை யாரென்று...?
=====================
மாணவன்: "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?"

ஆசிரியர் : "டேய் யார்ரா அவன் கிளாசிலே பாட்டு பாடுறது?"

மாணவன்: "இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்?"

**********************************************************


டீ.வி.யை திட்டுவது என்?
=========================

பேரன் : "ட்டீ.வி! நீ நாசமாப்போக! நீ கட்டையிலப்போக! நீ பாழாப்போக!"

பாட்டி : "டேய் சீனு! ஏண்டா ட்டீ.வி.யை திட்டிக்கிட்டு இருக்கே?"

பேரன் : "நீதானே பாட்டி ட்டீ.வி.யை வையின்னு சொன்னே. அதுதான் ட்டீ.வி.யை வஞ்சிக்கிட்டு இருக்கேன்.


**********************************************************

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Saturday, September 26, 2009

இப்படியும் ஒரு காமெடி மனைவி!!!




இப்படியும் ஒரு காமெடி மனைவி!!!

ஒரு மாலை நேரம். ஆஃபீஸிலிருந்து கணவன் தனது
மனைவிக்கு ஃபோன் செய்து, "நீ செய்கிற மெதுவடை
சாப்பிட டேஸ்ட்டாக இருக்கும். இன்னும் ஒரு மணி
நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுகிறேன். மெதுவடைகள்
செய்துவை" என்றான். மனைவி "சரி" என்றாள்.

அதுபோலவே ஆஃபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்த கணவன், மனைவியிடம் "மெதுவடை எல்லாத்தையும் எடுத்து வா" என்றான். மனைவி ஒரு தட்டில் ஒரு மெதுவடையும் சட்னியும் கொண்டுவந்து கணவனிடம் கொடுத்தாள்.

வாங்கிப் பார்த்து அதிர்ச்சியான கணவன், "என்னடி, ஒரு வடைதான் இருக்கு.மற்றதெல்லாம் எங்கே?" என்று கேட்டான்.

அதற்கு மனைவி , "முதலில் ரெண்டு வடை சுட்டேன்.
நல்லாயிருக்கான்ன சாப்பிட்டுப் பார்த்தேன்.
அப்புறம் ரெண்டு வடை சுட்டேன். நல்லாயிருக்கான்னு
சாப்பிட்டுப் பார்த்தேன். அப்புறம் ரெண்டு வடை சுட்டேன்.
அதையும் சாப்பிட்டு விட்டேன். இப்படி எல்லா
வடையையும் சாப்பிட்டுவிட்டு இந்த ஒரு வடையை
மட்டும் உங்களுக்காக ஆசையோட எடுத்து வச்சிருக்கேன்" என்றாள்.

அந்தக் கணவன், "அடப்பாவி! எப்படி எல்லா வடையையும் சாப்பிட்டே!!!"
என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

அதற்கு "சிம்பிள்! முதல்ல ஒரு வடையை எடுத்தேன்.
ரெண்டா பிய்த்தேன்.முதலில் ஒரு துண்டை வாயில
போட்டு மென்னு சாப்பிட்டேன். அப்புறம் ரெண்டாவது
துண்டை எடுத்தேன். வாயில போட்டு மென்னு
சாப்பிட்டேன்.. அவ்வளவுதான்" என்று அந்த தட்டில்
மீதமிருந்த ஒரு வடையையும் சாப்பிட்டுக்
காட்டினாளாம் மனைவி.

இப்படிப்பட்ட மனைவிகள் ஒரு சிலர் (!?) இருக்கிறார்கள்.
கணவன்களே, ஜாக்கிரதை.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Thursday, September 24, 2009

ஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)


ஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் திருமதி
ஷோபனா ரவி, திரு ரவி தயாரித்து,
திரு. எஸ்.வி.சேகர் கதாநாயகனாக
நடித்த 'ஸ்பரிசம்' என்ற படத்தில் வரும்
பாடல். திரு.எஸ்.ப்பீ.பாலசுப்ரமணியன்
மற்றும் ஒரு பெண் குரல் [எஸ்.ப்பீ.
ஷைலஜா(?)] பாடியது.

என்னைக் கவர்ந்த பாடல் இது. பாடல்
பற்றிய மற்ற விவரங்கள் தெரிந்தவர்கள்,
பாடலின் ஒலி (ஆடியோ) வைத்துள்ளவர்கள்
தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டம்
இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து (பாடல்):

ஆண்:
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பாவை 'உன்' மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்

ஆண்:
வைரப் படைக்கலாம் நடுவே நாம் கைகள்
... இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம் அதற்கு மேல்
தேவர் இருக்கலாம் அவர்க்கெலாம்
பாடல் தொடுக்கலாம்
வைரப் படைக்கலாம் நடுவே நாம் கைகள்
... இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம் அதற்கு மேல்
தேவர் இருக்கலாம் அவர்க்கெலாம்
பாடல் தொடுக்கலாம்

பெண்:
இந்திரப் பதவி கிடைக்கலாம்
உடனே நாம் அதையும் மறுக்கலாம்
பறக்கலாம் சிரிக்கலாம் வா... ஸ்பரிசம்
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பாவை 'என்' மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்

ஆண்:
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
கனவில் பவனி வரும் கண்கள்
கார்த்திகை தீபங்களோ... ஓ...ஓ...
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
கனவில் பவனி வரும் கண்கள்
கார்த்திகை தீபங்களோ... ஓ...ஓ...

பெண்:
காலக் கதவினை மெல்லத் திறந்து
பப்பா... பப்பா... பப்பா...
கடந்த பாதையை மறந்து...
காலக் கதவினை மெல்லத் திறந்து
கடந்த பாதையை மறந்து
இந்த கணக்கில் நாம் பிறந்து
... வளர்ந்து கலந்தோம்... ஸ்பரிசம்
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பாவை 'என்' மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்


பாடலின் மெட்டு நன்றாக ஞாபகம் உள்ளது.
சில வார்த்தைகள் மட்டும் பிழையாக
இருக்கலாம்.

[கேட்டவை]

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Wednesday, September 23, 2009

பயணங்கள் முடிவதில்லை...





பயணங்கள் முடிவதில்லை!



பஸ்ஸில் காலேஜுக்குச் செல்லும்போது
மாணவர்கள் (சிலர்) செய்யும் லூட்டிகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

சில மாணவர்கள் டிக்கெட்டே எடுக்க
மாட்டார்கள். அது அவர்களுக்கு
பெருமை. டிக்கெட் பரிசோதகர் வந்தாலும்
எப்படி அவர்களிடமிருந்தும் தப்பிக்கிறார்கள்
என்பது மிகவும் புரியாத புதிர்.

நான் செல்லும் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காத
மாணவர்களை, கண்டக்டருக்குத் தெரியும்.
கேட்டால் 'முன்னாடி எடுக்கிறாங்க' என்றோ
'பின்னாடி எடுக்கிறாங்க' என்றோ சொல்வார்கள்;
ஆனால் யாரும் எடுப்பதில்லை.

அதனால், கண்டக்டர் டிக்கெட் எடுக்காத
மாணவனிடமே போய், "பாருங்க தம்பி
இதுங்க பண்ற அநியாயத்தை. அப்பா,
அம்மா நல்லபடியா வளத்தா இப்படிச்
செய்யுங்களா இதுங்க? டிக்கெட்டே எடுக்க
மாட்டேங்குதுங்க இந்த சனியன்கள்.
இதுங்களுக்கு நல்ல சாவே வராது.
சோத்ததான் திங்குதுங்களா இல்லாட்டி
வேற எந்த எழவத்தான் திங்குதுங்களோ,
நாசமா போவப் போவுதுங்க. நம்ம
வேலைக்கில்ல ஒல வச்சிரும் இதுங்க"
என்பார்.

அதற்கு அந்த மாணவனும் "இந்த
சனியனுங்க திருந்த மாட்டானுங்க.
என்னை மாதிரிலாம் யாருங்க ஒழுங்கா
டிக்கெட் எடுக்கிறான்கள்?" என்று
நல்லவனாக வேஷம் போடுவான்.

ஒரு தடவை பஸ்ஸின் பின் படிக்கட்டில் சுமார்
10 அல்லது 15 பேர்கள் தொங்கிக் கொண்டு
வருகிறார்கள். கண்டக்டர் டிக்கெட் வாங்கச்
சொல்லி கத்தியும் பிரயோசனம் இல்லை.

கடைசியில், "படியில எத்தினி டிக்கெட்டுப்பா?"
என்று கேட்டார். "ஒரு ஆளுக்கு ஒன்னுதான்
சார்" என்றான் ஒரு மாணவன். மாணவர்கள்
சிரித்தார்கள்.ஆனால் டிக்கெட் மட்டும்
வாங்கியபாடில்லை. கண்டக்டர்தான் பாவம்
வேற ஆளுக்கு டிக்கெட் போட போய்
விட்டார்.

ஒருநாள்.

பஸ் புறப்பட்டு, மயிலாடுதுறை பஸ்
ஸ்டாண்டை விட்டு வெளியே வந்து
விட்டது. அப்போது மூன்று மாணவர்கள்
ஓடி வந்து ப்ஸ்ஸின் பின் படிக்கட்டு வழியாக
ஏறி மேலே வந்து, உள்ளே வராமல் அங்கேயே
நின்று கொண்டார்கள்.

கண்டக்டர் அருகிலேயே டிக்கெட் போட்டுக்
கொண்டிருந்தாலும் அந்த மூவரும் டிக்கெட்
வாங்கவில்லை.

டிக்கெட் போட்டுக் கொண்டே டிரைவரின்
அருகேவரை சென்று விட்டார் கண்டக்டர்.
அப்போது பொதுவாக எல்லோரையும் பார்த்து,
"சீட்டு வேணுமா, வேற யாருக்காவது சீட்டு
வேணுமா?" என்று கேட்டார்.

அந்த மூன்று மாணவர்களில் ஒருவன்,
"சார், இங்கே வாங்க!" என்று கூப்பிட்டான்.
கண்டக்டர் அருகே சென்றார். "எத்தனை
சீட்டு வேணும்ப்பா?" என்றபடியே பயணச்சீட்டைக்
கிழிக்கப்போனார்.

அதற்கு, "எங்கே சீட்டு? கால் வலிக்கிது,
உட்காரணும். எங்கே சீட்?" (seat) என்று
கேட்டான் அந்த மாணவன்.
கண்டக்டர் வெறுத்துப் போய் தலையில்
அடித்துக் கொண்டார். ஆனால் மாணவர்களுக்கோ
சிரிப்புதான்.

பஸ் வரும்; பஸ் ஸ்டாப் வரும்.
பயணிகள் வருவர்; இறங்குவர்.
ஆனால், அந்த கண்டக்டர்கள், டிரைவர்கள்
மற்றும் பஸ்ஸின் பயணங்கள் முடிவதேயில்லை.
ஆகவே, ஓட்டுனர், நடத்துனரை மதிப்போம்.

குறிப்பு: ஒரு சில மாணவர்களைப் பற்றி
மட்டும்தான் இந்தக் கட்டுரையில்
குறிப்பிட்டுள்ளேன்; அனைவரையும் அல்ல.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Monday, September 21, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 2

நகைச்சுவை; இரசித்தவை - 2


மறுபடியும் மறுபடியும் தோசையா...?

சாப்பிட வந்தவர்: "என்னப்பா சர்வர், நான் 'தோசை கொண்டுவா'ன்னுதானே சொன்னேன்? ஆனால் நீ தோசை, மறுபடியும் தோசை, மறுபடியும் மறுபடியும் தோசை, மறுபடியும் மறுபடியும் மறுபடியும் தோசைனு கொண்டுவந்து சப்ளை பண்ணிக்கொண்டே இருக்கிறாயே?"

சர்வர்: "நீங்கதானே சார் 'சுட, சுட தோசை கொண்டுவா'ன்னீங்க? அதனால்தான் சரக்கு மாஸ்டர் தோசையை சுட, சுட, நான் கொண்டுவந்து சப்ளை பண்ணிக்கொண்டே இருக்கிறேன்."

சாப்பிட வந்தவர்: "!?!?!?"

**********************************************************



கால் வலி

நோயாளி: "டாக்டர், வலது கால் இரண்டு நாளாக வலிக்கிறது டாக்டர்"

டாக்டர்: "வயசாயிடுச்சில்லையா? அப்படித்தான் வலிக்கும்!"

நோயாளி: "இடது காலுக்கும் அதே வயசுதானே டாக்டர் ஆகுது? ஆனால் இடது கால் வலிக்கலையே டாக்டர்?"

டாக்டர்: "!? !? !?"
=============================================
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்
************************************************************

தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்=========>>
வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Saturday, September 19, 2009

இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!







இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!
=============================


*உள்ளம் இனித்திடவே உவகைப் பெருநாள் வந்ததுவே!
இல்லம் மகிழ்ந்திடவே ஈகைத் திருநாள் வந்ததுவே!
ரமலான் முழுதும் தினமும் நோன்பினை நோற்றனரே!
எமதிறை அல்லாஹ் பேரருள் ரஹ்மத் பெற்றனரே!

*ஐம்பெரும் கடமை ரமலான் அதில் ஒன்று.
ஐயம் இல்லை நன்மைகள் பற்பலவே உண்டு.
உறுப்புகள் உழைக்குது தினமும் இரவுபகல் நேரம்.
ஓய்வு கொடுப்போம் பகலில் சிலமணி நேரம்.

*புசிப்பவர் அறியார் ஏழைபடும் பசியின் துயரம்.
பசியின் கொடுமை நோன்பாளிகள் உணரவே முடியும்
நோன்பு என்பது பலமுள்ளோர் மீதுதான் கடமை
மாண்பு கண்டு ஏற்பதும் நம்மீது உடமை!

*இல்லாதார்க்கு உள்ளோர் கொடுத்தால் அதுதான் ஈகை
வல்லோன் தருவான் மறுமைதனிலே மாபெரும் வாகை
மகிழ்ச்சியுடன் உவந்திடுவோம்.....
......பெருநாள் இன்றைய தினம்
நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது எனதினிய அன்பு மனம்!

அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Friday, September 18, 2009

திருடர்கள் ஜாக்கிரதை!

திருடர்கள் ஜாக்கிரதை!


தமிழ் வலைப்பூக்களில் தொழில்நுட்பம்
சார்ந்த பதிவுகளை மிக எளிய முறையில்
தரக்கூடியவர் எழுத்தாளர் சுமஜ்லா அவர்கள்.

இவ்வாறே பல விந்தைகளை தனது
வலைப்பூவில் தரும் மற்றொமொருவர்
ஸ்ரீ.கிருஷ்ணா அவர்கள்.

தொழில்நுட்பப் பதிவுகளை தெரியாதவர்களும்
இவற்றின்மூலம் அவற்றை அறிந்து கொள்ளலாம்.

ஆனால், சமீபத்தில் ஸ்ரீ.கிருஷ்ணா ஒரு
மேட்டர் பதிந்திருந்தார். அது, வேறொருவரால்
திருடப் பட்டது. அதில் வரிக்கு வரி
அப்படியே காப்பி செய்து பேஸ்ட்
செய்யப்பட்டதுதான் மிகக் கொடுமை.

சிலர் தெரிந்தே இவ்விதம் திருவதால்
அந்தப் பதிவை முதலில் வெளியிட்ட
பதிவரின் திறமை மறைக்கப்படுகிறது.
இதுகுறித்தும் ஸ்ரீ.கிருஷ்ணா ஒரு பதிவு
தந்திருக்கிறார்.

இனி இவ்வாறு திருட்டுச் செயல்
தொடர்ந்தால் அவர்களுக்கு
விருது வழங்கப்படும் என்றும்
அதை எங்கள் வலைப்பூவில்
வெளியிடுவோம் என்று எச்சரிப்பதோடு
பதிவுத் திருடர்(கள்) அதையும்
திருடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்
என்றும் இதன்மூலம் அறிவிக்கிறோம்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Thursday, September 17, 2009

"வாரும், வாரும், உள்ளே வாரும்!"

"வாரும், வாரும், உள்ளே வாரும்!"
=================================
நற்குணன் ஐயா அவர்கள் எங்களது
தமிழாசிரியர்.

வாரத்தில் ஒருநாள் செவ்வாய்க் கிழமை
மட்டும் முதல் பாடவேளை, தமிழ்
வகுப்பு.

ஒரு செவ்வாய்க் கிழமையில் காலை
10 மணிக்கு பள்ளியின் பாட ஆரம்ப
மணியோசை ஒலித்து விட்டது.
ஆசிரியரும் வந்து விட்டார்.
வருகைப் பதிவேடு எடுத்து விட்டார்.
பாடத்தையும் நடத்த ஆரம்பித்து
விட்டார்.

சுமார் 10 நிமிடங்கள் சென்றிருக்கும்.
ஒரு மாணவன் வகுப்பறை வாயிலருகே
வந்து நின்று, "உள்ளே வரலாமா?"
என்று கேட்டான்.

பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு
அவனைப் பார்த்தார், தமிழாசிரியர்.

அப்போது வாசல் கதவின் ஓரமாக
குப்பைகள் குமித்து வைக்கப் பட்டிருப்பதைப்
பார்த்தார் அவர். பிறகு அந்த மாணவனைப்
பார்த்தார்.

மறுபடியும் குப்பையை, மறுபடியும்
மாணவனை மாறி, மாறிப் பார்த்து
விட்டு, அந்தக் குப்பையை நோக்கி
கை காட்டிவிட்டு, பின் அந்த மாணவனை
நோக்கி கையைக் காட்டிவிட்டு, இறுதியாக
வகுப்பறையின் உள்ளேயும் கையைக்
காட்டிக் கொண்டே, "வாரும், வாரும்,
அப்படியே வாரும்" என்றார்.

மாணவர்கள் அனைவருமே சிரித்து விட்டோம்.

ஆனால், அந்த மாணவனோ,'ஆசிரியர்
நம்மை உள்ளே வரச் சொல்கிறாரா,
அல்லது குப்பையை வாரச் சொல்கிறாரா'
என்று குழம்பி அங்கேயே நின்று கொண்டே
இருந்தான்.

மாணவர்கள் அனைவரும் சிரித்து ஓய்ந்தபின்
ஒருவழியாய் அவனை 'உள்ளே வாப்பா'
என்று உள் வருவதற்கு அனுமதி அளித்தார்.

இந்த நகைச்சுவை சம்பவம் இன்னும்
மனதில் அடிக்கடி நிழலாடிக் கொண்டே
இருக்கின்றது.

(தமிழாசிரியர் பற்றிய குறிப்பு என்பதால்
முடிந்தவரை தமிழிலேயே எழுதியுள்ளேன்.)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>
Related Posts Plugin for WordPress, Blogger...