...பல்சுவை பக்கம்!

.

Wednesday, September 23, 2009

பயணங்கள் முடிவதில்லை...





பயணங்கள் முடிவதில்லை!



பஸ்ஸில் காலேஜுக்குச் செல்லும்போது
மாணவர்கள் (சிலர்) செய்யும் லூட்டிகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

சில மாணவர்கள் டிக்கெட்டே எடுக்க
மாட்டார்கள். அது அவர்களுக்கு
பெருமை. டிக்கெட் பரிசோதகர் வந்தாலும்
எப்படி அவர்களிடமிருந்தும் தப்பிக்கிறார்கள்
என்பது மிகவும் புரியாத புதிர்.

நான் செல்லும் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காத
மாணவர்களை, கண்டக்டருக்குத் தெரியும்.
கேட்டால் 'முன்னாடி எடுக்கிறாங்க' என்றோ
'பின்னாடி எடுக்கிறாங்க' என்றோ சொல்வார்கள்;
ஆனால் யாரும் எடுப்பதில்லை.

அதனால், கண்டக்டர் டிக்கெட் எடுக்காத
மாணவனிடமே போய், "பாருங்க தம்பி
இதுங்க பண்ற அநியாயத்தை. அப்பா,
அம்மா நல்லபடியா வளத்தா இப்படிச்
செய்யுங்களா இதுங்க? டிக்கெட்டே எடுக்க
மாட்டேங்குதுங்க இந்த சனியன்கள்.
இதுங்களுக்கு நல்ல சாவே வராது.
சோத்ததான் திங்குதுங்களா இல்லாட்டி
வேற எந்த எழவத்தான் திங்குதுங்களோ,
நாசமா போவப் போவுதுங்க. நம்ம
வேலைக்கில்ல ஒல வச்சிரும் இதுங்க"
என்பார்.

அதற்கு அந்த மாணவனும் "இந்த
சனியனுங்க திருந்த மாட்டானுங்க.
என்னை மாதிரிலாம் யாருங்க ஒழுங்கா
டிக்கெட் எடுக்கிறான்கள்?" என்று
நல்லவனாக வேஷம் போடுவான்.

ஒரு தடவை பஸ்ஸின் பின் படிக்கட்டில் சுமார்
10 அல்லது 15 பேர்கள் தொங்கிக் கொண்டு
வருகிறார்கள். கண்டக்டர் டிக்கெட் வாங்கச்
சொல்லி கத்தியும் பிரயோசனம் இல்லை.

கடைசியில், "படியில எத்தினி டிக்கெட்டுப்பா?"
என்று கேட்டார். "ஒரு ஆளுக்கு ஒன்னுதான்
சார்" என்றான் ஒரு மாணவன். மாணவர்கள்
சிரித்தார்கள்.ஆனால் டிக்கெட் மட்டும்
வாங்கியபாடில்லை. கண்டக்டர்தான் பாவம்
வேற ஆளுக்கு டிக்கெட் போட போய்
விட்டார்.

ஒருநாள்.

பஸ் புறப்பட்டு, மயிலாடுதுறை பஸ்
ஸ்டாண்டை விட்டு வெளியே வந்து
விட்டது. அப்போது மூன்று மாணவர்கள்
ஓடி வந்து ப்ஸ்ஸின் பின் படிக்கட்டு வழியாக
ஏறி மேலே வந்து, உள்ளே வராமல் அங்கேயே
நின்று கொண்டார்கள்.

கண்டக்டர் அருகிலேயே டிக்கெட் போட்டுக்
கொண்டிருந்தாலும் அந்த மூவரும் டிக்கெட்
வாங்கவில்லை.

டிக்கெட் போட்டுக் கொண்டே டிரைவரின்
அருகேவரை சென்று விட்டார் கண்டக்டர்.
அப்போது பொதுவாக எல்லோரையும் பார்த்து,
"சீட்டு வேணுமா, வேற யாருக்காவது சீட்டு
வேணுமா?" என்று கேட்டார்.

அந்த மூன்று மாணவர்களில் ஒருவன்,
"சார், இங்கே வாங்க!" என்று கூப்பிட்டான்.
கண்டக்டர் அருகே சென்றார். "எத்தனை
சீட்டு வேணும்ப்பா?" என்றபடியே பயணச்சீட்டைக்
கிழிக்கப்போனார்.

அதற்கு, "எங்கே சீட்டு? கால் வலிக்கிது,
உட்காரணும். எங்கே சீட்?" (seat) என்று
கேட்டான் அந்த மாணவன்.
கண்டக்டர் வெறுத்துப் போய் தலையில்
அடித்துக் கொண்டார். ஆனால் மாணவர்களுக்கோ
சிரிப்புதான்.

பஸ் வரும்; பஸ் ஸ்டாப் வரும்.
பயணிகள் வருவர்; இறங்குவர்.
ஆனால், அந்த கண்டக்டர்கள், டிரைவர்கள்
மற்றும் பஸ்ஸின் பயணங்கள் முடிவதேயில்லை.
ஆகவே, ஓட்டுனர், நடத்துனரை மதிப்போம்.

குறிப்பு: ஒரு சில மாணவர்களைப் பற்றி
மட்டும்தான் இந்தக் கட்டுரையில்
குறிப்பிட்டுள்ளேன்; அனைவரையும் அல்ல.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Monday, September 21, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 2

நகைச்சுவை; இரசித்தவை - 2


மறுபடியும் மறுபடியும் தோசையா...?

சாப்பிட வந்தவர்: "என்னப்பா சர்வர், நான் 'தோசை கொண்டுவா'ன்னுதானே சொன்னேன்? ஆனால் நீ தோசை, மறுபடியும் தோசை, மறுபடியும் மறுபடியும் தோசை, மறுபடியும் மறுபடியும் மறுபடியும் தோசைனு கொண்டுவந்து சப்ளை பண்ணிக்கொண்டே இருக்கிறாயே?"

சர்வர்: "நீங்கதானே சார் 'சுட, சுட தோசை கொண்டுவா'ன்னீங்க? அதனால்தான் சரக்கு மாஸ்டர் தோசையை சுட, சுட, நான் கொண்டுவந்து சப்ளை பண்ணிக்கொண்டே இருக்கிறேன்."

சாப்பிட வந்தவர்: "!?!?!?"

**********************************************************



கால் வலி

நோயாளி: "டாக்டர், வலது கால் இரண்டு நாளாக வலிக்கிறது டாக்டர்"

டாக்டர்: "வயசாயிடுச்சில்லையா? அப்படித்தான் வலிக்கும்!"

நோயாளி: "இடது காலுக்கும் அதே வயசுதானே டாக்டர் ஆகுது? ஆனால் இடது கால் வலிக்கலையே டாக்டர்?"

டாக்டர்: "!? !? !?"
=============================================
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்
************************************************************

தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்=========>>
வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Saturday, September 19, 2009

இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!







இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!
=============================


*உள்ளம் இனித்திடவே உவகைப் பெருநாள் வந்ததுவே!
இல்லம் மகிழ்ந்திடவே ஈகைத் திருநாள் வந்ததுவே!
ரமலான் முழுதும் தினமும் நோன்பினை நோற்றனரே!
எமதிறை அல்லாஹ் பேரருள் ரஹ்மத் பெற்றனரே!

*ஐம்பெரும் கடமை ரமலான் அதில் ஒன்று.
ஐயம் இல்லை நன்மைகள் பற்பலவே உண்டு.
உறுப்புகள் உழைக்குது தினமும் இரவுபகல் நேரம்.
ஓய்வு கொடுப்போம் பகலில் சிலமணி நேரம்.

*புசிப்பவர் அறியார் ஏழைபடும் பசியின் துயரம்.
பசியின் கொடுமை நோன்பாளிகள் உணரவே முடியும்
நோன்பு என்பது பலமுள்ளோர் மீதுதான் கடமை
மாண்பு கண்டு ஏற்பதும் நம்மீது உடமை!

*இல்லாதார்க்கு உள்ளோர் கொடுத்தால் அதுதான் ஈகை
வல்லோன் தருவான் மறுமைதனிலே மாபெரும் வாகை
மகிழ்ச்சியுடன் உவந்திடுவோம்.....
......பெருநாள் இன்றைய தினம்
நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது எனதினிய அன்பு மனம்!

அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Friday, September 18, 2009

திருடர்கள் ஜாக்கிரதை!

திருடர்கள் ஜாக்கிரதை!


தமிழ் வலைப்பூக்களில் தொழில்நுட்பம்
சார்ந்த பதிவுகளை மிக எளிய முறையில்
தரக்கூடியவர் எழுத்தாளர் சுமஜ்லா அவர்கள்.

இவ்வாறே பல விந்தைகளை தனது
வலைப்பூவில் தரும் மற்றொமொருவர்
ஸ்ரீ.கிருஷ்ணா அவர்கள்.

தொழில்நுட்பப் பதிவுகளை தெரியாதவர்களும்
இவற்றின்மூலம் அவற்றை அறிந்து கொள்ளலாம்.

ஆனால், சமீபத்தில் ஸ்ரீ.கிருஷ்ணா ஒரு
மேட்டர் பதிந்திருந்தார். அது, வேறொருவரால்
திருடப் பட்டது. அதில் வரிக்கு வரி
அப்படியே காப்பி செய்து பேஸ்ட்
செய்யப்பட்டதுதான் மிகக் கொடுமை.

சிலர் தெரிந்தே இவ்விதம் திருவதால்
அந்தப் பதிவை முதலில் வெளியிட்ட
பதிவரின் திறமை மறைக்கப்படுகிறது.
இதுகுறித்தும் ஸ்ரீ.கிருஷ்ணா ஒரு பதிவு
தந்திருக்கிறார்.

இனி இவ்வாறு திருட்டுச் செயல்
தொடர்ந்தால் அவர்களுக்கு
விருது வழங்கப்படும் என்றும்
அதை எங்கள் வலைப்பூவில்
வெளியிடுவோம் என்று எச்சரிப்பதோடு
பதிவுத் திருடர்(கள்) அதையும்
திருடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்
என்றும் இதன்மூலம் அறிவிக்கிறோம்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Thursday, September 17, 2009

"வாரும், வாரும், உள்ளே வாரும்!"

"வாரும், வாரும், உள்ளே வாரும்!"
=================================
நற்குணன் ஐயா அவர்கள் எங்களது
தமிழாசிரியர்.

வாரத்தில் ஒருநாள் செவ்வாய்க் கிழமை
மட்டும் முதல் பாடவேளை, தமிழ்
வகுப்பு.

ஒரு செவ்வாய்க் கிழமையில் காலை
10 மணிக்கு பள்ளியின் பாட ஆரம்ப
மணியோசை ஒலித்து விட்டது.
ஆசிரியரும் வந்து விட்டார்.
வருகைப் பதிவேடு எடுத்து விட்டார்.
பாடத்தையும் நடத்த ஆரம்பித்து
விட்டார்.

சுமார் 10 நிமிடங்கள் சென்றிருக்கும்.
ஒரு மாணவன் வகுப்பறை வாயிலருகே
வந்து நின்று, "உள்ளே வரலாமா?"
என்று கேட்டான்.

பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு
அவனைப் பார்த்தார், தமிழாசிரியர்.

அப்போது வாசல் கதவின் ஓரமாக
குப்பைகள் குமித்து வைக்கப் பட்டிருப்பதைப்
பார்த்தார் அவர். பிறகு அந்த மாணவனைப்
பார்த்தார்.

மறுபடியும் குப்பையை, மறுபடியும்
மாணவனை மாறி, மாறிப் பார்த்து
விட்டு, அந்தக் குப்பையை நோக்கி
கை காட்டிவிட்டு, பின் அந்த மாணவனை
நோக்கி கையைக் காட்டிவிட்டு, இறுதியாக
வகுப்பறையின் உள்ளேயும் கையைக்
காட்டிக் கொண்டே, "வாரும், வாரும்,
அப்படியே வாரும்" என்றார்.

மாணவர்கள் அனைவருமே சிரித்து விட்டோம்.

ஆனால், அந்த மாணவனோ,'ஆசிரியர்
நம்மை உள்ளே வரச் சொல்கிறாரா,
அல்லது குப்பையை வாரச் சொல்கிறாரா'
என்று குழம்பி அங்கேயே நின்று கொண்டே
இருந்தான்.

மாணவர்கள் அனைவரும் சிரித்து ஓய்ந்தபின்
ஒருவழியாய் அவனை 'உள்ளே வாப்பா'
என்று உள் வருவதற்கு அனுமதி அளித்தார்.

இந்த நகைச்சுவை சம்பவம் இன்னும்
மனதில் அடிக்கடி நிழலாடிக் கொண்டே
இருக்கின்றது.

(தமிழாசிரியர் பற்றிய குறிப்பு என்பதால்
முடிந்தவரை தமிழிலேயே எழுதியுள்ளேன்.)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Monday, September 14, 2009

குடை வள்ளல் யார்?




சேகர்: "ராஜு, நீ என்னிடம் இரவல்
வாங்கிப் போனாயே, அந்தக் குடையை
திருப்பிக் கொடுப்பா."

ராஜு: "அந்தக் குடையை நம்ம தாஸுவிடம்
இரவல் கொடுத்தேன். ஏன், உடனே வேண்டுமா?"

சேகர்: "ஆமாம்ப்பா. என்னிடம் இரவல் கொடுத்த
மோகன் உடனே திருப்பிக் கேட்கிறார்!!!"

-இதில் யார் குடை வள்ளல்?

[பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஜோக்!]

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Sunday, September 13, 2009

கப்பலுக்குப் போன மச்சான்!



'கப்பலுக்குப் போன மச்சான்!'
சுமார் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு
முன் தமிழ் நாடெங்கும் பிரபலமான
பாடல்.மேலும் அரபு நாடுகளில் வாழ்ந்த
தமிழர்களிடையவும் மனங்கவர்ந்த
பாடல்.

தொலைபேசி பிரபலமாகாத, அலைபேசி
அறிமுகமாகாத அக்காலத்தில் இப்பாடலில்
வரும் ஆண் குரலிலும் பெண் குரலிலும்
தங்களையே கண்டனர் பல இளம்தம்பதிகள்.

(இப்பாடலைப் பாடிய காயல் ஏ.ஆர்.ஷேக்
முஹம்மது அவர்கள் கடந்த ஜூன் 9ஆம்
நாளன்று காலமானார்.)

இப்பாடலின் வரி வடிவம் இதோ:

பெண்:
கப்பலுக்குப் போன மச்சான் கண்ணெறஞ்ச ஆச மச்சான்
கப்பலுக்குப் போன மச்சான் கண்ணெறஞ்ச ஆச மச்சான்
எப்பத்தான் வருவீங்க எதிர்பார்க்கிறேன் - நான்
இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்

ஆண்:
கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவேன் - உன்
இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்

பெண்:
அக்கரைக்குப் போனதுமே அக்கறையும் போயிடுச்சோ
அன்று சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களும் மாறிடுச்சோ
சர்க்கரைமேல் கோபப்பட்டு கட்டெறும்பும் ஓடிடுச்சோ
சங்கதி தெரியலையே மன்னன் மனம் வாடிடுச்சோ
(கப்பலுக்குப் போன...)

ஆண்:
அன்னமே அடிக்கரும்பே ஆவல் என்னை மீறுதடி (2)
எண்ணெய்க் கிணறுபோலே எண்ணமாய் ஊறுதடி
உன்னை அங்கு விட்டுவந்து உள்மனசு வாடுதடி
உள்ளபடி சொன்னாக்கா உயிர் அங்கே வாழுதடி (2)
(கண்ணுக்குள்ளே வாழ்பவளே...)

பெண்:
துபாய்க்கு பயணம்போயி வருஷம் ஆறாச்சு
துள்ளிவரும் காவிரிபோல் கண்ணு ரெண்டும் ஆறாச்சு
ஏக்கத்திலே நானிங்கே தூங்கி ரொம்ப நாளாச்சு
தாயகம் வந்திடுங்க தக்கதுணை நானாச்சு

ஆண்:
பாலைநிலமெல்லாமே சோலைவனமாகுதடி
பாயிறது நீராக மச்சானின் வேர்வையடி
பாடுபட்டு சேர்க்குறது பைங்கிளியே ஏதுக்கடி
பாவை உனக்கல்லாமே பாரிலே யாருக்கடி
(கண்ணுக்குள்ளே வாழ்பவளே...)

பெண்:
துல்ஹஜ்ஜு மாசத்திலே கடிதம் ஒன்னு போட்டீங்க
நலமா சுகமான்னு பாசம்வச்சி கேட்டீங்க
இங்கெனக்கு என்ன குறை மாடிமனை பஞ்சமில்ல
இருக்குறேன் நாயகனே இன்னும் நான் சாகவில்ல


ஆண்:
ஈச்சமரத் தோப்புக்குள்ளே எழுந்தாச்சு கட்டிடமே
ஈரைந்து மாசத்திலே தீர்ந்துவிடும் ஒப்பந்தமே
ஆச்சுது ஒருவாறு அன்புநகைப் பெட்டகமே
ஆக்கப்பொறுத்தவளே ஆறப்பொறு ரத்தினமே (2)

கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவேன் - உன்
இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்
நான் தருவேன் நான் தருவேன் நான் தருவேன்
நான் தருவேன் நான் தருவேன்....

பாடியவர்கள்: காயல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது & ஜெயபாரதி.
பாடலாசிரியர்: கவிஞர் நாகூர் சலீம்.

இந்தப் பாடலை யூடியூபில் கேட்க:
https://www.youtube.com/watch?v=7vTI_YyRjHc

இந்தப் பாடலை யூடியூபில் பார்க்க:
https://www.youtube.com/watch?v=_aqcRXO-FXE

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Saturday, September 12, 2009

கொக்குக்கு எத்தனை கால்கள்?

ஒரு வீட்டில் வீட்டு உரிமையாளரும் அவருக்குத்
துணையாக ஒரு சமையல் காரரும் இருந்தனர்.

ஒரு நாள் வீட்டுக்காரர் பஜாரிலிருந்து
வரும்போது கொக்கு ஒன்றை
வாங்கிவந்து, சமையல்காரரிடம் கொடுத்து,
"கொக்கு குழம்பு சமைத்து வை; குளித்துவிட்டு
வருகிறேன்" என்று சொல்லிவிட்டு குளிக்கப் போனார்.
சமையல்காரர் குழம்பு சமைத்து வைத்துவிட்டு,
குழம்பையும் சிறு அளவு கறியையும் டேஸ்ட்
பார்க்கலாம் என்று டெஸ்ட் பண்ணியவர் கொக்கு
கறி ருசியாய் இருக்கவே, கால் துண்டு ஒன்றை
முழுவதும் சாப்பிட்டுவிட்டார்.

குளித்து வந்ததும் சாப்பிட அமர்ந்தார் வீட்டுக்காரர்.
சோறு பரிமாறப்பட்டதும் சாப்பிட ஆரம்பித்தார் அவர்.
முதலில் சமையல்காரர் முதலாளிக்குப் பிடித்த
கொக்கின் கால் ஒரு துண்டை எடுத்துவைத்தார்.

"இன்னொரு கால் துண்டையும் வையப்பா" என்றார் முதலாளி.

"கொக்கிற்கு ஒரு கால்தானுங்க முதலாளி" என்றார் சமையல்காரர்.

"என்னது? கொக்கிற்கு இரு கால்கள் இருக்குமே?" என்றார் முதலாளி.

"இல்லீங்க ஒரு கால்தானுங்க" என்றார் சமையல்காரர்.

முதலாளி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும்
சமையல்காரர் ஒப்புக்கொள்ளவில்லை.

முதலாளி சாப்பிட்டு முடித்ததும் சமையல்காரரை
வயல்வெளிக்கு கொக்கு காட்ட அழைத்துச் சென்றார்.
வயலில் ஒரு கொக்கு ஒரு காலை மடக்கிக் கொண்டு
ஒற்றைக் காலுடன் நின்றுகொண்டிருப்பதை பார்த்த
சமையல்காரர், "பாருங்க முதலாளி, கொக்குக்கு ஒற்றைக்
கால்தான்" என்று முதலாளியிடம் காட்டினார்.

உடனே முதலாளி தன்னுடைய இரு கைகளையும்
தட்டினார். சப்தம் கேட்டதும் கொக்கு
தனது இரு காலகளையும் மடக்கி கொண்டு பறக்க
ஆரம்பித்தது. "பார், கொக்கிற்கு இரு கால்கள்"
என்று சமையல்காரரிடம் காட்டினார் முதலாளி.

"நீங்க இப்ப கை தட்டியதற்கு பதிலாக, சாப்பிட
ஆரம்பிக்கும்போதே கை தட்டியிருந்தால்
கொக்கிற்கு இரு கால்கள் வந்திருக்குமே"
என்றாராம் சமையல்காரர்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

தங்களின் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>
Related Posts Plugin for WordPress, Blogger...