அமெரிக்கர்களின் பண்பு! தமிழ்நெஞ்சம் மின்னிதழ்!!
அமெரிக்கா சென்றிருந்தபோது அங்கு
எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவம்,
பிரான்சிலிருந்து வெளிவரும் 'தமிழ்நெஞ்சம்'
2026 மே மாத மின்னிதழில் ஒரு பக்கக்
கட்டுரையாக வந்துள்ளது!
.
அமெரிக்கர்களின் பண்பு!
கடந்த பிப்ரவரி மாதம் நண்பர்களுடன் அமெரிக்காவின் துசான் (Tucson) நகரத்திற்குச் சென்றிருந்தேன். சுமார் 13 தினங்கள் அங்கே தங்கி இருந்தோம். நண்பர் வாடகைக் காரை எடுத்திருந்தார். நாமே ஓட்டுநர்.
ஒருநாள் இரவு நேரம். காரின் ஒரு சக்கரத்தில் காற்று குறைவாக இருந்தால், காற்று பிடிக்க பெட்ரோல் பங்க் சென்று இருந்தோம்.
காற்று பிடிக்கும் கருவியில் மூன்று டாலர் பணத்தைப் போட்டால் காற்று பிடித்துக்கொள்ளலாம்! அதில் எப்படி பணம் போடுவது, எப்படி அதை இயக்குவது என்று நாங்கள் சற்று தயங்கிக் கொண்டிருந்தோம்!
அப்போது அருகில் நின்றிருந்த, அந்த நகரத்தின் நிர்வாக அமைப்பின் காரில் ஏற வந்த இரு ஊழியர்கள் எங்களைப் பார்த்து சூழ்நிலையை புரிந்து கொண்டார்கள். அதில் ஒருவர் 'ஹலோ ஃபிரண்ட்ஸ்' என்று கூறிக் கொண்டே எங்கள் அருகில் வந்தார். தன்னிடமிருந்து கிரெடிட் கார்டை எடுத்து, கருவியில் வைத்து அதை தேய்த்து விட்டு மூன்று டாலர் கிரெடிட் ஆனதும் கார்டை எடுத்துக் கொண்டு விட்டார். 'இப்போது காற்றைப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று (ஆங்கிலத்தில்தான்) சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொண்டார். நாங்கள் எங்களிடமிருந்து பணத்தை எடுத்து இரண்டு மூன்று தடவைகள் அவரிடம் கொடுத்த போதும் அவர் வாங்க மறுத்து விட்டார். "இட்ஸ் ஓகே" என்று சொல்லி உடனே இருவரும் புறப்பட்டு சென்று விட்டார்கள்.
'வந்தார்கள். தேய்த்தார்கள். கிரெடிட் ஆனதும் சென்று விட்டார்கள்' என்று நாங்கள் ஆச்சரியத்தில் நின்றோம்.
எங்கள் காரை ஓட்டிய நண்பர் சொன்னார் :
"இங்கு உள்ளவர்களுன் பண்புதான் இது. உதவி செய்வார்கள்! நாம் அதை ஏற்றுக் கொண்டு தேங்க்ஸ் சொன்னதும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்று விடுவார்கள். அவர்களை மீண்டும், மீண்டும் பணத்தைப் பெற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. இங்கு உள்ளவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுவார்கள்" என்று சொன்னார்.
அமெரிக்கர்களின் உதவும் மனப்பான்மையை நினைத்து நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்

No comments:
Post a Comment